Published:Updated:

அமைதி, உற்சாகம்... கயிலையைத் தரிசித்த பலன் தரும் பர்வத மலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைதி, உற்சாகம்... கயிலையைத் தரிசித்த பலன் தரும் பர்வத மலை!
அமைதி, உற்சாகம்... கயிலையைத் தரிசித்த பலன் தரும் பர்வத மலை!

அறம், பொருள், இன்பம், வீடுபேறு பெற வழிபட வேண்டிய தலம்... பரமன் வழிகாட்டிய பர்வத மலை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ருமுறை அம்பிகை, சிவனாரிடம் ``பூவுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒருசேர அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் பெறுவதற்கு வழிபட வேண்டிய தலம் எது’’ என்று கேட்டாள். அம்பிகையின் கேள்விக்கு சிவபெருமான் அடையாளம் காட்டி, ஆற்றுப்படுத்திய மலைதான் பர்வத மலை. உலக மக்களின் நலனுக்காகத் தேவி தவமியற்றிய இந்த மலை, அன்னை பார்வதியின் திருப்பெயர் கொண்டு `பர்வத மலை’ என்று போற்றப்படுகிறது.

திருவண்ணாமலையைச் சுற்றியிருக்கும் சிவத் தலங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பர்வதமலை சிவத் தலம், சுமார் 4,500 அடி உயரத்தில் செங்குத்தான பாறையின் உச்சியில் அமைந்திருக்கிறது. சுவாமியின் திருப்பெயர் மல்லிகார்ஜுனர்; அம்பிகையின் திருநாமம் பிரமராம்பிகை தேவி. பார்க்கப் பார்க்க நம்மைப் பரவச ஆனந்தத்தில் ஆழ்த்தும் பர்வதமலை மல்லிகார்ஜுனர் கோயிலைத் தரிசிக்கலாமே..!

அன்னை பார்வதி தவமியற்றியதன் காரணமாக, `மலைகள் அனைத்திலும் உயர்வான மலை' என்ற பொருளும் பர்வத மலைக்கு உண்டு. `பர்வதம்' என்றால் மலை. எனவே, `மலைகளில் எல்லாம் மேலான மலை' என்ற சிறப்பும் பர்வத மலைக்கு உண்டு. சதுரகிரி, கொல்லி மலை, பொதிகை மலை என்று சித்தர் பெருமக்களால் புகழ்பெற்ற மலைகளைப்போலவே, இதுவும் சித்தர்களால் புகழ்பெற்ற மலை. கயிலைக்குச் சென்று (கைலாஷ் யாத்திரை) தரிசிக்க இயலாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால், அதைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். பர்வத மலைக்கு, நவிர மலை, தென் கயிலாயம், திரிசூல கிரி, சஞ்ஜீவி கிரி, பர்வதகிரி, கந்த மலை, மல்லிகார்ஜுன மலை ஆகிய பெயர்களும் உள்ளன.

கி.மு 3-ம் நூற்றாண்டில் நன்னன் சேய் நன்னன் ஆண்ட மலை இது. சங்க இலக்கியமான மலைபடுகடாம் இந்த மலையின் இயற்கையெழிலையும் பெருமைகளையும் பலவாறாகப் புகழ்ந்து பாடுகிறது.

திருமாலுக்கும் பிரம்மதேவருக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என்ற கர்வம் ஏற்பட்டபோது, அவர்களின் கர்வத்தை அடக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், விஸ்வரூப ஜோதி வடிவமாகத் தோன்றி வந்தபோது, கயிலையிலிருந்து தம்முடைய முதல் அடியை வைத்த மலை பர்வத மலை. பர்வத மலை சற்றே கீழிறங்க, அடுத்த அடியைத் திருவண்ணாமலையில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், பர்வத மலையில் அண்ணாமலையாரின் திருவடிகளைப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். 

அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வந்தபோது, அதன் ஒரு பகுதி கீழே விழுந்து உருவானதுதான் பர்வத மலை என்றும், அதன் காரணமாக இந்த மலைக்கு, `சஞ்சீவி மலை' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பர்வத மலையில் அருள்புரியும் மல்லிகார்ஜுனரை வழிபட அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் மலையேற்றம் மேற்கொள்கிறார்கள் பக்தர்கள்.

இந்த மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல  இருக்கின்றன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் காணப்படுகின்றன. அந்தக் குகைகளில் இப்போதும் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். மூலிகைக் காற்றைச் சுவாசித்து சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கென்றே பல்வேறு சிரமங்களைக் கடந்து மலையேறுகிறார்கள். 

பாறைகளால் ஆன படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படி, கரடுமுரடான பாறைகள் எனச் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு மலையேற வேண்டும். மலையேறும்போது செங்குத்துப் பாறை, பாழடைந்த கோட்டையின் சுவர்கள், இருபுறமும் காணப்படும் பாதாளப் பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் காணும்போது நமக்குள் அச்ச உணர்வு ஏற்பட்டாலும், மல்லிகார்ஜுனரை தியானித்ததுமே அச்சம் மறைந்து, மல்லிகார்ஜுனரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிடுகிறது. பசுமையான பள்ளத்தாக்கு, சாரல் பொழிந்தபடி நம்மைத் தழுவிச் செல்லும் மேகங்கள்... என மிக ரம்மியமான அனுபவம் அது. மலையில் உயரமான ஒற்றைப் பெரும்பாறையில் அமைந்திருக்கிறது மல்லிகார்ஜுனர் கோயில். கோயிலுக்கு அருகில் ஒரு மடம் இருக்கிறது. அங்கிருக்கும் சாது ஒருவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதுடன், அன்னதானமும் செய்து வருகிறார். குடிப்பதற்கு சுவையான தண்ணீரும் கொடுத்து வழியனுப்புகிறார். இடைப்பட்ட வழியில் எங்குமே தண்ணீர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

கதவுகள் இல்லாத இந்தக் கோயிலுக்கென்று அர்ச்சகர்களும் கிடையாது. கோயிலுக்குள் சென்றதுமே நாம் முதலில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசிக்கலாம். இறைவன் மல்லிகார்ஜுனரும் அம்பிகை பிரமராம்பிகை தேவியும் தனித் தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் ஆராதனை செய்து ஆனந்தம் அடைகிறார்கள். மல்லிகார்ஜுனரை வழிபட்டால், காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். 

கோயிலில், 18 சித்தர்களும் சிவபெருமானை வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். சித்தர்கள் சூட்சும வடிவில் அனுதினமும் சிவபெருமானை வழிபடுவதாகக் கூறுகிறார்கள் பக்தர்கள். மல்லிகார்ஜுனரை வழிபட்டால் சித்தர்களின் அருளும் கிடைக்குமாம். மலையேறும் பக்தர்களுக்கு சித்தர்களே நாய் வடிவில் வழிகாட்டி அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் அதிசயமும் இங்கு நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது.

பௌர்ணமி மற்றும் அமாவாசை இரவில் மலையேறி, கோயிலில் தங்கியிருந்து, மல்லிகார்ஜுனரை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மலையேறி இறைவனைத் தரிசித்து முடித்ததும் மனதுக்கு அமைதியும் உடலுக்கு உற்சாகமும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரவைக்கும் அற்புதமானத் தலம் இது. 

`அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை' என்று சொல்வதுபோல், `பிடிக்கொரு லிங்கம் பர்வத மலை' என்று பக்தர்களால் புகழப்படும் இந்த மலையிலிருக்கும் சிவபெருமானை வழிபட்டால் மனம், வாழ்வு இரண்டிலும் உற்சாகமே நிலைத்திருக்கும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு