மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 38

சிவமகுடம் - 38
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 38

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

மானியின் சங்கல்பம்!

ந்தப் பூவுலகில் எவ்வளவோ அசாத்தியங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சாத்தியப்படுத்திய வீர புருஷர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறக்கவே செய்திருக்கிறார்கள்.     

சிவமகுடம் - 38

இதோ... இந்த உறையூர்ப் போரும்கூட ஒருவிதத்தில் அசாத்தியமானதுதான். ஆறேழு நாழிகைகளுக்குள் ஓர் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவருவதென்றால்... அதுவும் அதிகம் குருதி சிந்தாமல், அதிக உயிர்ச் சேதமின்றி யுத்தத்தின் போக்கைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவதென்றால், அது கூன்பாண்டியரைப் போன்ற மகா புருஷர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுவதாகும்.

அப்பப்பா! என்னவொரு மதிநுட்பம்? இக்கட்டான தருணத்திலும் பிறழாத  மனத்திடம். அவரின் கண்ணின் கருமணி அசைவும்கூட, பிரமாண்ட படையணிகளை நொடிக்கு நொடி வியூகம் மாறச் செய்கிறதென்றால்... இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்த வல்லவருக்கு, எதுவும் சாத்தியம்தான்!

அதனாலன்றோ தனது வெற்றியைச் சோழர் களின் வெற்றியாகவே மிகக் கம்பீரமாக அவரால் பிரகடனப்படுத்த முடிந்தது. பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த புலிக்கொடியைப் பாண்டிய வீரனொருவன் கீழிறக்க முயன்றபோது, அவனைத் தடுத்தது மட்டுமின்றி, புலிக்கொடி வானளாவி பறக்க, அதற்கு இணையாக புதிய நட்புக்கு இலக்கணமாய் தனது கயற்கொடியையும் உறையூர்க்கோட்டையின் மீது பறக்கவிட முடிந்தது. நாழிகை நேரத்துக்கு முன்புவரையிலும் பகைவராகத் திகழ்ந்த மணிமுடிச் சோழரை, மிக்க மகிழ்ச்சியோடு மார்புடன் சேர்த்துக் கட்டித் தழுவவும் முடிந்தது.

இதோ... இன்னும் சிறிது நேரத்தில் உறையூருக்குள் மிகக்கம்பீரமாக பிரவேசிக்கப் போகிறார் கூன்பாண்டியர். அதுமட்டுமா? இந்த மந்திராலோசனை மண்டபத்தில் மணிமுடிச் சோழரோடு அளவளாவவும் விருந்துண்ணவும் போகிறார் என்றால், அவருக்குச் சாத்தியப்படாதது இப்பூவுலகில் எதுவும் இல்லைதான்.

இப்படிச் சகலமும் கூன்பாண்டியருக்குச் சாதகமாகிவிட்டதை ஏற்றுக்கொண்டுவிட்ட இளவரசி மானியின் மனதுக்கு, பெரும் நெருடலை அளிக்கும் விஷயங்களும் இருக்கவே செய்தன.

கூப்பிடு தொலைவில் பெரும் படை இருந்தும் அவை உதவிக்கு வரமுடியாதபடி, சோழர்களின் விசித்திர சைன்னியம் பாண்டியரைச் சுற்றி வளைத்துவிட்ட நிலையிலும் புன்னகை மாறாமல் நின்றிருந்தாரே கூன்பாண்டியர்? எனில், போரின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அவருக்கு முன்னரே தெரிந்துவிட்டிருந்ததா? மட்டுமின்றி, அந்த இடத்தில் மானி தனது முகக்கவசத்தைக் கழற்றியபோது... விசித்திர சைன்னியத்துக்கு தலைமையேற்றிருப்பது ஒரு பெண் என்பதை அறிந்த அந்தக் கணத்திலும் வியப்பையோ அதிர்ச் சியையோ முகத்தில் காட்டாமல் நின்றிருந்தாரே... அதற்குத்தான் காரணம் என்ன? வேறொருவராக இருந்திருந்தால், அந்தக் கணத்தில் ஏதேனும் ஓர் எதிர்விளைவை மானி சந்தித்திருக்கக்கூடும். ஆனால், கூன்பாண்டியரோ அப்படி எவ்விதமான விளைவையும் வெளிப்படுத்தாது வெகு அமைதியாகவே நின்றிருந்தார் என்றால், தனது திட்டங்கள் அனைத்தையும் ஏற்கெனவே அவர் அறிந்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்?

அது எப்படிச் சாத்தியமாயிற்று?

