மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 37

சிவமகுடம் - 37
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 37

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

சங்க நாதம்!

ணப்பொழுதுதான் என்றாலும் காலத்தின் ஆகச் சிறிய துளியான அந்த நுண்ணியப்பொழுதில் நிகழ்ந்தேறிவிடும் சில காரியங்கள், யுக யுகாந்திரங்களின் தலையெழுத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். இதற்குப் புராணங்களிலும் சரித்திரத்தின் பக்கங் களிலும் அநேக உதாரணங்கள் உள்ளன.    

சிவமகுடம் - 37

கணப்பொழுது  நேரம்தான்... பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார் பரமன்; ஆணவம் நீங்கி நான்முகனானான் பிரம்மன்!

கண்ணிமைக்கும் தருணம்தான்... சிவனாரின் சிறு புன்னகையில் முப்புரங்களும் பொசுங்கிப் போயின.

மகேந்திரவர்மனும் காஞ்சியும் புலிகேசி யிடம் வீழ்ந்துபட, அந்தக் கணப்பொழு தில் மாமல்லனின் உள்ளத்தில் பற்றிய தீ, பிற்காலத்தில் ஒட்டுமொத்த வாதாபியையும் சுட்டெரித்தக் கதை நமக்குத் தெரியும்.

உறையூர்ப் போர்க்களத்திலும் கணத்துக்குக் கணம் பலவித மாயாஜாலங்களை நிகழ்த்தி, களத்தில் உள்ளோரைப் பெரும் பதைபதைப் பில் ஆழ்த்திக்கொண்டிருந்தது காலம்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கிடைத்த இடைக்குன்றூர் கிழார் போன்றோ, கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றியைப் பாடிய உறுத்திரங்கண்ணனாரைப் போன்றோ... கூன்பாண்டியருக்கோ அல்லது சோழர் தரப்புக்கோ புலவர்கள் எவரேனும் வாய்த்திருந்தால், வெகு நிச்சயமாக இந்த உறையூர்ப் போர்க்குறித்தும் விலாவாரியாகச் சிலாகித்துப் பாடியிருப்பார்கள். ஆனால், காலத்தின் கோலம்... அப்படியான புலவர்கள் வாய்க்காததோ அல்லது எவரேனும் பாடியிருந் தும் அதுபற்றிய தகவல் ஏதும் நமக்குக் கிடைக்காதுபோனதோ நமது துரதிர்ஷ்டமே.

எனினும், சிறு தகவலாகச் செப்பேடுகள் தரும் ஓரிரு வரிகளும், பிற்காலத்தில் இந்தக் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையை விவரித்து எழுதிய புராண ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் தரும் விவரங்களும் இந்தப் போரின் முக்கியத்துவத்தை நன்காகவே நமக்கு உணர்த்துகின்றன.

அடடே! ஆராய்ச்சிச் சிந்தனையில் களத்திலிருந்து வெளியேறிவிட்டோமே... வாருங்கள்... கூன்பாண்டியரைப் பின் தொடரலாம்...

கூன்பாண்டியரின் வாள்கரம் விடுத்த சைகைக் கட்டளைகளுக்கு இணங்க... மாபெரும் தனுசு ஒன்றின் நாண் பின்னோக்கி  இழுக்கப்பட்டது போன்று, பாண்டிய பெரும் சேனை ஓர் அரைவட்டமாய் விறுவிறுவென நகர்ந்து பின்னடைந்துவிட, அந்த நாணின் பெரும் விசையால் ஏவப்பட்ட அஸ்திரத்தைப் போன்று, கரும்புரவி வீரனின் வழிநடத்தலோடு வரும் சோழர்களின் விசித்திரப்படையை எதிர்நோக்கிச்  சீறிப் பாய்ந்தார் கூன்பாண்டியர். கருநாகக் கணையை எதிர்த்து மடக்கக் கருடக் கணை  பாய்வது போலிருந்தது அந்தக் காட்சி.

மன்னவர் கூன்பாண்டியர் திடுமென அப்படிப் பாய்ந்துவிட்டது, அவருடைய சேனைத் தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஒருங்கே அளித்தது என்றாலும், அடுத்தடுத்து அவரும் அவருடைய மெய்க்காவல் படையும் மேற்கொண்ட நடவடிக்கைகள், பாண்டிய சேனைத் தலைவர்களது அதிர்ச்சியையும் திகைப்பையும் ஆச்சர்யமாகப் பரிணமிக்கச் செய்தன.

சிவமகுடம் - 37ஆம்... எதிரே சீறியபடி வரும் விசித்திரப் படை;  இடப்புறத்திலும் வலப்புறத்திலும் இருந்து முறையே கோச்செங்கண், நம்பி தேவனின்  படையணிகள்... ஏக காலத்தில் மூன்று படையணிகளை எப்படிச் சமாளிக்கப் போகிறார் மன்னர்பிரான் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த விசித்திரம் நிகழ்ந்தது.

கூன்பாண்டியர், வாளேந்திய தனது வலக்கரத்தை ஏதோ விநோத பாவனையில் காற்றில் சுழற்ற, அந்தச் செய்கைக்கான சூட்சுமத்தைப் புரிந்துகொண்டதுபோல், மறுகணம் அவரின் காவல் சேனையினர் ராட்சதத்தனமாக இயங்கினார்கள். சடுதியில் வலக்கரத்தின் வாளை இடக்கரத்துக்கு மாற்றிக் கொண்டார்கள். அதே கரத்தால் தத்தமது புரவியின் கடிவாளத்தையும் விட்டுவிடாமல் இறுகப் பற்றிக்கொண்டு, முதுகுப்புறத்தில் இருந்த கேடயத்தை வலக்கரத்தால் எடுத்துக் கொண்டார்கள். அடுத்ததாக, புரவியில் இருந்தபடியே வலப்புறமாகத் தரையை நோக்கிச் சாய்ந்து மன்னவரைப் போலவே ஓர் அரைவட்டமாக கேடயக் கைகளைக் காற்றில் வீச... சும்மா மீளவில்லை அந்தக் கேடயங்கள். மண்ணோடு சேர்ந்து மீண்டன. அப்படிக் கேடயங்கள் மீண்டு உயர்ந்தபோது,  அவை உதிர்த்த மண், காற்றில் கலந்தது. ஏற்கெனவே புரவியின் காலடிக் குளம்புகளால் உண்டான புழுதியோடு, கேடயங்கள் மண்ணை வாரித் தூற்றியதால் உண்டான புழுதியும் சேர்ந்துகொள்ள, அப்பகுதி முழுக்கவும் புழுதி மண்டலமானது.  எதிரில் இருப்பவரையும் பார்க்க முடியாத நிலை.

பாண்டியரின் ஆணைப்படி களத்தில் பின்னடைந்து, களத்தின் எல்லையில் பாதியும், அதைத் தொடர்ந்து விரிந்துகிடந்த வனத்தில் பாதியாகவும் ஓர் அரைவட்டமாக நின்றபடி இங்கே நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்த பாண்டிய சேனைகளின் தலைவர்களுக்கு, நடப்பதை ஓரளவு அனுமானிக்க முடிந்தது.
 
வல்லவர்களுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். நம் மன்னவருக்கோ கல்லும் மண்ணும்கூட ஆயுதம்தான் என்று உள்ளூர குதூகலிக்கவும் செய்தார்கள். அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. விசித்திரப் படையின் வேகத்தைத் தடுக்க இதைவிடவும் சிறந்ததோர் உபாயம் வேறு இருப்பதாகப்படவில்லை அவர்களுக்கு. புழுதிப்படலத்தின் நடுவே பார்வைக்கு எதுவும் புலப்படாத நிலையில், எதிரிகளின் விசித்திரப் படைத் தாக்குதலுக்கு வழியில்லாமல் போகும் என்று கணித்தார்கள்.
அவர்களது கணிப்பை ஓரளவு மெய்யாக்குவது போல் விசித்திரப்படையின் வேகம் சற்று மட்டுப்படவே செய்தது. கூன் பாண்டியரும் அதைக் கவனித்தார். புழுதி மண்டலத்திலும் புகை மண்டலத்திலும்கூட கண்களை நன்கு மூடிக்கொண்டு, பார்வைப் புலனை மட்டுப்படுத்தி, செவிப்புலனைக் கூர்மையாக்கி, வெகு நேர்த்தியாகப் புரவியைச் செலுத்துவதற்கு நன்கு பழக்கப்படுத்தப் பட்டிருந்த தமது மெய்க்காவல் படையை முடுக்கிவிட்டார். கரும்புரவி வீரன் நிதானிப்ப தற்குள் அவன் மீது பாய்ந்துவிடும் நோக்கத்தில் தானும் பாய்ந்து சென்றார்.

மறுகணம் புரவிகளோடு புரவிகள் மோதின. திடீர் தாக்குதலால்  தடுமாறி எதிர் தரப்பில் சில புரவிகள் பெரும் கனைப்புடன் நிலை தடுமாறி தரையில் விழுவதை அவரால் உணரமுடிந்தது. இந்தக் களேபரச் சத்தங்கள், கள எல்லையில் நிற்கும் பாண்டிய சேனையையும் உசுப்பியிருக்க வேண்டும். அவர்கள், வெற்றிவசமாகிவிட்டதாகவே கருதி பெரும் ஆரவாரம் செய்தார்கள். அந்தக் கூச்சலும் கூன்பாண்டியரின் செவிகளில் விழவே செய்தது. ஆனால், அடுத்த கணத்தில் வேறோர் அதிர்ச்சி காத்திருப்பது, அந்தக் கணத்தில் அவருக்குத் தெரியவில்லை.

ஆம்... புழுதி மண்டலம் விலகி, புறக் காட்சிகள் தெளிவானபோது களத்தில் வீழ்ந்து கிடந்தவை சோழர்களின் சில புரவிகள் மட்டுமே. எனில், எதிரிகள் எங்கே? திகைப்போடு கூன்பாண்டியர் சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான் உள்ள நிலைமையைத் தெளிவாக உணர முடிந்தது அவரால். அவரையும் அவரது மெய்க்காவல் படையையும் சுற்றி வளைத்திருந்தது சோழர்களின் விசித்திரப் படை. புரவி வீரர்கள் வெளிவட்டமாகச் சூழ்ந்திருக்க, வாள் வீரர்கள் சிலர் உள்வட்டமாகச் சூழ்ந்திருந்தார்கள்.

‘எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? புழுதிப் படலத்தை எப்படிச் சமாளித்தார்கள் இந்த அரக்கர்கள்? புரவியின் வயிற்றோடு பிசாசு போல் பிணைக்கப்பட்டிருந்தார்களே... அந்த முரட்டு வீரர்கள் ஒருவரையும் இப்போது காணோமே. பிணைப்பில் இருந்து எப்போது விடுபட்டார்கள்... எங்கே சென்றார்கள்? ஏற்கெனவே அந்த நம்பிதேவன் எப்படித் தப்பித்தான் என்பதே பெரும் புதிராக இருக்க, இப்போது கண்முன் நடந்துமுடிந்த இந்த மாயாஜாலம் பெரும் புதிராக அல்லவா இருக்கிறது...’

தமது பெரும்படை கூப்பிடுதொலைவில் இருந்தும் அவர்களால் ஓர் அடிகூட  முன்னேற முடியாதபடி, தன்னைப் பகைவர்கள் சுற்றிவளைத்துவிட்ட அந்தக் கணத்திலும், சிறிது திகைப்பும் அதைத் தொடர்ந்து சிந்தனை வயப்படவும் செய்தாரே ஒழிய, கொஞ்சமும் அச்சம் கொள்ளவில்லை கூன்பாண்டியர்.  

சிவமகுடம் - 37

அப்படி ஆழ்ந்தச் சிந்தனையில் லயிக்கத் தொடங்கிவிட்டிருந்த கூன்பாண்டியரின் எண்ணவோட்டத்தைக் கலைக்கும்விதமாகக் குரல் கொடுத்தான் முரட்டு வீரன் ஒருவன்.

‘‘சக்ரவர்த்தி அவர்களே! உங்கள் வீரர்களுக்கு நீங்கள் கண்கட்டி வித்தையைக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் என்றால், எங்கள் பட்டர்பிரானும் இளவரசியாரும் எங்களுக்குச் சைகை வித்தையைச் சொல்லித் தந்திருக்கிறார்கள்’’ என்றான் சற்றே ஏளனமாக.

கூன்பாண்டியருக்கு அவன் கூறியது புரிந்தது போலும் இருந்தது; புரியாதது போலும் இருந்தது. அவருடைய அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும்விதமாக அவனே தொடர்ந்து கூறினான்... ‘‘உங்கள் கரத்தை நீங்கள் காற்றில் சுழற்றியபோதே நாங்கள் புரிந்துகொண்டோம், அது எதற்கான சைகை என்பதை.  புழுதிப் படலம் கிளம்புமுன் நாங்கள் விலகிவிட்டோம். நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள்...’’

இவ்வாறு சொல்லிவிட்டு, இடிஇடிப்பது போன்று பெரிதாகச் சிரிக்கவும் செய்தான். அவனது அந்தச் செய்கையைப் பெரிதும் கண்டிக்கும் தொனியில் ‘ஹூம்ம்’ என்றொரு ஹூங்காரக் குரல் கேட்கவே, சட்டென்று பவ்யமானான் முரட்டு வீரன்.
கூன்பாண்டியர் ஹூங்காரக் குரல்வந்த திசையை நோக்கினார். கரும்புரவியின் மீது முழுக்கவசம் அணிந்தபடி கனக்கம்பீரமாக அமர்ந்திருந்த  ஹூங்காரக் குரலுக்குச் சொந்தக்காரனான வீரன், ‘இன்னும் என்ன தாமதம்’ என்பது போல் அருகில் குதிரையில் அமர்ந்திருந்த, கனத்த சரீரத்துக்காரரைப் பார்க்க, அவர் இடையில் இருந்த வெண் சங்கைக் கையில் எடுத்தார்.  கூன்பாண்டியரை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, அந்தச் சங்கைத் தமது வாய் இதழ்களில் பொருத்திக்கொண்டார்; அதிகாரபூர்வமாய் சோழ தேசத்தின் வெற்றியை அறிவிக்கும் விதமாய் சங்கநாதம் எழுப்புவதற்காக.

மிகப்பெரிதாய் மூச்சை உள்ளிழுத்து, கன்னம் புடைக்க ஆவேசத்துடன் காற்றை வாய்க்குள் கொண்டுவந்து, அதை அந்த  வெண் சங்குக்குள் அவர் செலுத்த முயன்ற அதேகணத்தில், மதில் மீதிருந்து மிகப் பெரியதாக முழங்கியது வேறொரு சங்கு. தொடர்ந்து ஜெயபேரிகைகளும் முழங்கின.

‘யாரது அவசரக்குடுக்கை?’ என்ற எரிச்சலோடு அந்தக் கனத்த மனிதனும், கரும்புரவி வீரனும் மதிற்புரத்தை நோக்க, கனக்கம்பீரமாய் அங்கு சங்கநாதம் எழுப்பிக்கொண்டிருந்தார் சைவத் துறவியார். அருகில், ஆயுதபாணிகளான  பாண்டிய வீரர்கள்  சூழ்ந்திருக்க அவர்களின் மத்தியில் மணிமுடிச் சோழர்.

இப்போது கூன்பாண்டியர் பெருங் குரலெடுத்துச் சிரிக்க, அவரது அந்தச் சிரிப்புக்கு அர்த்தம் சொல்வதுபோல் உறையூர்க் கோட்டையின் உச்சியில் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த புலிக்கொடி மெள்ளக் கீழிறங்கத் தொடங்கியது!

- மகுடம் சூடுவோம்...