மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 40

சிவமகுடம் - 40
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 40

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

பால் வண்ணத்துடன் தண்ணொளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்த  சுக்லபட்சத்தின் திரயோதசி தினத்து வெண்ணிலவு, அந்த எல்லைப்புற சிவாலயத்தின் சுற்றுப்புறத்து இருளை விலக்கி வெளிச்சமாக்கிக்கொண்டிருக்க, நிலவுக்கு வடக்காக சிறிது தொலைவிலேயே சுடர்விட்டு மின்னிய சுவாதி நட்சத்திரத்தின் தாரைகள் சிலவும், விநோதமான மினுமினுப்போடு தங்களின் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.     

சிவமகுடம் - 40

மிக அற்புதமான நட்சத்திரம் என்பார்கள் சுவாதியை. இந்த விண்மீனுக்குரிய நாளில் மழை பெய்து, அதன் துளியில் ஒன்று சிப்பிக்குள் விழுந்தால், அந்தத் துளி நாளடைவில் முத்தாக மாறுமாம். காலம் அப்படியோர் அற்புத முத்தை பாண்டிய தேசத்துக்கு வழங்குவதற்காகவே, இந்த சுவாதி நட்சத்திரத்து தினத்தைத் தேர்ந்தெடுத்தது போலும்.

ஆம்... வெகு அபூர்வமாகவே  பார்வை  புலனுக்குப் புலப்படும் சுவாதியின் தாரைகள், அன்றைய இரவில் தண்ணிலவையே தோற்கடிக்க  எத்தனித்தது போல், வழக்கத்தைவிடவும் அதிகமான ஒளிர்தலுடன் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. அடிவானின் அந்த அழகுக்கோலத்தை ரசிக்க வொட்டாது, பூமியில் சிவாலயக் கருவறையின் தீபவொளியில் ஒன்றுக்கு நூறாக வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்த மணி மகுடத்தின்... இல்லையில்லை... மானியார் குறிப்பிட்டதுபோன்று அந்தச் சிவமகுடத்தின் ரத்தினக்கற்களை வெகு ஆச்சர்யத்துடன் ரசித்துக் கொண்டிருந்தார் குலச்சிறையார்.

சென்ற அத்தியாயத்தில்... வழிபாடு முடிந்ததும் இளவரசியார் கைகாட்டியதும் கருவறைக்குள் நுழைந்த குலச்சிறையார், அங்கே பிலத்துக்குள் இருந்த பேழையை எடுத்து வந்தார் என்று பார்த்தோம் அல்லவா? அப்படியொன்றும் இலகுவாக அந்தப் பேழையை அவர் எடுத்து வந்துவிடவில்லை. மானியார் கட்டளையிட்டதும், கருவறைக்குள் நுழைந்தவர் சிறிது பொழுது கரம் குவித்து, சிரம் தாழ்த்தி சிவப்பரம்பொருளை தியானித்து வணங்கியபடி காத்திருந்தார். பின்னர் ஏதோ கட்டளையொலி போன்று எங்கிருந்தோ சங்கநாதம் ஒலிக்க, அதைச் செவிமடுத்ததும் திருப்தியடைந்தவராகக்  கண்ணலர்ந்தார். லிங்கத் திருமேனியின் பின்புறமாகச் சென்று சுவரில் அந்த ரகசியத்தைத் தேடினார்.

ஏற்கெனவே மானியாரின் வழிகாட்டுதல் இருந்தபடியால், வெகு சுலபமாகவே அவர் கைகளுக்கு அகப்பட்டது அந்த ரகசியப்பொறி. சங்கிலி விளக்குகளைத் தாங்கும் குமிழ்போன்று திகழ்ந்த  அந்த  அற்புதத்தைக் கடும் பிரயத்தனத்துடன் அவர் வலப்புறமாகத் திருகினார். மறுகணம், ‘கர்புர்’ரென்ற விநோதச் சத்தத்தோடு,  லிங்கத் திருமேனியின் ஆவுடையாருக்கு அருகிலேயே தரையில்...  ஒரு முதலையைப் போன்று வாயைப் பிளந்து, தன் இருப்பைக் காட்டியது அந்தப் பிலம். உள்ளே அந்தப் பேழை!

சிவமகுடம் - 40வெகு ஆர்வத்தோடு அவர் அதை எடுத்துவந்து மானியிடம் அளிக்க, அவள் அதைத் திறந்ததும்தான் தாமதம்... வியப்பில் உறைந்துபோனார் குலச்சிறையார். ஆச்சர்யத்தில் விழிகள் விரிய, ‘‘அற்புதம்... அற்புதம்’’ என்று அவரையும் அறியாமல் முணுமுணுக்கவே செய்தன அவரின் இதழ்கள்.

எதற்கும் அசராத அந்த மாமனிதரையே அந்த மணிமகுடம் அசரவைத்தது என்றால், காரணம் அதன் பேரழகு மட்டுமல்ல; அடுத்தடுத்து இளவரசி சுட்டிக்காட்டியபடி அதில் பொதிந்திருந்த ரகசியங்களும்தான்.

ஐவகை உலோகங்களில் பொன்னை அதிகம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த அந்த மகுடம், அதில் பதிக்கப்பட்டிருந்த கற்கள், ரத்தினங்கள், முத்துப்பரல்களால் பெரிதும் ஜொலிஜொலித் தது. அதிலும் கருவறை தீபச்சுடரின் ஒளிபட்டு, ரத்தினக்கற்கள் ஒன்றையொன்று பிரதிபலிக்க சிவப்பு, பச்சை, நீலம் என்று மாறி மாறி உருவான விநோத வர்ணஜாலத்தால், அந்த இடமே தேவபுரியாகத் தோன்றியது அவருக்கு.

அதுமட்டுமா? அதோ மகுடத்தின் பிரதானமாய் எம்பிரானின் லிங்க சொரூபம். அவர் அமர்ந்திருக்கும் பீடத்தைத் தாங்கும் வண்ணம் படமெடுத்து திகழும் சர்ப்பம், லிங்கத்துக்கும் மேலாக மகுட உச்சியில் பிறைச்சந்திரன்... ‘அப்பப்பா... உன்னதத்திலும் உன்னதம்’ என்று மகுடத்தின் மகத்துவத்தைக் கண்டு மலைக்கவே செய்தது அவருள்ளம்.

மகுடத்தின் வேலைப்பாடுகளும் கலை நுணுக்கமும் இந்த அளவுக்கு என்றால், அதன் இருபுறமும் அலங்காரப் பொதி போன்று திகழ்ந்த வட்டவடிவ பாகம் மற்றும் நாகமுகம் தொடர்பான ரகசியத்தை இளவரசி மானி உடைத்ததும்... அதுவரையிலும் மகுடம் குறித்து மலைத்திருந்த அவரின் மனம், மானியின் மதியூகத்தை நினைத்து வியந்தது. தொடர்ந்து, அந்தச் சிவமகுடத்தைத் தன் மார்போடு அணைத்தபடி அவள் ஏற்றுக்கொண்ட சங்கல்ப வார்த்தைகளைக் கேட்டபோது,  சாட்சாத் தடாதகை பிராட்டியே மீண்டும் அவதரித்ததாகக் கருதி பேருவகைக் கொண்டது.

ஆம்... இடக்கை மகுடத்தை மார்போடு சேர்த்து அணைத்திருக்க, தன் வலக்கைச் சுட்டுவிரலால், மகுடத்தின் அலங்காரப் பொதி போன்ற வட்ட பாகங்கள் ஒவ்வொன்றின் விளிம்பையும் சற்றே அழுத்தமாக அவள் தொட்டதும் அவை திறந்துகொண்ட அற்புதத்தைக் கண்டார். அதுபோன்றே நாகமுகமும் அவள் தொட்டதும் விலகி சிறியதொரு அறையைக் காட்டியது அவருக்கு. ஆக, வட்ட பாகங்களில் தலா இரண்டும், நாகமுகத்தில் ஒன்றுமாக மொத்தம் ஐந்து அறைகள் அமைந்த ‘மகுட ரகசியம்’ அவரை அசரடிக்காமல் இருந்தது என்றால்தான் ஆச்சர்யம்.

