கவிஞன்  கனவு!

ராம - லட்சுமணர்களும் சீதாதேவியும் நாட்டின் எல்லையை விட்டுக் காட்டிலே அடியெடுத்து வைத்தார்கள். நட்டநடு நிசியிலே அந்த மூங்கிற்காட்டிலே, அவர்கள் முன் அறிந்திராத அந்தக் காட்டுப் பாதையில் அடிமேல் அடியெடுத்து வைத்துக் கொண்டே அதி ஜாக்கிரதையாகவே சென்றிருக்க வேண்டும். அந்த மையிருட்டு அவர்களை விரைவாக முந்தவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தது. ஆகவே, அந்த இருட்டைப் பாவத்துக்கும் பாவகாரிகளான அரக்கர்களுக்கும் சிநேக பந்துவாக்கி, தரும ஸ்வரூபிகளை அது முன்னேறவிடாமல் தடுக்க முயன்றதாகக் கவிஞன் வர்ணித்தான்.

சித்திர ராமாயணம்

ஆனால், அவர்களா இடையூறுகளுக்கு அஞ்சிப் பின்வாங்குகிறவர்கள்? பாம்பு  முதலான துஷ்டப் பிராணிகளான விலகியோடும்படி, வில் இரண்டையும் டங்காரம் செய்துகொண்டே முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தருமவீரர்களுக்குக் கடவுளே வழி காட்டுகிறாராம். சந்திரோதயமானதும், காரிருளில் வழிகாட்ட வானமே கைவிளக்கு எடுத்தது போலத் தோன்றியது. அந்த நிலாச்சுடர் காட்டிய ஆசைமுகம், தருமத்தின் மலர்ந்த வதனத்தை ஞாபகப்படுத்தியது.

இப்படியாகக் கவிஞன் கண்ட பொற்கனவு, அயோத்தியா காண்டத்திலேயே ஆரணிய காண்டத்துக்கு ஒரு தோற்றுவாயாக அமைந்து விடுகிறது.

சித்திர ராமாயணம்

இருள் பூசிய கலிகாலம்

இருளின் சக்திகளைத் தண்டகாரண்யத் திலே தான் ராம - லட்சுமணர்கள் நன்றாக அறியத் தொடங்குகிறார்கள். இவ்வனத்தில் அவர்கள் அடிவைத்தவுடன், `கங்கு பூசிவரு கின்ற கலி காலம் எனவே...’ விராதன் வந்து எதிர்ப்படுகிறான். அவனை நாம் உற்றுப் பார்க்க வேண்டும் - அச்சமில்லாமல் கவிதைக் கண்ணாடி வாயிலாக:

தங்கு திண்கரிய காளிமை
    தழைந்து தவழப்
பொங்கு வெங்கொடுமை என்பது
    புழுங்கி எழ,மா
மங்கு பாதகம் விடம் கனல்
    வயங்கி நிமிரக்
கங்கு பூசிவரு கின்றகலி
    காலம் எனவே...


ராமாயணம் திரேதாயுகத்தில் நடந்தது என்பர். அந்த யுகத்திலேயே இந்தக் கலியுகத்தைக் கொண்டுவந்து விடுகிறானாம் விராதன்.

அமாவாசை இருட்டில் பொல்லாத கொலைகாரன் ஒருவன் கன்னங்கரேல் என்றிருக்கும் தன் உருவத்தின் மீது கரிய மையையும் பூசிக்கொண்டு வருவதுபோல், கலிகாலமானது அமாவாசை இருட்டைக் கருஞ்சாந்து போலக் குழைத்துப் பூசிக்கொண்டு வருகிறதாம். பயங்கரமான அந்த அட்டக் கறுப்பிலே, மங்கி எரியும் பெரும் பாவமும் விஷமும் கனலும் எப்படியோ கலந்து ஒளிர்வதுபோலத் தோன்றுகிறதாம்.

இந்த விராதன் மத யானைகளையும், அவற்றின் விரோதிகளான சிங்கங்களையும் யாளிகளையும் தன் பெரிய இரும்புச் சூலத்தில் ஒருசேரக் கோத்துக் கையால் பிடித்துக் கொண்டிருக்கிறானாம். இது விராதனுடைய சமதர்மம்.

தலையெல்லாம் சுருட்டை ரோமங்கள். ஆ! அந்தக் கண்கள் இரண்டு புண்கள் போலச் சிவந்து ஒளி செய்கின்றனவாம், அட்டக் கரியான மேனியிலே.

‘அறிவில்லாதவர்களுக்குக் கண்கள் முகத்திலே இரண்டு புண்கள்’ என்றார் திருவள்ளுவர். விராதனுடைய அத்தகைய கண்களிலிருந்து கோரமாய்க் கனல் பொங்குகிறது. விண்ணும் மண்ணும் நடுங்குகின்றனவாம் இந்த அரக்கனைக் கண்டு.

வரும்போதே பெரும் பசியோடு வருகிறான். தன் சூலத்தில் அலட்சியமாகக் கோத்துப் பிடித்துக்கொண்டு வந்த யானை முதலிய உணவு வகைகளைப் பாக சாஸ்திரத்தின் உதவியில்லாமலேயே உட்கொள்கிறானாம். அவையெல்லாம் போகப்போகத் தொலையாதிருக்கும் அந்தக் குகைக்குள் போய்க்கொண்டே இருக்கின்றன!

பின்று கின்றபிலனிற் பெரிய
    வாயின் ஒருபால்
மென்று தின்று விளியாது
    விரியும் பசியொடே


இந்தப் பெரும் பசியன், ராட்சஸக் கோமாளி, தன் விருந்து விசித்திரங்களுக்கிடையே புது விருந்தாக வரும் அரசிளங்குமரரைப் பார்க்கிறான்; அரசிளங்குமரியையும் பார்க்கிறான். கோரப் பற்களோடு கூடிய வாயைத் திறந்து, ‘நில்லும் நில்லும்’ என்று அதட்டிக்கொண்டே வந்தவன், சீதையைக் கண்டதும் மற்றவர்களைப் புறக்கணித்துச் சீதையை ஒரு கையால் எடுத்துக்கொண்டு ஆகாய மார்க்கமாய்க் கிளம்பிவிடுகிறான்.

11.1.1948 ஆனந்தவிகடன் இதழிலிருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism