திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கயிலை காலடி காஞ்சி...

கயிலை காலடி காஞ்சி...
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை காலடி காஞ்சி...

அனுஷம்... அற்புதம்! நிவேதிதா - ஓவியங்கள்: ம.செ

வைகாசி அனுஷம் - நம்முடைய முன்வினை கள் இரண்டையும் வேரறுத்து, இன்றும் நம்முன் நின்று அருளும் பெருங்கருணைப் பேரொளியாம் காஞ்சி மகா பெரியவா, அவதரித்த திருநட்சத்திரம். 

கயிலை காலடி காஞ்சி...

தமது அருட்திறத்தால் எத்தனையோ அன்பர்களது வாழ்வில் கருணைமழை பொழிந்து அவர்களின் சிந்தைகுளிரச் செய்த காஞ்சி முனிவரைத் தந்த இந்தத் திருநட்சத்திரம், அவர் பக்தர்களைப் பொறுத்தவரையிலும் ஓர் அற்புதம் தான். ஒவ்வோர் அனுஷத்தையும் கொண்டாடி மகிழ்வார்கள். மாதாந்திர அனுஷத்துக்கே இப்படியென்றால், அவர் அவதரித்த வைகாசி அனுஷத் திருநாளுக்குக் கேட்கவா வேண்டும். அடியார்கள் அகமகிழ அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள், தான-தருமங்கள் எனக் கோலாகலமாகக் களைகட்டும் அந்தத் திருநாள்.

ஜூன் - 8 வியாழன்று ‘வைகாசி அனுஷ’ திருநாள். இத்திருநாளைக் கொண்டாடும்முகமாக நாமும், காஞ்சி மஹானின் கருணை மழையில் நனைந்து மகிழ்வோமா?

துளி - 1

தடாகம் நிறைந்தது... தாகம் தணிந்தது!


மகா பெரியவா அன்றைய ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. கடுமையான வறட்சி நிலவும் கிராமம் என்பதை மகா பெரியவா புரிந்துகொண்டார். இருந்தும் அன்றையபொழுது அந்தக் கிராமத்திலேயே தங்குவது என்று திருவுள்ளம் கொண்டுவிட்டார். மறுநாள் காலையில் ஸ்நானம் செய்து நித்தியப்படி பூஜைகளை முடிப்பதற்காக, அருகில் இருந்த பக்தர் ஒருவரை அழைத்து, ‘‘ஸ்நானம் செஞ்சு, தெனப்படி பூஜைகளைச் செய்யணும். பக்கத்துல எங்கேனும் கொளம், கெணறு இருக்கான்னு பாத்துட்டு வா’’ என்று பணித்தார்.   

கயிலை காலடி காஞ்சி...

அந்த பக்தரும் ஊரெல்லாம் தேடி அலைந்து, கடைசியாக ஒரு குளத்தைப் பார்த்தார். குளம் வறண்டு இருந்தது. ஓர் இடத்தில் மட்டும் சிறிது தண்ணீர் குட்டைப் போல் தேங்கி இருந்தது. அந்த வறண்ட குளத்தைத் தவிர, வேறு கிணறோ அல்லது குளமோ கண்ணில்படவில்லை. மகா பெரியவா இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தவர், தயக்கத்துடன் விஷயத்தைத் தெரிவித்தார்.
  
‘‘ஓ... அப்பிடியா? சரி, அந்தக் கொளத்தண்டை என்னை அழைச்சிண்டு போ’’ என்று உத்தரவிட் டார். பக்தர் வழிகாட்ட, மகா பெரியவா பக்தர்கள் பின்தொடர குளத்தின் அருகில் சென்றார். மகா பெரியவா அந்தக் குளத்தில் குட்டை போல் தேங்கியிருக்கும் நீரில் ஸ்நானம் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட கிராம மக்கள் பதறிப்போய், ‘‘சாமி, இந்தக் கொளத்துத் தண்ணி உப்புக் கரிக்கும். பக்கத்துக் கிராமத்துக்குப் போய் வேற நல்ல தண்ணி கொண்டு வர்றோம். கொஞ்சம் பொறுங்க சாமி, இந்தத் தண்ணியில குளிக்க வேணாம் சாமி’’ என்று கூறினர்.

