Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
சா
லையோரங்களில், மரங்களை வைத்து நிழல் தந்த காலம் ஒன்று உண்டு. அதேபோல், மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், மக்களுக்கும் பக்திக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மன்னர்கள், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் கோயில்களை நிர்மாணித்தார்கள்.

அந்தக் கோயில்களில் நித்தியப்படி பூஜைகள் சிறப்புற நடை பெற வேண்டும் என்பதற்காக, நிலங்களையும் ஆடுகளையும் மாடுகளையும் தானமாக வழங்கினார்கள். தினமும் பூஜைகளை நடத்தி கோயிலைப் பராமரிப்பதற்காக, அந்தணர்களை நியமித்து, அவர்களுக்குக் கோயிலுக்கு அருகிலேயே இடம் ஒதுக்கி, வீடு கட்டிக் கொடுத்தார்கள்.

சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னர்களின் சிந்தனைகளும், பாண்டிய தேச மன்னர்களின் எண்ணங்களும் வேறுவேறாக இருந்தன. கோயில் கட்டுவதில் வேறுபாடுகள் தெரிந்தாலும், மக்களை மதிப்பதிலும், கோயிலுக்கு நிவந்தங்கள் அளிப்பதிலும் இருவருமே ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி, அதன்படியே செயல்பட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்றைக்கு சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. நார்த்தாமலையில் இருந்து சோழ நாட்டின் தஞ்சாவூருக்குக் கல் எடுத்துச் சென்றதாகத் தகவல்கள் உண்டு. அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கும் காசியம்பதியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும் பாதயாத்திரையாக வருகிற அடியவர்கள், புதுக்கோட்டையைக் கடந்துதான் செல்லவேண்டும்.

ஆலயம் தேடுவோம்!

அப்படி நெடுந்தொலைவு நடந்து வரும் அடியவர்களுக்காக, திருச்சிராப்பள்ளியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியிலும், விராலிமலை செல்லும் வழியிலும் ஏராளமான கோயில்களைக் கட்டினார்கள்; அருகில் குளங்களை வெட்டினார்கள்; அத்துடன், அடியவர்கள் சாப்பிட்டு இளைப்பாறுவதற்கு வசதியாக, சத்திரங் களையும் அமைத்தார்கள்!

விராலிமலை, முருகப்பெருமான் கோயில்கொண்டிருக்கும் அற்புதத் தலம். ஊருக்குள் இருக்கிற மலையையும், அங்கே அழகுறக் காட்சி தரும் முருகக் கடவுளையும் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர். விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இலுப்பூர் எனும் கிராமம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கன்னியாபட்டி கிராமம். இந்த ஊரில், ஸ்ரீசிவகாமி சமேதராகக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர்.

ஆலயம் தேடுவோம்!

ஒருகாலத்தில், ஆலத்தூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலிலும், நீர்ப்பழநி எனும் கிராமத்தில் உள்ள சிவாலயத்திலும், இங்கே இந்த திருநீலகண்டர் திருக்கோயிலிலும் திருவிழாக்கள் வரிசையாக நடந்தேறுமாம். இந்த விழாக்களைக் காண புதுக்கோட்டை, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, விராச்சிலை எனப் பல ஊர்களில் இருந்தெல்லாம் மாட்டுவண்டியைக் கட்டிக்கொண்டு, குடும்பத்துடன் வருவார் களாம், அன்பர்கள்.

ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் சார்த்தி, சர்வ அலங்காரங்களும் செய்து திரு வீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும் என்கின்றனர், பொதுமக்கள்.

''ஆலத்தூர் கோயில்ல விழா முடிஞ்ச அடுத்த வாரமே கன்னியாபட்டி கோயில்ல விழா ஆரம்பிச்சிடும். பத்து நாள் நடக்கற விழாவுல, சிவபெருமானை வேண்டிக்கிட்டு வந்ததுமே, மழை வெளுத்து வாங்கும். அதுக்குப் பிறகு, மண்ணுல விதைச்சது எல்லாமே பொன்னா விளைஞ்சு நிக்கும். நீலகண்டேஸ்வரரைக் கும்பிட்டுட்டு, நிலத்துல விதைச்சது வீண் போனதா சரித்திரமே இல்லை, தெரியுமா?'' என்று போற்றுகின்றனர், பக்தர்கள்.

ஆனால், அதெல்லாம் ஒருகாலம். இன்றைக்கு, கன்னியாபட்டி ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயிலைப்பார்த்தால், ரத்தக்கண்ணீரே வருகிறது. மிகப்பிரமாண்டமான கோயிலாக, முழுவதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயம், இன்றைக்கு வெறும் கற்குவியலாக, இடிந்த மண்டபம் போல் இருப்பதைப் பார்த்ததும் நொறுங்கித் துவண்டது மனம்.

