Published:Updated:

சனங்களின் சாமிகள் - 5

சனங்களின் சாமிகள் - 5
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 5

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 5

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 5
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 5

பிச்சைக்காலன்

ற்றுமலைக்கு வந்ததில் இருந்தே மாடப்பனுக்கு மனம் நிலைகொள்ள வில்லை. ஒரு பெண் அவனுள்ளே ஏறி, சப்பணக்கால் போட்டு ஜம்மென்று அமர்ந்திருந்தாள். அவனுடைய ஒவ்வோர் அசைவையும் ஆக்கிரமித்தாள். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது... `ஒரு பெண்ணால் தன்னை இப்படியெல்லாம் ஆட்டுவிக்க முடியுமா?’ இத்தனைக்கும் அவளை, அவன் பார்த்தது ஒரே ஒருமுறைதான். மாடப்பன் இரவு காவல் பணியை மேற்பார்வையிட்டுவிட்டு, குதிரையில் வந்துகொண்டிருந்தான். அந்தப் பெண், ஊர்ப் பொதுக் கிணற்றில் இருந்து வெண்கலக் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பியிருந்தாள். அவளுடைய இடுப்பில் ஏறி உட்கார்ந்திருந்த குடம்கூட தனி அழகாக அவனுக்குத் தெரிந்தது.   

அவள், குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டு, தலையைத் திருப்பி, மேலே அமர்ந்திருந்த மாடப்பனை ஒரு பார்வை பார்த்தாள்...  அவ்வளவுதான்.   

சனங்களின் சாமிகள் - 5

மாடப்பனுக்கு `சமர்த்தன்’ என்று இன்னொரு பெயருண்டு. காரியத்திலும் அவன் சமர்த்தனாகத் தான் இருந்தான். மாவீரன்; சிறந்த வில்லாளி; வேட்டைக்காரன். அவனுடைய திறமையை மெச்சும்விதமாக ஊற்றுமலையின் பிரதான காவல் பொறுப்பையே அவனிடம் ஒப்படைத் திருந்தான் காஞ்சி மன்னன்.

இப்போது, அந்தப் பொறுப்பைத் தன்னால் சரியாக நிறைவேற்ற முடியுமா என்கிற சந்தேகமே மாடப்பனுக்கு எழுந்திருந்தது. உணவு செல்லவில்லை, உறக்கம் கொள்ளவில்லை. சதாசர்வ காலமும் பித்துப்பிடித்தாற்போல் அவள் நினைவு. வில்லில் நாணேற்றும்போது திடமாக இருக்கும் அவன் விரல்கள், அவள் நினைவு வந்தவுடன் நடுக்கம் கொள்கின்றன.

மாடப்பனின் காவல் படையில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவருக்கு அவன் மேல் அளவிலாப் பிரியம். இளம் வயதில் இத்தனை உயரம் தொட அசாத்திய திறமை வேண்டும். அந்தத் திறமையே அவன்பால் அவரை ஈர்ப்புக்கொள்ள வைத்திருந்தது. அவன் வளைக்கிறபடியெல்லாம் வில் வளைந்தது; அவன் எய்கிற அம்பு இலக்குகளைக் கண் இமைக்கும் நேரத்தில் சிதறடித்தது; அவன் பொறுப்பேற்ற பிறகு ஊரில் கள்வர் பயம் இல்லை. பெண்டு பிள்ளைகள் நிம்மதியாக குளம், கிணற்றுக்குப் போய்வர முடிகிறது. ஊரே அமைதிக் காடாகத் திகழ்கிறது.

இப்படியிருக்க, இரு நாள்களாக மாடப்பன் முகத்தில் ஏன் இத்தனை வாட்டம்? கடமைக்குக் காவல் பணி குறித்து விசாரிக்கிறான். பேச்சில் முன்பைப்போல் கலகலப்பு இல்லை. சதா எங்கோ வெறித்து நிற்கும் பார்வை. பார்வைக்குப் பின்னால் எதன் பின்னோ ஓடும் நினைவு... ஏன் இந்த மாற்றம்?

