மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 39

சிவமகுடம் - 39
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 39

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

யர்வு, உன்னதம், மகிழ்ச்சி, மங்கலம், ஐஸ்வர்யம்... அப்பப்பா! ‘சிவம்’ என்ற சொல்லுக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்? ஆகவேதான், உயர் தத்துவமாய்த் திகழும் சிவத்தை  நெஞ்சில் நிறுத்தினால் மேற்சொன்ன சம்பத்துகள் அனைத்தும் வாய்க்கும் என்று பெரியோர்கள் சொல்லிவைத்தனர் போலும்.       

சிவமகுடம் - 39

இந்தச் சிவ கணத்தவரும் சிந்தையில் சிவத்தை ஏற்றிக் கொண்டவராகவே இருக்க வேண்டும். இல்லையெனில், இவரின் திருமுகத்துக்கு இப்படியொரு மலர்ச்சி கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை; எதிராளியின் உள்ளத்தை ஊடுறுவும் வல்லமை கொண்ட இவரின் பார்வையிலும் இப்படியொரு தீட்சண்யம் ஏறியிருக்காது.

ஆம். நெற்றியிலும் அகன்ற மார்பிலும் மட்டுமின்றி மேனியின் உரிய ஸ்தானங்களில் எல்லாம் நிறைந்த வெண்ணீறும், சடாமகுடமாக இல்லாவிட்டாலும்... முதுகில் புரண்டு அலை பாயும்விதம் நீண்டு கிடந்த கேசமும், தொடர்ந்த பயிற்சியால் இறுகி இரும்பாகத் தென்பட்ட தேகமும், தன் முதுகுக்குப்பின்னால் கரங்களைக் கோத்துக்கொண்டு, விசாலமான அந்த மண்டபத் தில் அங்குமிங்குமாக நடந்தபடி, வியூக - எதிர்வியூக திட்டங்களைக் குறித்து சைவத் துறவியார் கன கம்பீரமாக விவரித்த விதம், மணிமுடிச்சோழரின் கண்களுக்கு அவரை சிவ கணத்தவராகவே காட்டியது.

ஒருகாலத்தில் உறையூர் களப்பிரர்களது பிடியில் இருந்தபடியால், இப்போது மிச்சமிருக்கும் அவர்களைச் சார்ந்த சதிக்கூட்டத்தின் தலைவனான அச்சுதனுக்குக் கோட்டையின் கட்டுமான ரகசியங்கள் அத்துப்படியாக இருந்தன. நம்பிதேவனின் எல்லைப்புறக் குடிசையில்  துறவியாரிடம் கசையடிகளைப் பெற்றுக்கொண்ட மட்டில் அச்சுதன் தப்பித்துவிட, பிறகு அவனைச் சிறைப்பிடித்தபோது அவனிடமிருந்து சதிக் கூட்டத்தின் அடையாளப் பொருளான நாகாபரணத்தையும், உறையூர்க் கோட்டையின் கட்டுமான ரகசியத்தையும் சாமர்த்தியமாகக் கைப்பற்றிக் கொண்டார் சைவத் துறவியார்.

அதன் பலனாக கற்கதவு கொட்டடியிலிருந்து பாண்டிய வீரர்களை தான் காப்பாற்றி வெளியேற்றிய விதத்தை சைவத் துறவியார் வெகு சுவாரஸ்யத்துடன் விளக்கிக்கொண்டிருக்க, அவர் சொன்ன அந்த விவரங்களை எல்லாம் உள் வாங்கிக்கொள்ளத் தோணாமல், சிவாணுக்கராகவே தோன்றிய சைவத் துறவியாரை பாதாதிகேசமாகப் பார்த்து... இல்லையில்லை தரிசித்து, தன்னுள் சிலிர்த்துக்கொண்டிருந்தார் சிவபக்தரான மணிமுடிச் சோழர்.

கபாலசன், விசோகன், மகாகாயன், சதநேத்திரன், நந்திகன், ஏகபாதன் என்றெல்லாம் பராக்கிரமம் மிகுந்த சிவ கணத்தவர்களைக் குறித்து வாகீசர் போன்ற பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார் சோழர்பிரான். நிச்சயம் அவர்களில் யாரோ இருவர்தான் இங்கே இந்தத் துறவியாகவும் பாண்டிய மன்னனாகவும் பிறந்திருக்க வேண்டும். இல்லையெனில், இத்தனைச் சாதனைகள் இவர்களுக்குச் சாத்தியப்பட்டிருக்காது என்ற எண்ணம் எழ, அதிலேயே ஆழ்ந்து போனதன் விளைவு, தொடர்ந்து நிகழ்ந்த உரையாடலைக் கவனிக்கத் தவறினார் சோழாதிபதி. பின்னர்...

‘‘பாண்டிய மன்னவருக்கே குழப்பமா... என்ன காரணமோ?’’ என்று இளவரசி மானியார் ஆர்வத்துடன் சற்று குரல் உயர்த்திக் கேள்வி கேட்க, அந்த அரவத்தில்தான் இயல்புநிலைக்குத் திரும்பினார். அதற்குள்ளாக சைவத்துறவியார் மேலும் பல விஷயங்களை கூறி முடித்துவிட்டார் என்பதையும், அதையொட்டியே தன் மகள் வினா எழுப்புகிறாள் என்பதையும் ஒருவாறு புரிந்துகொள்ள முடிந்தது அவரால்.

சிவமகுடம் - 39ஆம். திருநாகைக் காரோணத்துக்கு இளவரசி மானி கடலாடச் சென்ற கதையில் தொடங்கி, அங்கே வணிகர்களின் போர்வையில் வந்த பாண்டிய நாட்டு ஒற்றர்களை இனம்கண்டு சிறைப்படுத்தியது, அவர்களிடம் இருந்து கைப்பற்றிய பாண்டிய தேசத்து முத்திரை மோதிரங்களின் உதவியோடு அவள் சோழ வீரர்களைப் பாண்டிய தேசத்துக்குள் புகச் செய்தது, அதேபோல் கோச்செங்கண் தவறவிட்ட சோழத்தின் முத்திரையின் துணைகொண்டு பாண்டியர்கள் உறையூருக்குள் வணிகர்களாக நுழைந்தது, கடற் தீரத்தில் பாண்டிய கலன்களைத் தாக்க இளவரசி வகுத்திருந்த விபரீத வியூகத்தை  பாண்டியர் முன்னரே தெரிந்துகொண்டது, அதன்பொருட்டு ஓர் எல்லையோடு தனது கலன் களை நகரவொட்டாமல் நிறுத்திவிட்டது... என ஒவ்வொன்றையும் காரண காரியங்களோடு விவரித்து முடித்திருந்தார் துறவியார்.

நிறைவாக துறவியார், போர் தொடங்கிய அன்றைய தினத்தின் காலையில் பாண்டிய சக்கரவர்த்தி பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தகவலை விவரித்தபோதுதான் இளவரசி மானி வினா எழுப்பினாள். அக்கணத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய சோழர், அந்த வினாவுக்கான பதிலைத் தானும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன், சற்றே நிமிர்ந்து அமர்ந்தார். துறவியார் தொடர்ந்தார். ‘‘இதே மண்டபத்திலும் கோட்டைச் சமவெளியிலும் சோழர் மீது நடந்தது போன்ற கொலைமுயற்சி, வனப்பாசறையில் இருந்து நானும் பாண்டிய மன்னரும் திரும்பும் வழியில், அவர் மீதும் மேற்கொள்ளப்பட்டது’’ என்று கூறி சற்றே நிறுத்தியவர்... ‘‘நல்லவேளையாக பாண்டிய தேசத்தை பொங்கிதேவி காப்பாற் றினாள்’’ என்றதுடன், நன்றி நவிலும் பார்வையோடு சுற்றுமுற்றும் நோக்கினார். அவர் பொங்கிதேவியையே தேடுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட மானி, ‘‘அவள் இப்போது இங்கு இல்லை. விரைவில் சந்திப்பீர்கள்’’ என்று மட்டும் பதில் தந்தாள். அதற்குமேல் பொங்கிதேவி குறித்த தேடலில் ஆர்வம்காட்டாமல், கூன்பாண்டியரை குழப்பத்தில் ஆழ்த்திய விஷயத்துக்குத் தாவினார்.

‘‘பாண்டியர், சோழர் இருவர் மீதும் கொலை முயற்சிகள் நிகழ்கின்றன என்றால், இரண்டு தரப்புக்கும் பொதுவான எதிரிகள் வேறு எவரோ இருக்கிறார்கள் என யூகித்தார் எங்கள் மன்னர். ஆனால், அவர்கள் யார் என்பதில்தான் குழப்பம் நீடித்தது. அச்சுதனும் அவனிடம் இருந்து நாகாபரணமும் அகப்பட்ட பிறகு, பாண்டியரின் குழப்பம் தீர்ந்தது; தெளிவு பிறந்தது. இதோ... உங்களின் நட்பும் கிடைத்தது’’ என்று சைவத் துறவியார் தனது பேச்சை முடிக்க, சோழ தேசத்துடனான நட்பை பெரிதுபடுத்திப் பேசிய அவரது சாமர்த்தியத்தை சோழர்பிரானும் அவர் சகாக்களும் ரசிக்கவே செய்தார்கள்.

நம்பிதேவனோ இன்னும் ஒருபடி மேலே போய் தனது உள்ளக்கிடக்கையை அவரிடம் கேட்டே விட்டான்: ‘‘ஐயா! அடியேனுக்கும் சில விளக்கங்கள் தேவை. வனப்புறத்தில் நீங்கள் சிவ வழிபாடு செய்ததாக பொங்கிதேவி என்னிடம் கூறினாள். நானும் அங்கே தங்களைத் துறவி கோலத்தவராகவே தரிசித்தேன். அதேநேரம், பாண்டியரோடு நீங்கள் மோதிய விநோதத்தையும் கண்டு வியந்தேன். இங்கேயோ... தோற்றத்தில் சேனைத் தலைவராகவும், சொல்லிலும் செயலிலும் அரசியலில் கரைகண்ட ஓர் ஆசார்யனாகவும் அல்லவா தோன்றுகிறீர்கள்.

நீங்கள் சைவத் துறவி என்றால், சமணர்களை நேசிக்கும் பாண்டிய சக்கரவர்த்திகளுக்கு அணுக்க ராகத் திகழ்வது எங்ஙனம் சாத்தியம் ஆயிற்று? துறவிக் கோலம் எல்லாம் வெளிவேஷம்தான் என்றால், அந்தக் கோலத்தை ஏற்றது எதற்காக? உண்மையில் நீங்கள் யார்?’’

அடுக்கடுக்காக நம்பிதேவன் கேட்டக் கேள்வி களுக்குப் பதில் சொல்ல விரும்பாத துறவியார், ஒரு புன்னகையோடு அவற்றைப் புறந்தள்ளிவிட பிரயத்தனப்பட்ட அதேவேளையில், அந்த ஆலோசனை மண்டபத்தின் வாயிற்புறத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது... ‘‘அதை நான் சொல்கிறேன்’’ என்று.

அனைவரது பார்வையும் ஏகக்காலத்தில் வெகு ஆச்சர்யத்துடன் வாயிற்புறத்தை நோக்க, கனகம்பீரமாக உள்ளே பிரவேசித்தார் தென்னவன் கூன்பாண்டியர்.

அவரது இந்த திடீர் விஜயம் அனைவரையும் திகைக்கச் செய்தது. மறுநாள் காலைப் பொழுதில் தான் சுபவேளை குறிக்கப்பட்டிருந்தது, கூன்பாண் டியரின் உறையூர் பிரவேசத்துக்கு. அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்,   அவரோ, இப்படி எவ்விதமான முன்னறிவிப்பு மின்றி திடுமென இங்கு வந்து சேருவார் என்பதை, மணிமுடிச் சோழர் முதற்கொண்டு எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது அந்தத் திகைப்பை மேலும் அதிகப்படுத்தியது பாண்டிய மாமன்னர் அடுத்து சொன்ன தகவல்.

‘‘சைவத் துறவியார் வேறு யாருமல்ல... அவர், பரந்துபட்ட பாண்டிய சாம்ராஜ்ஜியத்தின் தலைமை அமைச்சர் குலச்சிறையார்!’’

ஒரு சிம்மம் கர்ஜிப்பது போன்று, வெகு கம்பீரத்தோடும் மிகுந்த பெருமிதத்தோடும் பாண்டியச் சக்கரவர்த்தி அந்தப் பெயரை உச்சரிக்க... மறுகணம் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போன்று அவையில் இருந்த அனைவரும் ஒருசேர எழுந்து வணங்கினார்கள் குலச்சிறையாரை. அவரோ இளவரசி மானியை நோக்கினார். அவளும் அவரை நோக்கிக் கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தாள்.      

