Published:Updated:

சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி

சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி
சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி

(தொடர்ச்சி)

ரங்கித்துரையின் கப்பல் தவிட்டுத்துறை என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, விநோதமாக அசைவதாகப்பட்டது. உள்ளுணர்வு ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை துரைக்கு உணர்த்த, அவன் காரணம் என்னவாக இருக்கும் என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி

தொலைநோக்குக் கண்ணாடியை விட்டுவிட்டுக் கப்பலை ஆராய்ந்தான். கொடிமரத்தின் உச்சியில் ஒரு காகம் உட்கார்ந் திருந்தது. அது, அவனையே பார்ப்பதுபோல அவனுக்கு ஒரு பிரமை. அது வெறும் காகம் அல்ல; செங்கிடாக்காரன் தெய்வம் என்பது அவனுக்குத் தெரியாது!  ஒரு காகம் கொடிமரத்தின் மேல் அமர்வதால், கப்பலே ஆட்டங்காணுமா என்ன?

துரை, தனது துப்பாக்கியை எடுத்தான். காகத்தைக் குறிபார்த்தான். சுட்டான். `எங்கே அந்தக் காகம்... இங்கேதானே, இந்த மரத்தில்தானே அமர்ந்திருந்தது?’ துரை, பார்வையைச் சுழலவிட்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தப் பறவையும் தெரியவில்லை. `நான் காகத்தைப் பார்த்தது பிரமையா?’

தெய்வம் அங்கே வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது. செங்கிடாக்காரன், தன் தங்கை கபாலக்காரியை அழைக்க, அவளும் ஓடிவந்தாள். இரு தெய்வங்களும் தங்கள் கரங்களால் லேசாக நெம்ப, கப்பல் கொந்தளித்த கடலில் அலைபாய்ந்தது போல் எகிறியது; ஆடியது. விபரீதம் உச்சக்கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்துகொண்டான் வெள்ளைக்காரன். செங்கிடாக்காரன் செம்பருந்து உருவெடுத்தான். கப்பலைச் சுற்றி, `நான் வந்துவிட்டேன்... உங்களைப் பலி வாங்கப் போகிறேன்’ என்பது சொல்வதுபோல கப்பலை வட்டமிட்டான்.

நடுக்கடலில் செம்பருந்து... அபசகுனத்தின் அறிகுறி. துரை, தனது துப்பாக்கியால் சுட்டான். எத்தனை முறை சுட்டும் ஒரு குண்டுகூட செம்பருந்தைத் தாக்கவில்லை. ஓர் அரசன் சிம்மாசனத்தில் அமரும் கர்வத்தோடு, செம்பருந்து கொடிமரத்தின் உச்சியில் போய் அமர்ந்தது.

புயல், சூறாவளி ஒன்றுமில்லை. ஒரு சொட்டுக் கடல் தண்ணீர்கூட கப்பலுக்குள் புகவில்லை. ஆனால், கப்பல் நிலைதடுமாறியது; கடலில் அலைக்கழிந்தது; மெள்ள மெள்ள கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது. வெள்ளைக்காரன், அவன் பணியாட்கள், பரிசாரகர்கள், காவலுக்கு வந்தவர்கள் ஒருவர்கூட மிஞ்சவில்லை. அத்தனை பேரும் கப்பலோடு சேர்ந்து கடலுக்குள் ஆழ்ந்து போனார்கள். ஓர் உயிர்கூட தப்பவில்லை. ஆத்திரம் தணிந்தான் செங்கிடாக்காரன். சரி... யார் இந்த செங்கிடாக்காரன்?
கயிலாயம். அது ஒரு சுபவேளை. வேதங்களை உபதேசிப்பது சுபவேளைதானே. அதுவும் சிவபெருமான், அன்னை பார்வதிக்கு வேதங்களை உபதேசித்துக்கொண்டிருந்த அற்புதத் தருணம். வேதத்துக்கு ஓர் அடிப்படை உண்டு. அதைச் சொல்பவரையும் கேட்பவரையும் தவிர்த்து, பிறர் கேட்கக் கூடாது. முருகப்பெருமான் விஷமக்காரர் ஆயிற்றே. மறைவாக ஓர் இடத்தில் இருந்து வேதத்தை காதாரக் கேட்டு மகிழ்ந்தார். முருகன் மறைவாக இருப்பது அன்னை உமையவளுக்குத் தெரியும். ஆனால், அதை சிவபிரானிடம் சொல்ல மனம் வரவில்லை. அப்படியே விட்டுவிட்டாள்.

ஈசன் அறியாதது உலகில் ஏது? ஈசன், முருகனைப் பார்த்துவிட்டார். அவர் கோபம், இருவர் மேலும் திரும்பியது. இருவருக்கும் சாபம் கொடுத்தார். முருகனை மகர மீனாகவும் பார்வதியை கடலரசனின் மகளாகவும் பூமியில் அவதரிக்க சாபம் கொடுத்தார். சாபம், என்றால் அதற்கு விமோசனம் என்ற ஒன்றும் இருக்கத்தானே வேண்டும். அதற்கும் ஆயத்தமானார் சிவனார். அதற்காக சிவனும் பூலோகம் செல்ல வேண்டியதாயிற்று. ஈசன், அன்னை உமையவள், முருகன் இல்லாமல் கயிலாயம் என்ன ஆகும்? வெறிச்சோடி விடுமே!

சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமிதேவர்களை அழைத்து இரு தெய்வங்களை அவதரிக்கச் செய்ய உத்தரவிட்டார் பெருமான். தேவர்கள் எம்பெருமான் ஆணைப்படி யாகம் நடத்த, இரு தெய்வங்கள் பிறந்தன. செங்கிடாக் காரன், கபாலக்காரி. இருவருக்கும் வேண்டிய வரங்களைக் கொடுத்தார் ஈசன். வாங்கிவந்த வரம் சில நேரங்களில் ஆட்டம்போட வைக்கும். செங்கிடாக்காரன் விஷயத்திலும் அது நடந்தது. திருச்செந்தூர் கோயில் கொடிமரத்துக்காக மரம் வெட்டச் சென்றார்கள் சிலர். அவர்களைப் பயமுறுத்தி, பூஜை வாங்கினான் செங்கிடாக்காரன். அது தொடர்கதையானது. பல இடங்கள்... பல மனிதர்கள்... செங்கிடாக்காரனிடம் மக்களுக்கு பயம்... அதன் பலன், அந்தத் தெய்வத்துக்கு பூஜை.

கப்பல் உடைந்தபோது அதைப் பார்த்த, கேள்விப்பட்ட மனிதர்கள் பதறிப்போனார்கள். ஏதோ தெய்வக்குற்றம் நிகழ்ந்துவிட்டதாகப் பயம் கொண்டார்கள். செங்கிடாக்காரனின் மகிமை அறிந்தவர்கள் ஒன்றுகூடி, மன்னத்தேவன் பாறை என்கிற இடத்தில் படையல் போட்டார்கள்.

இறந்துபோன பரங்கித்துரை பேய்வடிவம் கொண்டான். `இது தெரியாமல் நிகழ்ந்த தவறு அல்லவா?! காலம் முழுக்கத் தமிழகத்தை நேசித்த, அங்கு போக வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட நான் தவறிழைப்பேனா? கொடிமரத்தில் தெய்வம் குடியிருந்தது எனக்குத் தெரியாதே... தெரிந்திருந்தால், அதை வெட்ட அனுமதித்திருப் பேனா...’ உள்ளம் குமுற படையல் நிகழ்ந்த இடத்துக்கு வந்தான் துரை. அவனோடு இறந்து போனவர்களின் ஆவிகளும் அந்த இடத்துக்கு வந்தன. உளமுருக செங்கிடாக்காரனை வேண்டின.       

சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி

மனமிரங்கிய செங்கிடாக்காரன் வெள்ளைக் காரனுக்கு வரம் கொடுத்தான். தன் அருகே வெள்ளைக்காரனுக்கும் ஓர் இடம் கொடுத்து, அவனுக்கும் பூஜை நடக்கச் செய்தான். இன்றைக்கும் தமிழகத் தென்மாவட்டங்களில் உள்ள செங்கிடாக்காரன் கோயில்கள் சிலவற்றில் வெள்ளைக்காரச்சாமி துணை தெய்வமாக இருக்கிறான். குமரி மாவட்டம் புவியூர், பூஜைப் புரை விளை என்னும் இரண்டு கிராமங்களில் சிவனுக்குத் தனிக்கோயில்கள் உள்ளன. இங்கு வெள்ளைக்காரன் குதிரைமேல் அமர்ந்து துப்பாக்கியை ஏந்தியபடி இருப்பது போன்ற சிற்பம் உள்ளது. செங்கிடாக்காரனுக்கு தை மாதம் கொடைவிழா நடத்தும்போது வெள்ளைக் காரனுக்கும் சிறப்பு விழா, பூஜை நடக்கிறது.

வெள்ளைக்காரச்சாமி தனித்தெய்வமாகவே கருதப்படுகிறான். இந்தக் கோயிலில் பெரிய மழைக்கோட்டு, கால்சட்டை, தொப்பி, பூட்ஸ், பொய்த் துப்பாக்கி, பைனாக்குலர் ஆகியன விழாவின்போது வைக்கப்படுகின்றன. சாமிக்கு மது-மாமிச வகையறாக்கள் படைக்கப்படுகின்றன.சாமியாடுபவர், மதுவைக் குடித்துவிட்டு சுட்டக் கோழியைக் கடித்துக்கொண்டு பிதற்றலாகச் சத்தமிட்டுக் கொண்டு (ஆங்கிலம் பேசுவதான பாவனை) சாமி ஆடுவார். துப்பாக்கியால் குறி பார்ப்பார்; பைனாக்குலரால் பார்ப்பார்; பக்தர்கள் இந்தக் காட்சியைப் பயபக்தியோடு பார்வை யிடுவார்கள்.

வெள்ளைக்காரச்சாமி கதை 496 வரிகள் கொண்ட சிறிய பாடல். விழாவில் முழுப்பாடலை யும் வில்லுப்பாட்டாகப் பாடுகின்றனர். இந்தக் கதை 1925-ம் ஆண்டில் எழுதப்பட்டது; கதை நிகழ்ச்சிகள் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்கலாம். வெள்ளைக்காரன் வழிபாடு பற்றி இரண்டு செய்திகள் வாய்மொழியாக உள்ளன. ஒன்று, வெளிநாட்டுக் கப்பல் ஒன்று கன்னியாகுமரி அருகே புயலில் கவிழ்ந்தது; இது புகையிலை, கரி ஏற்றி வந்த கப்பல். சுனாமியின் போது இந்தக் கப்பலின் முழுப்பகுதிகளும் தெரிந்தன. இந்தக் கப்பல் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விபத்துக்குள்ளானது. கப்பல் தலைவனின் உடல் கரையில் ஒதுங்கியது.

இந்தக் கதை உருவானதற்கு இன்னொரு செய்தியும் காரணமாகச் சொல்லப்படுகிறது. வணிகத்துக்கு வந்த வெள்ளைக்கார துரை ஒருவன், பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட தால் கொலை செய்யப்பட்டான்;  அவனுக்கான வழிபாடு இது. உண்மையை ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். `என்னிடம் வா... உன் குறையைத் தீர்க்கிறேன்!’ எனக் கம்பீரமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் வெள்ளைக்காரச்சாமி. இவரிடம் நேர்ந்துகொண்டால் நினைத்தது நடக்கும் என்கிற நம்பிக்கையோடு உளமுருக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்!

- கதை நகரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism