மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை?

நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை?

நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை?

நாரதரின் வருகைக்காகக் காத்திருந்தோம். ஆனால், ‘கொஞ்சம் பொறுங்கள். கும்பகோணம் பக்கமுள்ள நரசிங்கம்பேட்டையில் இருந்து இப்போதுதான் வந்தேன். சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்’ என்ற மெசேஜ்தான் வந்தது. சொன்னதுபோலவே சற்று நேரத்தில் வந்த நாரதருக்கு இளநீர் கொடுத்து உபசரித்தோம்.     

நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை?

‘`நரசிங்கம்பேட்டையில் என்ன விசேஷம் நாரதரே?’’ என்று கேட்டோம்.

‘`அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு திருக்கண்ணபுரம் சங்கதியை உங்கள் காதில் போட்டுவிடுகிறேன்’’ என்ற நாரதர் தொடர்ந்து,

``திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் கோஷ்டிப் பூசல் இருப்பதால், கோயிலில் பிரம்மோற்ஸவ நடப்பதில் தடங்கல் என்று சொன்னேன் அல்லவா...'' என்ற நாரதரை இடைமறித்து, ‘`ஆமாம்... அதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவானதே...’’ என்றோம்.

``ஆமாம்... அதுபற்றிதான் சொல்ல வந்தேன்'' என்றவர் விரிவாக விளக்கினார்.

‘`கோயில் நிர்வாகத் தரப்பும், கைங்கர்ய சபாவும் இரண்டு அணிகளாக இருந்ததால் பிரம்மோற்ஸவ வைபவம் தடைப்பட்டுவிட்டதாக பக்தர்கள் குறைபட்டுக் கொண்டிருந்தார்கள். கோயில் கும்பாபிஷேகம் செய்ய பாலாலயம் நடத்தப்போவதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மற்ற விழாக்கள் நடத்துவது என்றும் கோயில் நிர்வாகம் ஒருதலைபட்சமாக முடிவெடுத்துவிட்டதாக கைங்கர்ய சபாவினர் குற்றம் சொல்ல, கோயில் தரப்பிலோ, ‘இந்த வருடம் விவசாயமும் இல்லாமல், போதுமான வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். பிரம்மோற்ஸவம் நடத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதற்காக நான்கு முறை ஆலோசனைக் கூட்டங்களைக்கூட நடத்திவிட்டோம். அதில் கைங்கர்ய சபாவினர் கலந்துகொள்ளவில்லை. விரைவிலேயே திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இப்போதுகூட மக்கள் ஒன்றுபட்டுவந்தால் ஆனி மாதத்தில்கூட பிரம்மோற்ஸவம் நடத்தத் தயாராகத்தான் இருக்கிறோம்’ என்று கூறிவந்தார்கள்.

இந்த நிலையில்தான், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். உயர்நீதிமன்றமும் பிரம்மோற்ஸவம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு தர, பிரம்மோற்ஸவ வைபவம் நல்லபடியாக நடந்து முடிந்தது'' என்று கூறி முடித்தவர், அடுத்ததாக நரசிங்கம்பேட்டை கோயில் விஷயத்துக்குத் தாவினார்.

‘‘நரசிங்கம்பேட்டையில் உள்ள யோக நரசிம்மர் கோயில் 1500 ஆண்டுகள் பழைமையானது. மிகுந்த வரப்பிரசாதியான யோக நரசிம்மருக்கு மட்டைத் தேங்காய் கட்டி வேண்டிக்கொள்வது வழக்கம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கடன் பிரச்னை என்று பல்வேறு பிரச்னைகளுக்காக மட்டைத் தேங்காய் கட்டுவார்கள்.     

நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை?

இதற்காக கோயிலில் முழு மட்டைத் தேங்காயில் நம்பர் போட்டுக் கொடுப்பார்கள். அதற்குக் கட்டணமாக 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.தேங்காயைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீகாரியஸித்தி ஆஞ்சநேயரை 11 முறையும், யோக நரசிம்மரை மூன்று முறையும் வலம்வந்து வழிபட்டுவிட்டு,  மட்டைத் தேங்காயைக் கட்டிவிட்டுச் செல்வார்கள் பக்தர்கள். வேண்டுதல் பலித்ததும் கோயிலுக்கு வந்து கட்டிவிட்டுச் சென்ற தேங்காயை எடுத்து உரித்து சிதறுகாய் உடைக்க வேண்டும் எனபது நியதி’’ என்ற நாரதரிடம், ‘‘சரி, இதிலென்ன பிரச்னை?''

‘‘குத்தாலத்தில் இருந்து வந்திருந்த ஒரு பக்தை என்னிடம், ‘வேண்டுதல் செய்து கட்டப்படும் தேங்காய்களைக் கோயிலில் வரையறை இல்லாமல் கண்ட இடங்களில் மூங்கில் கம்பில் கட்டிவிடுகிறார்கள். பிரார்த்தனை பலித்ததும் கட்டிய தேங்காயைக் கண்டுபிடித்து உடைப்பதற்குள் படாதபாடு படவேண்டியுள்ளது. என் மகனுக்காக எனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது. ஆனால், நான் கட்டிய தேங்காயை ஒருநாள் முழுவதும் தேடிவிட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை.அதை உடைக்காவிட்டால் தெய்வ குத்தம் ஆகிடுமோ என்று பயந்துகொண்டிருக்கிறேன்’ என்று கூறினார்’’ என்ற நாரதரிடம்,

‘`அந்த பக்தையின் வருத்தத்தைக் கோயில் நிர்வாகத்தினரிடம் கூறினீரா?’’

‘‘கோயில் மெய்க்காவலர் ராமமூர்த்தியிடம் பேசினேன். ‘பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய ராசி எண்ணில் உள்ள தேங்காயைத் தேர்ந்தெடுத்து அவர்களாகவே விரும்பும் இடத்தில் கட்டிவிடுகிறார்கள். இதை முறைப்படுத்த முடியவில்லை. யாராவது மூங்கிலை இடம் மாற்றி விட்டால், அதில் கட்டியவர்கள் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், மூன்று மாதங்கள் முடிந்துவிட்டால், நாங்களே தேங்காய்களை அகற்றிவிடுகிறோம். தற்போது பக்தர் ஒருவர் இரும்பு ஸ்டாண்டுகள் செய்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்’ என்றார்.’’

‘`அதன்மூலம் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து விடுமா?'' என்றோம்.

‘`திட்டமிடுதல் சரியாக இருந்தால் சாத்தியம்தான். ஸ்டாண்டுகள் வந்ததும் எண்களின் அடிப்படையில் வகைப்படுத்தி தேங்காயைக் கட்டினால், கண்டுபிடிப்பது சுலபம். இந்த ஆலோசனையையும் தெரியப்படுத்தினேன்.  அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்திருக் கிறார்கள்’’ என்றார் நாரதர். அத்துடன் கோயிலின் வேறொரு பிரச்னையையும் பகிர்ந்துகொண்டார்.

‘`நான் அங்கிருந்து புறப்படும்போது என்னைப் பற்றி எப்படியோ தெரிந்துகொண்ட கோயில் சிப்பந்திகள் ஓடிவந்து, ‘இங்கே எங்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் 30 ரூபாய்தான். நூறு நாள் வேலைக்குப் போனால்கூட 120 ரூபாய் தருகிறார் கள். எங்களுக்குச் சம்பளத்தை உயர்த்தித் தர உரிய அதிகாரிகளிடம் பேசுங்கள்’ என்று கூறினார்கள்.’’

‘`பேசினீரா?’’

‘`கோயில் செயல் அலுவலர் பத்ராசலத்திடம் பேசினேன். ‘நீங்கள் சொல்வது என் கவனத்துக்கும் வந்தது. இந்தக் கோயில் உட்பட ஒன்பது கோயில்களின் அர்ச்சகர்கள், சிப்பந்திகளின் சம்பளத்தை உயர்த்தி, அர்ச்சகருக்கு மாதம் 6,000 ரூபாய் மற்றும் சிப்பந்திகளுக்கு 3,000 ரூபாய் என்று நிர்ணயம் செய்து, அதற்கான ஃபைலை மேலிடத்துக்கு அனுப்பி ஒப்புதலும் கிடைத்துவிட்டது. விரைவில் அதன்படி சம்பளம் வழங்கப்படும்’ என்றார்.’’

இதை நாரதர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தவர் ``அடுத்த பயணம் திருநள்ளாறுக்கு...'' என்றதுடன், பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற காரணத் தைச் சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.

படங்கள் : க.சதீஷ்குமார்