சிவமகுடம் - 39

அவர் யாரென்பதை அவள் முன்னரே யூகித்து வைத்திருந்தாலும், அவர் தன்னை வெளிப்படுத்தாத வரையில், தானும் அவர் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாள். இதோ... காலம், பாண்டிய மாமன்னர் மூலமாகவே அவரை வெளிப்படுத்திவிட்டது.

தொடர்ந்து அந்த அவையில் நிலவிய நிசப்தத்தைப் பாண்டிய மன்னரே கலைத்தார்.  ``சோழர்பிரானே! சம்பிரதாயங்களுக்கு அப்பாற் பட்டவன் நான். ஆகவே, எனக்கான வரவேற்பு முறைகள் தவறிப்போய்விட்டனவே என்பதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இப்போது என் தரப்பில் துறவியாரையும், உங்கள் தரப்பில் சோழ இளவரசியாரையும் பாராட்டவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சரிதானே...'' என்று பாண்டியர் வினா எழுப்ப, அவரது கருத்தைச் சோழர் ஆமோதிக்குமுன் இளவரசி முந்திக்கொண்டாள்.

``இல்லை. பரஸ்பரம் பாராட்டிக்கொள்ளுமுன் நமது இரு தரப்பிலும் பேசித் தீர்ப்பதற்குச் சில விஷயங்கள் இருக்கின்றன.''

இப்படியான பதிலை அதுவும் இளவரசியிடம் இருந்து கூன்பாண்டியர் எதிர்பார்க்கவில்லை. எனவே நெற்றியில் ரேகைகள் விரிய, புருவங்களைச் சுழித்து சற்றுக் கடுமையாகவே கேட்டார், ``என்ன விஷயங்களைப் பேசித் தீர்க்க வேண்டும்?''
``விரிவாகவே சொல்கிறேன். அதற்கு முன்னதாக ஒரு வேண்டுகோள்... நானும் அமைச்சர்பிரானும் எல்லைப்புறக் கோயிலுக்குச் சென்றுவர மாமன்னர்கள் இருவரும் அனுமதிக்க வேண்டும்.''

அவளின் அந்த வேண்டுதல் ஒரு சம்பிரதாயத் துக்காகவே என்பதை மறுகணமே புரிந்து கொண்டனர் மன்னர்கள் இருவரும்.

 ஆம்.  இளவரசி வேண்டுகோள் விடுத்தாளே தவிர, அவர்கள் அனுமதிக்கும்வரை காத்திருக்கவில்லை. துறவியாரை பார்வையாலேயே தன்னைப் பின் தொடரச் சொல்லிவிட்டு அங்கிருந்து விரைவாக அகன்றாள். துறவியாரும் முகக்குறிப்பாலேயே  பாண்டியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்தார்.

எல்லைப்புறக் கோயிலில் சிவ வழிபாட்டைச் செவ்வனே முடித்தபிறகு, கருவறையை நோக்கி இளவரசியார் கைகாட்ட, உள்ளே நுழைந்த துறவியார் லிங்கத் திருமேனிக்குப் பின்புறமாக, எளிதில் பார்வைக்குத் தென்படாது அமைந்திருந்த பிலத்துக்குள் இருந்து ஒரு பேழையை எடுத்துவந்தார்.

மானி, வெகு கவனத்துடன் அந்தப் பேழையைத் திறந்தாள். உள்ளே... முத்து ரத்தின வேலைப் பாடுகள் நிறைந்ததாய் - கருவறை தீபத்தின் சுடரொளியில் தகதகத்தது, பொன்னாலான ஆன அந்த மணிமகுடம்... இல்லையில்லை, சிவமகுடம்! ஆம்... பிரதானமாக லிங்க சொரூபம் பொறிக்கப் பட்ட அந்தச் சிவமகுடத்தை மார்போடு அணைத்த படிதான் சங்கல்பம் ஏற்றுக்கொண்டாள் மானி.

அடுத்த சில நாழிகைகளில், மிகப் பக்தியுடன் சிவமகுடத்தைச் சுமந்தபடி, மதுரையம்பதியை நோக்கி விரைந்தது ஒரு புரவி.

- மகுடம் சூடுவோம்...