‘அற்புத மகுடத்துக்குள் இந்த அறை ரகசியங்கள் எதற்காக?’ என்று தன்னுள் எழுந்த கேள்வியை அவர் கேட்பதற்குமுன் தொடங்கிவிட்டிருந்தது மானியின் சங்கல்ப படலம்!

அதற்காகவே காத்திருந்ததுபோன்று, அதுவரையிலும் மெல்லியதாக வீசிக்கொண்டிருந்த காற்று, திடுமென ‘ஹோ’வென்ற பேரிரைச்சலோடு ஆவேசத்தைக்காட்ட, காற்றின் ஓசையோடு அதன் வேகத்தால் சலசலத்து ஆடிய கோயில் மணிகள் எழுப்பிய சத்தமும், கருவறை பிலத்தைத் திறக்க அறிகுறி காட்டிய சங்கநாதம் மீண்டும் ஒலித்ததால் உண்டான சத்தமும், இந்த அரவங்களால் சலனமுற்ற அவர்களது புரவிகளின் கனைப்பொலியும் சேர்ந்துகொள்ள... ஒருவித மங்கலச் சூழலோடு அரங்கேறியது மானியின் சங்கல்பம்.

தென்னாட்டில் சிவம் செழிக்கும்
தென்னாட்டில் சிவம் செழிக்கும்
தென்னாட்டில் சிவம் செழிக்கும்

ஓங்கிக் குரெலடுத்து இந்த வார்த்தை களை மும்முறைக்கூறி சங்கல்பித்த மானியின் அந்த ஆவேசம், காற்றின் சலனத் தால் ஆடிய மகிழமரம் கிளையசைத்து உதிர்த்த பூக்களால் அடங்கியது.  ஆம்... அவளின் அந்தச் சங்கல்பத்தை எம்பெருமான் ஏற்றுக்கொண்டு விட்டதற்கு அத்தாட்சியாய், மகிழமரத்தின் உருவில் மகேசனின் பூவாக்குக் கிடைத்தபடியால், மீண்டும் மலர்ந்தது, அவளின் திருமுகம்.

அப்படி அவளின் முகம் மலர்ந்ததும் தான், வாய் திறக்க துணிவு ஏற்பட்டது குலச்சிறையாருக்கு. ‘‘அன்னையே! சில கணப்பொழுதில் அந்தக் கயிலையையே கண்டு மீண்டுவிட்டேன் நான்.’’

‘‘என்ன சொல்கிறீர்கள்... துறவியாரே? புரியும்படி கூறுங்கள்’’ அவள் குரலில் மீண்டும் தாய்மையின் பரிவு குடியேறிவிட்டதை  உணர்ந்த பாண்டிய தேசத்தின் அமைச்சர், இன்னும் உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார்.

‘‘தாயே! தங்கள் சங்கல்பத்தையும் அதற்கு இயற்கையின் வடிவில் அந்த ஈசன் ஆசி வழங்கிய அற்புதத்தையும் பார்க்கக் கொடுத்து வைத்த எவரும், அந்தக் கணப்பொழுதில் தான் கயிலையில் இருப்பதாகவே உணர்வார்கள். அப்படியான அற்புதமம்மா நான் கண்டதும் உணர்ந்ததும்...’’ அமைச்சரின் குரல் உடைந்து நா தழுதழுத்தது. அவர் உணர்ச்சியின் தத்தளிப்பில் இருப்பதைப் புரிந்துகொண்டபடியால் பதில் பேசாது, அவரைக் கவனித்துக்கொண்டிருந்தாள் மானி.

