Published:Updated:

புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!

புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!

ஷங்கர்பாபு - ஓவியம்: ஸ்யாம்

புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!

ஷங்கர்பாபு - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!

`விரும்பியது ஒன்று - திணிக்கப்பட்டது ஒன்று; கேட்டது ஒன்று - வழங்கப்பட்டது ஒன்று' என்று சொல்ல பலருடைய வாழ்க்கையிலும் உதாரணச் சம்பவங்கள் இருக்கவே செய்கின்றன. எனக்கும் நிறைய உண்டு. ஒன்றைச் சொல்கிறேன்.   

புதிய புராணம்! - விரும்பியதும் விரும்பாததும்!

ஒருமுறை பேருந்துக்காகக் காத்திருந்தபோது, வெகுநேரத்துக்குப் பிறகு ஒரு பேருந்து வந்தது. காத்திருந்த கூட்டம் அடித்துப்பிடித்து ஏறியது. நானும் ஏறினேன். மிகப் பழையதான அந்தப் பேருந்தின் இருக்கைகளும் பெரும் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. விதானமோ மழை பெய்தால் ஒழுகும் நிலையில், ஆங்காங்கே பெரும் ஓட்டைகளுடன் ஆகாயத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. நான் மனம் நொந்தபடியே ஓர் இருக்கையில் அமர்ந்ததும், சீறலுடன் கரும்புகையை வெளியிட்டபடி பேருந்து புறப்பட்டது. சரியாக அந்த நேரம் பார்த்து ஒரு பேருந்து சுத்தமாகவும். அழகாகவும் கம்பீரமாகவும் நிலையத்துக்குள் நுழைந்தது.

 சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது. ஆசைப் படுவது ஒன்றாகவும் கிடைப்பது வேறாகவும் இருக்கிறது. விஷயம், பேருந்து தொடர்பானது என்பதால் கொஞ்சநேரத்தில் மனநிலை சரியாகி விடக்கூடும். சிறு தூரப் பயணத்துக்கான பேருந்துக்கே மனம் சலித்துவிடுகிறது. அப்படியானால் நம் சுவாசக் காலம் முழுவதும் சகித்துக்கொள்ளவேண்டிய வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியது கிடைக்காவிட்டால் மனம் என்ன பாடுபடும்?

இப்படிப்பட்ட சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோது, புராணப் பெண் கதாபாத்திரம் ஒன்று நினைவுக்கு வந்தது. அவள், வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் எனக்குள் தெளிவை ஏற்படுத்தியது.

அந்தப் பெண்ணுக்கு மணமாகிவிடுகிறது. கணவனை மிகவும் நேசிக்கிறாள். கணவனுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதுதான் அவளுடைய விருப்பம். ஆனால், அவள் வாழ்வில் நடந்த ஒரு தெய்விகச் சம்பவத்தால், கணவன் அவளைவிட்டுப் பிரிகிறான். அதாவது, பக்தியில் சிறந்த அந்தப் பெண்ணை மனைவியாக ஆளக் கூசி, வேறோர் இடத்துக்குச் சென்று வேறொரு பெண்ணை மணந்துகொண்டான்.

அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, உறவினருடன்  அவனை அழைக்கச் செல்கிறாள் அந்தப் பெண். அவனோ, அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ முடியாததற்கான ஏற்கக்கூடிய காரணங்களைச் சொல்கிறான். அந்த நிலையில் அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்தக் கணத்தில் அந்தப் பெண் அந்த அதிரடியான முடிவை எடுக்கிறாள். அவளது உலகமே அப்புறம் மாறிவிடுகிறது.

அப்படியென்ன முடிவெடுத்தாள் என்பதை அறியுமுன், அவள்  யாரென்பதை அறிந்து கொள்வோம். சாட்சாத் சிவபெருமானே ‘அம்மை’ என்றழைத்த காரைக்கால் அம்மையார்தான் அவர்.  இயற்பெயர் புனிதவதி.

கணவரின் நிலையையும் எண்ணத்தையும் அறிந்துகொண்டபின் புனிதவதி ஒரு முடிவெடுத்தார். ‘இனி இந்த தேகமும் உருவமும் எனக்குத் தேவையில்லை... எனவே தசைகளால் போர்த்தப்பட்ட இவ்வுடலை நீக்கி, எனக்கு பேய் வடிவைத் தந்து அருள்வாய்’ என்று இறைவனை வேண்டிப்பெற்றுக்கொண்டார். அந்த முடிவு அவருடைய வாழ்வையே  மாற்றியது; அர்த்தமுள்ளதாகச் செய்தது.

அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை என்றெல்லாம் பாடுகிறார். காரைக்கால் அம்மையார் ஆகிறார். கயிலைக்கு நடந்தே செல்கிறார். இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருநடனத்தை தரிசிக்கும் பேறும் பெறுகிறார். ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை என்றதும், கிடைத்த வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடினார்.  அதுவே அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள்...

வாழ்க்கை எனும் பரமபதத்தில் எப்போதும் ஏணிகளில் ஏறிக்கொண்டிருக்க மாட்டோம். சிற்சில சந்தர்ப்பங்களில் சர்ப்பங்களையும் நாம் சந்தித்தாக வேண்டும். அதனால் ஏற்படும் சறுக்கலைச் சாதனையாக்கிக்கொள்வது நமது கையில்தான் உள்ளது.

விரும்பியது கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும் என்பதில்லை. விரும்பியது கிடைக்காமல் போகிறதெனில், அதற்கும் அர்த்தம் உண்டு; காரணம் உண்டு. இதை உணரும்போது நீங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பீர்கள். 

எதிர்பார்த்து கிடைப்பதுவும், நிகழ்வதுவும் தரும் அனுபவங்கள் குறுகியவையே. அது கிடைக்காமல் போவதால் நீங்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதுவரையிலும் நீங்கள் சந்திக்காத உலகை உங்களுக்குக் காட்டும்.  ஆகவே, கிடைக்காதவற்றைத் தேடி அலைந்து துயரப்பட்டு அதிலேயே அமிழ்ந்துவிடாமல், உங்களையே மாற்றப்போகிற பெரிய உலகுக்குள் நுழைவதற்கு எக்கணமும் தயாராக இருங்கள்.

எதிர்பார்த்ததை விடவும், எதிர்பார்க்காத ஒன்று உங்களை உச்சத்துக்கு உயர்த்தும்.

- புராணம் தொடரும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism