Published:Updated:

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!
பிரீமியம் ஸ்டோரி
வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

ஆடி ஸ்பெஷல்!தி.ஜெயப்பிரகாஷ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

ஆடி ஸ்பெஷல்!தி.ஜெயப்பிரகாஷ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!
பிரீமியம் ஸ்டோரி
வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலார்ந்த சூழலில், மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன். தமிழக - கர்நாடக எல்லையில் இருக்கும் வனப்பகுதி என்பதால், இரு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கும் பிரியமான தெய்வமாகத் திகழ்கிறாள் இந்த அன்னை.   

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

அவள் இங்கே கோயில் கொண்டதே சுவையான வரலாறு.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனப் பகுதியில் நடந்தது அந்தச் சம்பவம். புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் அதிகம் வாழும் வனம் என்றாலும், சுற்றுவட்டாரத்து மக்கள் பலரும் எவ்வித அச்சமுமின்றி அந்தக் காட்டிலேயே பட்டிகள் அமைத்து தங்களது ஆடு மாடுகளை மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அப்படியொரு பட்டியில் நிறைந்திருந்த மாடுகளுக்கு மத்தியில், காராம்பசு ஒன்று மட்டும், தன் கன்றுக்குப் பால் தராமலும், மற்றவர்களை பால் கறக்கவிடாமலும் நடந்து கொண்டது. இந்த நிலை பல நாள்களாகத் தொடர்ந்தது. ஒருநாள், அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று அதன் போக்கைக் கவனித்தான் மேய்ச்சல்காரனான சிறுவன். பட்டியில் இருந்து தன்னந்தனியாக வெளியேறிச் சென்ற காராம்பசு, சற்றுத் தொலைவில் இருந்த வேங்கை மரத்துக்கு அருகில் சென்றது. அந்த மரத்தைச் சுற்றி ‘கணாங்கு புற்கள்’ நிறைந்திருந்த ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், காராம்பசு பால் சொரிந்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட சிறுவன் ஓடோடிச் சென்று, ஊர் மக்களிடம் நடந்ததை விவரித்தான். ஊரே கூடிவந்து அந்த இடத்தை வேடிக்கை பார்த்தது. பின்னர் ஒரு சிலர் சேர்ந்து அந்த இடம் முழுவதையும் சுத்தம் செய்து பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய புற்றும், அதனருகில் ஒரு சுயம்புத் திருவுருவமும் காட்சித்தர, அதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

அப்போது அவ்விடத்தில் குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவருக்கு அருள் வந்தது. ‘மலையாள தேசத்திலிருந்து மைசூர் பட்டணத்துக்குப் பொதி மாடுகளை ஓட்டிச்சென்ற மக்களுக்கு வழித்துணை யாக நான் வந்தேன். எழில்கொஞ்சும் இவ்வனப்பகுதி எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இங்கிருந்து செல்ல மனமில்லாமல் இங்கேயே தங்கிவிட்டேன். இந்த இடத்தில் எனக்கொரு கோயில் கட்டி நீங்கள் வழிபட்டால், பண்ணாரித் தாயாகிய நான் உங்கள் அனைவரையும் காத்தருள்வேன்’ என்று அருள்வாக்குக் கிடைத்தது.

ஊர் மக்கள் சிலிர்த்துப்போனார்கள். உடனடியாக அந்த இடத்திலேயே கணாங்குப் புற்களைக்கொண்டு வேய்ந்து குடிலொன்று அமைத்து, அதில் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்கள். அன்னையின் சாந்நித்தியம் திக்கெட்டும் பரவியது. பிற்காலத்தில் ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து அன்னைக்கு விமானத்துடன் கூடிய கோயிலை எழுப்ப, இன்றைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் என விரிவடைந்து மிக அற்புதமாகத் திகழ்கிறது பண்ணாரி அம்மன் ஆலயம். அம்மன் சுயம்புவாகத் தோன்றிய இந்தக் கோயில் தெற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச் சிறப்பு.        

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

ஆலயத்துக்குள் நுழைந்ததும் சந்தான விநாயகரின் சந்நிதியைத் தரிசிக்கலாம். அவரைத் தரிசித்த பிறகே, பண்ணாரி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அவ்வண்ணமே பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பண்ணாரித் தாயைத் தரிசிக்கச் செல்கிறோம்.

