Published:Updated:

காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

மு.இராகவன்
காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள துலாக்கட்ட காவிரியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாய் நடந்துவருகிறது.  

ஆடிப்பெருக்கு விழா என்பது ஆடி மாதம் 18-ம் நாள் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியைப் பெண்ணாகக் கருதி வழிபடும் நாளாகும். உழவர்கள் கழனிக்கு தண்ணீர் கொண்டு வந்து விவசாயம் செழிக்க உதவும் புண்ணிய நதிகளை வணங்கி வரவேற்கும் நாள். இம்மாதத்தில் விவசாயம் தொடங்கினால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய இயலும். அதனால்தான் `ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியும் வழக்கில் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் காவிரி பாய்ந்து பூம்புகார் கடலில் சங்கமிக்கும் வரையில் காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்நாளில் பல்வேறு விதமான வழிபாடுகள் செய்வார்கள்.  

அந்த வகையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இன்று காலை முதலே இதுவரை சுமார் 5,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் காவிரித் தாயை வணங்கி மகிழ்ந்துள்ளனர். இந்த வழிபாடுகளில் முக்கியமானது சுமங்கலி பூஜை ஆகும். துலாக்கட்ட காவிரி படித்துறையில் வாழை இலை விரித்து, அதில் விளக்கேற்றி, புது தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் பழங்கள் என மங்கல பொருள்கள் வைத்து காவிரி அன்னையை நினைத்து வழிபாடு செய்தார்கள்.  பனை ஓலையில் சுற்றிய வலையல்களோடு மங்கலப் பொருள்களைக் காவிரித் தாய்க்கு சீர்வரிசையாகத் தந்தார்கள். அதன்பின் குடும்ப நலன் வேண்டி அருகில் உள்ள அரச மரத்தைச் சுற்றி மஞ்சள் நூல் கயிற்றைக் கட்டி வணங்கினார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி மூதாட்டியின் கையால் புது தாலிக்கயிற்றைப் பெற்று அணிந்துகொண்டார்கள். திருமணம் ஆகாத ஆண்களின் கைகளிலும் பெண்களின் கழுத்துகளிலும் மஞ்கள் நூலைக் கட்டிவிட்டனர். பச்சரிசியுடன், சர்க்கரை, வெல்லம் கலந்து காவிரித் தாய்க்குப் படைத்த பிரசாதத்தைக் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள். கடந்த ஆண்டு திருமணமான புது தம்பதியினர் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் கொண்டு வந்து காவிரியில் இட்டனர். காவிரித் தாய் சமுத்திர ராஜனுடன் சங்கமிக்கும்போது இந்தத் திருமண மாலைகளும் அதனோடு சேர்ந்து செல்வதால் தம்பதியினர் வாழ்வில் சந்தோஷமாகச் சங்கமிப்பர் என்பது நம்பிக்கை.  

ஆறுகளில் வந்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாட முடியாதவர்கள், வீட்டிலேயே வழிபாடு செய்கின்றனர். நிறைகுடத்திலிருந்து ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை எடுத்து கரைத்து விளக்கின் முன் வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கலிட்டு கங்கை, யமுனை, நர்மதை, காவிரி முதலான புண்ணிய நதிகளை மனதார எண்ணி தீபாராதனை செய்கின்றனர். இறுதியில் மஞ்சள் நீரை மரம் செடிகள் உள்ள இடத்தில் ஊற்றி நிறைவுசெய்கின்றனர். பார்வதி தேவி திருமணத்துக்கு முன் அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் நதியாக உருவெடுத்து வருவதாகவும் அவளை இந்நாளில் வணங்கினால் சுமங்கலி கடாட்சம் கிட்டும் என்பது ஐதிகம். எனவேதான் இந்நாளில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நாகையிலிருந்து மிதவைப் படகு கொண்டுவரப்பட்டு அதிலிருந்து கண்காணிக்கிறார்கள். மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.