Published:Updated:

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...
பிரீமியம் ஸ்டோரி
குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

Published:Updated:
குருவருள் தரும் மகான்களின் கதைகள்...
பிரீமியம் ஸ்டோரி
குருவருள் தரும் மகான்களின் கதைகள்...
குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

குரு பூர்ணிமா மகிமை...

குரு பூர்ணிமா என்னும் வியாசபூர்ணிமா குருமார்களைப் போற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. உலகுக்குக் குருமார்களாகத் திகழும் மகான்களுக்கு வேதங்களே வழிகாட்டி. அந்த வேதங்களையும் புராணங்களையும் தொகுத்தளித்தவர் வியாச முனிவர். அவரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த நன்னாள், வியாசபூர்ணிமா என்ற திருப் பெயரிலும் அழைக்கப்படுகிறது.

குரு பூர்ணிமா என்பது குருமார்களை வழிபடும் திருநாளாக மட்டும் இல்லாமல், குருவிடம் தீட்சை பெறுவதற்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது. அன்று ஏற்படும் குருவின் தொடர்பு பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். அப்படியான குருவருள் ஒருவருக்கு வாய்த்து விட்டால், பின்னர் அவரது வாழ்வில் திருவருளுக்குக் குறையே இல்லை. அவ்வகையில், நமக்குக் குருவருளையும் திருவருளையும் ஒருங்கே பெற்றுத் தரும் நன்னாள் குரு பூர்ணிமா.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

எத்தனையோ மகான்கள் குருமார்களாக இருந்து நமக்கு நல்ல வழி காட்டிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் இறையருளால் நிகழ்ந்த அருளாடல்களும், அவர்கள் சந்தித்த அனுபவங்களும் நமக்கான சிறந்த படிப்பினைகள்.

வரும் 9-ம் தேதி குருபூர்ணிமா. அன்று  இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்த மகான்களின் அருளைப் பெறும் விதம், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களைப் படித்து, அவற்றையே குரு உபதேசமாக ஏற்று அருள் பெறுவோம்.

மனீஷா பஞ்சாங்கம்

னைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும் ஒப்பற்ற அத்வைத தத்துவத்தைப் போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். எந்த ஜீவனிடத்தும் வேற்றுமை காணாதவர். ஆனால், அவருடைய அந்த மனப் பக்குவத்தைப் பலரும் விமர்சித்தனர். அவர்களுக்கு ஒரு படிப்பினையைத் தரும் நிகழ்ச்சியாக ஒரு சம்பவத்தை நிகழ்த்த திருவுள்ளம் கொண்டார் ஆதிசங்கரர்.     

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

ஒருநாள் அவர் தன் சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, ஜகத்குருவின் திருவுள்ளப்படி எதிரில் ஒரு புலையன் தன் மனைவி மற்றும் நான்கு நாய்களுடன் எதிர்ப்பட்டான். அவனுடைய மனைவி கையில் ஒரு மதுக்குடுவையும் காணப்பட்டது.
எதிர்வந்த அந்தப் புலையனைக் கண்ட ஆதிசங்கரர், ‘`சண்டாளா, சற்றே விலகிச் செல்’’ என்று கூறினார்.

ஆதிசங்கரர் அப்படிக் கூறியதைக்கேட்ட அந்தப் புலையன், ‘’ஐயனே, தாங்கள் விலகிப் போ என்று சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலில் உள்ள ஆன்மாவையா? எதை விலகிச் செல்லச் சொல்கிறீர்கள்?’’ என்ற பொருள்படும் வகையில் கேட்டான்.

``நீங்கள் யார் என்று சொல்லுங்கள். அதன்பிறகு தங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்’’ என்று ஏதும் அறியாதவர்போல் கூறினார் ஆதிசங்கரர்.

உடனே புலையனாக வந்தவன் சிவபெருமானாகவும், அவன் மனைவி பார்வதி தேவியாகவும், அவள் கையில் இருந்த மதுக்குடம் அமிர்தகலசமாகவும், நான்கு நாய்களும் வேதங்களாகவும் மாறிக் காட்சி அளித்தன.