மாளிகையில் மாடப்பன் தனித்திருந்த முன்னிரவு நேரத்தில் அவர், அவனை நெருங்கினார். பரிவாகப் பேச்சை ஆரம்பித்தார். மெள்ள மெள்ள விசாரணையை முடுக்கிவிட்டார். அவனுக்கும் அவர்மேல் ஒரு வாஞ்சை இருந்தது. வயதில் மூத்தவர்; மிக நல்லவர்; வீரம் செறிந்தவர்; பார்க்கும்போதெல்லாம் பார்வையில் ஒரு கனிவைத் தேக்கிவைத்திருப் பவர்.

மாடப்பன் மனம் திறந்தான். குளத்தில் இருந்து குடம் தூக்கி வந்த பெண்ணை நினைவுகூர்ந்தான். அதை அப்படியே அவரிடம் கொட்டித் தீர்த்தான். அவர், அவளின் முக லட்சணங்கள் குறித்துத் திரும்பத் திரும்பக் கேட்டார். ஒரு முடிவுக்கு வந்தார். பெருமூச்சு விட்டார்.

``காவல் தலைவரே! இந்த ஊரிலேயே பேரழகி, குணவதி அந்தப் பெண். அவளை மணம்முடிக்க அலைமோதும் வீரர்கள் அநேகம். அது கிடக்கட்டும். இது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. நீங்கள் வீராதி வீரர். ஒரு வார்த்தை... நேரில் சென்று அவளின் தந்தை யிடம் பெண் கேட்டால், காரியம் முடிந்தது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 5`இவ்வளவு எளிதானதா இந்தக் காரியம்... அவள் எனக்கே கிடைத்துவிடுவாளா?’ புல்லரித்துப் போனான் மாடப்பன்.

``சரி... அந்தப் பெண்... அவள் பெயர் என்னவென்று சொல்ல முடியுமா?’’

``பிச்சை.’’

பெயரில் என்ன இருக்கிறது? கோடீஸ்வரன் என்கிற பெயர் படைத்தவன் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறான். கண்ணப்பன் என்று பெயர் இருக்கும்; பிறவியிலேயே பார்வையற்றவனாகத் திகழ்வான். ஆனால் பிச்சை, பேரழகி; குணவதி. அதுபோதும். அடுத்தடுத்து காரியங்கள் விரைவாக நடந்தேறின.

பிச்சை வீட்டில், மாடப்பனின் வேண்டு கோளுக்கு மறுப்பேதுமில்லை.  இவனைவிட பொருத்தமான மாப்பிள்ளை பிச்சைக்குக் கிடைக்கமாட்டான் என்கிற தீர்மானம் அவர்களுக்கு இருந்தது.

இனிக்க இனிக்க இல்லறம்... விளைவாக ஒரு பெண் குழந்தை. அரிதிப்பிள்ளை என்று பெயரிட்டார்கள். பெண் வளர்த்தி... பீர்க்கை வளர்த்தி  என்பதுபோல் அரிதிப்பிள்ளை கிடுகிடுவென வளர்ந்தாள். மகள் வளர்ந்து கொண்டிருக்க, பிச்சையோ தன் வளர்ச்சியை யெல்லாம் அவளுக்கே கொடுத்துவிட்டது மாதிரி மெலிந்து கொண்டே வந்தாள். அவளுக்குள் ஏதோ கவலை வேர்விட்டு, கிளைபரப்பி வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டான் மாடப்பன். அவளுக்கு என்ன குறை? விசாரித்தான்...

``அருமைக் கணவன், செல்ல மகள், செல்வத்துக் கும் பெயருக்கும் குறைச்சலில்லை... ஆனால், குலம் விளங்க ஒரு ஆண் பிள்ளை இல்லையே..!’’