தனது நிலையை அமைச்சரும் உணர்ந்திருக்க வேண்டும். எனவே, சற்றுப் பேச்சை நிறுத்தி, தத்தளிப்பான மனநிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர், மானியின் திருமுகத்தை ஏறிட்டார். இப்போது  அவரது முகத்தில் கம்பீரம் மீண்டுவிட்டதை மானியால் அறிய முடிந்தது. தொண்டையைச் செருமியபடி மீண்டும் பேச ஆரம்பித்தார் அவர்.     

சிவமகுடம் - 40

‘‘இளவரசியாரே! தங்கள் தரப்பு குறித்த ரகசியம் அனைத்தையும் தெரிந்துகொண்டு விட்டேன் என்ற இறுமாப்பில் இருந்தேன். அதை உடைத்தெறிந்துவிட்டது, சிவமகுடம். இதுபோன்று இன்னும் எத்தனையெத்தனை புதிர்களை நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்களோ... தெரியவில்லை. அடியேனின் உள்ளம் எப்போதும்  பாண்டியதேசம், சோழம் என்று பிரித்துப் பார்த்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவம் எனும் ஒரு குடையின்கீழ் தென்னகம் வர வேண்டும் எனில், தாங்கள் அறிந்ததில் ஒரு பாதியாவது எனக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...’’

இறைஞ்சுதலும் அவசியத்தை உணர்த்தும் பாங்குடனும் அவர் விண்ணப்பிக்க, மெள்ளப் புன்னகைத்தாள் அந்த மாதரசி.

‘‘சிவமகுடம் என்ற இந்த ஒன்றைத் தவிர, தாங்கள் அறியாத விஷயம் வேறெதுவும் இல்லை அமைச்சரே. இப்போது இதையும் கண்டுகொண்டீர் அல்லவா...’’ என்றவளை இடைமறித்துக் கேட்டார் அமைச்சர். ‘‘மகுடத்தின் அந்த ரகசிய அறைகள் ஏனென்பதுதான் புரியவில்லை தாயே!’’

‘‘அமைச்சரே! வருங்காலத்தில் நாம் இருவரும்கூட பேச முடியாத நிலை உருவாகலாம். அப்போது மாமதுரையின் பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்படும் இந்தச் சிவமகுடமே ராஜாங்க ரகசியங்களை நம்மிடையே பகிர்ந்துகொள்ளும்’’ என்று பதிலளித்தாள். அதற்கு மேலும் அதுகுறித்து விளக்கம் தேவைப்படாது சிறந்த மதியூகியான அமைச்சருக்கு என்பதையும் அவள் அறிந்துகொண்டாள்.

அத்துடன், ஏதோ சட்டென்று நினைவுக்கு வந்தவளாகக் கேட்டாள். ‘‘ஆமாம்... இந்தச் சிவமகுடம் தவிர மற்ற அனைத்தையும் அறிவேன் என்றீர்களே... எனில், பூ வாக்கு ரகசியம்..?’’

இக்கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் பதில் சொல்லத் தொடங்கினார் அமைச்சர். ‘‘போரில் வெல்வது; ஒருவேளை வீழ்ந்தாலும் வீரத்தை நிலைநாட்டிச் செல்வது. இந்த இரண்டும் போக, எங்கள் மன்னவரின் மனத்திட்டம் அறிந்து சிவனருளோடு மூன்றாவதாக நீங்கள் வைத்திருக்கும் மூன்றாவது திட்டம்தான் ‘பூ வாக்கு’ ரகசியம் என்பதை சோழபிரான் மூலம் அறிந்துகொண்டேன்’’ என்று புன்னகைத்தவர், சட்டென்று அமைதியானார்.