கோயில் என்றால் கோபுரம் இருக்க வேண்டும்தானே?! சுற்றிலும் மதில் எழுப்பப்பட்டிருக்கும் அல்லவா? உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நந்தியும், அருகில் கொடிமரமும் இருக்கும் என்பதை எல்லோரும் அறிவோம்தானே! ஆனால் இங்கே, கோபுரமோ மதிலோ இல்லை. பலிபீடமும் நந்தியும் இருக்க, கொடிமரத்தைக் காணவே காணோம். ஆகவே கொடியேற்றமும் நிகழ்வதற்குச் சாத்தியமில்லை. விழாக்களும் கொண்டாட்டங்களும் தொலைந்துவிட்டன!

ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட ஆலயம்தான் இதுவும்! உள்ளே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீலிங்கோத் பவர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசண்டிகேஸ்வரர்... எத்தனை தெய்வத் திருவுருவங்களைப் பிராகாரத்திலும் கோஷ்டத்தி லும் திருச்சுற்று மாளிகையிலும் அமைத்தி ருப்பார்கள்! இங்கு, இரண்டு நந்திதேவர்கள், ஸ்ரீசிவகாமி அம்பாள், ஸ்ரீநீலகண்டேஸ்வரர் ஆகியோரை மட்டுமே தரிசிக்கிற வேதனையை என்னவென்று சொல்வது?

ஆலயம் தேடுவோம்!

''மழையாலும் வெள்ளத்தாலும் கோயில் சிதைஞ்சு போக, வழிபாடுகள் குறைஞ்சு போயிடுச்சு. நீலகண்டேஸ்வரரைக் கும்பிடாத இந்த ஊர் எப்படிச் செழிக்கும், சொல்லுங்க! விவசாயமும் கொஞ்சம் கொஞ்சமா மங்கிப் போச்சு. இந்தக் கோயிலுக்கு ஒரு கும்பாபிஷேகத்தைச் செஞ்சு பார்த்துப்புடமாட்டோமானு ஏங்கித் தவிக்குது மனசு'' என நா தழுதழுக்கச் சொல்கிறார் ஆண்டப்ப தென்னத்திரையர்.

புதுக்கோட்டையை தொண்டைமான் பரம்பரையினர் ஆட்சி செய்த காலகட்டத் திலும், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு, நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. இப்படிப் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாகப் பார்த்துப் பராமரித்து வந்த ஆலயத்தை, இந்த ஜென்மத்தில் காபந்து செய்து, திருப்பணிகள் மேற் கொண்டு, வழிபாடுகளைத் தொடர்வது நம் கடமை அல்லவா?

சிவகாமி அம்பாளுக்கு, பளிச்சென்று ஒரு புடவையை வாங்கிச் சார்த்தினால், உள்ளம் குளிர்ந்து போவாள், அந்தக் கருணைத் தெய்வம். ஸ்ரீநீலகண்டேஸ்வரரின் சிவலிங்கத் திருமேனிக்கு ஒரு வஸ்திரத்தைச் சார்த்தி, கொஞ்சமே கொஞ்சம் வில்வத்தை சிரசில் வைத்து அலங்கரித்தால், குழந்தையெனக் குதூகலித்து, நமக்கு நிம்மதியைத் தர ஓடோடி வந்து விடமாட்டாரா நீலகண்டேஸ்வரர்!

அந்தக் காலத்தில் மன்னர் பெருமக்கள், மிகப் பெரிய கோயில்களே கட்டினார்கள். அப்படிக் கட்டப்பட்ட கோயில் ஒன்று இன்றைக்குக் களையிழந்திருக்க... அங்கே விநாயகருக்கோ ஸ்ரீசுப்ரமணியருக்கோ ஒரு சந்நிதியைக் கட்டிக் கொடுத்தால், நம் சந்ததி மொத்தமும் செழிக்கும். இரண்டு படி அல்லது ஐந்து படி அரிசியைப் போட்டு, ஒரு சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, ஊர்மக்களைத் திரட்டி  வணங்கினால், மொத்த கிராமமும் மகிழ்ந்து திளைக்கும்!

'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!’

எனும் பாடலை உள்ளுக்குள் பாடியபடி, 'விடமுண்ட கண்டனே! எங்கள் சிவனே! திருநீலகண்டனே... உன் அடியார்களை அழைத்து, உனக்கு என்ன தேவையோ அதனை அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள், எங்கள் தாயுமானவனே!’ எனும் பிரார்த்தனையுடன், திருநீலகண்டேஸ்வரரை வணங்கித் தொழுது விடைபெற்றோம்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்