இவை யாவும் இருக்கட்டும்... கூன்பாண்டியரை அவள் சுற்றி வளைத்தபோது, அங்கிங்கு அணுவளவும் அசையமுடியாதபடி அவரின் பெரும்படைகளும் தளபதிகளும் அயர்ந்துபோய் நின்றுவிட, கோட்டை மதிலுக்கு மேல் பாண்டி யரின் வேறோரு படையணி திடுமென முளைத்து, சோழர் பிரானைச் சுற்றி வளைக்கிறது என்றால், அவர்கள் கோட்டைக்குள் புகுந்தது எப்படி?

குமுறும் எரிமலை ஒன்றின் குழம்பு நதியொன்று குளிர் சமுத்திரத்தில் சங்கமிக்க நேர்ந்தால், அந்தச் சங்கம இடம் எப்படி கொதிநிலையாகுமோ அவ்விதமாகக் குழப்ப அலைகளால் கொந்தளித்தது மானியின் மனம்.

சிவமகுடம் - 38அவளின் அந்தக் கொதிப்புக்கு மருந்தாக... வெளியே வானம் தெளித்த சிறு தூரலின் குளிர்ச்சியைத் தழுவி தண்ணெழுந்த தென்றல், சாளரத்தின் வழியே உள்நுழைந்து திரைச் சீலையோடு அவளின் கேசத்தையும் முகத்தையும் வருடிச்சென்றதென்றால், சன்னமாகத் தொண்டையைச் செருமியபடி தமது ஆசனத்தில் இருந்து எழுந்த சைவத்துறவியாரும், தனது பங்குக் குச் சில விஷயங்களை அவளுக்கும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற முற்பட்டார்.

ஆம்... களத்தில் இளவரசியின் உத்தரவுக்கு இணங்க கனத்த சரீரத்தினரான பட்டர்பிரான் வெற்றி நாதம் எழுப்ப முயன்ற தருணத்தில், கோட்டை மதிலின்மீது நின்றபடி சங்கநாதம் எழுப்பி, தங்களின் வெற்றியை அறிவித்த சைவத்
துறவியார், அத்துடன் போரையும் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். தொடர்ந்து மணிமுடிச் சோழரும் மற்றவர்களும் கைதிகளாக்கப் படுவார்கள், பாண்டிய சைன்னியம் உறையூருக்குள் புகுந்து சூறையாடும் என்றெல்லாம் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறான சம்பவங்களே அடுத்தடுத்து நடந்தேறின.

பாண்டிய வீரனொருவன் புலிக் கொடியை அகற்ற முயல, கூன் பாண்டியரோ களத்தில் நின்ற படியே பெரியதாகக் குரலெழுப்பி அவனைத் தடுத்து நிறுத்தினார். அவரின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டவர்போல, சைவத்துறவியார் கண்ணசைக்க, சோழரைச் சூழ்ந்து நின்ற பாண்டிய வீரர்கள் அவரைவிட்டு விலகி நின்றதோடு, வாள் தாழ்த்தி   சோழருக்கு வணக்கம் செலுத்தவும் தவறவில்லை. அனைத்தையும் வியப்போடு கவனித்துக்கொண் டிருந்த சோழருக்கு மேலுமொரு வியப்பைத் தந்தார் கூன்பாண்டியர்.

தூரத்தில் நின்றிருந்த பாண்டிய சேனைகள் மெள்ளக் கோட்டையை நோக்கி நகரத் தொடங்கின. அவை வந்துசேருவதற்குள் கூன்பாண்டியர் சர்வசாதாரணமாக விசித்திர சைன்னியத்தை விலக்கி விட்டுவிட்டு, தனது சிறு மெய்க்காவல் படையோடு மதிற்புறத்தை அணுகியிருந்தார். அதுமட்டுமின்றி தனது புரவியில் அமர்ந்தவாறு வாளை உயர்த்தி சோழருக்கு வீரவணக்கமும் செய்தார். அத்துடன் தானும் தன்னைச் சார்ந்தோர்களும் நண்பர்களாகக் கோட்டைக்குள் நுழைய அனுமதி கிடைக்குமா என்று அவர் வேண்டிக்கொள்ள, நெகிழ்ந்து போனார் மணிமுடிச் சோழர். அதற்குப்பிறகும் சோழர் மதிலுக்குமேல் நிற்கவில்லை. அவசர அவசரமாகக் கீழிறங்கி ஓடி வந்தார் வாயிற்புறத்துக்கு. அப்படி அவர் வந்ததும் தானும் புரவியில் இருந்து இறங்கிய கூன்பாண்டியர் ஓடோடி வந்து மணிமுடிச்சோழரை ஆரத் தழுவிக் கொண்டார்.

