Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

ஹம்பிமகுடேசுவரன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

ஹம்பிமகுடேசுவரன்

Published:Updated:
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

ம்பியில் காணத்தக்கவை எல்லாம் கோவில் இடிபாடுகளும் மிச்சங்களுமே என்று கருத வேண்டியதில்லை. நம் நாட்டில் தொடர்ந்து வழிபாடுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும் பழைமையான கோவில்களில் ஒன்று இன்றும் அங்கிருக்கிறது. அக்கோவிலின் பெயர் விருபாக்சரர் ஆலயம். ஹம்பி என்ற இடத்துக்கு உள்ளூர் வண்டியைப்பிடித்து வந்தீர்களானால் அந்தக் கோவிலின் அருகேயுள்ள வண்டி நிறுத்தத்தில்தான் இறங்குவீர்கள். அப்பகுதிக்கு அக்கோவில்தான் மையம்.    

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

விருபாக்சரர் ஆலயத்தின் வரலாறு ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. விஜயநகரத்திலிருந்த எல்லா ஆலயங்களும் வைணவ ஆலயங்களாக இருக்கையில், விருபாக்சரர் ஆலயம் சிவாலயமாக இருப்பது அதன் பழைமையால்தான். கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில்தான் ஒட்டுமொத்த விஜயநகரமும் வைணவ மயமானது.

 துங்கபத்திரை நதிக்கரையில் விஜயநகரப் பேரரசுக்கு முன்பே பற்பல சிற்றரசர்கள்  அவ்விடத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டிருக்கிறார்கள். சாளுக்கியர்களும் ஹொய்சாளர்களும் அவர்களில் அடங்குவர். அவ்வரசர்கள் காலத்திலேயே அவ்விடத்தில் விருபாக்சரர் ஆலயம் மிகச்சிறிதாய் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆண்ட பல்வேறு அரசர்களும் அக்கோவிலுக்கு ஏதேனும் ஒரு மேம்பாட்டைத் தம் செலவில் செய்து தந்தபடி இருந்தனர். விஜயநகர அரசர்கள் காலத்தில் அக்கோவில் தன் பொற்காலத்தை அடைந்தது என்று கூறலாம்.

விருபாக்சரர் ஆலயத்தின் சிறப்பு அதன் முன்புறக் கோபுரம்தான். ஹம்பியின் சின்னமாக அக்கோபுரமே அறியப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தோடு ஒப்பிடத்தக்க விண் முட்டும் பேரெடுப்பு அது. நூற்றறுபதடி உயரமும் ஒன்பது அடுக்குகளும் கொண்ட அக்கோபுரத்தை ஹம்பியில் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் மிடுக்காகத் தெரியும். கல்பாவிய அடித்தளமும் சுண்ணாம்புக் கற்களால் ஆகிய கட்டுமானமும் அதன் சிறப்பு. இப்போது அக்கோபுரம் வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. முற்காலத்தில் சுண்ணவெள்ளை அடிக்கப்பட்டிருந்த அக்கோபுர நிறம் காலப்போக்கில் மங்கி அந்நிறத்துக்கு வந்திருக்க வேண்டும். கோபுரத்தின் அடிப்பகுதியில் நின்றால் மலையடிவாரத்தில் நிற்கின்றோமோ என்ற மயக்கினை ஏற்படுத்தும். விருபாக்சரர் ஆலயத்துக்கு எதிரில் இருப்பதுதான் தேர்வீதி. அந்தத் தேர்வீதியே ‘ஹம்பி கடைவீதி’ என்றும் அழைக்கப்படுகிறது. வீதியின் அகலம் நூற்றைம்பது அடிகள்வரை இருக்கலாம். வரலாற்றுக் காலத்தில் அவ்வீதியில் தேரோடியபோது தேர்க்கால்களில் தம் தலைகளைக் கொடுத்து நசுக்கிக்கொள்ளும் உன்மத்த பக்தர்களும் இருந்திருக்கிறார்கள். விஜயநகர அரசாட்சியின் இரண்டே குறைகள் என்று இத்தகைய நரபலியையும், உடன்கட்டை ஏறலையுமே வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடு கின்றனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர் களை நரபலியிடும் வழக்கம் இருந்திருக்கிறது. இரண்டாம் தேவராயர் இறந்தபோது நூற்றிருபது பெண்டிர் உடன்கட்டை ஏறினராம்.   

