Published:Updated:

குடகு முதல் பூம்புகார் வரை காவிரி தழுவி வரும் ஆன்மிகத் தலங்கள்! - புகைப்படத் தொகுப்பு

குடகு முதல் பூம்புகார் வரை காவிரி தழுவி வரும் ஆன்மிகத் தலங்கள்

குடகு முதல் பூம்புகார் வரை காவிரி தழுவி வரும் ஆன்மிகத் தலங்கள்! - புகைப்படத் தொகுப்பு
குடகு முதல் பூம்புகார் வரை காவிரி தழுவி வரும் ஆன்மிகத் தலங்கள்! - புகைப்படத் தொகுப்பு

குடகுமலையில் பிறக்கும் காவிரித்தாய், பல்லாயிரம் ஏக்கர்  நிலங்களைப் பொன்விளையும் பூமியாக்கி, பல்வேறு புண்ணிய தலங்களைத் தொழுதுவிட்டு பூம்புகாரில் கடலில் இணைகிறாள். தெய்விகச் சிறப்பும் பேரழகும் ஒருங்கே பெற்ற காவிரி, தமிழர்களின் உயிரில் ஈரமாகப் படிந்திருக்கிறாள். இந்த ஆடிப்பெருக்கு நன்நாளில், குடகு முதல் பூம்புகார் வரை காவிரி தழுவி வரும் ஆன்மிகத் தலங்கள் பற்றிப் புகைப்படங்களாகத் தரிசிக்கலாம்!

`குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு' என்று இளங்கோவடிகள் புகழும் காவிரி, கர்நாடகத்தின் குடகு மாவட்டம், பிரம்மகிரி மலையில் உற்பத்தி ஆகிறாள். தலைக்காவிரி என்று போற்றப்படும் இந்தப் புனிதத் தலத்தில் காவிரியை, 'காவிரியம்மன், காவிரியப்பா' என்று மக்கள் உணர்வுபூர்வமாக அழைக்கிறார்கள்.

காவிரி உருவாக்கும் முதல் தீவு, ஸ்ரீரங்கப்பட்டினம். இதற்கு, `ஆதிரங்கம்' என்று பெயர். இங்கு, அரங்கநாதருக்கு மாலையிட்டு வணங்கியபடி தமிழகத்தை நோக்கிப் பாய்கிறாள் காவிரி. 

தமிழகத்துக்குள் காவிரி கால்வைக்குமிடம் 'ஒகேனக்கல்'. இங்கு, கூத்தப்பாடி, தேசனீஸ்வரரை தரிசித்துவிட்டு குறுகிய பாறைகளுக்கு இடையில் விழுந்தோடி எழுந்து வருகிறாள் காவிரித்தாய். 

சேலம் மாவட்டத்துக்குள் நுழைந்து, காவேரிபுரத்தில் ஜலகண்டேஸ்வரரைத் தொழுதுவிட்டு மேட்டூர் சொக்கநாதரை சரணடைகிறாள்.

பவானி காவிரியுடன் சங்கமிக்கும் இடம் `தென் திரிவேணி சங்கமம்'. இங்கு ஆகாய மார்க்கமாக அமிர்த ஆறு காவிரியுடன் சங்கமிப்பதாக நம்புகிறார்கள். பவானி கூடுதுறையில் ஸ்ரீசங்கமேஸ்வரரின் பாதம் தழுவி, பயணிக்கிறாள் காவிரி. காவிரி நனைக்கும் தலங்களெல்லாம் புனிதத் தலங்களாக மாறுகின்றன. 

பவானி கடந்து, கருவூர் பசுபதீஸ்வரரின் அருள் பெற்று ரங்கநாதரை நோக்கிப் பயணிக்கிற காவிரி பெரும் நிலப்பரப்பை பசுமையாக்கி, பல லட்சம் பேரின் தாகம் தணித்து புரண்டோடி வருகிறாள். .

தமிழகத்தில் காவிரி இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணையுமிடம்  திருவரங்கம். இதற்கு `மத்திய ரங்கம்' என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு ரங்கநாதரை வணங்கியபடி படுகைக்குள் நுழைகிறாள் காவிரித்தாய்!. 

முக்கொம்பு வழியாக கல்லணையில் குவிகிற காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், வெட்டாறு எனத் தனித்தனி கால்வாய்களாக சமவெளியெங்கும் பாய்ந்து நிலத்தை வளமாக்குகிறாள். 

கொள்ளா நீரும் கொள்ளுமிடம் கொள்ளிடம். காவிரி ஆற்றில் பெருகிவரும் நீர் வடிந்து செல்ல உருவாக்கப்பட்டது கொள்ளிடம். கொள்ளிடம் ஆறு இரண்டாகப் பிரிந்து ஒன்று சேருமிடம் அப்பாலரங்கம். இங்கும் ரங்கநாதரின் திருவடியை ஈரமாக்கிவிட்டு  பயணம் நீள்கிறது. 

கல்லணை கடந்து தஞ்சைக்குள் நுழையும் காவிரி பெருவுடையாரின் தரிசனம் பெற்று, தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறாள்.  

காவிரி, அரசலாறு என இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாய் இணையுமிடம்  சதுர்த்தரங்கம். இங்கு வீற்றிருக்கும் பெருமாளின் தன் ஈரக்காற்றால் அர்ச்சித்துவிட்டு நகர்கிறாள். 

பாயும் வழியெங்கும் நிலங்களைச் செழிக்கச் செய்வதால், `நடந்தாய் வாழி காவேரி' என்று காவிரித்தாயை இளங்கோவடிகள் போற்றுகிறார். 

தமிழகத்தை வளப்படுத்தும் காவிரிக்கு நன்றி செலுத்துவதற்காக ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. 

நிலத்தை, பொன்விளையும் பூமியாக்கியதால் காவிரிக்குப் `பொன்னி நதி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 

`வான்பொய்ப்பினும் தான்பொய்யா; மலைத்தலைய கடற்காவிரி' என்று `பட்டினப்பாலை'யில் காவிரியைக் கொண்டாடுகிறார் உருத்திரங்கண்ணனார். `வான் பொய்த்தாலும், தான் பொய்யாக் காவிரி, குடகு மலையில் தொடங்கி நிலத்தை வளப்படுத்தி கடலில் கலக்கிறாள்' என்பதே அதன் பொருள்! 

`கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை' என்று `மணிமேகலை'யில் காவிரி பற்றிப் பாடுகிறார் சீத்தலைச் சாத்தனார், `கோள்கள் இடம் மாறி கோடை நீடித்தாலும் தன்னிலை மாறாமல் பாய்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப் பாவை காவிரி' என்பதே இதன் பொருள்.  

கர்நாடகத்தின் குடகு மலையில் உதித்து, பயணத்தைக் தொடங்கும் காவிரி சுமார் 800 கி.மீ பாய்ந்தோடி நிலங்களை வளப்படுத்தி, புனிதப்படுத்தி பூம்புகாரில் வங்கக்கடலோடு சங்கமிக்கிறாள்!