தம் மீது அவர்கள் கொண்டிருக்கும்  அன்பையும் பக்தியையும் கண்ட மகா பெரியவா, ‘‘நீங்கள்லாம் செரமப்பட வேணாம். நான் இந்தக் கொளத்துத் தண்ணியிலயே ஸ்நானம் செஞ்சுக்கறேன்’’ என்று கூறி, உப்புக் கரிக்கும் அந்தத் தண்ணீரிலேயே ஸ்நானம் செய்து, நித்திய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார். பிறகு, சற்றுநேரம் அங்கேயே அமர்ந்து மந்திரங்களை ஜபிக்கத் தொடங்கினார். பின்னர், கிராம மக்களை ஆசீர்வதித்து, பிரசாதம் கொடுத்துவிட்டு, யாத்திரையைத் தொடர்ந்தார்.

சில தினங்கள் சென்றிருக்கும். உப்புக் கரிக்கும் குளம் இருந்த ஊரைச் சேர்ந்த பத்து பதினைந்து பேர் மகா பெரியவா தங்கியிருக்கும் கிராமத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு, இரண்டு மாட்டு வண்டிகளில் புறப்பட்டு வந்தனர்.அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி களிடம், ‘‘நாங்க பெரிய சாமிய பாக்க வந்திருக்கோம்’’ என்று கூறினர். வந்தவர்கள் இன்னார் என்று அடையாளம் தெரிந்த சிப்பந்திகள், மகா பெரியவாளிடம் உத்தரவு பெற்று, அந்த பக்தர்களை மகானிடம் அழைத்துச் சென்றனர்.

‘‘சாமி, சரியான மழை இல்லாத தால எங்க கிராமத்துல எப்பவுமே வறட்சிதான். வெயில்காலம் வந்துட்டா தண்ணிக்கு நாங்க படற பாடு கொஞ்சநஞ்சமில்ல. சாமி எங்கக் கிராமத்துக்கு வந்து அந்தக் கொளத்துத் தண்ணில ஸ்நானம் செஞ்ச நேரம், எங்கிருந்துதான் வந்துச்சுன்னே தெரியாதபடி ஊத்தெடுத்து கொளமே நெறைஞ்சிடுச்சு. உப்புக் கரிப்பா இருந்த தண்ணிகூட கல்கண்டு மாதிரி தித்திப்பா மாறிடுச்சு. எல்லாம் சாமியோட கிருபைதான்’’ என்று கூறி, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். பிறகு தங்கள் ஊரில் விளைந்த தானியங்களையும் காய்களையும் காணிக்கையாகக் கொடுத்தனர். மகா பெரியவா அனுக்கிரகத்தினால் காலம்காலமாக வறண்டிருந்த அந்தக் கிராமத்தின் தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியது.
 
துளி - 2

சித்தம் தெளிந்தது... உள்ளம் சிலிர்த்தது!


என் சிறு வயதில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

ஒருமுறை மகா பெரியவா தன் பரிவாரங்களுடன் சென்னை ஜார்ஜ் டவுன் அரண்மனைக்காரத் தெருவில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில் சங்கர மடத்தில் தங்கியிருந்தார். அதையொட்டிய அக்ர ஹாரத்தில் நாங்கள் வசித்தோம். எங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் குடியிருந்த மாமி சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தார். அவரின் கணவர் வருடம்தோறும் ராமநவமி உத்ஸவத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார். அந்தத் தருணத்தில் மாமியைச் சோளிங்கர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

அந்த வருடம் மாமியைச் சோளிங்கருக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அன்று காலை யிலிருந்தே மாமியைக் காணவில்லை. வீட்டிலோ அந்த மாமியின் கணவர் ஸ்ரீராமருக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார். எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த ரிக்‌ஷாக்காரரிடம் மாமியைத் தேடச் சொல்லி அனுப்பினோம். சிறிது நேரத்திலேயே ரிக்‌ஷாக்காரர் மாமியுடன் வந்து சேர்ந்தார்.