அதைக் கண்டு, சோழ தேசத்தின் வான்புறமும் நெகிழ்ந்திருக்க வேண்டும். சட்டென்று பெரும் காற்று வீச, நாலா திசையிலும் இருந்து திரண்டுவந்து சங்கமித்த கூடல்கள், பெரும் இடிமுழக்கம் எழுப்பியதோடு அப்போதே மழை பொழியவும் செய்தன.

‘`நல்ல சகுனம் நல்ல சகுனம்’’ என்று ஆர்ப்பரித்த சோழர், ‘`சக்ரவர்த்தி அவர்கள் வெற்றி வீரராக அல்லவா உறையூருக்குள் பிரவேசிக்க வேண்டும். தங்களது நகர விஜயத்துக்கு ஏற்பாட்டை இப்போதே செய்கிறேன்’’ என்றார். கூன்பாண்டியரோ அதைத் திட்டமாக மறுத்துவிட்டார்.

‘`இங்கு வெற்றி தோல்வி என்பது எவருக்குமல்ல. தவிரவும், தற்போது நான் நகருக்குள் பிரவேசிப்பது முறையல்ல. தாங்கள் அனுமதிக்கும் தருணத்தில் தங்களின் நண்பனாக, விருந்தினனாக வரவே ஆசைப்படுகிறேன்’’ என்றார்.

‘‘இனி நமக்குள் அனுமதி என்று எதுவும் தேவை இல்லை. உறையூரின் வாயில்கள் தங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்’’ என்ற சோழர்பிரான், தொடர்ந்து  கையசைக்க, சோழர்களின் மதிற்புற காவல் சைன்னியம் கொம்பு வாத்தியங்களை பெரிதாக முழங்கி, பாண்டியருக்கு மரியாதை செய்தன. பதிலுக்குப் பாண்டிய சேனாவீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்விதமாக தங்கள் வேல்களையும், வாள்களையும் கேடயத்தில் அறைந்து எழுப்பிய பேரொலியும் அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் எழுப்பிய ஜெய கோஷமும் அடங்க வெகுநேரமானது.

தொடர்ந்து கூன்பாண்டியர் பாசறைக்குத் திரும்ப, அவர் தலைநகருக்குள் பிரவேசிப்பதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காகச் சைவத் துறவியார் மட்டும் தனது அணுக்கத்தொண்டர் களோடு உறையூருக்குள் நுழைந்தார்.

அடுத்த சில நாழிகைகளில் ஏற்பாடுகள் அனைத்தும் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட, இதோ  மந்திராலோசனை மண்டபத்தில் மானி, மணிமுடிச் சோழர், கோச்செங்கண் முதலானோ ருடன் போர் குறித்த சில ரகசியங்களைப் பேசத் தலைப்பட்டார் சைவத் துறவியார்.

‘‘சோழ இளவரசியாருக்கு முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விழைகிறேன்...'' என்று ஆரம்பித்தவர், அவளின் மனதைப் படித்தறிந்தவர்போல், அவளுக்குள் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக பதில் கூற ஆரம்பித்தார்.

‘‘மானியார் குழப்பமடையத் தேவையில்லை. சோழர்பிரானை சுற்றிவளைத்த பாண்டியச் சேனை புதிதாகக் கோட்டைக்குள் புகுந்ததல்ல. ஏற்கெனவே, தங்களால் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள்தான்.

அகழிக் காவிரியில் குழப்பம் ஆரம்பித்ததுமே, சிறையின் கற்கதவுகளை மூடிவிட உத்தரவிட்டார் இளவரசியார். அவரின் ஆணைப்படி கற் கதவுகளை இறக்குவதற்கான விசைப்பொறியை திருகிவிட்ட சோழ வீரர்களுக்கு, அதன் இயக்கத்தை முழுமையாகக் கவனிக்க நேரம் வாய்க்கவில்லை. போர்ச் சன்னத்தமாயிருந்ததால், அவர்களும் போர்முனைக்குப் பாய்ந்துவிட்டார்கள்.      

சிவமகுடம் - 38

கற்கதவுகள் இறக்கப்பட்டால் என்ன நடக்குமென்று இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கற்கதவுகள் இறங்கும்போதே சிறைக் கொட்டடியின் விதானமும் சேர்ந்து இறங்கி, சிறைக்குள் அகப்பட்டவர்களை நசுக்கியிருக்கும்.

நல்லவேளையாக, மிகச்சரியான அந்தத் தருணத்தில் என் விருந்தாளி நண்பன் என்னை இங்கே அழைத்துவந்தான்.

