Published:Updated:

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

? பூஜை செய்யும்போது மணைப் பலகையில் அமர்ந்து செய்யலாமா? அவ்வாறு செய்யும்போது கால்களும் பூமியில் படாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சிலர். இதுகுறித்து தங்களது அறிவுரை தேவை?

- வீ.சங்கரநாராயணன், தூத்துக்குடி    

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

பலகையில் உட்காருங்கள். கால்கள் தரையில் படலாம். பலகையில் கால் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமியோடு தொடர்பு வேண்டும். அதே சமயம் நம்மிடம் சேமிக்கும் தவம் குறையக் கூடாது. பலகையில் உட்காரும்போது சேமித்த வலிமை பூமியில் இறங்காது. அதேசமயம் கால் பூமியில் இருப்பதால் அதன் தொடர்பும் கிடைத்துவிடும். இருக்கை திடமாகவும், சுகமாகவும் அமைய இந்த முறை சிறப்பாக இருக்கும். செய்யும் காரியத்தில் ஈடுபாடு சிதறாமல் இருக்க பலகை அவசியம். பண்டைய காலத்தில் ஆமை வடிவில் பலகை அமைந்திருக்கும். கால்களையும் சேர்த்து வைக்கும் படியான அகலம் அதில் தென்படாது.

? வீட்டில், ஸ்வாமி விக்கிரகங்கள் வைத்து வழிபடும் நிலையில் அந்த மூர்த்தங்களுக்கு அனுதினமும் அபிஷேக-நைவேத்தியம் செய்ய வேண்டுமா?

 -மு.கோவிந்தவள்ளி, நான்குநேரி


உடல் சுகாதாரத்துக்கு நீராடுகிறோம். பசியைப் போக்க உணவருந்துகிறோம். வீட்டில் பசு மாட்டை வளர்ப்பதுண்டு. அதைக் கழுவுவதும், அதற்கு உணவளிப்பதும் உண்டு. செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். அவற்றின் பராமரிப்பு, தடங்கல் இல்லாமல் நடைபெறுகிறது. அவற்றுக்குப் பிடித்தமான உணவு அளிப்போம். அவற்றின் சுகாதாரம் குன்றினால் மருத்துவரை அணுகி கவனிப்போம். நம் குழந்தைச் செல்வங்களையும் தினமும் நீராட்டி, பாலூட்டி வளர்ப்போம். குழந்தைக்குப் பசிக்கும் வேளையை அறிந்து எச்சரிக்கையாகச் செயல் படுவோம். விருந்தாளியை உணவளித்து உபசரிப்போம்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

நாம் உட்கொள்ளும் உணவுப்பொருள்கள் கடவுளின் படைப்பு. விதையை விதைக்கிறான் விவசாயி. பூமி அதைப் பயிராக மாற்றித் தருகிறது. அது, பூமி மாதாவின் கருணை. அவர் தந்த உணவை முதலில் அவருக்குப் படைத்த பிறகு ஏற்றுக்கொள்வோம். உணவை ஆண்டவனுக்கு அளிக்க வேண்டும். அவரது பார்வைபட்டு, தூய்மையாக்கி அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நாகரிக நடைமுறையை வகுத்துத் தந்தது தர்மசாஸ்திரம். அவருக்கு அபிஷேகம் செய்வதும், உணவளிப்பதும் ஒரு சுமையாகாது.

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?விக்கிரகத்தை வைத்து பூஜை செய்ய ஆசைப்பட்டால் அபிஷேகம், பிரசாதம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். நமது வீட்டில் அவரை வரவழைத்து அபிஷேகம் செய்யாமலும், உணவளிக்காமலும் இருப்பது தவறு. விருந்தோம்பலில் முன்னவர்களான நமக்கு, அது அழகல்ல. அக்கறையுடன் செய்யுங்கள். தங்களது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்ய பொருளாதாரமும் சந்தர்ப்பமும் இடம்கொடுக்காவிட்டால் விக்கிரகத்தைத் தேவையானவர்களுக்கு அளிக்கலாம்; கடவுளைக் கோயிலில் வணங்கினால் போதும்.

? ருத்திராட்சம் ஊறவைத்த நீரைப் பருகினால் உயர் ரத்த அழுத்தம் முதலான பிணிகள் நீங்கும் என்கிறார் நண்பர் ஒருவர். இந்தத் தகவல் உண்மையா?

- கே.துரைசண்முகம், தேனி


ருத்திராட்சம் பற்றி தாங்கள் கேள்விப்பட்டது மிகைப்படுத்தப் பட்ட ஒன்று. ரத்த அழுத்தத்தைத் தலைதூக்காமல் செய்வதும், இன்னும் பிற விஷயங்களைக் கட்டுக்குள் வைப்பதும் நமது உணவு முறையே. எனவே இந்த விஷயங்களுக்காக ருத்திராட்சத்தைத் தேடி அலைய வேண்டாம்.

தாவர இனம் அனைத்திலும் மருத்துவ குணம் ஒளிந்திருப்பதாக ஆயுர்வேதம் கூறும். படைப்புகள் அத்தனையும் நன்மை - தீமைகளின் கலவை (குண தோஷ மிச்ரம்) என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. எப்போதும், தனித்த நிலையில் ஒரு மூலிகை முழுப் பயனை அளிக்காது. அதிலுள்ள நஞ்சை அகற்றவும் குறிப்பிட்ட அந்த மூலிகையின் குணத்தைப் பெருக்கவும் மற்றொரு மூலிகையின் சேர்க்கை தேவை. கட்டுப்பாடான உணவு மற்றும் நல்ல சிந்தனை இருந்தால் நோயாளியாக மாற மாட்டோம். ஆகவே, குறிப்பிட்ட ஒரு பொருளின் மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளை அப்படியே எடுத்துக் கொண்டு செயல்படாதீர்கள்!

? பூணூல் மூன்று பிரியாக இருப்பதன் தாத்பர்யம் என்ன? 

- எம்.பிரகாஷ், சென்னை-5


முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி. மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணூலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்றுப்பெற்றதாகக் கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதிமன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்றுப்பெற்றதாகக் கருதுகிறோம். பூணூல் பரமாத்ம வடிவம் (யஞ்ஜாக்ய: பரமாத்மாய:) பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரிபாத் ஊர்த்வ...) மூன்றடி அளந்தவர். அப்போது முற்றுப்பெற்றது.        

கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?

தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் - இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணூலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும். அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடி களோடு விளங்குபவள். அவளை மூன்று வேளை வழிபட வேண்டும். அதற்குக் காரணமான பூணூலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.

? பைரவருக்கும் வடை மாலை சமர்ப்பிக்கலாமா?

புஷ்பம், முத்து, தங்கம், வைரம், பவளம், துளசி, ருத்ராட்சம் ஆகியவற்றைக்கொண்டு இறையுருவங்களுக்கு மாலையாக அணிவிப்பதுண்டு. மாலை என்ற சொல் புஷ்ப மாலை, முத்து மாலை போன்றவற்றைக் குறிக்கும்.

தலைவர்களது வரவேற்பிலும் புஷ்பம் பயன்படுத்துவர். இறையுருவ உபசாரங்களில் புஷ்ப மாலைக்கு இடமுண்டு. பொன் வைக்க வேண்டிய இடத்தில் புஷ்பத்தை வைப்பர். ஸ்வர்ண புஷ்ப உபசாரத்தில், தங்கத்துக்கு மாற்றாக புஷ்பத்தைப் பயன்படுத்துவோம்.

இறையுருவங்களின் பணிவிடைகளில், மற்ற மாலைகளை அணிவித்தாலும் புஷ்ப மாலையைத் தவிர்க்க இயலாது. காலப்போக்கில் நடைமுறையை மீறி பலவித மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. வடை, வெற்றிலை, பழம், தேங்காய், கொண்டைக் கடலை, அறுகம் புல் மற்றும் ரூபாய் நோட்டு ஆகியவற்றால் ஆன மாலைகளும் கடவுள் சிலைகளுக்கு அணிவிக்கப் படுகின்றன.

புதிய நடைமுறையை ஊர்ஜிதம் செய்ய தல புராணம், பக்தனது செயல்பாடு ஆகியவற்றை எடுத்துக் கூறி ஊக்குவிப்பர்.

ஆஞ்சநேயருக்கு மட்டுமின்றி எந்தக் கடவுளர்களுக்கும் வடை மாலையை சாத்தலாம். பக்தனின் விருப்பப்படி உபசாரங்கள் மாறும்போது பாகுபாடு இடையூறாக இருக்காது.

நம் முன்னோர்கள் பக்தியை வெளிப் படுத்தினார்கள். அமைதி, பண்பு, நாகரிகம் மற்றும் வரையறையோடு செயல்பட்டனர். இந்த நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.

ஆனால், இன்றைய சூழலில் புதிது புதிதாக மாலைகளை உருவாக்கி, அவற்றுக்கு முதலிடம் அளித்து செயல்படுவதால், பக்தர்களும் இதை வரவேற்கின்றனர். அளவுகோல் என்பது பக்தர்களின் விருப்பத்துக்குத் தக்கபடி மாறி வருகிறது. புதுப்புது சிந்தனைகளை இறையுருவங்களில் புகுத்தாமல், இத்துடன் நிறுத்திக்கொள்வதே அழகு.

- பதில்கள் தொடரும்...

விசேஷக் கோலங்களில் சிவ தரிசனம்!

மதுரைக்கு அருகில் `விராதனூர்' எனும் சிவத்தலம் உள்ளது. இங்கே மூலவராக ரிஷபாரூட திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார், சிவபெருமான்.

மூலவர் சந்நிதியில் ரிஷபத்தின்மீது அம்மையும் அப்பனும் அருளும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும்.

சிவ வடிவங்களில் குறிப்பிடத்தக்கது அர்த்தநாரீஸ்வரர் திருவடிவம்.

திருக்கண்டியூர் திருத்தலத்தில் அமர்ந்த நிலையில் அருளும் அர்த்த நாரீஸ்வரரைத் தரிசிக்கலாம். திருமழப்பாடியில், வழக்கத்துக்கு மாறாக வலப்பாதியில் பெண்ணுருவம் கொண்டு திகழ்கிறது, அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்.

குடவாசலுக்கு அருகிலுள்ள சிவத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இந்தத் தலத்தில் சிவபெருமானுக்கு யமதர்மனே வாகனமாகத் திகழ்கிறார். இங்கு யமனுக்குக் கோயிலும் உண்டு.

- எஸ்.விஜயலக்ஷ்மி,  சென்னை- 88