
பிரபுநந்த கிரிதர்
பிரிட்டிஷ் போலீஸ் அரவிந்தரைக் கைது செய்யும் எண்ணத்துடன் வந்தபோது, ‘‘உடனே கிளம்பி பிரெஞ்ச் இந்தியப் பகுதியான சந்திர நாகூருக்குப் போ!’’ என்று அரவிந்தருக்குள்ளிருந்து ஒரு கட்டளை பிறந்தது. அதன்படி அவர் 1910-ம் ஆண்டு புதுவைக்கு வந்தார். தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, தீவிர யோகப் பயிற்சியில் ஈடுபட்டார்.

அவரது யோக தத்துவம் வித்தியாசமானது. அறியாமை நிறைந்த இந்த உலக மாயைகளிலிருந்து விடுபட்டு மனிதன் தெய்வத்தை உணர வேண்டும், விலங்கு நிலையிலிருந்து மனிதனும் தெய்வ நிலைக்கு உயர வேண்டும், அப்படி உயர்த்த யோகப் பயிற்சி உதவும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
இப்படி அரவிந்தர் ஞானப் புரட்சியைத் தொடங்கிய நேரத்தில்தான் அன்னை வந்து அவரைச் சந்தித்தார்.
இரண்டு ஆன்மிகப் பெரும் சக்திகளும் ஒன்று சேர, ‘ஆர்யா’ என்ற பத்திரிகை தொடங்கியது. இந்தியப் பண்பாடு, உலக ஒற்றுமை, வாழ்க்கை நெறி எல்லாம் கலந்த ஞானக்களஞ்சியம் அது.
ஸ்ரீஅன்னை வந்து அரவிந்தருடன் சேரும்வரை ஆசிரமம் என்ற அமைப்பு உருவாகவில்லை. அரவிந்தரும், அவரது நண்பர்கள் நான்கு பேரும் மட்டுமே ஒன்றாகத் தங்கியிருந்தனர்.
அன்னை வந்தபிறகு, சீடர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. அத்தனை பேரும் அரவிந்தரோடு தங்கி, அவரது ஞான ஜோதியைத் தரிசிக்க ஆசைப்பட்டனர்.
இந்த வேலையை ஒழுங்கமைக்கும் பொறுப்பு அன்னையிடம் வந்தது. அத்தனை பேருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்ய நிறைய வீடுகளை வாங்கினார் அன்னை. வீடுகளைப் பராமரிக்கவும், பழுது பார்க்கவும், மாற்றியமைக்கவும், உணவுக்கு ஏற்பாடு செய்யவும், சுகாதாரமாகவும், நாகரிகமாகவும் வாழ்வதற்கு வழிசெய்யவும் அன்னை தன் நாள்களைச் செலவிட்டார்.
ஆறே ஆண்டுகளில் ஆசிரமம் வளர்ந்தபோது இன்னுமோர் அதிசயம் நிகழ்ந்தது. 1926-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அரவிந்தருக்கு அவருடைய யோகத்தில் ஓர் அரிய ஸித்தி ஏற்பட்டது. பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய உணர்வு, பேரொளி நிரம்பிய வடிவத்தில் வந்து அரவிந்தரின் உடலில் இறங்கியது.