திடுமென என்ன நினைத்தாரோ... பேச்சை நிறுத்தியதோடு கண்களையும் மூடிக்கொண்டார். விழித்தபோது அவர் கண்கள் பனித்திருந்தன. நினைத்த நற்காரியம் ஒன்று நிறைவேறிவிட்ட பூரிப்பால், தன் கண்மலரில் ஊற்றெடுத்துவிட்ட நீரைக் கைகளால் துடைத்துக்கொண்டவர், சட்டென்று  தனது குறு வாளை எடுத்து மானியிடம் கையளித்து முழந்தாளிட்டுப் பணிந்தவர்,
‘‘பாண்டிமாதேவி அவர்களே வாழ்க!’’ என்று உரக்கக் கூவினார்.

அவரின் செய்கைக்கான காரணம் புரியாதது போல் மானி விழிக்க, குதூகலத்தோடு எழுந்த அமைச்சர், தனது வணக்கத்துக்கும் மகிழ்வுக்கு மான காரணத்தைச் சொன்னார்.

‘‘இந்நேரம் தங்களின் பூ வாக்கு எண்ணமும் பலித்திருக்கும். நீங்கள் யூகித்ததுபோலவே நம் மன்னவரின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. ஆம்... தங்களை மணக்கும் விருப்பத்தை ஏற்கெனவே என்னிடம் அறிவித்துவிட்டார் தென்னவர்!’’ என்று  உள்ளம் துள்ளக் கூறியவர் மீண்டும் வணங்கி எழுந்தார், தமது தேசத்தின் எதிர்காலப் பேரரசியை.

மகிழமரம் மீண்டும் அசைந்தாடி பூ தூவியது மானியின் மீது.

‘வளவர்கோன் பாவை  வரிவளைக் கைம்மட மானி  பங்கையச் செல்வி பாண்டிமா தேவி...' என்றெல்லாம் சமயச் சான்றோர்கள் போற்றும் படியாக அவளும் அவளால் தென்னகமும் சிறக்கப்போவதை எண்ணி காலமும் அகமகிழ்ந்து சிரித்தது.  

இதன் பிறகே நம்பிதேவன் வந்துசேர்ந்தான் அங்கு. அவனோடு  மிகப் பத்திரமாகப் பயணித்தது சிவமகுடம். ஆனால், மானி குறிப்பிட்டது போல் அது சென்றடைந்தது மாமதுரையை அல்ல!

***

தேநேரம், `சேரன் பின்னடைகிறான்' என்ற வெற்றிச் செய்தி வந்துசேர, அதுகுறித்த பூரிப்புடனும் இளவரசி மானி தனக்கு மனைவியாய் வரப்போவது குறித்த மகிழ்ச்சியோடும் உறையூர் கோட்டையில்  இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தார் கூன்பாண்டியர்.

பார்வை மாடத்தில் நின்றபடி, பரிவாரங் களோடு கோட்டை வாயிலைத் தாண்டிச் செல்லும் கூன்பாண்டியரை நோக்கி உற்சாக மாகக் கரங்களை அசைத்து வழியனுப்பிக் கொண்டிருந்த சோழ பிரானின் மனதில் எந்த அளவுக்கு சந்தோஷம் இருந்ததோ, அந்த அளவுக்குச் சலனமும் அதற்குக் காரணமான சில கேள்விகளும் இருக்கவே செய்தன.

`பூ வாக்கு திட்டம்' என்று பாண்டியனை மணந்துகொள்ளும் முடிவுக்கு மானி வந்தது ஏன்?

முரடன் அச்சுதன் வெறும் கருவியே என்பது புரிகிறது. எனில், அவனை ஏவிய மூலம் எது?

அவரைப் போன்றே உங்களுக்குள்ளும்... அச்சுதனை ஏவிய சமணத் துறவியார் என்னவானார், சிவமகுடம் மதுரைக்குச் செல்லவில்லையெனில், அதன் நிலை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

இவை மட்டுமல்ல, இக்கதை குறித்து இன்னும் பல கேள்விகளோடும் அவற்றுக்கான பதில்களோடும் விரைவில் சந்திப்போம்.

(முதல் பாகம் நிறைவடைந்தது)