மாமியை மகா பெரியவரிடம் அழைத்துச் செல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார் அவரின் மாமியார். மகா பெரியவர் தங்கியிருந்த மடத்திலோ எக்கச்சக்கக் கூட்டம். எப்படியோ நானும் மாமியும் பெரியவர் பூஜை செய்து கொண்டிருந்த மண்டபத்து வாசலில் நுழைந்தோம். அந்நேரம் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரைப் பூஜித்துக் கொண்டிருந்த மகா பெரியவர் பூ ஒன்றை எடுத்து வீச, அது மாமியின் முகத்தில் வந்து விழுந்தது. அவ்வளவுதான். மாமிக்கு உடம்பு சிலிர்த்துப் போனது. மறுகணம் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டார். அதன்பிறகு, அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படவேயில்லை. மகா பெரியவாளின் திருவுள்ளம்தான் மாமியைச் சோளிங்கர் போக விடாமல் தடுத்து நிறுத்தியதோ என நாங்கள் எல்லோரும் வியந்தோம். காஞ்சி முனிவரின் கருணையே கருணை!

- பத்மா, சென்னை-20

துளி - 3 

மழை பொழிந்தது... கிராமம் செழித்தது!


சமீபத்தில் எனக்கு பிட்நோட்டீஸ் ஒன்று கிடைத்தது. மகா பெரியவரின் திருவருளை விளக்கும் அன்பர் கல்யாணபுரம் எஸ். ஸத்ய மூர்த்தி எழுதிய அற்புதமான தகவல் அதில் இடம் பெற்றிருந்தது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:   

கயிலை காலடி காஞ்சி...

ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்னால் நடந்த ஓர் உண்மை சம்பவம் இது. வருண பகவான் கருணை காட்டாததால், எங்கும் ஒரு சொட்டு கூட மழையே இல்லை.  செய்வதறியாது எல்லோரும் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், எங்களுக்குப் பக்கத்துக் கிராமமான காருகுடிக்கு (திருவையாற்றுக்கு அருகிலுள்ளது) அன்றிரவு காஞ்சி மகா பெரியவாள் வரப் போவதாகச் செய்தி கிடைத்தது. விடிந்ததும்  ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி காருகுடி கிராமத் துக்குச் சென்றனர். பூஜை முடிந்து பெரியவாளைத் தரிசித்தபோது, பெரியவாளே முந்திக்கொண்டு, ‘‘ஊர்ல மழையே பெய்யலையே, என்ன செய்யறதுன்னு கேட்க வந்திருக்காப்லே இருக்கு, அப்படித்தானே” என்றார். ஊர் பெரியவர் களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். ‘‘ஆமாம்” என்று சொல்லி, கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

