Published:Updated:

பொங்கப் பிரசாதம்!

பொங்கப் பிரசாதம்!
பிரீமியம் ஸ்டோரி
பொங்கப் பிரசாதம்!

இந்திரா சௌந்தர்ராஜன்

பொங்கப் பிரசாதம்!

இந்திரா சௌந்தர்ராஜன்

Published:Updated:
பொங்கப் பிரசாதம்!
பிரீமியம் ஸ்டோரி
பொங்கப் பிரசாதம்!

ன்று காவிரியிடம் அதகளமான ஓட்டம். ஆடி மாதம் பிறந்துவிட்டாலே இந்தப் பாடுதான். பாலாய், பன்னீராய்க் காட்சி தருபவள் மண் குழம்பாய் மட்டை, செத்தைகளோடுப் பிரவாகித்துக் கொண்டிருந்தாள். திருவரங்கத்துக் கொள்ளிடம் பகுதியே இப்படிக் காட்சி தந்தால், பிரதான தென்பகுதி எத்தனை களேபரமாய் இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தான் ஸ்ரீரங்கபாதன் என்கிற அந்தக் கறுத்த இளைஞன்.       

பொங்கப் பிரசாதம்!

நெற்றியில் பளிச்சிடும் திருமண் காப்புடன், தோளில் தொங்கியவண்ணமிருக்கும் பூக்குடலை யோடும், இடுப்பில் முழங்கால் தெரியக் கட்டி யிருக்கும் நான்கு முழ பிரம்மச்சாரி கச்சவேட்டி யோடும் அவன் கொள்ளிடக் கரையில் இருந்து ஓட ஆரம்பித்தான்.

நல்ல பெரிய பாதங்கள் அவனுக்கு. மதர்த்த இளமை. எனவே, நன்றாகவே ஓடினான். எதிரில் பலர் காவிரியில் நீராட வந்த வண்ணமிருந்தனர். வெள்ளப்பெருக்கு என்பதால், பெண்டீர் எவரும் தென்படவில்லை. அவன் அப்படி ஓடும்போது குடலையில் அவன் பறித்துச் சேமித்திருந்த பூக்களில் மலராத சில இளந்தாமரை மொட்டுக்கள் இருந்தன. அவற்றில் சில ஓடும் வழிப்பாதையில் விழுந்தன. அவன் அதை அறியவில்லை.

“ரங்கபாதா... காவிரியில் நீரோட்டம் எப்படியிருக்கிறது என்றும் பார்த்து வா...” என்று  ஊரே சிலிர்க்கச் சிலிர்க்கக் குறிப்பிடும் ‘இளையாழ்வார்’ என்னும் ராமாநுஜரின் கட்டளை அவனை ஓடச் செய்து கொண்டிருந்தது.

பூப்பறித்துவந்து ஈரக் கூடைகளில் கொட்டி, நிழலார்த்தமாய் வைத்து, தேவைக்கு எடுத்துத் தருவது அவன் பணி. இன்று கூடுதலாய் அவனையே காவிரியைக் கண்டு வரவும் பணித்திருந்தார் இளையாழ்வார்.

கண்டாயிற்று...

அடுத்து திருச்செவிச்சாற்றுதான்.

“ஆண்டே... வெள்ளம் திமுதிமுன்னு போகுது. பாக்கவே கண்ணு முழி தெறிச்சிடும்போல இருக்கு. நின்னு குளிக்கறது தோதில்ல...” என்றான் தனக்கான சேரித்தமிழில். அதைக் கேட்ட இளையாழ்வார் முகத்தில் பிறைநுதல் உதித்தார் போல் ஒரு சிறு நகை.

“நல்லது... காவிரி மாதாவைக் கோபக்காரியாகச் சீற்றமுடன் பார்ப்பதும் ஓர் அழகுதான். நீராடப் புறப்படுவோம்’’ என்றவர் ஸ்ரீரங்கபாதனை சைகையாலே சற்று அருகே வருமாறு அழைத்து ‘‘என்னை என்ன சொல்லி அழைத்தாய்?” என்று குறுநகை மாறாது கேட்டார். அவனிடம் சற்றே தடுமாற்றம்.

“உம்... சொல்...”

“ஆண்டேன்னு...”

“அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனல்லவா?”

“அப்படியே எல்லாரையும் கூப்பிட்டுப் பழகிட்டேன்.”

“இனி மாற்றிக்கொள். நான் அரசனுமல்ல. நீ என் அடிமையுமல்ல. நாம் அவ்வளவு பேருமே அரங்கனின் தொண்டர்கள். அதனால்தான், தீவட்டி என்கிற உன் பெயரையும் ஸ்ரீரங்கபாதன் என்று மாற்றினேன். உன்னைக் காண்பவர்களுக்கும் இனி இருளை விரட்டும் நெருப்பு மனதில் தோன் றாது. அந்த அரங்கன் திருவடிகளே தோன்றும். அதனாலேயே அந்த நாமகரணத்தைச் சூட்டினேன்.”

அவன் பணிவாய் அருகில் நின்றபடி இருக்க, எல்லோர் காதுகளிலும் விழும்படியாக இளையாழ் வார் சொன்ன செய்தியில் அவர் வரையில் ஒவ்வோர் அசைவிலும் பெரும் பொருள் உண்டு எனும்படியான ஒரு தீர்க்கம். அதைத் தொடர்ந்து தன் தொண்டர் குழாத்துடன் காவிரி நீராடப் புறப்பட்டார் இளையாழ்வார்.        

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொங்கப் பிரசாதம்!

ஓர் ஓலைப்பெட்டியில் அவருக்கான மாற்று உடுப்புகளுடன் பாதக்குரடு முதல் சகலத்தையும் தாங்கியவனாக இளையாழ்வாருக்கு மிக உற்ற கோவிந்தன் என்பானும் கூரத்தாழ்வானும் அவரை ஒட்டியே சென்றனர். இப்படி கோஷ்டியாக நடந்து செல்கையில் நாராயண கோஷம் இட வேண்டும் என்பதும் இளையாழ்வார் விருப்பம். எனவே, நாராயண கோஷமும் ஒலிக்கத் தொடங்கியது.

‘நாராயண நாராயண
    ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண
    ஹரி ஹரி நாராயண நாராயண’

என்கிற பன்னிரு சொற்கள் கோவையாக ஒரு குரலாய்ப் பிசிறின்றி வெளிப்பட்டன. அந்தக் கோஷம் திருவரங்கத்து வீதிவாழ் மக்களை வெளியே வந்து பார்க்கச் செய்தது. அந்தக் கணமே அவர்களுக்கெல்லாம் குரு தரிசனமும் கிடைத்து விட்டது. ஸ்தலங்களில் வசிப்பதில் இப்படி ஒரு லாபம். அதற்கும் ஜாதகத்தில் பூர்வகர்மம் இடம் கொடுக்க வேண்டும்.

சிலருக்கு இடமிருந்தும் கோள் சாரத்தில் நல்ல போக்கு இல்லை போலும்..? அவர்கள் மட்டும் முகத்தைச் சற்றுத் திருப்பிக்கொண்டனர்.

“சீர்திருத்தம் பண்றேன்னு போறவன் வர்றவனை எல்லாம் சிஷ்யனாக்கிண்டு அக்ரமம் பண்றார். பொறப்பால வர வேண்டியத இடைல வாங்கித்தர முடியுமா? இந்தக் கூத்துக்குப் பெருசு களும் உடந்தை. இது எதில் போய் முடியுமோ?” என்று ஒருவர் வாய்விட்டே புலம்பினார். அதைக் கேட்ட இன்னொருவரோ ‘‘சாமான்யப் பட்டவாளை எல்லாம் வைஷ்ணவனாக்கி இந்தப் பூலோகத்தையே வைகுண்டமாக்க வந்த மகானை இப்படி வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாதய்யா.பொறப்பால வருவதல்ல பிராமணீயம். அது ஒரு வாழ்க்கை முறைன்னு அவர் அழகா விளக்கினதைக் கேட்கலையா?” என்றார் இன்னொருவர்.

“இவர் இப்படிச் சொல்லிட்டா ஆச்சா? அப்ப எதனால நாலாவித வருணங்களைப் பிரம்மா படைச்சார்?”

“பிரம்மாவுக்கு வேற வேலை இல்ல பாரு... அதையெல்லாம் லோக சௌகர்யம் கருதி மனுதான் வகுத்தார். அதுல காலத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றங்களைச் செய்யத்தான் மகான்கள் உருவாகறா...” இப்படித் தெருவில் தர்க்கங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. தர்க்கத்தில் இளையாழ்வாருக்கு எதிரானவர்களை அந்த ரங்கனே மறைமுகமாகத் திருத்த முனைந்ததுதான் பெரும் வியப்புக்குரியது.

அன்றுகூட அப்படி ஒரு சம்பவம் நடக்க இருப்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்க வில்லை. எதுவும் நடக்க நடக்கத்தானே தெரியும்?

கொள்ளிடக்கரையும் வந்தது. எல்லோர் கண்களும் விரிந்து வழியத் தொடங்கிவிட்டன.

வெள்ளத்திமிலோகம்!

‘இப்படி ஒரு வெள்ளத்தில் காவிரி நீராடல் அவசியம்தானா?’ என்கிற கேள்வி ஒரு சீடன் மனத்தில். நல்ல குருநாதர்களிடம் நாம் போய் நின்று எதையும் உரைக்கத் தேவையில்லை. பார்வையாலேயே அறிந்துகொண்டு விடுவார்கள் அவர்கள்.      

பொங்கப் பிரசாதம்!

இளையாழ்வாரும் அந்தச் சீடனை அருகில் அழைத்தார். அவன் பெயர் கேசவன்.

“கேசவா... இதுபோன்ற தருணங்களிலும் நீராடத் தவறிடக் கூடாது. அதேநேரம் எச்சரிக்கை யாக நீராட வேண்டும். அதிலும் இந்தக் காவிரி தென்னாட்டு கங்காதேவி. உயரமான குடகு மலைச் சம்பந்தத்தோடு ஆழமான சமுத்ர சம்பந்தமும் கொண்டிருப்பவள். அதனால், இதனுள் மூழ்கிடும்போது நாமும் மிக உயரமானவர்களாகவும், ஆழமானவர்களாகவும், அதே சமயம் வேகமானவர்களாகவும் மாறுகிறோம். அனைத்துக்கும் மேலாய் இவள் நமக்கு மறைமுகமாய் பாடமும் நடத்துகிறாள். இவள் உயிர்களின் தாகம் தீர்ப்பதோடு நம் அழுக்கையும் நீக்கி நாம் உண்ண, பயிர்களையும் செழிக்கச் செய்து, செல்லும் வழியை எல்லாம் பசுமையாக்கிக் கொண்டே போகிறாள். எத்தனை பொதுநலமான நோக்கு? நாமும் இவள்போல் பிறருக்கு நன்மை மட்டுமே செய்து, இறுதியாக இவள் கடலில் சங்கமித்துவிடுவதுபோல் நாமும் பாற்கடலில் பள்ளிகொண்ட அந்த நாராயணனிடம் சங்கமித்து விட வேண்டும்.”

காவிரி நீராடவந்த இடத்திலும் அந்த நதியை வைத்து இளையாழ்வார் சொன்ன சேதி எல்லோரையும் பரவசப்படுத்தி விட்டது. அதிலும் ஒரு நதி என்பது உயரம், ஓட்டம், ஆழம் எனும் மூன்று பெரும் தன்மைகளைக்கொண்டிருப்பதை இளையாழ்வார் சுட்டிக்காட்டிய பிறகே பலருக்கும் புரிந்தது.

அவரோடு இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இதுபோன்ற உபதேச முத்துகள் தெறித்துவிழும் நிலையில், அவற்றை அள்ளி எடுத்துக்கொள்வதில் கூரத்தாழ்வானுக்கு இணையில்லை என்றே சொல்ல வேண்டும்.

கோவிந்தனுக்கும் இளையாழ்வாரே எல்லாம். கோவிந்தன் அந்தப் பரமபத நாதனைக்கூட பெரிதாய் நினைப்பதில்லை. ஒருமுறை இளையாழ்வார் ஆற்று மணலில் நடக்க நேர்கையில் உதிர்த்துவிட்ட பாதுகைகளை இளையாழ்வார் பூஜிக்கும் சாளக்ராம மூர்த்தங் களோடு சேர்த்துப் பெட்டியில் வைத்துச் சுமந்து சென்றான்.

சமதளம் வந்த நிலையில் இளையாழ்வாரும் பாதக்குறடுகளைக் கேட்டார். அவர் எதிரிலேயே மரப்பெட்டியில் இருந்து எடுத்துத் தந்ததைப் பார்த்து இளையாழ்வார் விக்கித்துப் போனார்.

