
பி.ஸ்ரீ.

கடலும், காடும்
ஒரு பெருங்கடல். அலைகள் நிமிர்கின்றன, நுரைக்கின்றன, மோதுகின்றன, சுருட்டியடிக்கின்றன, உடைகின்றன, மறிந்தும் முறிந்தும் விழுகின்றன, மறைகின்றன. இவற்றுக்கிடையே கிடக்கிறோம், மிதக்கிறோம், மொத்துண்டு கிடக்கிறோம்; எனினும் கடல் கண்டோமில்லை!
என்ன கடல்?
அலைமேல் அலையெறிந்த வண்ணமாயிருக் கிறது. பேரலைகளும் சிற்றலைகளும், நுரைகளும் நுரைக் கொழுந்துகளும், நீர்க் குமிழிகளும் சுழிகளும் - இவற்றில் எல்லாம் எத்தனை விதம் விதமான உருவங்கள், அழகுகள். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, மிருகம், மக்கள், தேவர் ஆகிய சராசரி உருவங்களெல்லாம், இக்கடலின் அலைகள் முதலியன. பேதம் இல்லாத கடல், நிமிர்ந்து எழுந்து விழுந்ததும், எத்தனையோ பேத உருவங்கள் - பல்வேறு சராசரி வடிவங்கள் எழுகின்றன, நிலவுகின்றன, விழுகின்றன. நமது நெஞ்சின் அலைகளும் - எண்ணங்கள், விருப்பங்கள், உணர்ச்சிகள் எல்லாம் - இந்த நீலக்கடலில் நிமிரும் அலைகளே. மண்ணுலகத்தைக் காத்துக்கிடக்கும் உவர்க்கடல் போல், இக்கடல் மண்ணையும் விண்ணையும் ஒருங்கே காத்துக்கிடக்கிறது; உலகங்களையெல்லாம் கோத்துக் கிடக்கிறது, ஒரு கோவையாக. பல்வேறு பொருள்களிலும் உயிர்களிலும் கலந்திருந்து, இவற்றையெல்லாம் கோத்தும், காத்தும் கிடக்கிறதாம் இப்பெருங்கடல். இவற்றில் எல்லாம், தான் கலந்திருந்தும் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் தன் நிலையிலும் (கடவுள் - நிலையிலும்) மாறுபடாமல் இருக்கிறதாம். ஆம், இக்கடலுக்குப் பெயர் கடவுள். இது சச்சிதானந்தக் கடல்.

தெய்வமாக் கடல்
இப்படியெல்லாம் தத்துவக் கடலில் துணிந்து குதித்துவிடுகிறான் கம்பன், ஆரணிய காண்ட முகப்பிலே. ஒவ்வொரு காண்டமும் கடவுள் - வாழ்த்துடனே தொடங்குகிறது. ஆரணிய காண்டம் ராமாயணத்தின் மத்திய பாகம் - இதயப் பிரதேசம். இங்கேதான் ராம ராவண யுத்தத்துக்கு நேரான காரணம் (சீதையை அபகரித்தல்) நிகழ்கிறது. இக்காண்டத்தின் கடவுள் வாழ்த்தும் விசேஷமாக அமைந்து விட்டது போலக் காண்கிறது.
ஓருயிராக எங்கும் நிறைந்து மறைந்து பரந்து கிடக்கும் தெய்வமாக் கடலினை அறிந்து கொள்வதுதான் எப்படி? கம்பனது தெய்வ மாக்கவி,
ஓதி ஓதிஉண ருந்தொறும் உணர்ச்சி உதவும்
(உணருந்தொறும் - உணர்ந்து கொள்ளும் போதெல்லாம்) என்று குறிப்பிடுகிறது. ஓதி ஓதி உணர உணர, மேலும் மேலும் உணர்ச்சியை - மெய்யுணர்வை - உதவிய வண்ணம் அருள் செய்கிறதாம், உயிர்களுக்கெல்லாம் உணர்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் தெய்வமாக் கடல்.
கடல்போல் முழங்கும் கவிமுரசு
வேதமும் தெரிந்துகொள்ளவில்லையாம் இம்மெய்ப் பொருளை. வேதம் ஓதும் வேதியரும் தெரிந்துகொள்ளவில்லையாம். ‘வேதன்’ என்று சொல்லப் பெறும் பிரமனும் வேறு தேவர்களும் தெரிந்துகொள்ள முடியவில்லையாம், ஆதி மூலமாகிய இப்பெருங்கடலை ‘ஆதி தேவர்’ என்ற தனிப்பெருங் கடலினை.
ஆனால் - என்ன நெஞ்சுத் துணிவு! வேதம், வேதன், வேதியர் முதலோரும் தெரிந்து கொள்ளாத ‘ஆதி தேவர்’ என்ற அருட் பெருங்கடல் தன் அறிவினுக்கு அறிவாய்ப் பொங்கிக்கொண்டிருக்கிறது என்று கவிஞன் முழங்குகிறான், கடல் தன் அலைக் கைகளால் முரசு கொட்டுவது போலே...
பேதி யாதுநிரர் பேதஉரு-
வம் பிறழ்கிலா,
ஓதி ஓதிஉண ரும்தொறும்
உணர்ச்சி உதவும்,
வேதம் வேதியர்வி ரிஞ்சன்முத -
லோர் தெரிகிலா
ஆதி தேவர்அவர் எம்அறிவி -
னுக்(கு) அறிவரோ!
(பேதியாது - (தன்மையில்) பேதம் அடையாமலே. நிமிர் - நிமிர்கின்ற; தோன்றி வளர்கின்ற. பேத உருவம் - பல பேதங்களான சராசர உருவங்கள். பிறழ்கிலா - (தம் தன்மை) மாறுபடாதவரும். விரிஞ்சன் - பிரமன். தெரிகிலா - அறியமாட்டாதவரும் ஆகிய. அறிவரோ - அறிவு அரோ. அரோ - அசை.)
‘நாம் தேடித் தெரிந்து கொள்வோம்’ என்று பல வேறு சாதனங்களாலும் உபாயங்களாலும் முயல்வோர் அறிய மாட்டாத ஆதி தேவர், ‘எம் அறிவினுக்கு அறிவு’ என்று கவி கூறுவது கவனிக்கத்தக்கது. ‘கவிஞர்களாகிய எங்கள் அறிவினுக்கு அறிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும். விதி விலக்குகளுக்கு உட்பட்டு நாடுகிறவர்களும் தேடுகிறவர்களும் அறிய மாட்டாத பரம்பொருள். கவிஞர்களின் அறிவினுக்கு அறிவாக ஆழ்ந்திருந்து உலகம் உய்ய அரும்பெரும் பொருள்களையெல்லாம் - ஆணிமுத்து போன்ற உணர்ச்சி - முத்துக்களை யெல்லாம் வாரி இறைத்து வருகிறதாம்.
அழகான உண்மை
எல்லாரும் கவிஞர்களாக இருக்க முடியுமா? மற்றவர்களும், ஓதி ஓதி உணருந்தோறும், மேன்மேலும் நல்லுணர்ச்சிகளை உதவப் பெறுகிறார்களாம். இத்தகைய ‘ஆதி தேவர்’ என்ற தனிப் பெருங்கடலிலே ‘பேதி யாது நிமிர் பேத உருவ’ங்களே சிருஷ்டி என்ற அதிசயம். இத்தகைய உலக சிருஷ்டிக்குக் காரணமான பரம்பொருளே கவிஞர்களின் அற்புத சிருஷ்டிக்கும் காரணமாகிறதாம்.
மகாகவிகளை வழிகாட்டிகளாகப் பெற்றிருக்கும் பாக்கியசாலிகளான நாமும், கவிதைகளையும் மற்ற நூல்களையும் ஓதி ஓதி உணர்ந்து உணர்ந்து மேன்மேலும் நல்லுணர்ச்சிகளை, மெய்யுணர்ச்சிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இம்மெய்யுணர்ச்சிகள் - உள்ளொளியிலிருந்து தெறிக்கும் சுடர்ப்பொறிகள் - எல்லாம் ‘ஆதி தேவர்’ நமக்கு உதவிவரும் அருளின் சான்றுகளே. என்ன வசீகரமான கொள்கை! என்ன அழகான உண்மை!
‘ஆதி தேவர்’ என்ற அறிவுக் கடலில் ஆடி அகம் கரைந்து நிர்மலனான கவிஞன், ராமன் முதலானவர்களுடன் ஆரணியப் பிரவேசம் செய்கிறான்.
தொந்த யுத்தம்
இன்னும் ஒர் அதிசய உண்மை. எவ்வளவு காலமாக, ஓய்வு ஒழிவில்லாமல் தொந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இருளுக்கும் ஒளிக்கும் இடையே, உலகத் திரைக்குப் பின்னே, சூட்சும லோகத்திலே. ஒளியின் சக்தியான தருமத்தை இருளின் சக்தியாகிய அதர்மம் திடீரென்று தந்திரமாகவும் வஞ்சனையாகவும் கீழே மல்லாக்கத் தள்ளிவிடுவதும் உண்டு. இத்தகைய ஒரு கட்டத்திலேதான் சீதா ராமர்களும் லட்சுமணனும் ஆரணியப் பிரவேசம் செய்கிறார்கள்.
தொந்த யுத்தத்தில் முதுகிற்கு மண் காட்டுவ தோடு எதிரி திருப்தியடையவில்லையாம். உடனே, உயிர்நிலையாக நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டு மூச்சுத் திணற முழுப் பலத்துடன் அமுக்குகிறான். கொஞ்ச நேரத்தில் தருமத்துக்குச் சீவன் போய்விடும்போல இருக்கிறது. எதிரி முகத்தில் கொலைக்குறி - கொலைவெறி - குதிபோடுகிறது. அந்த இருண்ட முகம் இன்னும் அதிகமாக இருள் அடைகிறது. அதே சமயத்தில், அதோ... இடியிடிப்பதுபோல் ஒரு பெரு முழக்கம் - ராம லட்சுமணர் வில் இரண்டையும் டங்காரம் செய்யும் ஓசைதான்.
அதர்மத்தின் பிடி சிறிது தளர்கிறது. பேச்சு மூச்சில்லாமல் கீழே கிடப்பவன் சிறிது மூச்சுவிடுகிறான். மங்கிய நிலாவைப்போல் இருந்த தருமத்தின் முகத்தில் ஒரு புதிய ஒளி பிறக்கிறது - பொங்கி வரும் புது நிலவு போலே.
அந்த டங்கார இடி மேலும் மேலும் அதிகமாய்க் கேட்கிறது. இருளடைந்த மேனி கிடுகிடென்று நடுநடுங்குகிறது. விழுந்து கிடந்த முகம் தலை தூக்கி, முழக்கம் வரும் வழிமேல் விழிவைத்து, எவ்வளவு நம்பிக்கையோடு நோக்குகிறது!
இந்த நம்பிக்கை கவிஞனைக் கவர்ந்திழுத்துச் சீதா ராம லட்சுமணர்களைக் காட்டினிடையே விரைவில் அழைத்துவரச் செய்கிறது.
(4.1.1948 ஆனந்த விகடன் இதழிலிருந்து...)