மகா பெரியவா அருளால் உபநயனம் செய்யப் பெற்று, பெரியவா ஆக்ஞைப்படி ஸ்ரீமடத்தின் சார்பில் நடைபெற்றுவந்த குந்தன்மல் தம்மானி வேத பாடசாலையில் வேதம் படிக்கச்சென்ற கோழியாலம் ஸ்ரீதர ஆசார்யா, பெரியவா தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் அனுக்கிரஹம் செய்து வருகிறார் என்பதைத் தொடர்ந்து விவரித்தார்.

‘`மகா பெரியவா உத்தரவின்படி ஆறு வருஷங்கள் வேதம் படித்தேன். அதேநேரத்தில் ஓய்வு கிடைக்கும்போது அருகில் உள்ள நூலகத் துக்குச் சென்று `ஆனந்த விகடன்' பத்திரிகையையும், கார்ல்மார்க்ஸ், வினோபாவே போன்றவர்களின் நூல்களையும் படிப்பேன். எப்படியோ எனக்குள் கம்யூனிசத் தாக்கம் ஏற்பட்டுவிட்டது. கூடவே, மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளிக்குப்போய் கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது.
ஆனால், என் தாத்தாவுக்குப் பள்ளிக்குப் போய் படிப்பது கொஞ்சமும் பிடிக்காது. வேதம்தான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரிடம் என் ஆசையைச் சொல்ல எனக்குப் பயமாக இருந்தது. அப்போதுதான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். காசிக்குச் சென்று வேதங்களில் படிக்க வேண்டிய பாடங்களுடன் இந்தி, கணக்கு, அறிவியல் போன்ற மற்ற பாடங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. அதுவும்கூட மகா பெரியவா திருவுள்ளம்தான் என்பதை, பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து என்னால் உணர முடிந்தது.
நான் காசிக்குச் செல்வதுபற்றி வீட்டில் சொன்னால் சம்மதிக்கமாட்டார்கள் என்பதால், நண்பர் ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி, என் பாட்டிக்குத் தெரிவித்துவிடுமாறு கூறிவிட்டுக் காசிக்குப் புறப்பட்டுவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த அறிமுகமும் இல்லாமல் நான் காசிக்குச் சென்றாலும் மகா பெரியவா அனுக்கிரஹத்தால் நான் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தங்கவும் சாப்பிடவும் என்ன செய்வது என்று தெரியவில்லை. முன்பின் யோசிக்காமல் வந்து விட்டோமோ என்று என்னை நானே நொந்து கொண்டாலும், அடுத்த நொடியே மகா பெரியவா என்னிடம் மிகுந்த அன்புகொண்டு அனுக்கிரஹம் செய்திருப்பது என் நினைவுக்குவந்து ஆறுதல் அடைந்தேன். அது உண்மைதான் என்பதை நிரூபிப்பதுபோல் திருப்பனந்தாள் காசி மடத்தில் இருந்த சுவாமிகள் எனக்கு ஆதரவு காட்டினார். மேலும், சிலரும் எனக்கு ஆதரவு தந்தனர். அதன்மூலம் தங்குவதற்கு இடம் கிடைத்தது. சாப்பாட்டைப் பொறுத்தவரை சில நேரங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டாலும், மகா பெரியவா அருளால் சற்றைக்கெல்லாம் எனது பசி தீர ஏதேனும் வழி ஏற்பட்டுவிடும்.
ஒருவழியாகக் காசியில் பள்ளி இறுதிவரை படித்தேன். பள்ளி இறுதித்தேர்வுகள் முடிந்ததும் விடுதி மூடப்பட்டுவிட்டது. தொடர்ந்து அங்கே இருக்க முடியாத நிலை. ரயிலில் ஊருக்குப் புறப்பட்டுவிட்டேன். ராஜ முந்திரியை அடைந்த தும் நான் வேறு வண்டி மாற வேண்டும். அதற்குச் சில மணி நேரங்கள் ஆகும் என்று தெரியவே, எனது லக்கேஜ்களை நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு, கோதாவரிக்கு ஸ்நானம் செய்யப் போனேன். கோதாவரியின் அக்கரையில் ஒரு கோயில் கோபுரம் தெரிந்தது. கொவ்வூர் வேங்கடாசலபதி கோயில்தான் அது. ரயில் வருவதற்கு நேரம் இருக்கவே, பெருமாளை தரிசித்து வரலாம் என்று நினைத்தேன்.
படகுத்துறைக்குச் சென்று கட்டணம் செலுத்தி, அங்கிருந்தவர்கள் காட்டிய படகில் ஏறி அமர்ந்து விட்டேன். சற்றுத் தொலைவு போனதும்தான் அந்தப் படகு பத்ராசலத்துக்குப் போகும் படகு என்று தெரியவந்தது. ‘ஏன் இப்படியெல்லாம் நம்மை பெரியவா அலைக்கழிக்கிறார், ஒருவேளை நாம் பத்ராசலத்துக்குப் போக வேண்டும் என்பது அவருடைய திருவுள்ளமாக இருக்குமோ?’ என்றெல்லாம் நினைத்த நான், அவருடைய திருவுள்ளம் அதுதான் என்றால், அப்படியே பத்ராசலம் ராமனைத் தரிசித்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்து, படகுக்காரரிடம் கூடுதல் கட்டணமும் செலுத்திவிட்டேன்.

பத்ராசலத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒருவர் அமர்ந்துகொண்டு வேத பாராயணம் செய்துகொண்டிருந்தார். அவருடைய குரலில் இருந்த வசீகரம் என்னை இழுத்து நிறுத்தியது. நான் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவர், ‘உனக்கு வேதம் தெரியுமா?’ என்று கேட்டார். நான், ‘ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன்’ என்று சொன்னதும் அவர் கேட்ட அடுத்த கேள்வி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
‘பரமாசார்யார் அனுப்பி நீ வந்திருக்கிறாயா?’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னாலும் அவர் என்னை விடவில்லை. தொடர்ந்து, ‘இல்லை, பரமாசார்யார் அனுப்பித்தான் நீ இங்கே வந்திருக்கிறாய்’ என்றவர், என்னை நேராக ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அவர்தான் கோதண்டராம சாஸ்திரி என்று பிறகு நான் தெரிந்துகொண்டேன்.
கோயிலிலும் பரமாசார்யாருக்கு வேண்டிய அந்தர்வேதி நரசிம்மாச்சாரி என்பவர் என்னைப் பார்த்ததும், ‘உன்னை பரமாசார்யார் அனுப்பி இருக்கிறாரா?’ என்றுதான் கேட்டார். இருவருமே ஒரே கேள்வியை என்னிடம் கேட்டதும் எனக்கு வியப்பும் குழப்பமும் ஒருசேர ஏற்பட்டன.
ஆனால், அதற்கான காரணத்தை அறிந்தபோது தான் மகா பெரியவா எப்படியெல்லாம் என் வாழ்க்கையில் அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார் என்பதைப் பூரணமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்தக் காரணம்...
- திருவருள் தொடரும்