“கோவிந்தா... என்ன இது? ஒரு பாதக்குறடை இப்படியா, நாரணன் உறையும் சாளக்ராமங்களோடு சேர்த்து வைப்பாய்? இது எத்தனை பெரிய அபச்சாரம் தெரியுமா?” என்று பதறவும் செய்தார்.

ஆனால், கோவிந்தன் துளிக்கூட அதைக் கேட்டு சலனப்படவில்லை.

‘‘எம்பிரானே... என்வரையில் நீரே கண்கண்ட தெய்வம். உமக்கோ இந்த மூர்த்தங்கள் தெய்வம். இத்தெய்வங்களோடு என் தெய்வம் கலந்தது எப்படித் தவறாகும்? ஆயினும் நீங்கள் விரும்பாத ஒன்றை எக்காலத்திலும் இனி செய்ய மாட்டேன்” என்றான் கோவிந்தன்.

இளையாழ்வார் இம்மட்டில் ஈடு இணையில்லா சிஷ்யர்களைப் பெற்றவர். அவர்களோடு சேர்ந்து தேசாடனம் புரிவதுபோல் ஓர் இன்பம் இளையாழ்வாருக்கும் வேறு இல்லை எனலாம்.

அன்றும்கூட காவிரியில் நீராடி நித்யகர்மானுஷ் டானங்களை முடித்த நிலையில், ஆசிரமம் நோக்கித் திரும்பிச் செல்கையில் வேடிக்கையாக ஒரு காட்சி.

நான்கைந்து சிறுவர் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் என்றால் குதித்துக் கும்மாளமிடுவர். இல்லாவிட்டால் கண்கட்டு, பந்தடி, பாண்டி, திரிகரணம் என்று ஏதாவது விளையாடுவர். அன்று அவர்கள் விளையாட்டு பக்திபூர்வமானதாய் இருந்தது.

ஒரு சிறுவன் ரங்கநாதப் பெருமான்போல் சயனித்து ஒரு கையால் தலையைத் தாங்கிக் கொண்டு கிடக்க, அவனை ஸ்ரீரங்கநாதனாகவே பாவித்து பூஜைகள் நடந்தபடி இருந்தன. பட்டர் பாவனையில் ஒரு சிறுவன், பக்தி பாவனையில் வணங்கியபடி ஒரு சிறுமி, மணியடிப்பதுபோல் சப்தமெழுப்பியபடி ஒரு சிறுவன் என்று ஒரு காட்சியை நாடகமாக அப்படியே அங்கே நடித்துக் காட்டியபடி இருந்தனர்.

இளையாழ்வார் தன் சீடர்களுடன் வந்தும் அவர்கள் நாடகம் தொடர்ந்ததுதான் விந்தை. பிள்ளைகள் அந்த அளவு ஒன்றிப்போய்விட்டார் கள். ஒருவழியாகப் படுத்துக்கிடக்கும் பிள்ளை ரங்கநாதனுக்கு தீபாராதனைக் காட்டி தீர்த்த பிரசாதம் தந்து இறுதியாக ஒரு கொட்டாங்கச்சியில் மண்ணை நிரப்பி, அதைப் பொங்கலாய்க் கருதி விநியோகிக்கவும் செய்தனர். இளையாழ்வாரைப் பார்க்கவும் அவரும் கை நீட்டினார். அவருக்கும் ஒரு சிட்டிகை தந்தான் பட்டர் சிறுவன்.

“என்ன இது?”

“பொங்கப் பிரசாதம்.”

“அப்ப நான் சாப்பிடலாமா?”

“உம்...”

எல்லோரும் மண்தானே என்று உதிர்க்க எண்ணிய அந்த நொடி இளையாழ்வார் அந்த மண் பொங்கலைத் தன் வாயில் போட்டு ஆனந்தமாய் விழுங்கவும் செய்தார். அப்படியே ‘‘பிரமாதம். பொங்கலின் சுவை இன்னமும் சாப்பிடத் தூண்டுகிறது. எங்கே இன்னும் கொஞ்சம்...” என்று கேட்டு வாங்கினார். தயக்கத் தோடுதான் தந்தான் அந்த பட்டர் சிறுவன். அதையும் விழுங்கிய இளையாழ்வார்.             

பொங்கப் பிரசாதம்!

‘‘உங்கள் பக்தியை மெச்சினோம். எம்பெருமான் கருணை உங்களுக்கு எப்போதும் உண்டு. விளையாட்டாய் பக்தி செய்வோர் சிலரும் இருக்க, விளையாட்டிலும் பக்தி செய்ய இயலும் என்பதை இந்தப் பிஞ்சு வயதிலேயே சாதித்த உங்களை அடியேன் மனதார வாழ்த்துகிறேன்” என்று அந்தப் பிள்ளைகளை வாழ்த்திவிட்டு நடந்தார்.

ஓர் ஆச்சர்யம்போல் திருச்சந்நிதியில் அரங்கப் பிரசாதமாய் விநியோகிக்கப்பட்ட பொங்கலை உண்டவர்கள் எல்லாம்கூட தாங்கள் உண்ட பிரசாதப் பொங்கலில் சற்றே மண்துகள் நரநரப்பதை உணர்ந்தனர். பிள்ளைகள் விநியோ கித்த மண்ணை அரங்கன் தன் பிரசாதத்துடன் சேர்த்துக்கொண்டுவிட்டான் என்பதுதானே உண்மை?

இளையாழ்வார் வாழ்வில் நாள்தோறும் இதுபோல் நாம் உணர பலப்பல சங்கதிகள்.

ஒரு ரசமான சங்கதி கண்ணீர் பெருக வைக்கும்.

இளையாழ்வாரின் சீடர்களில் ஒரு வாய்பேச இயலாதவனும் இருந்தான். இளையாழ்வார் செய்யும் உபதேச மொழிகளை இமைக்காமல் கேட்டபடி இருப்பான். சில ஸ்லோகங்களைச் சொல்லித் திரும்பச் சொல்லச் சொல்வார். சீடர்கள் ஸ்பஷ்டமாகத் திருப்பிச் சொல்வர். ஒருமித்த குரலில் துளியும் பிசிறு இன்றி அவர்கள் சொல்லும்போது கேட்கவே பரவசமாக இருக்கும்.

இளையாழ்வார் அந்தப் பேச இயலாச் சீடனைக் கவனித்தபடியேதான் சகலமும் சொல்வார். ஒருநாள் எல்லோருக்கும் சொல்லி முடித்துவிட்ட நிலையில், அந்தச் சீடனை மட்டும் அழைத்துக்கொண்டு தனியே ஓர் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு விட்டார். அந்தச் செயல் கூரத்தாழ்வானை உற்றுநோக்க வைத்தது. ஆர்வமிகுதியில் அறையின் சாவித் துவாரம் வழியாக நோக்கியபோது அச்சீடனின் சென்னிமேல் இளையாழ்வாரின் இரு பாதங்களும் இருக்க, இளையாழ்வார் தன் திருவடிகள் வழியாக ஞானபாடத்தை அவன் சென்னியில் நிரப்பிக் கொண்டிருந்தார்.

கூரத்தாழ்வான் சிலிர்த்துப் போனான். யாரைப் பார்த்து பாவம் ஊமை - பேசா மடன் என்றெல்லாம் பரிதாபப்பட்டோமோ, பாவி என்றோமோ, அவன் எத்தனை கொடுத்து வைத்தவன்?

யாருக்குக் கிடைக்கும் இந்த அரிய பேறு? எல்லோரும் அவன் திருவடிகளைத் தேடி அடைய முற்படும்போது, இவன் வரையில் திருவடிகள் தானாக அல்லவா இவனை அடைந்து விட்டன.

இளையாழ்வாருக்குத்தான் எத்தனை கருணை? இப்படியெல்லாம் ஆட்கொள்ள ஒரு குரு ஒரு மனிதனுக்குக் கிடைத்துவிட்டால் அவனை யாரால் வெல்ல இயலும்? அதனாலன்றோ ராமாநுஜ நூற்றந்தாதியில் திருவரங்கத்து அமுதனாரும்...

‘காரேய் கருணை ராமாநுஜ ! இக்கடலிடத்தில் ஆரே அறிபவர் நின் அருளில் தன்மை?’ என்று கேட்டார். நாமும் வேண்டிப் பெற்றிடுவோம்  அவரது கருணையை!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism