ஸ்ரீலட்சுமி பிராட்டியார் ஐஸ்வர்யங்களை மட்டுமல்ல... தூய பக்தியுடன் அவளை வழிபட்டால், மனம் குளிர்ந்து நாம் விரும்பும் எதையுமே நமக்குத் தந்து அருள்பவள். அந்த அளவுக்குக் கருணை மிகக் கொண்டவள் ஸ்ரீலட்சுமி பிராட்டி.

நம்முடைய தர்மத்தின் ஆணிவேர்களாகத் திகழ்பவர்கள் பெண்கள்தான். சுமங்கலிகளை, இல்லத்தரசிகளை கிரகலட்சுமியாகப் போற்றுகின்றன ஞான நூல்கள். வீட்டில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு நாள் குறிக்க வேண்டும் என்றால், கிரகலட்சுமியாக இருக்கும் அந்தப் பெண்ணின் நட்சத்திரத்தை வைத்துத் தான் நாள் குறிக்க வேண்டும். குடும்பப் பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வீட்டுக்கு ஆகாது. அதனால்தான், ‘குடும்பப் பெண் கண்ணீர் விட்டால் கொடி சீலை தானாய் பற்றி எரியும்’ என்ற வழக்கு மொழி ஏற்பட்டது.
நித்திய ஹோமம் நடைபெறும் வீட்டில், மனைவி கையினால் கொடுக்கப்படும் அரிசியை வாங்கும் கணவன், அந்த அரிசியை இரு பாகமாகப் பிரித்து அக்னி தேவதைக்கு அவிர்பாகம் கொடுக்க வேண்டும். மனைவி இல்லாதவர் செய்யும் எந்த யாகமும் தேவதைகளைச் சென்று அடையாது என்பது சாஸ்திரம்.
பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்து தர்மத்தில், சுமங்கலிப் பெண்கள் சேர்ந்து செய்யும் விசேஷ பூஜைதான் வரலட்சுமி விரத பூஜை. வேண்டும் வரத்தை அருள்பவள் வரலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஐக்கிய ஸ்வரூபமே வரலட்சுமி திருவடிவம். வரலட்சுமியை விரதமிருந்து பூஜித்தால், குடும்பம் குறைவின்றி சிறக்கும். கணவர் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவார். குழந்தைகளுக்கு அனைத்து பேறுகளும் ஸித்திக்கும். இந்த அளவுக்கு மகிமைமிக்க வரலட்சுமி பூஜை தென் மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான ஆடி மாதத்தில் இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் கொண்டாடப்படுகிறது.
முற்காலத்தில் மகத நாட்டின் குண்டிணா என்ற கிராமத்தில் வசித்த சாருமதி என்ற பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி, வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும்படியும், அதன் பலனாக வேண்டிய அனைத்தையும் அருள்வதாகவும் கூறினாள். சாருமதியும் அந்தக் கனவைப் பற்றித் தன் கணவரிடமும், புகுந்த வீட்டினரிடமும் தெரிவித்தாள். அவர்களின் ஒத்துழைப்போடு கிராமத்தில் இருந்த மேலும் சில சுமங்கலிப் பெண்களும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தனர். அதனால் தாங்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் பெற்றனர் என்று வரலட்சுமி விரத மகாத்மியம் கூறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூய்மையான பக்தியுடன் எளிய முறையில் இந்த விரதத்தை அனுஷ்டித்தால்கூட, வரலட்சுமி தேவி நமக்கு வேண்டிய அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருள்வாள். இந்த விரதத்தை எந்த ஒரு பேதமும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் கடைப் பிடித்து வரலட்சுமி தேவியின் அருள் பெறலாம்.
பூஜை செய்யும் வழிமுறைகள்
விரத நாளுக்கு முந்தைய வியாழக்கிழமை அன்று இரவே வீட்டையும், பூஜை செய்யும் இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து, வாசலில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். (மாக்கல்லினால் கோலம் போட்டால் பாவம்தான் சேரும்). நாம் அரிசி மாவினால் போடும் கோலம் எறும்புக்கு உணவாகி நமக்கு அளவற்ற புண்ணியத்தைச் சேர்க்கும். பிறகு வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜையறையில் ஒரு தலைவாழை இலையில் ஒரு கலசம் (பித்தளை அல்லது வெள்ளிச் சொம்பு) வைத்து அதில் பச்சரிசி அல்லது சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். தண்ணீர் நிரப்பினால், அதனுடன் சிறிது மஞ்சள்பொடி, ஒரு எலுமிச்சைப் பழம் மற்றும் கருகமணிகள் சிறிது சேர்க்க வேண்டும். கலசத்தை நிரப்பிய பிறகு கலசத்தின் மேல் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பிறகு கலசத்தில் மாவிலை செருகி, அதன் நடுவில் மஞ்சள் பூசிய தேங்காயை வைக்க வேண்டும். அதன் மேல் அம்மன் முகத்தை வைத்து (தற்போது கடைகளில் கிடைக்கிறது) அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாவாடை போன்ற வஸ்திரத்தைச் சாத்தி, நம் விருப்பப்படி மலர்களாலும், நகைகளாலும் அலங்கரிக்க வேண்டும். பிறகு கலசத்துக்கு முன்பாக மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
நல்ல நேரமாகப் பார்த்து தூய பக்தியுடன், ‘சுக்லாம் பரதரம்’ என்ற ஸ்லோகம் சொல்லி விநாயகரை பூஜிக்க வேண்டும். பின்னர் கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம் போன்ற பக்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாகப் பழங்கள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு நைவேத்தியம் செய்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிறை எடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அன்றைக்கு மாலை சில சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்துத் தாம்பூலம் தர வேண்டும்.
மறுநாள் சனிக்கிழமை காலையில் குளித்து விட்டு, பூஜையறைக்குச் சென்று கற்பூர தீபம் காட்டி, அம்மன் அலங்காரத்தைக் கலைக்க வேண்டும். கலசத்தில் நீர் நிரப்பி இருந்தால், அந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அரிசி நிரப்பி இருந்தால் அந்த அரிசியை வீட்டில் உள்ள அரிசியுடன் கலக்க வேண்டும். அதனால் தன தானியங்கள் பெருகும். இவை அனைத்தையும் செய்ய இயலாதவர்கள், செய்பவர்களுடன் ஒரு பிடி அரிசி கொடுத்துச் சேர்ந்து செய்யலாம். இவை எதுவும் இயலாதவர்கள் லட்சுமி தேவியின் படத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பூ சாத்தி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
விரதம் என்பதே அலைபாயும் நம் மனதை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவந்து, மனமுருகி இறைவனை வேண்டி நம் குறைகளைச் சொல்லி நிறைவைப் பெறுவதுதான். அப்படி மனதை ஒருநிலைப்படுத்தி வரலட்சுமி விரதம் இருந்த பின்னர், வரலட்சுமி விரதத்தில் நாம் நைவேத்தியம் செய்தவற்றை மட்டுமே பிரசாதமாக மற்றவர் களுக்குப் பரிமாறிய பிறகுதான் நாம் உண்ண வேண்டும்.
வரலட்சுமி விரதம் தரும் பலன்கள்
மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் ஆனந்தம், குறைவற்ற செல்வம், புத்திரபாக்கியம், ஆரோக்கியம், நினைத்தது நிறைவேறும் என அவரவர் விதிக்கு ஏற்ப வரலட்சுமி வரமாக அருள்வாள். ஸ்ரீசூக்தம், மகாலட்சுமி அஷ்டகம் கனகதாரா ஸ்தோத்திரம் என்று நமக்குத் தெரிந்த ஸ்லோகங் களைப் பாராயணம் செய்யலாம்.
நின் நினைவே நீங்கா இடம் பெறவே
நித்தம் உனை நினைத்து வினை அறவே
நீங்கா புகழ் பெறவே நீ என்றும்
நின் பதியுடனே நெஞ்சில் நிறைந்திடுவாய்
வரலட்சுமி தாயே!
என்று மனமுருகி அவளை வணங்கினால் அவள் அருளால் நமது துன்பங்கள் தீர்ந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களோடு வாழ்வோம் என்பது திண்ணம்.