மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சனங்களின் சாமிகள் - 6

சனங்களின் சாமிகள் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சனங்களின் சாமிகள் - 6

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

ன்றைக்கும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள செங்கிடாக்காரன் கோயில்கள் சிலவற்றில் வெள்ளைக்காரச்சாமி துணை தெய்வமாக இருக்கிறார். ஆம், வெள்ளைக்காரத்துரை ஒருவர் சாமியான கதை, 496 வரிகள் கொண்ட சிறிய பாடலாக உள்ளது. அந்தக் கதை அற்புதமானது. அந்தக் கதையைத் தெரிந்துகொள்ளுமுன், பிச்சைக்காலன் கதையின் தொடர்ச்சியைப் பார்த்துவிடுவோம்...     

சனங்களின் சாமிகள் - 6

பிச்சைக்காலன் (தொடர்ச்சி)

பி
ச்சைக்காலனைப் பற்றி சேனைக்குட்டியிடம் என்ன புகார் செய்தும், எடுபடாமல் போனதால்,  அவனைக் கொல்லும் அளவுக்கு வஞ்சம்கொண்ட கள்ளச்சிலம்பன் என்பவன், பொருத்தமான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.     

சனங்களின் சாமிகள் - 6

சூரை நகரில் காவேரி என்ற பெண் இருந்தாள். முல்லைக்கொடி போல நெடுநெடுவென வளர்ந்தவள். சேனைக்குட்டிக்கு ஒரு வகையில் உறவுமுறை வேறு.  `அவளுக்கும் பிச்சைக்காலனுக்கும் தொடர்பு’ என்கிற வதந்தியை ஊரெங்கும் பரப்பினான் கள்ளச்சிலம்பன். உண்மைக்கு இல்லாத வலிமை வதந்திக்கு உண்டு. சேனைக்குட்டி யின் காதிலும் இந்த வதந்தி விழுந்தது.

சாதி, தன் மேல் பிடிமானமுள்ளவர்களைப் பைத்தியமாக அடிக்கக்கூடியது. அது ஒருவனின் மற்ற எல்லா நல்லதனங்களையும் கண்ணில் இருந்து மறைத்துவிடும். சேனைக்குட்டி தன் சாதியின் மேல் ஆழமான பற்றுக்கொண்டவர். செய்தி கேட்டுத் துடித்துப் போனார்.

`நம் சாதி என்ன... பிச்சைக்காலனின் சாதி என்ன? நம் வீட்டுப் பெண் மேல் இன்னொருவன் கை வைப்பதா? அவன் தவறிழைத்துவிட்டான். நம் குலத்துக்கே மாறாத பங்கத்தை ஏற்படுத்தி விட்டான். அவனைப் பிடித்துக் கட்டி இழுத்து வாருங்கள்!’ என ஆணையிட்டார். வஞ்சகக் கூட்டம் இந்த ஆணைக்காகத் தானே காத்திருந்தது.எதிர்ப்பாளர்கள் ஒன்றுசேர்ந்தார்கள். பிச்சைக் காலனைத் தேடிப்போனார்கள்.

சனங்களின் சாமிகள் - 6



அவனைப் பேசக்கூட விடாமல் கடித்துக் குதறிப்போட்டது அந்த நரிக்கூட்டம். ஓட ஓட விரட்டி அடித்தார்கள். ஊர் எல்லையில் பிச்சைக் காலனின் தலையை வாங்கினார்கள். செய்தியறிந்த பிச்சையும் அரிதிப்பிள்ளையும் தற்கொலை செய்துகொண்டார்கள்.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. போக்கிடம் இல்லாதவர்களுக்கு மரணம்தான் சில சமயங்களில் சிறந்த வழியாகத் தெரிகிறது.

செய்யாத தவறுக்கு, வஞ்சகர்களால் வெட்டுப்பட்ட பிச்சைக்காலனின் ஆன்மா அலைபாய்ந்தது. சிவனை நோக்கி இறைஞ்சியது. தனக்குப் பலம் கொடுக்க வேண்டும் என மன்றாடியது. சிவன் வரம் தந்தார்; வேண்டிய பலமும் தந்தார். பிச்சைக்காலனின் ஆவி கள்ளச் சிலம்பனைத் தேடிப்போனது; சித்ரவதை செய்து அவனைக் கொன்றது. அதோடு பேயாட்டம் ஆடி, ஊரையே வலம்வந்தது. ஊர்க்காரர்கள் பயந்து போனார்கள். பிச்சைக்காலனுக்கும் சிவனோடு ஐக்கியமாகிவிட்ட அவன் தாய்க்கும் தமக்கைக்கும் வழிபாடு நடத்துகிறோம் என வேண்டி நின்றார்கள். அதன் பிறகே பிச்சைக்காலனின் ஆவி அமைதி கொண்டது; சிவனோடு கலந்து இறை தெய்வமானது.

கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு சூரன் குடியில் பிச்சைக்காலனுக்குக் கோயில் இருக்கிறது. பிச்சைக்காலன்தான் பிரதான தெய்வம். துணைத் தெய்வங்களாக சேனைக்குட்டி, அரிதிப்பிள்ளை, பிச்சை ஆகியோர் இருக்கிறார்கள். இங்கே வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை நடத்தப்படுகிறது.

வருடந்தோறும் பங்குனி மாதத்தில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொடைவிழா நடத்தப்படுகிறது. கோயில் விழாவில் பிச்சைக்காலனின் கதைப்பாடல் வில்லுப் பாட்டாகப் பாடப்படுவது முக்கிய நிகழ்வு. சனிக்கிழமை நண்பகலில் நடக்கும் கொடையில், பிச்சைக்காலனுக்கு உளுந்தஞ்சோற்றையும் கோழிக்கறியையும் படைக்கின்றனர்.

அருள்நிறை தெய்வம் பிச்சைக்காலன் என்கிற நம்பிக்கையில் களைகட்டுகிறது, ஆண்டுதோறும் அவனுக்கு நடத்தப்படும் கொடை விழா.

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட வரலாறு தெரியும்; ஒரு வெள்ளைக்காரன் தெய்வமாகி, அருள்பாலிக்கும் வரலாறு தெரியுமா? கன்னியாகுமரி மாவட்டம், புவியூர், பூஜைப் புரை விளையிலும் வேறு சில கிராமங்களிலும் அந்த வெள்ளைக்காரனுக்கு இன்றைக்கும் வழிபாடு நடக்கிறது.

***   

வெள்ளைக்காரச் சாமி     

சனங்களின் சாமிகள் - 6

வன் லண்டனைச் சேர்ந் தவன். ஆங்கிலேயன். பெயர்  பரங்கித்துரை (இவன் குறித்த வில்லுப்பாடலில் இப்படித்தான் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது). அன்றைக்குக் கடற்கரையில் நின்று கடலையே பார்த்தபடி இருந்தான். அவனுடைய வெண் தோலைத் துளைக்கிற மாதிரி அடிக்கும் வெயில்; ஆடைகளைத் தூக்கி வீசுகிற மாதிரிவீசும் காற்று. அதைப் பொருட்படுத்தாமல் அவன் கடலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். தூரத்தில் சிறு புள்ளியாக பாய்மரம் காற்றில் பறக்க, ஒரு கப்பல் வருவது தெரிந்தது. அவன் அனுப்பிவைத்த கப்பல்தான். அவன் ஆட்கள்தான் அதில் வந்துகொண்டிருந்தார்கள்.

`ஏ கப்பலே... விரைந்து என் அருகில் வர மாட்டாயா? என் அவஸ்தை உனக்குப் புரியவில்லையா?’ - அவனுடைய அவசரம் புரியாமல் மெள்ள மெள்ளத்தான் கப்பல் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. அவனுக்கு மட்டும் இறக்கைகள் இருந்திருந்தால், அவன் பறந்துபோய் கப்பலில் உட்கார்ந்திருப்பான். இன்னும் சில நாள்களில் அவன் ஆசை நிறைவேறப் போகிறது. ஆசையா அது? கனவு, வேட்கை, லட்சியம். இதோ இவன் அனுப்பிய தச்சர்கள் இந்தியாவில் இருந்து, இவன் கட்டி முடித்த கப்பலுக்குப் பொருத்தமான கொடிமரத்துடன் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை மட்டும் கட்டுமானக் கிடங்கில் இருக்கும் இவனுடைய கப்பலில் பொருத்திவிட்டால் போதும், அடுத்த நாளே பயணத்தைத் தொடங்கி விடலாம். அவன் பெருமூச்சுவிட்டான். 

இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரம்... எத்தனையோ கீழை தேசத்தவர்கள் பார்க்கத் துடிக்கும் சொர்க்கபுரி. ஆனால், அங்கேயே பிறந்து வளர்ந்த இந்த ஆங்கிலேயனுக்கோ கீழைநாடுகள் தோறும் பயணம் செய்ய வேண்டும், அங்கே இருக்கும் ஒவ்வோர் ஊரையும் அணு அணுவாகப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற கட்டுக்கடங்காத ஆசை. அவன் இந்தியாவைப் பற்றியும் அதன் தென் பகுதியைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்த சேதிகள் அவனை அந்த அளவுக்கு ஈர்ப்புக்கொள்ள வைத்திருந்தன. இந்தியாவின் தென் தேசத்து அரசர்கள் கப்பல்கள் வைத்திருந்ததை அவன் அறிந்திருந்தான். போர்க் கப்பல்கள் மட்டுமல்ல; வணிகக் கப்பல்களும் இருந்தன. தமிழக அரசர்களின் போர்க் கப்பல்கள் கடாரம் வரை சென்று வென்றதை, இலங்கையைக் கைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளை அவன் சளைக்காமல் திரும்பத் திரும்பக் கேட்டும் படித்தும் இருந்தான். தென்னாட்டின் வணிகக் கப்பல்களும் பல நாடுகளுக்கு வியாபார நிமித்தமாகச் சென்று வந்தன. இதற்கெல்லாம் அடிப்படை கப்பலின் கட்டுமானம்; அதற்கு ஆதாரமாக இருந்த நல்ல, வலுவான மரங்கள்.

துரைக்கு வணிகம் செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகவே ஒரு கப்பலை உருவாக்கும் முயற்சியில் இறங்கினான். கப்பல் கட்டுமானத் துக்குத் தேவையான மரங்களை, தன் ஆட்களை இந்தியாவின் தென்பகுதிக்கு அனுப்பி அங்கிருந்து கொண்டுவரச் செய்தான். அங்கிருந்து வரும் மரங்களும், கட்டைகளுமே நீண்ட காலத்துக்குக் கப்பலை உறுதியாக வைத்திருக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

இங்கிலாந்தும் இந்தியாவும் அருகருகிலேயா இருக்கின்றன? கப்பலில் வெகு தூரம் பிரயாணம் செய்ய வேண்டும். கப்பலின் அஸ்திவாரமே மரங்களும் மரக்கட்டைகளும் தானே. அதற்குத் தோதான மரங்கள் அமைய வேண்டும். துரை அனுப்பிய ஆட்களும் தச்சர்களும் நல்ல மரங்களைத் தேடி, காக்காச்சி மலை வரைக்கும் போனார்கள். அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலை. கப்பல் பிடித்து அவற்றை ஏற்றி, இங்கிலாந் துக்குக் கொண்டு வருவதற்கே ஒரு வருடக் காலம் ஆனது. அதன் பிறகு கப்பலின் கட்டுமானப் பணி. அதுவும் ஒருவழியாக முடிந்தது. ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல். கப்பல் என்றால் கொடி மரம் வேண்டும். வணிகக் கப்பலோ, அரசர் களுடையதோ... ஏன் கொள்ளையர்களுடையதாக இருந்தாலும்கூட கொடி மரமும் அதில் அவர்களுக் கான கொடியும் பறக்கவிடப்பட வேண்டும் என்பது பொதுவான விதி.

துரையின் கப்பலுக்குத் தோதான மரங்களைக் கொண்டு வந்தவர்கள், கொடி மரத்துக்கான கம்பத்தை விட்டுவிட்டார்கள். கப்பலின் கட்டுமானப்பணி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அவன் ஆட்கள் கொடி மரத்துக்கான கம்பத்தோடு வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கொடிமரம் துரையைப் படாதபாடுபடுத்தப் போகிறது என்பதோ, அவன் உயிரையே பறிக்கக் காரணமாக இருக்கப் போகிறது என்பதோ அப்போது அவனுக்குத் தெரியாது. அந்தக் கொடிமரத்தில் ஒரு தெய்வம் குடிகொண்டிருந்தது. அதன் பெயர், செங்கிடாக்காரன்.

ஏழு தளங்களைக்கொண்ட கப்பல் அலை புரளும் கடற்கரையில் கம்பீரமாக நின்று கொண் டிருந்தது. பாதுகாப்புக்கு வீரர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள், தென் தமிழகம் வரை போய் வரத் தேவையான உணவுப் பொருள்கள், குடி தண்ணீர், பொன், பொருள், ஆடைகள் அனைத்தும் தயார். கொடிமரம் கப்பலில் ஊன்றப்பட்டது.      

சனங்களின் சாமிகள் - 6

அது ஒரு மாலை நேரம். கடற்கரையில் `வெள்ளைக்காரன்’ எனப்படும் துரையின் உறவினர்களும் நண்பர்களும் கையசைத்து விடை கொடுக்க, கப்பல் கடலுக்குள் இறங்கியது. `இனிதான கடற்பயணம்’ என்று அவன் நினைத்துக் கொண்டான். அலைகளைத் தாண்டி சற்று ஆழமான இடத்துக்கு வந்ததும் பாய்மரங்களை விரிக்கச் சொன்னான். விம்மிப் புடைத்துக்கொண்டு பிரமாண்டமாக விரிந்த பாய்மரங்களை ஆசை யோடு பார்த்தான். சுக்கானை இயக்குபவனுக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான். திசைமானி யைப் பார்த்து, கப்பல் சரியான திசையில்தான் போகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.   அதன் திசையிலேயே பார்வையைச் செலுத்தியவன்  கடற்பரப்பை ரசிக்க ஆரம்பித்தான்.

நாள்கள் நகர்ந்தன. முதல் இரண்டு நாள்களுக்குச் சாதகமாக இருந்த காற்று பிறகு, சாதகமாக இல்லை. மெள்ள மெள்ளத்தான் நகர்ந்தது கப்பல். களைப்பும் கவலையும் சூழ, பயணித்துக் கொண்டிருந்தான் துரை. ஒரு வழியாக இந்தியாவை வந்தடைந்தார்கள். கப்பலில் இருந்த உணவு, குடிநீர் எல்லாம் தீர்ந்து போயிருந்தன. காயங் குளத்தில் கப்பலை நிறுத்தினான் துரை. காயங்குளத்துக்காரர்கள் அந்தக் கப்பலை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அன்றைக்கு அந்த ஊர் வியாபாரிகளுக்கு கொழுத்த வேட்டை. பல உணவுப் பொருள்கள், மது வகைகள், காய்கனிகள்... என வாங்கித் தீர்த்தது வெள்ளைக்காரனின் படை. எல்லாவற்றையும் ஏற்றிய பிறகு மறுபடியும் தன் பயணத்தைத் தொடர்ந்தது அந்தக் கப்பல்.    

கன்னியாகுமரி நோக்கித் தொடர்ந்தது பயணம். தெய்வத்துக்கு மனிதர்கள் மேல் கோபம் வருமா? சில நேரங்களில் வரும். தன் மகிமையை, அருமையை அவர்கள் உணராதபோது, உணர்த்த வேண்டும் என்கிற வேட்கை தெய்வங்களுக்கும் வருவதுண்டு. தனக்குக் கோபம்வரும் என்பதன் எச்சரிக்கையாகச் சில அறிகுறிகளையும் தெய்வம் உணர்த்துவது உண்டு. வெள்ளைக்காரனின் ஆட்கள் கொடிமரத்துக்காக அந்த மரத்தை வெட்டியபோதே செங்கிடாக்காரன் தெய்வம் அந்தச் சமிக்ஞையைக் காட்டியது. முதல் வெட்டிலேயே மரத்திலிருந்து உதிரம் துளிர்த்து, வழிந்தது. ஆங்கிலேயர்களோடு பழகிப் பழகி, தெய்வம் என்பதையே மறந்துபோயிருந்தார்கள் துரையின் தச்சர்களும் ஆட்களும். `இது கொஞ்சம் சிறப்பான மரமாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தவர்கள், தெய்வத்தை மறந்தார்கள். மரத்தைப் பதனமாக அறுத்துக்கொண்டு போய் கப்பலில் ஏற்றினார்கள். இந்த விஷயத்தை துரையிடம் யாரும் சொல்லக்கூட இல்லை; அதை அவ்வளவு முக்கியமான விஷயமாக அவர்கள் கருதவும் இல்லை.

கப்பல், தவிட்டுத்துறை என்கிற இடத்துக்கு அருகே வந்தபோது அது நடந்தது. கப்பலின் மேல் தளத்தில்தான் வெள்ளைக்காரன் நின்றிருந்தான். தொலைநோக்குக் கண்ணாடி வழியாக தூரத்தில் தெரிந்த சிறு தீவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். கப்பல் விநோதமாக அசைவதுபோல அவனுக்குத் தோன்றியது.  உள்ளுணர்வு ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை அவனுக்கு உணர்த்தியது.

- கதை நகரும்...

தொகுப்பு: பாலுசத்யா