Published:Updated:

கோயில் நிர்வாகத்தில் மெத்தனம் காட்டுகிறதா அறநிலையத்துறை?- குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்!

சீரமைப்புப் பணிகள் என்ற பெயரில் தமிழக அரசின் அறநிலையத்துறையே பழங்காலச் சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகளைச் சிதைத்து வருகிறது’

கோயில் நிர்வாகத்தில் மெத்தனம் காட்டுகிறதா அறநிலையத்துறை?- குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்!
கோயில் நிர்வாகத்தில் மெத்தனம் காட்டுகிறதா அறநிலையத்துறை?- குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்!

‘சீரமைப்புப் பணிகள் என்ற பெயரில் தமிழக அரசின் அறநிலையத்துறையே பழங்காலச் சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகளைச் சிதைத்து வருகிறது’ என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று கைலாசநாதர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் மா.கவிதா. தமிழனுக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாறு, கோயில்களில் ஆவணங்களாக இன்றும் இருக்கின்றன. ஆலயங்கள் வழிபாட்டுக்கு மட்டும் உரியவை அல்ல. அங்கேயுள்ள சிற்பங்களில் புராதன வாழ்க்கையின் அடையாளங்கள் மிச்சமிருக்கின்றன. ஒவ்வொரு கல்வெட்டும் பழங்காலத்தைக் காட்டும் சாளரமாக இருக்கிறது. நம் நாட்டில் பழம்பெருமை பேசும் கோயில்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அவற்றின் அருமை நமக்குத் தெரிவதில்லை. மேலைநாடுகளில் நூறாண்டுகளுக்கும் மேலான கட்டடங்களைப் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஆனால், நாமோ ஆயிரமாண்டு கலைப் பொருள்களைக்கூட, அதன் அருமை உணராமல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பெருமைமிக்க கோயில்களின் நிலைமை இப்போது கவலைக்கிடமாக இருக்கிறது. 

``நூற்றுக்கணக்கான திருக்கோயில்களில், `திருப்பணி’ என்ற பெயரில் சிலைகளும் தூண்களும் சிதைக்கப்படுகின்றன. உலக பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது தஞ்சை பெரிய கோயில். இதை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை பாதுகாத்துவருகிறது. இந்தக் கோயிலின் திருப்பணிகளை மேற்கொள்ள, ஆந்திராவிலிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது தொல்பொருள் துறை. வரலாறு தெரியாத அந்த நிறுவனம், வடக்கு திருச்சுற்று மாளிகையில் இருந்த நான்கு தூண்களை சிதைத்துவிட்டது. நான்கு அற்புதமான கல்வெட்டுகள் அழிந்துவிட்டன. ‘தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள் 2’ என்ற ஆவணத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் அவை. அவற்றில் ஒரு கல்வெட்டு இன்னும் படியெடுத்து ஆவணப்படுத்தப்படவேயில்லை. 

காவிரி வடகரையில் கபிஸ்தலம் அருகேயிருக்கும் வடகுரங்காடுதுறை தலத்தில் முற்காலப் பல்லவர்களின் கலைநயமிக்க சிலைகள், திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்பட்டு, கோயில் தோட்டத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது’’ என்று வருந்துகிறார் வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். 

``அறநிலையத்துறையும் நன்கொடையாளர்களும் செய்யும் குளறுபடிகள்தான் கோயிலின் சீர்கேட்டுக்கு காரணம்’’ என்கிறார், மாமல்லைச் சிற்பக் கல்லூரியின் பேராசியர் கீர்த்திவர்மன். ``கோயிலைப் புனரமைக்க வரும் நல்ல மனம்கொண்ட நன்கொடையாளர்களை புறக்கணித்துவிட்டு, வேலை தெரியாத ஆட்களிடம் திருப்பணியை ஒப்படைப்பதால்தான் பெரும்பாலான கோயில்கள் சிதிலமாகின்றன. குறிப்பாக, அறநிலையத் துறைக்குள் சிலர் ஊடுருவிய பிறகு எல்லாமே மாறிவிட்டன. அவர்களுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே வேலைகள் கொடுக்கப்பட்டன. படித்த, வரலாறு, ஆகமம் தெரிந்த ஸ்தபதிகள் ஒதுக்கப்பட்டார்கள். கட்டட வேலையாட்கள் கோயிலை சீரமைத்ததால்தான், அருமையான கலைப் படைப்புகளை இழந்தோம். 

உதாரணமாக, கோவையைச் சேர்ந்த ஒருவர் 108 சிவன் கோயில்களை புனரமைப்பு செய்ய, அரசிடமிருந்து நிதி பெற்று, வேலை செய்தார். கோயிலின் கோபுரம், விமானங்களில் இருக்கும் பல சுதைச் சிற்பங்களை குறைத்துவிட்டார்கள். 500 சிற்பங்கள் இருந்த இடத்தில் 100 சிற்பங்கள்கூட இப்போது இல்லை. ஆகம விதிப்படி, சுதைக் கலவை கொண்டுதான் சிற்பங்கள் செய்ய வேண்டும். ஆனால், வெறும் சிமென்ட் பூச்சைக்கொண்டு கோபுரம், விமானச் சிற்பங்கள் செய்யப்படுவதால் அவை அடுத்த குடமுழுக்கு வரைகூட (12 ஆண்டுகளுக்கு) நிலைத்திருப்பதில்லை.  

தொல்லியல் துறை வகுத்திருக்கும் எந்த விதியையும் பின்பற்றி, தமிழகக் கோயில்கள் புனரமைக்கப்படுவதில்லை. காரணம், திருப்பணி வேலைகளில் திறமையான ஸ்தபதிகளை ஈடுபடுத்துவது கிடையாது. இப்போது, திருக்குறுங்குடியில் கற்சிலைகளைப் புதுப்பிக்கிறார்கள். தொல்லியல் துறை, சிற்பக்கலை துறையினரின் பரிந்துரை இல்லாமலேயே பணிகளைச் செய்கிறார்கள். இதனால்தான், ஆகம விதிகள் மீறப்பட்டு, கோயில் சிலைகள் அழிந்து வருகின்றன. தமிழகக் கோயில்களைப் புதுப்பிக்கும் கமிட்டியில் இரு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களை நியமித்திருக்கிறார்கள். ஆனால், ‘ஸ்தபதிகள்’ பிரிவில் திறமையானவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

‘சாண்ட்பிளாஸ்டிங்’ (Sandblasting) முறையால் தமிழகக் கோயில்களில் உள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் அழிந்துவருகின்றன. ரசாயனப் பூச்சால் சிலைகள் விரிசல்விடுகின்றன. முன்பெல்லாம், அர்ச்சகர்கள் அழுக்கான சிலைகளின் மீது ‘மாபூச்சு’ செய்வார்கள். அந்தவகையில், அரிசி மாவு, தயிர் கலந்து, சிலைகள் மீது தடவுவார்கள். சில நாள்களுக்குப் பிறகு சிலைகளை நீரால் கழுவி, நார் கொண்டு தேய்த்தால் எண்ணெய் பிசுக்குப் போய்விடும். இந்த முறையைத் தடுத்து, சாண்ட்பிளாஸ்டிங் முறையை அதிகாரிகள் புகுத்திவிட்டார்கள். 

கோயில்களில் மழை நீர் வெளியேற வழிகள் அமைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் கோயில் தூண்கள் மண்ணில் புதைந்துவிடும். கோயிலிலிருக்கும் சிற்பங்கள் சிதைய ஆரம்பிக்கும். அப்படித்தான், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் தூண்கள் புதைந்துவருகின்றன. கோயிலைப் பராமரிப்பதில்தான் அலட்சியம் என்றால், ஆகம விதிகளும் அரசால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆண்டவனுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியத்தை பக்தர்களுக்கு இலவசமாகத் தர வேண்டும். அதைப் பிரசாதக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. மொட்டை அடிப்பது, அன்னதானக்கூடம் ஆகியவற்றை கோயிலுக்கு வெளியே அமைத்து, விளக்கேற்ற, சூடம் எரிக்கத் தனியே கூடங்கள் உருவாக்க வேண்டும். கோயிலைச் சுத்தமாக வைத்திருக்க நிர்வாகம் முயல்வதோடு, அனுபவம் உள்ளவர்களையே அதற்கு நியமிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் கீர்த்திவர்மன். 

ஏனாத்தூர் சங்கரமட பல்கலைக்கழகப் பேராசிரியரும், கல்வெட்டு ஆய்வாளருமான சங்கர நாராயணனும் மிகுந்த வருத்தத்தோடு

பேசுகிறார்... ``கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சிற்பங்களும் தூண்களும் திருப்பணி என்ற பெயரில் மாற்றப்பட்டிருக்கின்றன. கோயில் திருச்சுற்றிலிருக்கும் சின்ன சிற்பங்கள் எல்லாம் ‘சாண்ட்பிளாஸ்டிங்’ முறையால் சிதைந்து போயிருக்கின்றன. வெளிச்சுற்று சுவரின் மேலே இருக்கும் கோஷ்ட சிற்பங்களும் பெரிதும் பழுதாகியிருகின்றன. 

நிறைய கோயில்களில் கல்வெட்டுகளை எல்லாம் தூக்கி, பிரகாரத்துக்கு வெளியே போட்டுவிடுகிறார்கள். காஞ்சிபுரத்தின் மகாகாளேஸ்வரர் கோயிலின் நிலைமையும் அப்படிதான் இருக்கிறது. அங்கு ஒரேயொரு கல்வெட்டுதான் இருந்தது. அதையும் இப்போது காணவில்லை. நிறைய கோயில்களில் கல்வெட்டுகளின் மீது திக்காக சுண்ணாம்பு அடித்துவிடுகிறார்கள். அதனால் கல்வெட்டு சொல்லும் வரலாறு மறைந்து போய்விடுகிறது. 

இன்றும்கூட சைவ, வைஷ்ணவ பிரச்னையில் பழம்பெருமை பேசும் கோயில்களின் சிலைகள் சிதைக்கப்படுகின்றன. காஞ்சிபுரம், சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை சிலையின் மார்பைச் சிதைத்துவிட்டு, மேலே பெயின்ட் அடித்து, `கள்வர் பெருமான்’ என்று மாற்றிவிட்டார்கள். அது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு சிற்பமாக இருக்கலாம். இப்படி இஷ்டத்துக்கு கோயில்களில் மாறுதல்களை செய்துவிட்டு, ஆகமம் என்று எதை கடைப்பிடிக்கிறார்களோ தெரியவில்லை. 

‘நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு திருப்பணியில்கூட பல அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஆகம விதிகள் மீறப்பட்டுவிட்டன’ என்று ஓர் அன்பரின் வழியாக எனக்குச் செய்தி வந்தது. கொடிமரத்தில் இருந்த தங்கம் சுரண்டப்பட்டுவிட்டதாம். தேவாரம், சிவஞான போதம் பாடல்களைக் கொண்டக் கற்பலகைகள் உடைந்து தூள் தூளாகிவிட்டன என்றுகூடக் கேள்விப்பட்டேன். ஏதோ ஒரு நோக்கத்தில், நம் வரலாற்றுத் தகவல்களை அழித்துவிட்டு புதிய வரலாற்றை உருவாக்க முயல்கிறார்கள்...’’  என்கிறார் அவர். 

``திருக்கோயில்களிலிருக்கும் சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகளுக்கு மட்டுமல்ல. ஓவியங்களுக்கும்கூட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’’ என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் பாரதி புத்திரன். ``தமிழகமெங்கும், `புனரமைப்பு’ என்ற பெயரில் பழங்கால ஓவியங்கள் பலவற்றை அழித்துவிட்டார்கள்; சில ஓவியங்களை மாற்றிவிட்டார்கள். உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் புலிவனம் எனும் ஊர் இருக்கிறது. இங்கு, சோழர் காலத்து கோயில் ஒன்றும் இருக்கிறது. அந்தக் கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் பல ஓவியங்கள் இருந்தன. தமிழகத்தில் தஞ்சைக்குப் பிறகு, சோழர்கால ஓவியங்கள் இங்கு மட்டுமே உள்ளன. புதிதாக வந்த நிர்வாக அதிகாரி ஒருவரால் அந்த ஓவியங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

திருவெள்ளறை, திருவீழிமிழலை, கும்பகோணம் ராமசாமி கோயில் போன்ற ஆலயங்களில் இருந்த ஓவியங்களும் திருப்பணியின்போது சிதைக்கப்பட்டுவிட்டன. கற்பூரப் புகையால், எண்ணெய்ப் பிசுக்கால் அழிந்துபோன ஓவியங்களைக் காலப்போக்கில் சுண்ணாம்பு அடித்து, மறைத்துவிடுகிறார்கள். மதுரையில் ‘ராணி மங்கம்மாள் காலத்து ஓவியங்கள்’ அழிக்கப்பட்டதை எல்லோரும் அறிவோம். இப்போது அதே இடத்தில் அறநிலையத் துறை புதிய ஓவியங்களை வரைந்து வருகிறது. பழமையான கோயில்களின் ஓவியங்களின் பெருமை அறியாமல் சிதைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒரு கோயிலில் திருப்பணி நடக்கும்போது, ஓவியங்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றன. ‘குற்றாலம் சித்திர சபை ஓவியங்கள்’ பலவும் அழிக்கப்பட்டு, இப்போது சில ஓவியங்கள் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. அதேபோல, காஞ்சிபுரம் அருகேயிருக்கும் திருப்பருத்திகுன்றம் ஜைன கோயிலில் இருந்த ஓவியங்களைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் சிதைத்துவிட்டார்கள். 

பழங்கால ஓவியங்கள் தாவர வண்ணங்களால் செய்யப்பட்டவை. அவை காலங்கள் தாண்டியும் நிலைத்து நிற்கும். ஆனால் இப்போது பல ஆலயங்களில் ரசானம் கலந்த வண்ணங்களில் ஓவியங்கள் வரைவதால், அது நீண்ட நாள்களுக்கு இருப்பதில்லை. ஓவியங்களின் பெருமை அறிந்தவர்களால்தான் ஓவியங்கள் சரிசெய்யப்பட வேண்டும். உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைக்கொண்ட திருப்புடைமருதூரில் புனரமைப்பு என்ற பெயரில் ஓவியங்களின் மீது பூசப்பட்ட கலவைகள், எதிர்ப்பின் காரணமாக இப்போது நிறுத்தப்பட்டிருக்கின்றன. 

காலத்தால் அழிக்க முடியாத ஓவியங்களை முறையாக ஆவணப்படுத்திவிட்டுத்தான் சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். நாம் அழிப்பது ஓவியங்களை அல்ல... நம் முன்னோர்களின் கலை நுணுக்கங்களை, அவர்களின் உழைப்பை, அதற்கும் மேலாக அந்தக் கால வாழ்வியலை எடுத்துக்காட்டும் ஆவணத்தை என்று புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த ஓவியங்களின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்’’ என்று ஆதங்கப்படுகிறார் பாரதி புத்திரன். 

இப்போது கைலாசநாதர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா. அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை சிதிலமடைந்து, அதைச் சீரமைத்தபோது அங்கிருந்த சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்களை விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதில் கூடுதல் ஆணையர் கவிதாவுக்குத் தெரிந்தே விதிகளை மீறி அவை விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இப்படி அறநிலையத் துறை உயரதிகாரிகளே சர்ச்சைக்குள்ளாவது கவலையளிக்கிறது. 

இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேச அறநிலையத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். "தற்போதைய சூழலில் ஏதும் பேசவியலாது" என்று தெரிவித்துவிட்டார்கள். 

தமிழகத்தின் பொக்கிஷங்களில் கோயில்களும் அடங்கும். அங்கேதான், வரலாறும் பண்பாடும் புதைந்துக் கிடக்கின்றன. ‘வரலாற்றைக் கற்கும் இனமே முன்னேறும்’ என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட வரலாற்றைச் சொல்லித் தரும் ஆலயங்கள் வெறும் கற்களல்ல... காலத்தைக் காட்டும் கலைப் பெட்டகம் என்பதை அனைவருமே உணர வேண்டும்.