``இந்தக் கவலை எனக்கு மட்டும் இல்லையா பிச்சை! நம் கையில் என்ன இருக்கிறது? அந்த ஈஸ்வரன் மனம் வைக்க வேண்டும்...’’

``அதற்குத்தான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ஆண் மகவு வேண்டி, பல திருத்தலங்களுக்குச் சென்று பிரார்த்திக்கலாம் என்பது என் எண்ணம்.’’
 
மாடப்பன் மறுப்பேதும் சொல்லவில்லை. அவளுக்கு வேண்டிய பொருள்களையும் பாதுகாவலுக்கு ஆட்களையும் அவளுடன் அனுப் பினான். பிச்சை அவள் போக்கில் போனாள். யார் எந்தத் திசையில் கோயில் இருக்கிறது என்று கைகாட்டினாலும் அங்கே சென்றாள்.

மனம் முழுக்க `ஆண் குழந்தை’ என்கிற கோரிக்கை... ஒரு தவம் போல கோயில் கோயிலாக ஏறினாள். தென் தமிழகத்தில் ஒரு சிற்றூரில் இருந்த முருகன் கோயிலில் அவள் வழிபாடு செய்துவிட்டு திரும்பியபோது அது நடந்தது.

கோயில் வெளிப் பிராகாரத்தில் சற்று அமர்ந்தாள்.  அவள் எதிரே வந்து உட்கார்ந்தாள் ஒரு குறத்தி. ``அம்மாவுக்கு ரொம்ப வெசனம் போலிருக்கு...’’ என உரிமையோடு பேச்சை ஆரம்பித்தாள். பிச்சையின் அனுமதியைப் பெறாமலேயே அவளின் இடது கையை எடுத்துத் தன் மடியின் மேல் வைத்துக்கொண்டாள். சிறு கோலை, அவள் உள்ளங்கை ரேகையின் மேல் ஓடவிட்டாள்.

``அட... இதுக்கா இம்புட்டு வேதனை மகராசி! கவலையைவிடு. அந்த முருகன் அருளால உனக்கு ஆண் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ! `புள்ளை பொறந்துதுன்னா, அந்தத் தென்காசி பிச்சைக்காலன் பேரை வைக்கிறேன்’னு நேர்ந்துக்கோ. கண்டிப்பா பொறக்கும்...’’ என்றவள் வேறு எதுவும் சொல்லவில்லை. காணிக்கை வேண்டி கையை ஏந்தினாள்.

பிச்சைக்கு அந்த தெய்வமே வந்து அருள்வாக்குச் சொன்னதுபோல் இருந்தது. அந்தக் குறத்திக்குக் கை நிறைய காசுகளை வைத்தாள்.

பிச்சையாளுக்கு, பிச்சைக்காலன் பிறந்தான். மாடப்பனும் பிச்சையும் மனம் நிறைந்துபோனார்கள். வம்சத்தை விருத்தி செய்ய வந்த பிள்ளை; தங்கள் வாழ்க்கையே இனி அவன்தான் எனப் பூரித்துப்போனார்கள். ஊரைக் கூட்டி, கெடா வெட்டி விருந்து படைத்தார்கள்.

அரிதிப்பிள்ளையும் பிச்சைக்காலனும் சேர்ந்து வளர்ந்தார்கள். பிச்சைக்காலன் தந்தைக்கு ஒப்பான பிள்ளையாக இருந்தான். சூட்டிகைத்தனமும் அப்பனின் திறமையும் அவனுக்குள் ஊறியிருந்தது. மாடப்பனின் அமைதியான குருவிக் குடில் போன்ற வாழ்க்கையில் விளையாட காலம் தீர்மானித்த தினம் அது.

அன்று காலையிலேயே மாடப்பனின் வீட்டின் முன் கூட்டமாகத் திரண்டு வந்திருந் தார்கள் அவன் வீரர்கள். மாடப்பன் ஆச்சர்யமடைந்தான். ஒருநாளும் அவன் வீரர்கள் இப்படிச் சேர்ந்து அவனைப் பார்க்க வந்ததில்லை.

``என்ன காரியம்?’’

``தலைவரே... உங்கள் காவலில் ஊர் மகிழ்ந்திருக்கிறது. ஆனால், எங்கள் வாளுக்கும் வேலுக்கும் வேலை இல்லையே!’’ மெள்ள மெள்ள ஒருவன் பேச்சைத் தொடங்கினான்.

``அதற்கு..?’’

``உங்கள் காற்று வீசும் திசைப்பக்கம் ஒரு திருடன்கூட வரத் துணிவதில்லை. நாங்கள் வெறும் கையை வீசிக்கொண்டு எத்தனை நாள்கள்தான் வேலையில்லாமல் சுற்றுவது? அதனால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்...’’     

சனங்களின் சாமிகள் - 5

அவன் நிறுத்திய இடத்தில் இன்னொருவன் பேச ஆரம்பித்தான்... ``ஆநிரை கவர்வது நம் குல வழக்கம்தானே. அதற்காவது இந்த வாளும் வேலும் பயன்படட்டுமே... அடுத்த ஊரில் கன்று, காளைகளைக் கவர்ந்து வரலாம் அல்லவா?’’

மாடப்பனின் மீசை துடித்தது. `சே... திருட்டுத் தொழிலா? காவல் காப்பவன், அடுத்த ஊரேயானாலும் திருடப்போவதா?’ அவன் மனம் ஒப்பவில்லை. ஆனால், வீரர்களின் நிர்ப்பந்தம் அவனைப் பேச விடாமல் அடித்தது. அவன் மௌனம் சம்மதம் என ஆனது. வீரர்கள் குதூகலித்து, ஆர்ப்பரித்தார்கள். ஆநிரை வேட்டைக்குத் தயாரானது மாடப்பனின் காவல் படை.

பிச்சை தடுத்தும் கேட்காமல், களவாடச் சென்றான் மாடப்பன். மாட்டிக்கொண்டான். பக்கத்து ஊர் பசுக்கூட்டங்களைக் காவல்காத்து வந்த வீரர்கள் புயலெனப் பாய்ந்து வந்தார்கள். அந்தச் சண்டையில் மாடப்பன் பக்கம் அதிக சேதாரம். மாடப்பனையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை. வெட்டிச்சாய்த்தார்கள்.

தகவலறிந்து பிச்சை மனம் உடைந்து போனாள்; பித்துப்பிடித்ததுபோல் ஆனாள். தலைவன் இல்லாத வீடு, தரிசு நிலம் மாதிரி. வருகிறவர்கள் எல்லாம் சொந்தம் கொண்டாடினர். மாடப்பனின் உறவினர்கள், ஏதேதோ காரணம் சொல்லி எல்லா சொத்துகளையும் பறித்துக்கொண்டு பிச்சையையும் குழந்தைகளையும் அடித்து விரட்டினார்கள். நடுத்தெருவில் நின்றாள் பிச்சை. அவள் பெயர்க்காரணமே இன்று வாழ்க்கை என ஆனது.

ஊற்றுமலையில் இருக்கப் பிடிக்காமல், ஊர் ஊராக அலைந்தாள் பிச்சை. அத்தனை இன்னல்களிலும் பிள்ளைகளை அவள் விடவே இல்லை. வயிற்றில் கட்டிக்கொண்டு குட்டியைப் பாதுகாக்கும் குரங்கைப் போல போகிற இடத்துக்கெல்லாம் இருவரையும் அழைத்துப் போனாள். முன்பு எந்தெந்தக் கோயில்களுக்கெல்லாம் போய் வேண்டிக்கொண்டாளோ, அந்தக் கோயில்களின் வாசல்களில் எல்லாம் பிச்சை எடுத்தாள். கடைசியாக அவள் வந்து சேர்ந்த இடம் நாஞ்சில் நாடு. கோட்டாற்று நிலப்பாறை பணிக்கர் வீட்டு வாசலில் வந்து நின்றாள். அவருக்கு மாடப்பனைத் தெரியும். ஒரு வீராதி வீரனின் குடும்பமா பிச்சை எடுத்துக்கொண்டு அலைகிறது? அவர் கலங்கிப்போனார். பிச்சையைத் தேற்றினார். கொஞ்சம் பொருள் கொடுத்தார். அவராலும் அவளைத் தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத நிலை. ஆனால், பிச்சையும் அவள் பிள்ளைகளும் வாழ ஒரு வழிகாட்டினார்.

``பிச்சை! இனி உனக்கு வாழ்க்கை முழுக்க பிரச்னைகளே வராது. நான் சொல்கிறபடி கேள். சூரையூர் ஸ்ரீரங்கம் சேனைக்குட்டி வீட்டுக்குப் போ. அவர் உனக்கு உதவுவார்’’ என்று வழி சொன்னார். ஒரு மடலும் எழுதிக்கொடுத்தார்.

ஊற்றுமலையிலிருந்து சூறைக் காற்றில் சிக்கிய துரும்பாக, சூரைநகருக்கு வந்து சேர்ந்தாள் பிச்சை. சேனைக்குட்டிக்கு பிச்சையையும் குழந்தைகளையும் பார்த்ததுமே பிடித்துப் போய் விட்டது.  பிச்சையை மரியாதையாக நடத்தினார். அவளும் பிள்ளைகளும் தங்கிக்கொள்ள தனி இல்லம் ஒன்றைக் கொடுத்தார்.

உணவு, உடை, இடம்... இந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால்தான் மனித வாழ்க்கை நிறைவடைகிறது. நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள்... என நிற்காமல் சுழன்று கொண்டே இருந்தது காலச்சக்கரம். பிச்சைக்காலன் வாலிபனாக வளர்ந்து நின்றான்.

அப்பன் மாடப்பனைப்போலவே முறுக்கு, உள்ளத்தில் திடம், உடலில் உரம், திறமை அத்தனையும் சேர்ந்த உருவம் அவன். பிச்சைக் காலன் வெறும் கையால் ஓர் அடி கொடுத்தான் என்றாலே அடி வாங்கியவன் சுருண்டு போவான்;
சேனைக்குட்டியின் அன்புக்கு உகந்தவன் வேறு. சேனைக்குட்டியின் பணியாட்கள் தொடங்கி, உறவினர்கள் வரை அவனை நெருங்கப் பயந்தார்கள். அவன் தூரத்தில் வருவது தெரிந்தாலே விலகி நின்றார்கள். தன்னைப் பார்த்து பயப்படுகிறவர்கள் இருக்கிற வரை ஒருவனின் கை உயர்ந்துதான் இருக்கும். பிச்சைக்காலன் தன்னை அப்படி உயரத்தில் வைத்தே பார்த்தான். அவனாகவே சேனைக்குட்டியின் சொத்து களைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டான்.

கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் இடத்தில் தவறுகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். பிச்சைக்காலனின் மேற்பார்வையில் பல தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சேனைக்குட்டியின் உடைமை களில் கைவைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தான். அவனிடம் அடி வாங்கியவர்கள் எதிர்த்துப் பார்த்தார் கள். பிச்சைக்காலனின் நேர்மைக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

எதிர்ப்பாளர்களின் பகை வைக்கோல் போரில் வைத்த சிறு தீயாகப் பற்றிக்கொண்டது. அதிலும், கள்ளச் சிலம்பன் என்பவன் பிச்சைக்காலனைக் கொல்லும் அளவுக்கு வஞ்சம் கொண்டான். பொருத்தமான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.

- கதை நகரும்...  


தொகுப்பு: பாலுசத்யா