அன்று முதல், மனித இனத்தைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் பொருட்டு, ஆசிரமத்தின் மாடியில் இருந்த ஒரு தனி அறையில் இருந்தபடி யோகத்தில் ஈடுபட்டார் அரவிந்தர். அதன்பின் அவர் அந்த அறையைவிட்டு வெளியே வந்ததில்லை. அவரைப் பார்க்கவும் அந்த அறைக்குள் போகவும் யாருக்கும் அனுமதி கிடையாது. வருடத்துக்கு ஒருமுறை தன் பிறந்த நாளன்று மட்டும் ஸ்ரீஅரவிந்தர் தமது அறையின் வாசலில் அமர்ந்து தரிசனம் தருவார்.
இப்படி அரவிந்தர் பொதுவாழ்க்கை நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதால், ஆசிரமத்தின் முழு நிர்வாகப் பொறுப்பையும் அன்னை ஏற்கவேண்டியிருந்தது.
அரவிந்தர் 1950-ம் ஆண்டு மகா சமாதி அடைந்தார். அப்போது அவரது ஆன்மா, கண்ணைக் கூசவைக்கும் ஒரு பேரொளி வடிவில் எழுந்து அன்னையின் உடலில் புகுந்தது.
ஸ்ரீஅரவிந்தர் சூட்சும உலகில் சாதித்துள்ள பணி எத்தனை மகத்தானது என்பது பற்றி யாருமே அறிய மாட்டார்கள் என்றும் அதன் விளைவாகத் தமது (அன்னையின்) உடலில் பல விசித்திரமான மாறுதல்கள் ஏற்பட்டுவருவதாகவும் அன்னையே கூறியுள்ளார்.
ஸ்ரீஅரவிந்தர் உடலில் இருந்தவரை அவரை முற்றிலும் அறியாத உலகம், இன்று அன்னையின் மூலமாக ஸ்ரீஅரவிந்தரை நன்கு அறிந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் அன்னையை நோக்கி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அன்னையைக் காக்கும் சக்தியாக, ஆக்கும் சக்தியாக யாவரும் ஏற்றுக்கொள்வதைக் காண்கிறோம். ஸ்ரீஅரவிந்தரும் இதைத்தான் எதிர்பார்த்தார். அன்னை ஆசிரமப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல், தமது அதிமன யோகத்தின் முக்கியப் பிரதிநிதியாக அன்னையை யாவரும் அறிய வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்த்தார்.
அரவிந்தர் ஆசிரமம் உயரியதோர் வாழ்க்கைக்குப் பயிற்சிக் களம். ஆசிரமவாசிகளுக்குச் ‘சாதகர்கள்’ என்று பெயர். இவர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படை ஆன்மிகம். ஆசிரமத்தில் செய்யப்படும் அன்றாட வேலைகளை இவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
‘இறைவனுக்கு வேலை செய்வது, உடலால் பிரார்த்தனை செய்வதாகும்’ என்பது ஸ்ரீஅன்னையின் வாக்கு. ஒவ்வொரு சாதகரும் அவருக்குத் தெரிந்த வேலையை எவ்வளவு நன்றாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு நன்றாகச் செய்ய முயல்கிறார்.
பூரண சமத்துவம் இங்கு நிலவுகிறது. சாதி, சமயம், நாடு, நிறம், பாலினம் காரணமாக எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. எல்லோரும் ஆன்மாக் களாகவும் அன்னையின் குழந்தை களாகவுமே பார்க்கப்படுகின்றனர்.
அன்னைமேல் ஈடுபாடுகொண்ட பலர், இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார்கள். ஆசிரமம் ஒரு சின்னஞ்சிறு உலகம் மாதிரியே இயங்குகிறது. உணவைச் சமைப்பதும் பரிமாறுவதும் சாதகர்களே. சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவுவதும் சாதகர்களே. ஆசிரமத்துக்கு நெல், காய்கறி, பழங்கள் எல்லாமே ஆசிரமத் தோட்டங்களிலிருந்து கிடைத்து விடுகின்றன. அன்னையின் கரங்களால் ஆசீர்வதிக்கப்பட, உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பக்தர்கள் ஆவலுடன் புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார்கள்.
அன்னையின் சமாதி முன்பு அமர்ந்து, தங்கள் தவிப்புகளைக் கொட்டிவிட்டு, பாரத்தை இறக்கிவைத்த நிம்மதியோடு ஊர் திரும்புங்கள்!
படங்கள் உதவி: ஸ்ரீஅரவிந்தாஸ்ரமம், பாண்டிச்சேரி.
(28.9.03 ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
- தரிசிப்போம்...

அரூப வடிவில் பிரார்த்திக்கும் ஸ்ரீஅரவிந்த அன்னை
அரவிந்தர் மற்றும் அன்னை சமாதிகளுக்கு எதிரே பக்தர்கள் உட்கார்ந்து தியானம் செய்யும்போது, அவர்களோடு கண்களுக்குத் தெரியாத அரூப வடிவில் அரவிந்தரும், அன்னையும் சேர்ந்து இறைவடிவை இறைஞ்சுவதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல... பகவான் கிருஷ்ணரும், சிவபெருமானும்கூட இங்கு வந்து சில நேரம் தியானம் செய்வதாக நம்புகிறார்கள், இந்த ஆசிரமத்தின் தீவிர பக்தர்கள்!

ஸ்ரீஅன்னை கண்களுக்கான கடவுள். ‘நேத்ரா தேவி’ என அவர் சித்தர்களால் அழைக்கப்படுகிறார். அன்னையின் கண்கள் மட்டும் உள்ள புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபட்டால், குடும்பத்தில் யாருக்கும் கண் தொடர்பான குறைபாடுகள் வராது என்பது நம்பிக்கை.
ஸ்ரீஅரவிந்த மந்திரம்...
குடும்பத்துக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் நிறைந்த செல்வத்தையும் தரும் மந்திரம் இது.
‘ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய நம:
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே:
ஓம் ஸ்ரீ அரபிந்தோ மிர்ரா:’

எப்போது செல்லலாம்?
அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசன நேரம் காலை எட்டு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரை. பிறகு மதியம் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை. வாரத்தின் ஏழு நாள்களிலும் தரிசனம் உண்டு. இந்தக் குறிப்பிட்ட நேரம் தவிர, தனியாகத் தொந்தரவின்றித் தியானம் செய்ய விரும்புகிறவர்கள், ஆசிரம அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்று, அதிகாலை நான்கரை மணியிலிருந்தே தியானம் செய்யலாம். சாதாரண நாள்களில் அரவிந்தர், அன்னை சமாதியையும் ஆசிரமப் பிரதான வாயில் அருகே இருக்கும் வரவேற்பறையையும் மட்டுமே பார்க்க முடியும்.
அன்னையின் பிறந்த நாளான பிப்ரவரி 21, அன்னை இறுதியாகப் புதுவை வந்து நிரந்தரமாகத் தங்கிய தினமான ஏப்ரல் 24, அரவிந்தரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15, அரவிந்தர் ஸித்தி பெற்ற தினமான நவம்பர் 24 ஆகிய நான்கு நாள்களில் மட்டும் அரவிந்தர் தங்கியிருந்த அறையைத் தரிசிக்க விசேஷ அனுமதி உண்டு.
இந்த நான்கு நாள்களோடு சேர்த்து, அன்னை மகா ஜோதி அடைந்த நவம்பர் 17-ம் தேதியன்றும் அன்னையின் அறையைத் தரிசிக்க விசேஷ அனுமதி உண்டு. சமாதி எதிரே தரையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் பிரதமராக இருந்தபோதே இங்கு வந்து தியானம் செய்திருக்கிறார்கள்!