நாங்கள் வந்துசேர்ந்தபோது மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தன கதவும் விதானமும். நான் துரிதமாகச் செயல்பட்டேன். பிரதானக் கதவுகளின் தாழ்களை உடைத்து, கற்கதவு வாயிலின் அருகில் வந்தேன். அங்கே சிதிலமடைந்து கிடந்த கற்பாவை விளக்குகள் இரண்டினை, வெகுப் பிரயத்தனத்துடன் சிறைக்குள் புரட்டிவிட்டேன். எங்கள் வீரர்கள் புரிந்துகொண்டார்கள். கற்பாவை விளக்குகளைச் சரியான இடத்தில் நிற்கவைத்து, விதானம் மேலும் கீழிறங்காதபடி தடை ஏற்படுத்தினார்கள். விதானம் கீழிறங்க சிரமம் வாய்த்ததால், அதையும் கதவுகளையும் இயக்கும் இயக்குப்பொறி பழுதுபட்டது. அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வீரர்கள் வெளியேறினார்கள்.

அந்தத் தருணத்தில்தான் இளவரசியாரின் தலைமையில் தங்களது விசித்திர சைன்னியம் வெளியேறியது. அதன்பிறகு, கோட்டைக்குள் இருந்த சொற்பக் காவலை முறியடிக்க எங்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. விரைவில் மதிலுக்குமேல் பிரவேசித்தோம். பிறகு நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே’’ என்றவர், ஒருமுறை அந்த அறை அதிரச் சிரித்தார்.

பிறகு அவராகவே மணிமுடிச் சோழரை ஓரக்கண்ணில் பார்த்தபடி, இதழோர குறும்புச் சிரிப்புடன் கேட்டார். ‘‘என்னை இங்கு அழைத்து வந்தது விருந்தாளி நண்பன் ஒருவன் என்று சொன்னேன் அல்லவா? அவன் யார் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?’’ என்றவர் பதிலுக்குக் காத்திராமல், தனது கரங்களைத் தட்டி ‘‘யாரங்கே?’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார்.

மறுகணம் தடாலென்று அந்த மண்டபத்தின் கதவுகள் திறந்துகொள்ள, சங்கிலியால் பிணைக்கப் பட்ட முரடன் ஒருவனைப் பலவந்தமாக இழுத்து வந்து தரையில் தள்ளினார்கள், துறவியாரின் அணுக்கத் தொண்டர்கள். பாண்டியர்களின் ஏகக் கவனிப்பால் ஏற்கெனவே அவஸ்தைக் குள்ளாகியிருந்தவன், தன் முகத்தை அஷ்ட கோணலாக்கிக்கொண்டு, கண்களை உருட்டி கொடுரமாக விழித்தான். அவன்... களப்பிர சதிக் கூட்டத்தைச் சேர்ந்தவனும், ஒருமுறை இதே மண்டபத்தில் குறுவாளை வீசியும், கோட்டைச் சமவெளியில் யானையை ஏவியும் சோழரைக் கொல்ல முயன்ற அச்சுதன்.

அவனைக் கண்டதும் மீண்டும் ஒருமுறை தனது தோள்கள் குலுங்கச் சிரித்த துறவியார், தனது குறுவாளை உருவி அதன் கைப்பிடியைக் கொண்டு அவன் முகத்தை நிமிர்த்தியபடி சொன்னார்... ‘‘இந்த நண்பன் உதவியிருக்கா விட்டால், சிறைக் கொட்டடியின் கற்கதவு ரகசியம் எனக்குத் தெரிந்திருக்காது. நான் மட்டுமல்ல, கூன்பாண்டியரும் இவனுக்குக் கடமைப்பட்டவர்’’ என்று.

அதைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் அயர்ந்துபோனார்கள், மானியைத் தவிர. மணி முடி சோழரும்கூட துறவியாரின் திறமையை வியக்கும் வண்ணம் ‘அப்பப்பா... யமபாதகர் இந்த மனிதர்’ என்று உள்ளுக்குள் வியந்துகொண்டார்.

ஆனால், மானிக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துபோனது அந்தத் துறவி யாரென்று. எனவேதான், இங்கு இந்த உரையாடல் நடந்த சில பல நாழிகைகள் கழித்து அவள் எல்லைப்புறச் சிவாலயத்துக்குச் சென்றபோது அவரையும் உடன் அழைத்துச் சென்றாள்.

அங்கே சிவ சந்நிதியில் விபூதியை அள்ளி யெடுத்து சிவனாரைப் பிரார்த்தித்து நெற்றியில் இட்டுக்கொண்டதுடன், அவரிடம் ஆசிபெற்று ஒரு சங்கல்பத்தையும் ஏற்றுக்கொண்டாள். தென் பரதக் கண்டத்துக்கே மகத்தான திருப்புமுனையை தந்த அதிஉன்னதமான சங்கல்பம் அது!

 - மகுடம் சூடுவோம்...