சிவசக்தியரைப் பணிந்து வணங்கிய ஜகத்குரு, அற்புதமான ஐந்து பாடல்களை இயற்றினார். அந்த ஐந்து பாடல்களே மனீஷா பஞ்சகம்.     

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

அதில் ஒரு ஸ்லோகம்...
சச்வன் நச்வரமேவ விச்வமகிலம்
    நிச்சித்ய வாசா குரோ
நித்யம் ப்ரும்ம நிரந்தரம் விம்ருசதாம்
    நிர்வ்யாஜ சாந்தாத்மனாம்
பூதம் பாவிச துஷ்க்ருதம் ப்ரதஹதாம்
    ஸமவின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வபுரித்யேஷா மனிஷா மம


கருத்து: அனைத்து உலகங்களும் எப்போதும் அழியக்கூடியவையே என்பதை குருவின் வாக்கினால் உணர்ந்து, அழிவற்றதான பரப்பிரும்மத்தை எப்போதும் தியானிக்கிறவரும், கபடமற்ற அடக்கமுள்ள மனதை உடையவரும், செய்வதும் செய்யப்போவதுமான புண்ணிய பாப கர்மங்களை ஞானமாகிய அக்னியில் எரிப்பவரும், தன்னுடைய சரீரம், பலனைக் கொடுக்கிற கர்மத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவருமான புருஷன்தான் எனக்கு குரு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

குரங்கின் விளையாட்டு!

பி
ரேமை பக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த ராதா தேவி, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புத சம்பவம்...       

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

ராதாகுண்டம் என்ற பகுதி ராதாதேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணிய ஸ்தலம். சுவாமி விவேகானந்தர் இங்கே வந்து தங்கியிருந்தபோது, அவரிடம் ஒரே ஒரு துணிதான் இருந்தது. அதை ஒருநாள் அவர் கசக்கி உலர்த்தி வைத்திருந்தபோது, ஒரு குரங்கு வந்து தூக்கிக்கொண்டு போய், மரத்தின் உச்சாணிக் கிளையில் உட்கார்ந்துகொண்டது. சுவாமிஜி குரங்கிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பயனில்லாமல் போனது.

சுவாமிஜிக்குக் கோபம் வந்துவிட்டது. குரங்கின் மீது அல்ல; அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் பாதம் பதித்து வலம் வந்த ராதா தேவியிடம்! ‘எல்லோரும் உன்னைக் கருணையின் வடிவமாகப் போற்றுகிறார்கள். ஆனால், உன்னைத் தரிசிக்க வந்த இந்த ஏழையின் துணியைப் பறித்துக்கொண்டுவிட்டாயே? பக்கத்தில் உள்ள வனத்துக்குச் சென்று பட்டினி கிடந்து உயிரை விடுகிறேன். அந்தப் பழி உன்னையே சேரட்டும்’ என்று கூறியவராய் சுவாமிஜி காட்டை நோக்கி ஓடலானார்.        

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

எல்லாவற்றையும் எங்கிருந்தோ கவனித்துக்கொண்டிருந்த ஒருவன், காவி உடையும், சிறிது உணவும் எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அங்கே சுவாமிஜியைச் சந்தித்து அவற்றைக் கொடுத்துச் சென்றான். சுவாமிஜியின் கண்களை நீர் திரையிட்டது. வேட்டியை அணிந்து உணவையும் உட்கொண்ட பின் வனத்திலிருந்து வெளியே வந்தார். துணியும் உணவும் கொடுத்த அந்த வாலிபனை எவ்வளவு தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவர் எங்கே துணியை முன்பு உலர்த்தி இருந்தாரோ, அங்கேயே அது காய்ந்துகொண்டிருந்தது. சுவாமிஜி, ராதா தேவியின் திருவருளை வியந்து சிலிர்த்தார்.

ஆன்மிக முன்னேற்றத்துக்கு...      

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

சித்தர்கள் ஜீவன்முக்தி அடைந்த இடங்களே அவர்களின் ஜீவ சமாதி தலங்களாக பக்தர்களால் வணங்கப்படு கின்றன. சித்தர்களின் ஜீவ சமாதிகளின்மேல் அவர்கள் வழிபட்ட தெய்வமூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். சித்தர்களின் ஜீவ சமாதிகளை தரிசித்து வழிபடுவதால் எண்ணற்ற நன்மைகள் நமக்குக் கிடைக்கும். மேலும் நம்முடைய ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஒரு வழிபாட்டு முறை சொல்லப்பட்டிருக்கிறது. குருவின் அருளால் ஆன்மிக ஞானம் பெற விரும்பும் அன்பர்கள், தாங்கள் விரும்பும் ஒரு சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் தலத்துக்குச் சென்று வழிபடவேண்டும். இந்த வழிபாட்டை ஒரு வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து 8 வாரங்கள் செய்து வந்தால், சித்தரின் அருளால் நமக்கு சத்குரு அமைந்து, நமக்கு ஆன்மிக ஞானத்தை உபதேசிப்பார்.

மஞ்சள் காமாலை மாயமானது!

திருக்கோவிலூரில் ஆசிரமம் கண்டு, ஆன்மிகம் தழைக்கச் செய்த மகான் ஞானானந்தகிரி சுவாமிகள். தம்முடைய தபோவனத்தில் குழந்தைகளோடு குழந்தையாகச் சிறுவர்களுடன் பழகுவார். சில நேரங்களில் சுவாமிகளுக்காக இனிப்பு வகைகளைப் பக்தர்கள் கொண்டுவந்து கொடுக்கும்போது, குழந்தைகள் அவருக்குத் தெரியாமல், அவற்றை எடுத்துத் தின்பது வழக்கம். ஒருநாள் சில பக்தர்கள் அதைப் பார்த்துவிட்டு, சிறுவர்களைக் கண்டித்தார்கள். அன்று முதல் சில நாள்கள் சிறுவர்கள் யாரும் அந்தப் பக்கம் வரவில்லை.     

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

யாரும் சொல்லாமலேயே சுவாமிகள் அதன் காரணத்தை அறிந்துகொண்டார். பாத்திரங்களில் இருந்த இனிப்புப் பண்டங்களை அதன்பிறகு சுவாமி திறந்துகூடப் பார்க்கவில்லை. பக்தர்கள் சுவாமிகளைக் கேட்டதற்கு, “எனது நண்பர்களுக்கு இல்லாத தின்பண்டங்கள் எனக்கு மாத்திரம் எதற்கு?” என்று மறுத்துவிட்டார். அந்த அளவுக்குக் குழந்தைகளிடம் அளவற்ற அன்பும் வாஞ்சையும் கொண்டிருந்தவர் தபோவனம் சுவாமிகள்.

ஒருநாள் கடுமையான மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் தபோவனத்தின் வாயிலில் மயங்கி விழுந்துவிட்டான். சுவாமிகள் உடனே வெளியே வந்து அவனை அழைத்துக்கொண்டு போய், உள்ளே உட்காரவைத்து “இந்தப் பையனுக்கு உடனே சாப்பாடு போடு!” என்று சொன்னார். சாப்பாட்டில் எண்ணெயில் பொரித்த அப்பளமும் வந்தது. பையனின் நிலையை அறிந்து பரிமாறுபவர் போடத் தயங்கினார். அந்தப் பையனும் சாப்பிடத் தயங்கினான். சுவாமிகள், “உனக்கு மஞ்சள் காமாலை ஏதும் இல்லை. எல்லாம் சரியாகி விட்டது. தைரியமாகச் சாப்பிடு” என்று சொன்னார். அந்தப் பையனும் சாப்பிட்டுச் சென்றான்.

மறுநாளே அந்தப் பையன் மஞ்சட்காமாலை நோய் நீங்கி விளையாட ஆரம்பித்துவிட்டான். ஆனால், சுவாமிகள் மூன்று நாள்களுக்குப் படுத்த படுக்கையாகவே இருந்தார்.   மற்றவர்களின் கர்ம வினைகளைத் தாமே உவந்து ஏற்றுக் கொள்வதில் சுவாமிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்!

வாக்கு வன்மை பெற்றிட...

திருவைகுண்டத்தில் வசித்து வந்த சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாம சுந்தரி தம்பதிக்கு நீண்டகாலம் கழித்து, முருகனருளால் ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை ஐந்து வயது வரை பேசவே இல்லை. அதனால் வருந்திய பெற்றோர், செந்திலாண்டவனை மனமுருகப் வேண்டி பிரார்த்திக்க, குழந்தைக்குப் பேசும் திறன் மட்டுமின்றி, கவி பாடும் திறனும் அளித்தார் முருகப்பெருமான். பேசும் திறன் வந்ததும்,  “பூமேவு செங்கமல புத்தேளுந் தேறறிய'' என்ற பாடலைப் பாடிய அந்தக் குழந்தை,  பின்னர் எண்ணற்ற பக்தி இலக்கியங்களைப் படைத்தது.  அந்தத் தெய்விகக் குழந்தையே குமரகுருபரர்.   

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

தங்கள் குழந்தைக்கு பேசும் திறனும், வாக்கு வன்மையும் பெற விரும்பும் அன்பர்களும், செந்திலாண்டவரின் சந்நிதிக்குச் சென்று வழிபட்டால், விரைவில் குழந்தைக்குப் பேசும் திறனும் வாக்குவன்மையும் வாய்க்கும்.

பழநிப் பதிகம்

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர். தலங்கள்தோறும் சென்று முருகப்பெருமானை தரிசித்தவருக்கு, காஞ்சியில் முருகப்பெருமானே வழிகாட்டி குமரக்கோட்டத்துக்கு அழைத்துச்சென்ற அற்புதமும் நிகழ்ந்தது.  

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானின் எண்ணற்ற தலங்களை தரிசித்திருந்தாலும், அவரால் பழநிக்குச் சென்று பழநி ஆண்டவரை தரிசிக்க முடியவில்லை. அதன் பின்னணியில் அமைந்துள்ள நிகழ்ச்சி இதுதான்.

பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு என்பதாகும். அவர் ஒருநாள் அங்கமுத்து பிள்ளை என்பவரிடம், தான் பழநிக்குச் செல்லப்போவதாகக் கூறினார். எங்கே அவர் பழநிக்குச் சென்றால் திரும்பி வராமல் சந்நியாசம் வாங்கிவிடுவாரோ என்ற எண்ணம் அங்கமுத்து பிள்ளைக்கு. எனவே, அவர் பாம்பன் சுவாமிகளிடம், ‘`நீ பழநிக்குப் போவதற்கு முருகன் உத்தரவு கொடுத்துவிட்டானா?'’ என்று கேட்டார்.

உடனே பாம்பன் சுவாமிகள் சற்றும் தயங்காமல், ‘`ஆம், பழநிக்கு வருவதற்கு எனக்கு முருகப்பெருமான் உத்தரவு கொடுத்துவிட்டான்’’ என்று கூறினார். உண்மையில் அவருக்கு அப்படி ஓர் உத்தரவு கிடைக்கவில்லை. அன்று மதியம் அவர் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்தபோது, அவருக்கு நேராக வானத்தில் காட்சி கொடுத்தார் முருகப்பெருமான். அவருடைய தோற்றம் அச்சுறுத்தும் வண்ணம் இருந்தது. தன் வலக் கை சுட்டு விரலை நீட்டி, ‘`நானா உன்னைப் பழநிக்கு வரும்படி அழைத்தேன்? ஏன் அப்படி சொன்னாய்?'' என்று அச்சுறுத்துவதுபோல் மிரட்டலாகக் கேட்டார். பாம்பன் சுவாமிகளோ சற்றும் அஞ்சாமல், ‘`ஐயனே, நான் பொன்னும், பொருளும் உன்னிடம் பெற வேண்டும் என்பதற்கா பொய் சொன்னேன்? உன் அருள் பெற்று துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்றுதானே விரும்பினேன்’' என்று கூறினார்.      

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

``எப்படிப் பார்த்தாலும் என் பக்தனான நீ பொய் சொன்னது தவறுதான். இனி என் உத்தரவு கிடைக்கும் வரை நீ பழநிக்கு வரவே கூடாது'’ என்று உத்தரவும் போட்டுவிட்டார். பாம்பன் சுவாமிகள் ஸித்தி அடையும்வரை அவருக்கு பழநிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் பேறு கிடைக்கவே இல்லை. அப்படியிருந்தும் பழநி முருகப்பெருமானை நேரில் தரிசித்ததுபோன்ற அனுபவத்தில் பாம்பன் சுவாமிகள் `பழநிப் பதிகம்' என்று பத்து பாடல்களை இயற்றி அருளினார். அவற்றில், பழநி முருகப் பெருமானின் திருவுருவத்தை அப்படியே வர்ணிக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல் இதோ உங்களுக்காக...

