Published:Updated:

கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?

கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: ந.வசந்தகுமார்

கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: ந.வசந்தகுமார்

Published:Updated:
கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?

? காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதற்காக?

- சி.கீர்த்தனா, பாண்டிச்சேரி    

கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?

எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய - வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையைக் கைகள் வெளிப்படுத்தும். கைகளைக் கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்).

திருமணத்தை நிறைவுசெய்வது பாணிக்ரஹணம். அதாவது, கை பிடித்தல். கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமை படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கைகள் வேண்டும். கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அப்போது,

`கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி

கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்' என்ற செய்யுளைச் சொல்லலாம்.

வேள்வித் தீயில் தேவர்களுக்கு அளிக்கவேண்டிய உணவைச் சேர்க்க வேண்டும். கரண்டியால் அளிப்பதா அல்லது கையால் அளிப்பதா என்கிற சந்தேகம் எழுந்தது. கையால் அளிப்பது சிறப்பு என்று முடிவாயிற்று. ‘உயிரினங்களில் யானை, மனிதன், குரங்கு ஆகிய மூன்றும் கைகளால் எடுத்து உண்ணும் இயல்பு கொண்டவை. நீ, மனிதன். சிறப்புப்பெற்ற கை இருக்கும்போது, அதைத் தவிர்ப்பது சரியல்ல; கையால் உணவைச் சேர்த்துவிடு’ என்று வேதம் பரிந்துரைத்தது.

கையிருந்தும் கரண்டியால் உணவருந்தும் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். கையைவிட கரண்டி சுத்தம் என்று மனம் எண்ணுகிறது. மண்ணைப் பிசைந்து கையால் பிள்ளையாரை உருவாக்க வேண்டும். ஆனால், கை செய்ய வேண்டிய வேலையை எந்திரத்திடம் ஒப்படைத்துவிட்டோம். கொழுக்கட்டையைக் கையில் ஏந்தியிருப்பார் பிள்ளையார். அவரை ஐங்கரன் என்று சிறப்பிப்போம். அவருடைய கரத்துக்கு இருக்கும் சிறப்பு, நம் கைகளுக்கும் உண்டு. கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப்பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

? சதாபிஷேகம் கண்டவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறோம். ஆயிரம் பிறை என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது?

- கொ.சு.கனகப்பிரியன், விழுப்புரம்


80 வயது 10 மாதங்களானால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்துக்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதங்களில் பத்து சந்திர தரிசனத்தையும் சேர்க்கும்போது ஆயிரம் பிறைகள் நிறைவுபெறும்.

? முதல் குழந்தைக்கு மட்டும்தான் சீமந்தமா? அடுத்தடுத்த குழந்தைகளைப் பெற்றெடுக்கு முன் சீமந்தம் நடத்துவதில்லையே, ஏன்?

- எம்.புவனேஸ்வரி, காரைக்குடி


இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் வேளையில் வளைகாப்பு, சீமந்தம் நடத்த வேண்டிய அவசியமில்லை. சீமந்தம் என்பது முதல் குழந்தைக்காக மட்டுமே நடத்தப்படுவ தில்லை. பிற்பாடு உதிரத்தில் உருவாகும் அத்தனை குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் சீமந்தம் நடைபெறுகிறது. குழந்தை உருவாகும் இடத்தின் தூய்மையை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது சீமந்தம்.

ஒருவேளை, சீமந்தம் நடைபெறாமலேயே முதல் குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தையை மடியில் வைத்துச் சீமந்தத்தை நடைமுறைப்படுத்திய பிறகே, அந்தக் குழந்தைக்கு ஜாதகர்மம் நடக்கும். அப்படியொரு நிபந்தனையை சாஸ்திரம் வகுத்திருக்கிறது. முதல் குழந்தைக்கு, பிறந்த பிறகும் சீமந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், 2-வது குழந்தைக்கு ‘சீமந்தம்’ என்ற கேள்வியே எழும்பாது. வளைகாப்பு ஒரு சம்பிரதாயம். அதை முதல் குழந்தைக்கு மட்டும் கடைப்பிடித்தால் போதும். அதன் பலன், பிறக்கப்போகும் அத்தனை குழந்தைகளுக்கும் கிடைத்துவிடும்.

?விரத நாள்களில் சுரைக்காய், பூசணி போன்ற காய்களைத் தவிர்க்கிறார்களே, ஏன்?

- எம்.தாமோதரன், வள்ளியூர்


போர்க்களத்தில் அர்ஜுனனின் குழம்பிய மனம் தெளிவுபெற, அறநெறிகளைப் போதித்தான் கண்ணன். அப்போது, போரில் ஈடுபடும் போராளி கள் குறித்த அறத்தை விளக்கியதுடன், உணவு வகைகளின் தராதரத்தையும் உணர்த்தினான்.

ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று பிரிவுகளில் உணவுப் பதார்த்தங்களை அடக்கி விடலாம் என்கிறார். ஆசை, பகை ஆகியன மனத்தை ஆட்கொள்ளும்போது, அசையாமல் அமைதியுடன் செயல்பட வேண்டுமெனில் ஸாத்விக உணவை ஏற்க வேண்டும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றியைச் சந்திக்க ராஜஸ உணவு ஒத்துழைக்கும். அறியாமை, சோம்பல், மயக்கம், தூக்கம் ஆகியவற்றுக்கு ஊக்கமளிப்பது, தாமஸ உணவு. ஆகவே, எப்போதும் ஸாத்விக உணவையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

உணவு வகைகளில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தென்படும் என்கிறது ஆயுர்வேதம். தென்படும் குறைகளைச் செயலிழக்கச் செய்து, நிறையைப் பெருக்கிப் பயன்படுத்த வேண்டும். அறியாமை, உறக்கம், சுணக்கம், சோம்பல், மயக்கம் போன்றவற்றைத் தரும் தாமஸ உணவுகளை விலக்க வேண்டும். அவற்றுள் சுரைக்காயும் பூசணியும் உண்டு. விஷப் பரீட்சைக்கு முற்படாமல், இந்த இரண்டையும் விலக்கிவிடுவார்கள் முன்னோர்கள்.        

கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?

உணவுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுவிட்ட நம் மனம், சுவைக்கு முன்னுரிமை அளித்து, எதையும் ஏற்கத் தயாராகி விடுகிறது. ஆசையைக் கட்டுப்படுத்த இயலாத மனம், தராதரத்தை அறியாது செயல்படும். ஆகவே, ஆசையைத் தவிர்ப்பது நலம்.

? விபூதி போட்டு மந்திரம் ஜபிப்பதால் விஷக்கடி பாதிப்புக்குத் தீர்வு காண முடியுமா?

- எல்.சுபாஷினி, திருவாரூர்


 விஞ்ஞானம் ரொம்ப முன்னேறாத காலத்தில் மணி, மந்திரம், ஒளஷதம் (மருந்து) என்பதைப் பயன்படுத்துவார்கள். மணி என்றால் ரத்தினம். காலில் அடிபட்டுப் புண் ஆறாமல் இருந்தால் ஒரு ரத்தினத்தை வைத்துக் கட்டுவார்கள். முன்னால் செப்புக்காசு இருந்தது. அதைத் தேய்த்து ரணத்தில் வைத்துக் கட்டுவார்கள். மந்திரத்தை உச்சாடனம் செய்வார்கள். பிறகு உள்ளே சாப்பிட மருந்து கொடுப்பார்கள். இதெல்லாம் சம்பிரதாயம்.

தேள் கொட்டினால், உடனே வேகம் ஜாஸ்தியாக இருக்கும். விஷம் ரத்தத்தில் கலந்து அதன் வீர்யம் குறையும்போது வலி குறையும். ‘பன்னிரண்டு மணிக்குக் கடிச்சுதா? நாளை பன்னிரண்டு மணிக்குச் சரியாப் போகும்’ என்பார்கள். மந்திரித்து விபூதி போடுவது என்பது மனோரீதியாக அவரை ஆறுதல் செய்யக்கூடியது. மந்திரத்தை மட்டும் சொன்னால் அது கண்ணுக்குத் தெரியாது. பார்ப்பதற்குக் கொஞ்சம் விபூதி போட்டு மந்திரம் சொல்ல வேண்டும். விபூதி போட்டால்தான் மந்திரம் அந்த இடத்துக்குப் போகும். நம்பிக்கையால் வலி நிச்சயம் போகும்.

உதாரணத்துக்கு ஒருவருக்குக் கை கால் வலி. நாலு பேரோடு பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் போனவுடனேயே வலிக்க ஆரம்பித்தது. காரணம் என்ன? மனசு வேறொன்றில் லயிக்கும்போது அவருக்கு வலி தெரியவில்லை. அதே தத்துவம்தான் இங்கேயும். விபூதி மந்திரத்தால் வலி போகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நிச்சயம் வலி போகும்.

- பதில்கள் தொடரும்...