தேடி வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தேற வரம்வாரி வழங்கும் கற்பகத் தருவாய் காட்சித் தருகிறாள் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன். அன்னையைத் தரிசிப்பவர்கள் சடுதியில் நகர்ந்துவிட முடியாது. அவ்வளவு சாந்நித்தியம் அவள் திருமுகத்தில். பார்வையில் மறக் கருணை, அதையும் மீறி திருமுகம் பொழியும் அறக்கருணை... அடடா! அந்த அன்னையைப் பிரிந்துசெல்ல எந்தப் பிள்ளைக்குத்தான் மனம் வரும்? வருவோர் எல்லாம் மானசீகமாக அவளிடம் வேண்டி விரும்பி அவளின் அருள் சாந்நித்தியத்தை தன்னோடு கொண்டுசெல்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய் மற்றும் அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை தினங்களிலும், அமாவாசை நாள்களிலும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து இந்தப் பண்ணாரி அம்மனை வழிபடுகின்றனர்.

பிணிகள் நீக்கும் பிரார்த்தனை!

இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு காலங்காலமாகக் கோயிலில் அமைந்துள்ள புற்று மண்தான் விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கண், கை கால் போன்ற உறுப்புகளில் வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருப்பவர்கள், அதேபோன்ற உறுப்புகளை வாங்கி, அம்மனிடம் வைத்து, பிரார்த்தனை செய்து வழிபடுகின்றனர். இதனால் விரைவில் குறிப்பிட்ட அந்தப் பிணிகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், அம்மை நோய் கண்டவர்களுக்கு இந்தக் கோயிலில் கிடைக்கும் வேப்பிலையை வாங்கிச் சென்று வீட்டில் வைத்தால் உடனடியாகக் குணம் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் எண்ணற்ற பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனின் சந்நிதிக்கு வந்து வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

குண்டம் திருவிழா!

பண்ணாரி அம்மனின் புகழைப் பாரெங்கும் பரப்பும் திருவிழாதான், குண்டம் இறங்கும் திருவிழா. அன்றைய தினத்தில் இத்திருக்கோயில் பக்தர்கள் வனப்பகுதிக்குள் சென்று மரங்களை வெட்டி வந்து, மலைபோல குவித்து, தீ மூட்டி மிகப் பிரமாண்டமான அக்னி குண்டத்தை உருவாக்குவார்கள்.

முதலில், கோயிலின் தலைமை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து வர, அவரைத் தொடர்ந்து பக்தர்களும், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளும் அக்னி குண்டத்தில் இறங்கிவந்து அம்மனை வேண்டுவது பல நூறு ஆண்டுகளாக நடைபெறும் விழாவாகும். இப்போதும் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் இத்திருக்கோயிலில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழாவில் தென் மாவட்டங்களில்  இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு குண்டம் இறங்கி, பண்ணாரி அம்மனின் பூரண அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர்.     

வினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்!

நீங்களும் ஒருமுறை பண்ணாரித் தாயின் சந்நிதிக்குச் என்று அவளை வணங்கி வழிபட்டு வாருங்கள். அவளருளால் உங்கள் பாவங்கள் பொசுங்கும்; புண்ணியங்கள் பெருகும். அதன் பலனாக உங்கள் வாழ்வும் உங்கள் சந்ததியரின் எதிர்காலமும் சிறக்கும்.

சருகு மாரியம்மன்

திருக்கோயிலின் தெப்பக்கிணற்றுக்கு அருகில், சருகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்திருக்கிறது. குழந்தை வரம் வேண்டுவோர், இங்குள்ள மரத்தைச் சுற்றி வந்து மரத்தின் கிளைகளில் இரண்டு கற்களைத் துணியால் கட்டிவிட்டுச் செல்வது பாரம்பர்ய வழக்கம். மேலும் திருக்கோயிலின் தென் திசையில் மாதேசுவரருக்கும், அதன் வட திசையில் வண்டி முனியப்ப சுவாமிக்கும் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: பண்ணாரி

மூலவர்:  மாரியம்மன்

தலவிருட்சம்: வேங்கை மரம்

தீர்த்தம்:
தெப்பக் கிணறு

பிரார்த்தனைச் சிறப்பு: இங்கு வரும் பக்தர்களுக்கு, கோயிலில் அமைந்துள்ள புற்று மண்ணே விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கண், கை கால் போன்ற உறுப்புகளில் வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருப்பவர்கள், அதேபோன்ற உறுப்புகளை வாங்கி, கோயிலில் சமர்ப்பித்து பிரார்த்திக்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கை.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 9 வரை.

எப்படிச் செல்வது..? சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் அமைந்திருக்கும் பண்ணாரிக்குச் செல்ல, சத்தியமங்கலத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism