மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 7

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! ( மகுடேசுவரன் )

ஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: க.பாலமுருகன்

ற்பனைக் கதைகளில் ‘விதர்ப்ப தேசத்தில்’ என்று படித்திருப்போம். விதர்ப்பம் என்பது ஒரு நாட்டின் பெயர். மகாராட்டிர மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதிதான் இந்த விதர்ப்பம்.  அந்தப் பெயர்தான் இப்போது ஆங்கிலத்தில் `விதர்பா' என்று எழுதப்படுகிறது. விதர்ப்ப நாட்டுக்கென்று தொன்மையான தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் பல இருக்கின்றன.மகாவிஷ்ணுவை விதர்ப்பப் பகுதியினர் `விட்டலர்' என்று அழைக்கிறார்கள். அந்த விட்டலருக்கென்றே ஒரு பெருங்கோவிலை விஜயநகரத்தில் எழுப்பியிருக்கிறார்கள். ஹம்பி இடிபாடுகளில் விட்டலர் கோவில்தான் `அழிந்தும் அழகில் குன்றா' ஆலயமாகத் திகழ்கிறது.    

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 7

அச்சுதராயர் கோவிலிருந்து நடனமாதர் தெரு வழியாக துங்கபத்திரை நதிப்புறத்தே நடந்தால் பல்வேறு கோவில்களைக் காணலாம். ஒவ்வொன்றும் கற்பாவிய மேடைகளையும், உள் மண்டபங்களையும், கருவறையையும் கொண்டிருக்கின்றன. அளவில் சிறிதும் பெரிதுமான அக்கோவில்களில் ‘சிதலங்கள் தின்றதுபோக’ மீதமுள்ள அழகைக்  காணலாம். இக்கோவில் சிதிலங்களை முறையாகப் பராமரிக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. 

அச்சிறு கோவில்களைத் தாண்டிவந்ததும் ஆற்றுப் பள்ளத்தாக்கு வருகிறது. ஆற்றங்கரையை ஒட்டி ஓர் அழகிய கல்மண்டபம் இருக்கிறது. காவிரிக்கரையில் தியாகையர் எவ்வாறு கீர்த்தனைகளைப் பாடினாரோ, அவ்வாறே அக்கல்மண்டபத்தில் ஒருவர் ஊனுருக உயிர்கசிய மகாவிஷ்ணுவைப் பாடி வாழ்ந்தார். அவர் பெயர் ‘பண்டரிபுரத்துப் புரந்தரதாசர்’. இன்றைக்கும் அவர் பாடிய இடம், துங்கபத்திரை நதியின் நன்னீரலைகள் வந்து படிக்கட்டில் முத்தமிட்டுச் செல்லுமாறு பெருங்கற்றூண்கள் தாங்கும் கல்மண்டபமாகக் காட்சியளிக்கிறது. நான் முதன்முறை சென்றபோது அம்மண்டபச் சிதிலங்களை நீக்கிச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டாம்முறை சென்றபோது மண்டபம் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டிருந்தது.

பண்டரிபுரத்துப் புரந்தரதாசர் மண்டபத்தின் சதுரமான கற்றூண்களை அணைத்துப் பிடிக்க முடியாது. அவ்வளவு திரட்சி. நதியை ஒட்டி எழுப்பப்பட்டிருக்கும் மண்டபம் என்பதால், நன்கு உயரமான மேடைகள் இருக்கின்றன. ஒரு மேடையில் அமர்ந்து நமக்கு விருப்பமான பாடலொன்றை மனத்துக்குள் பாடிப் பார்த்துக்கொள்ளலாம். நதியலைகளின் சிற்றோசை கூடச் சேர்ந்து தாளமிசைப்பதை உணரலாம். நெடுந்தொலைவிலிருந்து வரும் இசையன்பர்கள் அவ்விடத்தில் மனங்கூர்ந்து அமர்ந்து செல்கிறார்கள். அமைதியின் அருள்நிலை அங்கே நிலவுகிறது.

புரந்தரதாசர் மண்டபத்தை நீங்கிக் கரையேறினால் கல் தராசு ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. இப்போது தராசுத் தட்டுகளும் அவற்றைத் தாங்கும் சங்கிலிகளும் இல்லை. மின்விளக்குக் கம்பத்தின் உயரத்துக்கு நிற்கும் இரண்டு கற்றூண்கள்மீது உத்தரம்போல் ஒரு சதுரக்கல் இருத்தப்பட்டிருக்கிறது. அந்த உத்தரக் கல்லைக் குடைந்து இடவலமாய் இரண்டு இரும்புக் கொக்கிகள் செருகப்பட்டிருக் கின்றன. தராசுத் தட்டுகளின் சங்கிலிகள் அவ்விரும்புக் கொக்கிகளிலிருந்து தொங்கினவாம். விட்டலர் ஆலயத்துக்குத் தருகின்ற கொடைப்பொருள்களை அத்தராசினால் நிறுத்தி அளந்து அளித்திருக்கின்றனர் என்றால் அந்தக் கோவிலுக்கு எவ்வளவு காணிக்கைப் பொருள்கள் வந்திருக்க வேண்டும் ? வரலாற்றில் அக்கோவிலுக்கு இருந்த பெருமையும் அருளாட்சியும் எத்துணை மாண்புடையதாய் விளங்கியிருக்க வேண்டும்?

விட்டலர் ஆலயத்துக்கு வரும் வழியாய் இதுவரை சொன்னது துங்கபத்திரை நதியைப் பிடித்தபடி வந்தால் கோவிலின் பின் மதிலை ஒட்டி வர வேண்டும். கோவிலின் கிழக்குப்புற முன்கோபுரத்தை அடைய வேறு வழியுள்ளது. அதற்குத் ‘தலரிக்கட்டை வாயில்’ எனப்படும் கோட்டை வாயில் வழியாக வர வேண்டியிருக்கும்.     

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 7

விஜயநகரம்... ஏழடுக்குக் கோட்டை மதில்கள் சூழ்ந்த நகரம். அதில் உள்ளடுக்கு மதிலுக்குள் நுழைவதற்கான கிழக்கு வாயில்தான் ‘தலரிக்கட்டை வாயில்’. கோபுரத்தைப் போன்ற முன்னமைப்புடன் கூடிய அவ்வாயில் இன்னும் இருக்கிறது. மால்யவந்த ரகுநாத மலையை ஒட்டி வரும் சாலையில் வந்தால் தலரிக்கட்டை வாயிலை அடையலாம். அங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் விட்டலர் ஆலயக் கடைவீதிக்கு வரலாம். விட்டலர் கோவில் கிழக்குக் கோபுரத்துக்கு எதிராகவும் இருநூற்றடி அகலமுள்ள தேர்வீதி இருக்கிறது. அதுதான் கடைவீதியுமாம். இருபுறமும் அங்காடிகள் நிறைந்திருந்த அத்தெருவில் எள்விழ இடமில்லாதபடி மக்கள் கூடியிருந்த ஒரு காலத்தை இன்று கற்பனையில் நினைக்கக்கூட வலிக்கிறது.     

விட்டலர் ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் பீரங்கித் தாக்குதலுக்குட்பட்டு அரைச்சிதிலமாய் இருக்கிறது. அதனுள் நுழைந்து ஆலயத்தின் பெரும்பரப்பைப் பார்த்தால் மூச்சே நின்றுவிடும். பெண்ணுக்குக் கூந்தல் கலைந்த பின்னரும் ஓர் அழகு கூடிவருமே, அதைப்போல் சிதிலத்தின் பின்னும் சீர்திகழ்ச்சிக்குக் குறைவில்லாத கோவிலாய் விட்டலர் கோவில் இருக்கிறது.

1513-ம் ஆண்டில் கிருஷ்ண தேவராயரால் பார்த்து பார்த்து இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட இக்கோவில் மண்ணுலகில் ஓர் இந்திரசபைக் கூடமாய் இருந்திருக்கிறது.

விட்டலர் கோவிலின் மையக் கருவறை மண்டபம் நுணுக்கம் மிகுந்த கற்சிற்பங்களோடு இருக்கும். நன்கு விளைந்த தேக்குக் கட்டையில் தேவதச்சனால் சின்னஞ்சிறு பிசிறுகளைக் கீற முடியுமில்லையா… அப்படிக் கற்களில் சிறு நுணுக்கம் குன்றாத வடிப்புகளைச் செய்துள்ளான் விஜயநகரச் சிற்பி. இன்றைக்குக் கூரை உயரத்தில் கல்பாவிய மண்டபமாய் உள்ள அவ்விடம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா? கல் மண்டபத்துக்கு மேலே தேக்குகளாலும் ஈட்டி மரங்களாலும் ஆகிய வானளாவிய அடுக்கு மண்டபங்கள் இருந்தனவாம். அம்மரங்கள் காலத்துக்கும் கறையானால் அழிபட மாட்டாதவை… ஆனால், இப்போது அவை இல்லை. அவற்றுக்கு என்னாயிற்று என்கிறீர்களா? படையெடுத்து வந்த பாமினி சுல்தான்கள் கோவிலின் கோபுரத்தைப் பீரங்கியால் சுட்டுச் சிதைத்ததுபோல், உள்ளிருந்த மர வேலைப்பாடு களைத் தீயிட்டுப் பொசுக்கிவிட்டனர். தீ நாக்கு தின்ற தேக்கு மர மண்டபங்கள் பன்னெடுநாள் அணையாது எரிந்தனவாம்.

- தரிசிப்போம்...