ஆலயத்தின் பெருங்கோபுரத்தைத் தாண்டி நுழைந்ததும் இரு மருங்கிலும் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த நூற்றுக்கணக்கான தூண்கள் தாங்கும் அழகிய மண்டபங்கள் காணப்படுகின்றன. ஹம்பியிலுள்ள பெருங் கோவில்கள் எல்லாவற்றிலுமே நுழைந்தவுடன் வலப்பக்கம் காணப்படும் மண்டபங்கள் கல்யாண மண்டபங்கள்தாம். விருபாக்சரர் ஆலயக் கல்யாண மண்டபத்தில் இன்றும்கூட திருமணம் நிகழ்வதைக் காணலாம். கோவிலுக்கென்று யானை வளர்க்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் ரெய்ச்சூர்க் கோட்டை முற்றுகைக்கு ஐந்நூற்றைம்பது யானைகளைக் கொண்டுபோய் நிறுத்தினார். அந்த ஐந்நூற்றைம்பது யானைகளின் எச்சம்போல் அக்கோவில் யானை தோன்றுகிறது. இன்றுவரை அணையாத சமையற்கட்டும் கோவிலுக்குள் உண்டு. விருபாக்சரர் ஆலயக் கோபுரத்தின் தலைகீழ் பிம்பம் விழுமாறு ஓர் இருட்டறையும் இருக்கிறது. ஒளி விழுதல், விரிதல், சுருங்குதல் குறித்த அக்கால அறிவின் தடயம் அது. ஆலயத்தின் தென்புறத்தில் சிறிய கோபுரம் ஒன்றும் உண்டு. அவ்வழியே பார்த்தால் துங்கபத்திரை நதியின் படித்துறையைக் காணலாம். தென்புற மதிலையொட்டி ஆழமான குளமொன்று இருக்கிறது. அதன் ஆழத்தையும் சேற்றையும் கருதி கம்பி வேலியிட்டுத் தடுத்திருக்கிறார்கள்.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

விருபாக்சரர் ஆலயத்திலிருந்து கடைவீதியில் கிழக்காகச் சென்றால் வீதியின் முடிவில் ஒரே கல்லாலான பெரிய நந்தி இருக்கிறது. அந்நந்தி கோவிலைப் பார்த்தபடி மடிந்த கால்களோடு அமர்ந்திருக்கும். நந்திக்கு மண்டபமும் எழுப்பப் பட்டிருக்கிறது. நந்தி மண்டபத்தின் வடக்கே இருப்பது மாதங்க மலை. அம்மலையின் மீதும் ஒரு கோவில் உள்ளது. மாதங்க மலையானது ஹம்பியை முழு வட்டத்தில் காண்பதற்கேற்ற  காட்சிமுனை.     எழுஞாயிற்றையோ விழுஞாயிற் றையோ காண்பதற்கு உகந்தது.  மலைமீது ஏற தொன்மையான படியமைப்புகளே உள்ளன. படியடுக்குகள் தாழ்வானவையாக இல்லாமல் முழங்கால் உயரத்துக்கு இருக்கின்றன. மாதங்க மலையைப் பார்த்துவிட்டு இறங்கலாம்.

நந்தி மண்டபத்தையொட்டி சிறு குன்றுகளின் வழியே படிக்கட்டுகள் உள்ளன. அக்குன்றின் உச்சியிலிருந்து காண்கையில் பெரும் பள்ளத்தாக்கு ஒன்று மறைவாய் இருப்பது தெரியும். அந்தப் பள்ளத்தாக்கில் புதையலைப் போல் ஒரு கோவில் மறைந்திருக்கிறது. அதுதான் அச்சுதராயர் கோவில். விஜயநகரக் கோவில்களில் கடைசியாய் எழுப்பப்பட்ட கோவில் இதுதான். விருபாக்சரர் ஆலயம் விஜயநகரின் முதல் கோவில் என்றால் அச்சுதராயர் கோவில் அந்நகரின் கடைசிக்கோவில். கிருஷ்ண தேவராயரை அடுத்து வந்த மன்னர் அச்சுதராயர். அவர் எழுப்பிய வைணவக் கோவில் இது. கிபி 1534ஆம் ஆண்டில் இக்கோவில் பணி தொடங்கப்பட்டது. பணிகள் முழுமை பெறும் முன் விஜயநகரத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்தன.
குன்றிலிருந்து இறங்கி, கோவிலின் உடைபட்ட மேற்கு மதில் வழியாக அச்சுதராயர் கோவிலுக்குள் நுழையலாம். நான் அக்கோவிலுக்குள் தன்னந்தனியனாய் நுழைந்தேன். ஆங்காங்கே இடுப்பளவுக்குப் புற்கள் முளைத்திருந்தன. என்னதான் புல்வெட்டிப் பராமரித்தாலும் அவை மீண்டும் வளர்வதற்குச் சில நாள்கள் போதுமே. அந்தத் தனிமையும் பேரமைதியும் பெரும்பரப்பும் இடிபாட்டுத் தோற்றமும் இதயத்தை ஒரு நொடி நிறுத்தி பிடித்தன என்றே சொல்லலாம். நாவுலர்ந்து நடுங்கி நின்றேன். அடுத்த நொடி, கோவில் வளாகத்திலிருந்த தென்னைகளின்மீது `கீகீகீ' என்று மிழற்றியபடி கிளிக்கூட்டம் ஒன்று வந்தமர்ந்தது. கோவில் மதில்கள்மீது குரங்குகள் தொற்றியேறி விளையாடுவதைக் கண்டேன். பாதிக் குரங்குகள் என்னையே பார்த்தபடியிருந்தன. அவ்வொலிகளும் நடமாட்டக் குறிகளுமே என் உறைநிலையைக் குலைத்தன. போன உயிர் மீண்டு வந்தது.

விஜயநகரக் கோவில்களுக்குள் இருக்கும் கல்யாண மண்டபங்களிலேயே அச்சுதராயர் ஆலயத்திலிருப்பதுதான் பேரழகுமிக்கது. ஆனால், அது கேட்பாரில்லாமல் மண்ணடைந்து காணப்படுகிறது. இக்கோவிலின் தூண்கள் சிலவற்றில் இன்னும் முழுமையடையாத சிற்ப வடுக்கள் உள்ளன. கோபுரத்தின் மேற்பகுதி சிதைக்கப்பட்டிருக்கிறது.

அச்சுதராயர் கோவிலின் எதிரேயுள்ள வீதிதான் ‘நடனமாதர் வீதி.’ ஆடல் அணங்குகள் வாழ்வதற்கென்றே வீதியின் இருமருங்கிலும் வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. ஐந்நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பெண்டிர் சிரித்தும் சிணுங்கியும் பாடியும் ஆடியும் மகிழ்ந்திருந்த அவ்வீதி துங்கபத்திரையை நோக்கி நீள்கிறது. வீதியின் முடிவில் மிகப்பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. நதியிலிருந்து வாய்க்கால் வழியாகக் குளத்துக்குத் தண்ணீர் வரும். ஆடல் மகளிர் மட்டுமே குளிப்பதற்கென்று அமைக்கப்பட்ட அக்குளத்தில் பேரெழில் மாதர்கள் நீராடி நின்ற திருக்கோலம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

- தரிசிப்போம்...