முண்டிதம் இல் சிறு சிகையும் இடையில் அணி கவுசனையும்
முழு மதியம் என மிளிரும் முகமும் ஒருகைத்
தண்டும் உரம் உறு புரியும் இளமை உடை உருவும் எழில்
தர இலக இருடி சுரர் அடிகள் எவரும்
கண்டு நலன் அடைய என அமிர்தம் மழை பொழி பெரிய
கருவி கவி பழநிமலை உறை பெரியவன்
தொண்டன் என உள எனது மனதில் உளன் இரவு பகல்
துணையும் அவன் அணைவும் அவன் நினைவும் அவனே.


இந்தப் பாடலைப் பக்தியுடன் பாராயணம் செய்து, மானசீகமாக பழநி ஆண்டவரை வழிபட்டால், பழநிக்குச் சென்ற புண்ணியம் கிடைப்பதுடன், அழகன் முருகன் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

அடகுக் கடையில் கேதார ராகம்!

‘வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே ஜேபீட பராயி ஜானேரே, பரதுக்க உபகாரு கரே தோயே மன அபிமானந அநேரே...’ எனத் தொடங்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தமது தேன்குரலில் பாடிய பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?          

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

‘பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்...’ எனத் தொடங்கி, பல உயரிய கருத்துகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடல், மகாத்மா காந்திக்குப் பிடித்தமானது. மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டங்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல்! பக்தி, ஒழுக்கம்,  மனிதாபிமானம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்திய இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை இந்தப் பூமிக்குத் தந்த அந்தப் பக்தர், ஸ்ரீநரஸி மேத்தா.

ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பாடிய நரஸி மேத்தாவின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, குஜராத் மக்கள் இன்றைக்கும் கதை கதையாகச் சொல்லிப் பூரிக்கின்றனர். அவற்றில் ஒரு சம்பவம்...

அப்போது, ஜூனாகாத் பகுதியை மான்லித் என்பவர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். நரஸி மேத்தாவையும் அவரின் கிருஷ்ண பக்தியையும் அறிந்த மான்லித், நரஸியின் மகத்துவத்தைச் சோதிக்க நினைத்தான். நரஸியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தான்.

‘‘உன் மகளுக்குத் திருமணம்; உன்னிடம் காசு இல்லை. ஆனால், நீயோ எந்தக் கவலையுமின்றி, கடவுள் சந்நிதியிலேயே காலத்தை ஓட்டுகிறாய்? உன்னுடைய தாமோதரனின் கழுத்தில் ஜொலிக்கிற ஆரம், சிறையில் இருக்கிற உன் கைக்கு வந்துவிட்டால், தாமோதரனையும் உன் பக்தியையும் ஏற்றுக்கொள்கிறேன். தவிர, தாமோதரனுக்கு அடிமையாகிறேன். உம்மையும் விடுதலை செய்கிறேன்’’ என்றான் எகத்தாளமாக. 

இதைக்கேட்டதும், மெய்யுருகி தாமோதரனைப் போற்றிப் பாடினார் நரஸி மேத்தா. ‘`மணிவண்ணா! என்னை உன் காலடியில் இருந்து பிரித்துவிட்டாயே... நான் என்ன தவறு செய்தேன்?’’ என அழுது புலம்பினார். பக்தனின் கதறலைக் கேட்டுச் சும்மா இருப்பாரா தாமோதரன்?!         

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

நரஸி மேத்தாவுக்குத் திருக்காட்சி தந்தார். ‘‘ஸ்ரீநரஸி, கேதார ராகத்தில் என்னைப் பற்றிப் பாடு.என் கழுத்து ஆரத்தை உனக்குத் தருகிறேன்’’ என்று பகவான் சொல்ல, நிலைகுலைந்தார் நரஸி மேத்தா. ‘`ஐயோ... கேதார ராகத்தில் பாட முடியாதே! அதனை அடகு வைத்து, வீட்டுச் செலவுக்கு ஏற்கெனவே பணம் வாங்கிவிட்டேனே!’' என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார் நரஸி மேத்தா.

உடனே கண்ணன், அடகுக் கடைக்காரரிடம் சென்று, நரஸி மேத்தா தரவேண்டிய தொகையை வட்டியுடன் தந்தார்; கேதார ராகத்தை மீட்டெடுத்தார்; அதற்குச் சாட்சியாகக் கடைக்காரரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் வாங்கிவந்து, நரஸியிடம் கொடுத்தார். ‘‘இப்போது பாடலாமே!’’ என்றார் புன்னகையுடன். உடனே நரஸி மேத்தா, ‘ஹரி ஹார் தேகா, ஹரி ஹார் தேகா’ எனத் தொடங்கும்  பாடலை, கேதார ராகத்தில் மெய்யுருகப் பாடினார். அப்போது, சந்நிதியில் ஸ்ரீதாமோதரனின் கழுத்தில் இருந்த ஆரம், அதுவாகவே கழன்று, மெள்ளக் காற்றில் மிதந்துவந்து, நரஸியின் கழுத்தில் மாலையென விழுந்தது.

இதைக்கண்ட அரசன் சிலிர்த்தான். நரஸியின் காலில் விழுந்து பணிந்தான். அவரை விடுதலை செய்ததுடன், நரஸியின் மகளது திருமணத்தையும் சிறப்புற நடத்திவைத்தான்.

கன்னத்தில் கசிந்த ரத்தம்!

காஞ்சிபுரம் தூப்புல் என்ற தலத்தில் திருவேங்கடவனின் கண்டா மணியின் அம்சமாக அவதரித்தவர் ஸ்ரீவேதாந்த தேசிகர். மிகவும் இளம் வயதிலேயே வேத வேதாந்த நூல்களைக் கற்றுத்தேர்ந்தார். கீதை, உபநிஷதம் போன்றவற்றுக்கு விசிஷ்டாத்வைத அடிப்படையில் பாஷ்யமும் இயற்றியிருக்கிறார். ஓர் ஏழை அந்தணரின் வறுமையைப் போக்க வேண்டி, இவர் ஸ்ரீஸ்துதி பாடி மகாலட்சுமியைப் பிரார்த்தித்துத் தங்க மழை பொழியச் செய்தார்.         

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

`சர்வ தந்திர சுதந்திரர்' என்னும் பட்டப்பெயரும் அவருக்குண்டு. அவருடைய மகத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல வகையில் அவருக்கு இன்னல்கள் விளைவிக்க முயன்றனர். அத்தனை இன்னல்களையும் முறியடித்தார். அந்த வகையில் ஒரு சிற்பி இவரிடம் வந்து, ``நீங்கள் சிற்ப நூலிலும் வல்லவர் என்று கேள்விப்பட்டேன். சிற்ப சாஸ்திரம் தொடர்பான ஒரு போட்டியில் நீங்கள் என்னை வெற்றி கொண்டால், உமக்கு வழங்கப்பட்ட ‘சர்வ தந்திர சுதந்திரர்’ என்னும் பட்டம் நிலைத்திருக்கும். நீர் தோற்றுவிட்டால், அந்தப் பட்டத்தை விட்டுவிட வேண்டும்’' என்று கூறினான்.

தன்னிடம் பொறாமை கொண்டிருக்கும் சிலரின் வேலைதான் அது என்பதை உணர்ந்துகொண்ட வேதாந்த தேசிகர், பெருமாளின் அருளுடன் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் சம்மதித்தார். ஆனால், தான் வடிக்கும் தெய்வ மூர்த்தத்துக்கு ஏற்ற பீடத்தைச் சிற்பி அமைக்க வேண்டும். அதில்தான் தெய்வ மூர்த்தத்தை நிறுவ வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் விதித்தார். சிற்பியும் நிபந்தனையை ஏற்றான்.

திருவரங்கநாதரின் உத்தரவுப்படி இடது கரத்தில் கோசமும், வலது கரத்தில் ஞான முத்திரையும் உள்ள கோலத்தில் விக்கிரஹம் செய்தார்.

விக்கிரஹத்தை வாங்கிய சிற்பி, அதில் கண்பார்வை சரியில்லை என்றும், அதை சரி செய்வதாகவும் கூறி, விக்கிரஹத்தின் கன்னத்தில் உளியால் தட்டினான். உடனே எதிரில் இருந்த வேதாந்த தேசிகரின் கன்னத்தில் ரத்தம் கசிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் விக்கிரஹத்தில் பிழை இல்லை என்றும், சிற்பி செய்த பீடத்தில்தான் தவறு என்றும் கூறினார்கள். பிறகு தேசிகரே பீடத்தை வாங்கிச் சீர்படுத்தி, அதில் விக்கிரஹத்தை எழுந்தருளச் செய்தார். சிற்பியும் தன் தவறுக்கு வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சென்றான்.

சாதுர்மாஸ்ய விரதம்...

சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும். குரு பூர்ணிமா தொடங்கி கார்த்திகை பௌர்ணமி வரை, துறவறம் மேற்கொண்ட மகான்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்து, தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வேத வேதாந்த விஷயங்களை உபதேசிப்பார்கள்.  

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

தங்களுக்கு வேத வேதாந்த விஷயங்களைப் போதித்த குருமார்களை நினைவுகூரும் வகையில், வேதங்களைப் பகுத்துக் கொடுத்த மகரிஷி வேதவியாசரை வழிபடும் வியாச பௌர்ணமி அன்று, இந்த சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவங்குவர்.

சாதுர்மாஸ்ய காலத்தில் சந்நியாசிகள் பொதுவாக தாங்கள் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் காலங்களில் மகான்களை தரிசித்து ஆசி பெறுவது மிகவும் விசேஷமாகும்.

சுவாமி தந்த இன்கிரிமென்ட்!

ம்பிகை காமாட்சியின் அருளினால், காமாட்சியின் அவதாரமாகவே காஞ்சிபுரத்தில் வரதராஜன் - மரகதம் தம்பதியருக்கு மகனாகத் தோன்றியவர் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள். தந்தையை இளம் வயதிலேயே இழந்துவிட்ட சுவாமிகள் அன்னையின் அரவணைப்பில்தான் வளர்ந்தார். உலக இன்பங்களில் நாட்டம் இல்லாமல், ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டார். சுவாமிகளின் 17-வது வயதில் அவருடைய தாயும் மறைந்துவிட்டார்.        

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

தன் தாய் உயிர் துறக்கும் நேரத்தில் `திருவண்ணாமலை' என்று மூன்று முறை கூறியதால், சுவாமிகள் நடைப்பயணமாகத் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டு விட்டார்.

சேஷாத்திரி சுவாமிகளின் பக்தர் சிவபிரகாச முதலியார். அவருக்கு அலுவலகத்தில் வேலை பறிபோய்விடும் சூழ்நிலை. மன வருத்தத்துடன் சுவாமிகளை தரிசிக்க வந்திருந்தார். அவரைப் பார்த்த சுவாமிகள், ‘`உனக்கு இன்கிரிமென்ட் தருகிறேன். வாங்கிக்கோ'' என்று கூறினார். சிவபிரகாச முதலியார், ‘`சுவாமி, என் வேலைக்கே ஆபத்து வந்துவிடும் போலிருக்கிறதே...'’ என்று இழுத்தார்!

ஆனால், சுவாமிகள் தன் திருக்கரங்களால் அந்த பக்தரின் தலையில் அடித்து, `‘போ, போ'’ என்று கூறிவிட்டார். சுவாமிகள் இப்படிக் கூறியதும் மிகுந்த மன வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முன்பாகவே ஒரு கடிதம் வந்து காத்துக்கொண்டு இருந்தது. கடிதத்தைப் பிரிக்கவே தயங்கினார். காரணம், அந்தக் கடிதம் வேலை நீக்கத்துக்கான உத்தரவாக இருக்குமோ என்ற அச்சம்தான்.      

குருவருள் தரும் மகான்களின் கதைகள்...

பின்னர், சுவாமிகளை நினைத்து பிரார்த்தித்தபடியே கடிதத்தைப் பிரித்தார். கடிதத்தில் அவருக்கு 20 ரூபாய் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணற்றவை!   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism