Published:Updated:

குருவே சரணம் - வள்ளலார்

குருவே சரணம் - வள்ளலார்
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - வள்ளலார்

பிரபுநந்த கிரிதர் - ஓவியம்: ம.செ

குருவே சரணம் - வள்ளலார்

பிரபுநந்த கிரிதர் - ஓவியம்: ம.செ

Published:Updated:
குருவே சரணம் - வள்ளலார்
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - வள்ளலார்
குருவே சரணம் - வள்ளலார்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி...

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!


‘கடவுள் ஒருவரே... அவர் ஒளிவடிவானவர்... அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்!

உண்மை அன்பால் மட்டுமே ஆண்டவரை வழிபட வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்குகின்ற ஜீவகாருண்யம் என்ற அன்பான வழிபாடே, கடவுளின் அருளுக்கு நாம் பாத்திரமாக ஒரே வழி!’

இதுதான், இந்த உலகம் உய்வடைதற்கு வள்ளலார் காட்டிய வழி. சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு வள்ளலார் ஒரு ஞானகுரு.      

குருவே சரணம் - வள்ளலார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொழி, மதம், நாடு என எல்லாவித வரையறைகளையும் கடந்து  பரவிய போதனைகள் அவருடையது. அவர் புதிய மதத்தை உருவாக்கவில்லை... புதிய கடவுளை அறிமுகப்படுத்தவில்லை... தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அன்பையே போதித்தார். மனிதநேயத்தை வலியுறுத்தினார். சக மனிதர்கள் மட்டுமன்றி எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டச் சொன்னார். உயிரே இல்லாத மண்ணாங்கட்டியைக்கூட  நேசிக்கச் சொன்ன மென்மையான வழிகாட்டி அவர்.

வள்ளலாரின் அவதாரம் நிகழ்ந்தது சுமார் நூற்று தொன்னூறு வருடங்களுக்கு முன்பு. தில்லையம்பதியான நடராஜர் நர்த்தனமாடும் சிதம்பரத்துக்கு இருபது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் வயல்கள் சூழ்ந்த மருதூர் கிராமம்தான் வள்ளலாரை இந்த மண்ணுலகத்துக்குத் தந்த பெருமைக்குரிய சிற்றூர்.

இந்தக் கிராமத்தின் கணக்குப்பிள்ளையாகவும் பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் ஆசானாகவும் விளங்கியவர்  ராமையா பிள்ளை. கிராமமே மதித்த ராமையா பிள்ளைக்கு இல்வாழ்க்கை மட்டும் கசப்பு மருந்தாக அமைந்தது. அடுத்தடுத்து ஐந்து முறை திருமணங்கள் நிகழ்ந்தும், ஐந்து மனைவியரும் மகப்பேறு இன்றி அடுத்தடுத்து மரணத்தைத் தழுவினர். மனம் வெறுத்துப் போயிருந்த ராமையாவுக்கு ஆறாவதாக வாழ்க்கைப்பட்டவர் சின்னம்மையார். இவர்களின் இனிய வாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு பெண்களும், இரண்டு பிள்ளைகளும் பிறக்க, ஐந்தாவதாகச் சின்னம்மையின் வயிற்றில் அவதரித்தவர் வள்ளலார்.

1823-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், ஐந்தாம் தேதி பிறந்த பிள்ளைக்குப் பெற்றோர் வைத்த பெயர் ராமலிங்கம். குழந்தை பிறந்ததும் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, ஆண்டவனுக்கு நன்றி தெரிவிப்பது அவர்களின் குல வழக்கம். ராமலிங்கம் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குக் குடும்பத்தோடு வழிபடப் போனார்கள்.

சிற்சபையில்  எல்லோரும் வழிபாட்டுக்காக நின்றிருந்தபோது, கைக்குழந்தையாக இருந்த ராமலிங்கத்துக்கு  சிதம்பர ரகசியத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்சியருளினார் இறைவன். குழந்தை கள்ளங்கபடமின்றி அந்த ரகசிய தரிசனத்தை ரசித்துச் சிரித்தது. பெருமானார் ஓர் அவதாரம் என்பதை அவரது குடும்பம் அப்போது உணர வாய்ப்பில்லை. ராமலிங்கம் ஆறு மாதக் கைக்குழந்தையாக இருந்தபோது, அவரது அப்பா உடல்நலமின்றி இறந்து போனார். மருதூரில் வசிக்க இயலாமல் பொன்னேரிக்குக் குடிபெயர்ந்தார் அவரது அம்மா.

ராமலிங்கம் அங்கிருந்ததும் சில மாதங்கள்தான். அவரது மூத்த அண்ணன் சபாபதி பிள்ளை சென்னையில் இருந்தார். மகாவித்வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் பயின்று, புராணச் சொற்பொழிவாற்றுவதில் வல்லவராகி, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் தன் தம்பியைத் தனது ஆசான் சபாபதி முதலியாரிடமே கல்வி கற்க அனுப்பி வைத்தார். ஆனால்,  ஆசானிடம் சென்று கல்வி பயிலாமல், வீட்டிலும் தங்காமல் தினமும் கந்தகோட்டம் போய் கந்தனை வழிபட்டபடி, அங்கேயே தங்க ஆரம்பித்தான் ராமலிங்கம். எல்லோருக்கும் புதிரான பிறவியாகத் தெரிந்த ராமலிங்கம், அந்த இரண்டு வயதிலேயே ஆசானுக்கே கற்றுத் தரும் அறிவைப் பெற்றிருந் தான். அவன் கந்தகோட்டம் சென்று இறைவன் மீது கவி பாடி வணங்குவதைப் பார்த்து வியந்து போனார் ஆசான். பசி, தூக்கம் என எதைப் பற்றிய சிந்தனையும் ராமலிங்கத்துக்கு இல்லை.    

குருவே சரணம் - வள்ளலார்

அடிப்படைக் கல்வியையும் கவிபாடும் ஞானத்தையும் சகல விஷயங்களையும் பகுத்தறிந்து பிறருக்கு ஆலோசனை தரும் ஆற்றலையும் அந்த வயதிலேயே ராமலிங்கத்துக்குக் கந்தகோட்டத்து இறைவன் தந்துவிட்டான்.

ஆனால்,  ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதி இதை அறியவில்லை. தம்பி  பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதாகக் கோபப்பட்டு, ‘இனிமேல் ராமலிங்கத்துக்கு வீட்டில் சாப்பாடு போட வேண்டாம்’ என்று மனைவி பார்வதியிடம் சொல்லிவிட்டார்.

`அதுவும் நல்லதாகப் போயிற்று’ என்று ராமலிங்கம் ஒரேயடியாக கோயிலிலேயே சென்று தங்கிவிட்டார். அண்ணி பார்வதியம்மாளுக்கு இருப்புக்கொள்ளவில்லை. பிள்ளைப்பெருமான் பசி பொறுக்காத குழந்தை ஆயிற்றே என்று கவலைப்பட்டு, அக்கம்பக்கத்து சிறுவர்களை அனுப்பி  ராமலிங்கத்தை வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பாடு போட்டார். இப்படியே தினமும் அண்ணன் வெளியே போன பிறகு திண்ணையில் வந்து உட்கார்ந்து சாப்பிடுவது ராமலிங்கத்தின் வழக்கமாயிற்று. ஒருநாள் சாப்பாடு போடும்போது அண்ணியார் அழுதுவிட்டார். அன்று ராமலிங்கத்தின் தகப்பனாருக்குத் திதி. அன்றுகூட திண்ணைச் சாப்பாடுதான். ‘‘இப்படி சொந்த வீட்டில் திருடனைப்போல் வந்து சாப்பிடுகிறாயே! எத்தனை நாள் இப்படியே போவது... உன் எதிர்காலம் என்னாவது?’’ என அண்ணியார் அழுதபடி கேட்க, பிள்ளைப்பெருமான் மனம் மாறினார்.

மாடியில் அண்ணன் அவருக்கு ஓர் அறை ஒதுக்கித் தர, புத்தகங்களோடும், பூஜைப் பொருள்களோடும் போய் அறைக் கதவை மூடிக்கொண்டு, கந்தனை நினைத்தபடி கையிலிருந்த புத்தகங் களைப் படித்தார். படிப்பு, தியானம் என நாள்கள் போனது. அப்போது அவருக்கு வயது ஒன்பதுதான். தியானத்தில் ஆழ்ந்தபடி அவர் கந்தனை நினைத்து வேண்ட, அறையிலிருந்த நிலைக் கண்ணாடியில் ஒருநாள் முருகன், பிள்ளைப்பெருமானுக்குக் காட்சி தந்தான். கந்தர் சரணப்பத்து, தெய்வமணி மாலை என இரண்டு அருள் தொகுப்புகளை அந்த இறைவன்மீது ராமலிங்கம் பாடினார்.

அண்ணன் சபாபதி பிள்ளை சொற்பொழிவுகள் செய்யப் போகும் போது, சிலசமயம் ராமலிங்கத்தையும் உடன் அழைத்துப் போவார். அண்ணன் சொற்பொழிவு செய்யும்போது தம்பி இறை வணக்கப் பாடல்கள் பாடுவார். ஒருநாள் அண்ணனுக்கு உடல்நலமில்லாது போக, தம்பியை அனுப்பி சில பாடல்களை மட்டும் பாடிவரச் சொன்னார் அண்ணன். ஆனால், மேடை ஏறிய ராமலிங்கமோ, திருஞானசம்பந்தர் புராணத்தைச் சொற்பொழிவாகவே ஆற்ற, ‘இந்த வயதில் இப்படி ஒரு ஞானமா? இவர் குழந்தையா அல்லது அவதாரமா?’ என்று அப்போது சென்னையில் அறிஞர்கள் வட்டாரத்தில் ஒரு பெரிய பரபரப்பே ஏற்பட்டுவிட்டது. கந்தகோட்ட இறைவனிடம் ஞானக்கேள்வி பெற்ற பிள்ளைப்பெருமான்மீது மக்களுக்குப் பயபக்தி உண்டாயிற்று.

ராமலிங்கத்தின் ஞானத்தேடல் அடுத்த கட்டத்தைத் தொடர்ந்தது. முருகப்பெருமானை வழிபடு கடவுளாகவும், திருஞானசம்பந்தரைக் குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் இளமையில் ஏற்றுக்கொண்டார். பன்னிரண்டு வயதில்  திருவொற்றியூர் தியாகப் பெருமானையும், வடிவுடையம்மையையும் வழிபடுவதைக் கூடுதல் பழக்கமாக்கிக் கொண்டார். இந்தத் தெய்வங்கள், அவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் சிலிர்க்க வைப்பவை!

- தரிசிப்போம்...

யாரை எப்படி வணங்குவது?

இறைவனை வணங்கும்போது தலைக்குமேல் 12 அங்குலம் உயர்த்திக் கைகூப்பி வணங்க வேண்டும்.

பிற தேவர்களைத் தலைக்குமேல் கைகூப்பி வணங்க வேண்டும்.

குருநாதரை நெற்றிக்கு நேர்கைகூப்பி வணங்க வேண்டும்.

தந்தைக்கும் தலைவனுக்கும் வணக்கம் தெரிவிக்கும்போது, வாய்க்கு நேராக கைகூப்பி வணங்குதல் வேண்டும்.

சான்றோர்களையும் அறநெறியாளர் களையும் சந்திக்கும்போது, மார்புக்கு நேராகக் கைகூப்பி வணக்கம் தெரிவிக்க வேண்டும்.

நம்மைப் பெற்ற அன்னையை வயிற்றுக்கு நேராக கரம்கூப்பி வணங்குதல் வேண்டும்.

- கோ. ராமமூர்த்தி, சென்னை -44  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism