
படம் : ந.வசந்த்குமார்

விளக்கேற்றும்போது...
கஷ்டங்கள் நீங்கவும் நினைத்தது நடக்கவும் எளிய வழிபாடு தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

* தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்திவிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் எவர்சில்வர் விளக்கைப் பயன்படுத்தக்கூடாது.
* வீட்டில் ஒருவர் உறங்கிக்கொண்டு இருக்கும்போது விளக்கு ஏற்றக்கூடாது. காலையில் 5 முதல் 6 மணிக்குள்ளும் மாலை 5:30 முதல் 6 மணிக்குள்ளும் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல வளங்களும் உண்டாகும்.
* விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திமப் பலன் கிடைக்கும். இரண்டு முகங்கள் ஏற்றினால் ஒற்றுமை உண்டாகும். மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும். நான்கு முகங்கள் ஏற்றினால் கால்நடை செல்வங்கள் பெருகும். ஐந்து முகங்கள் ஏற்றினால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
- புவனா கண்ணன், சென்னை-87
தீய சக்திகளை விரட்டும் மஞ்சள் குங்குமம்!
வீட்டின் நிலைகளில் மஞ்சள்-குங்குமம் வைப்பதால் துஷ்ட சக்திகள் நெருங்காது; விஷக்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
அதேபோல், பெண்கள் நெற்றியில் புருவ மத்தியிலும், வகிட்டிலும் வைத்துக்கொள்ளும் குங்குமம், வசிய சக்திகளிடம் இருந்து அவர்களைக் காக்கும்; அந்தப் பெண்ணுக்குச் சர்வ மங்கலங்களையும் அருளும்.
- வி.சங்கரி, நெல்லை-2

வெற்றிலை-பாக்கு சமர்ப்பிக்கும்போது...
பூஜையில் தெய்வங்களுக்கு வெற்றிலை-பாக்கு சமர்ப்பிக்கும்போது, வெற்றிலையுடன் களிப் பாக்குகளையே வைக்க வேண்டும். வெற்றிலையையும் இரட்டைப்படை எண்ணிக்கையில்தான் வைக்க வேண்டும். பாக்குகளையும் இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
* வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் இருப்பதாக ஐதீகம். எனவே, வெற்றிலையின் காம்பைக் கிள்ளிவிட்டு, தண்ணீரில் அலம்பிய பிறகே பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமியின் இடப்புறம் இருக்கும்படி வைக்க வேண்டும்.
- பத்மா ராமநாதன், முசிறி

நிர்மால்ய புஷ்பங்கள்!
முதல்நாள் பூஜையில் தெய்வங்களுக்குச் சாத்திய புஷ்பங்கள் நிர்மால்யம் எனப்படும். அந்த நிர்மால்ய புஷ்பங்களை கால்படும் இடத்தில் போடக் கூடாது. அவற்றை அருகிலிருக்கும் நீர்நிலையில் சேர்க்க வேண்டும்.
- எஸ்.கீர்த்தனா, மதுரை
செல்வம் தரும் பதிகம்!
சென்ற இதழ் `சக்தியர் சங்கமம்' பகுதியில் செல்வம் தரும் பதிகம் குறித்த தகவலை வாசகி ஒருவர் அளித்திருந்தார். அந்தப் பதிகத்தை அருளியது திருநாவுக்கரசர் அல்ல, திருஞானசம்பந்தர். பாடல் வரிகளிலும் சிறு பிழைகள் தென்பட்டன.
வாசகியர் திருத்திப் படிக்க வசதியாக அந்தப் பதிகம் இங்கே தரப்பட்டுள்ளது.
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!
- இந்தப் பதிகத்தை அனுதினமும் பாடி, பரமனைத் தொழுது செல்வ வளம் பெறலாம்.
- தமிழ்ச்செல்வி ஞானப்பிரகாசம், ஈரோடு