“நான் இரண்டு ஸ்லோகம் சொல்றேன். இந்த ஸ்லோகத்தை புருஷாள், பொம்மனாட்டி, குழந்தைகள் எல்லாருமா சேர்ந்து, ஒரு ஞாயிற்றுக் கிழமையன்னிக்கு கோயில்லே கூடி ஜபம் பண்ணுங்கோ, பெருமாளுக்கு நிறைய குளிரக்குளிர திருமஞ்சனம் பண்ணுங்கோ. ஓர் ஆத்துலேகூட விடாம எல்லாராத்துலேயும் அரைப்படி அரிசி வாங்கி நிறைய தளிகை பண்ணிப் பெருமாளுக்கு சமர்ப்பிச்சு ததீயாராதனை பண்ணுங்கோ, எல்லோருக்கும் நிறைய அன்னதானம் பண்ணுங்கோ.
எல்லோருக்கும் லீவாயிருக்குங்கறதாலே ஞாயிற்றுக்கிழமையன்னிக்குப் பண்ணச் சொன் னேன். தவிர எல்லாருக்கும் பங்கு இருக்கணுங் கறதுக்காக எல்லாராத்துலேயும் அரிசி வாங்கிக்கச் சொன்னேன். சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ. திருப்பாவையிலே ‘ஆழி மழைக்கண்ணா'ங்கற பாட்டையும் எல்லோரும் தினமும் சொல்லுங்கோ, மழை பெய்யும்” என்று சொன்னார். அடுத்த ஞாயிறன்று அவர் சொன்னபடி அனைத்தையும் செய்து முடித்தோம். அந்த வருஷம் நல்லமழை பெய்து எங்கள் கிராமம் மட்டுமல்ல; நாடு பூராவும் நல்ல விளைச்சல் ஏற்பட்டு சுபிக்ஷமாக விளங்கியது.

பெரியவாள் சொன்ன இரண்டு  ஸ்லோகங் களையும் கீழே கொடுத்திருக்கிறேன். இதைப் படிக்கும் வாசகர்கள், தங்கள் கிராமத்தில் பெரிய பெரியாவளை ஸ்மரித்து மேற்படி ஸ்லோகங்களைப் பெரியவாள் சொன்ன முறையில் ஜபம் முதலானவற்றைச் செய்தால் நல்ல மழை பெய்து நாடு சுபிக்ஷம் அடையும்.

ஸ்லோகம் -1

ரிச்ய ச்ருங்காயமுநயே விபண்டக ஸுதாயச நம:
சாந்தாதி பதயே ஸத்ய: ஸத்வ்ருஷ்டி ஹேதவே

ஸ்லோகம் -2

விபண்டகஸுத: ஸ்ரீமாந் சாந்தாபதி ரகல்மஷ:
ரிச்ய ச்ருங்க இதி க்யாத:
மஹா வர்ஷம் ப்ரயச்சது

- சுப்பிரமணியம், சென்னை - 28.

அனுஷத்தன்று கும்பாபிஷேகம்!

யிலை நாயகனின் அம்சமாக பக்தர்களால் போற்றி வழிபடப் பெறும் மகா பெரியவா, உலக நன்மைக்காக மோனத் தவம் இயற்றிய சிவாஸ்தானம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்று, வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. மகா பெரியவா அனுக்கிரகத்தினால், சுமார் 40 வருடங்களாக நடைபெற்றுவரும் வேத பாடசாலையில், வேதம் பயிலும் வித்யார்த்திகளின் வேத கோஷம் சதாகாலமும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேத பூமியில் கும்பாபிஷேக விழா சிறப்புற நடைபெற அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து, தம்முடைய கிருபையினால் வறண்ட கிராமத்தையே பசுஞ்சோலையாக மாற்றிய மகா பெரியவா அனுக்கிரகத்தினால் வாழ்க்கையில் பல நன்மைகளையும் பெறலாமே.

நன்கொடைகள் அனுப்ப வேண்டிய விவரம்:

SRI SIVASTHANAM NITHYA POOJA TRUST

INDIAN BANK, SHANKARA MUTT BRANCH,

KANCHIPURAM,

A/C No. 774698810

IFSC CODE: IDIB000S085

தொடர்புக்கு:  எஸ்.சைலேஷ் - 09380872790

அடுத்த இதழில்!

‘‘தாத்தா நீங்க ஏன் எனக்கு ஸ்கூல் பீஸ் கட்டலை? நாளைலேர்ந்து என்னைய
பள்ளிக்கூடத்துக்கு வர வேணாம்னு சொல்லிட்டாங்க தெரியுமா?’’

கண்ணீரும் கம்பலையுமாக வந்து தன்னிடம் கேள்விகேட்ட சிறுவனின்
வாழ்வில் மகா பெரியவா நடத்திய அருளாடலும், அதனால் விளைந்த அற்புதங்களும்...