சித்திர ராமாயணம்

என்ன கோலம், என்ன கோஷம்!

விராதனின் நடையில்தான் என்ன மிடுக்கு, என்ன வேகம்! முடுகிச் செல்லும் வேகத்திலே மலைகள் பிளந்துபோவது போலவும், மரங்கள் இடம்விட்டுப் பெயர்ந்துபோவது போலவும் தோன்றுகிறதாம். தன்னால் கொல்லப்பட்டவர் களது ரத்தத்தைச் சந்தனம்போல் - செஞ்சந்தனக் குழம்பாய் - நெஞ்சிலே பூசிக்கொண்டிருக்கும் கோரம் தெரிகிறது. அவன் நெருங்கி வர வர தற்கால யந்திர ராட்சஸனுடைய கோரமும் வேகமும் பலமும் பசியும் விராதனிடத்திலும் காணப்படுகின்றனவா?

ஆனால், இந்த இதிகாச ராட்சஸனுக்கு நாகரிகம் இல்லை, சூழ்ச்சித் திறமும் இல்லை; மிருக பலமும் யந்திர பலமும் உண்டு. பல்லாயிரக் கணக்கான மதயானைகளின் பலத்தையும் மதத்தையும் உடையவன், தன் மிருக பலத்துக்கு அறிகுறியாக யானைத் தோல்களை இடுப்பில் உடையாகச் சுற்றிக்கொண்டு, அதன் மேல் அரைக் கச்சாக மலைப்பாம்பைக் கட்டியிருக்கிறான்; புலித்தோல்களை உத்தரியமாக முறுக்கி விட்டிருக் கிறான். இது இவன் கோலம்.

இனி, விராதன் வருகிற கோஷத்தைத் தான் எப்படி ஒலிப்பதிவு செய்திருக்கிறது இந்தக்கவிதை;

செங்கண் அங்கஅர வின்பொரு-

சித்திர ராமாயணம்


    வில்செம் மணிவிராய்,
வெங்கண் அங்க வலயங்களும்
    விலங்க விரவிச்,
சங்க ணங்கிய சலஞ்சலம்
    அலம்பு தவளக்
கங்கணங்களும் இலங்கிய
கரம்பி றழவே


கைவளைகள், தோள் வளைகள் கிலுகிலுக்க விராதன் வருகிறான் என்பதுதான் பாட்டின் பொருள். இவ்வளைகளைக் கை நிறையத் தோள் நிறைய அடுக்கிக்கொண்டு இக்கிலுகிலுப்பிலே, குழந்தைகளுக்குக் கிலுகிலுப்பையிலுள்ள களிப்பை அனுபவித்துக்கொண்டு வருகிறான். இப்படி வருவதே இவனை ஓர் அநாகரிக ராட்சஸக் கோமாளி என்பதைக் காட்டுகிறது.

இனி, பொருளை விட்டுவிட்டுப் பாட்டை மட்டும் பாடிப் பாடிப் பாருங்கள். பாடிப் பாடி மானசீகமாய்க் கேளுங்கள். சத்தம் போடாமல் ஊர்ந்து வந்துவிடும் பாம்பைப் போல் விராதன் வரவில்லை; எச்சரிக்கை செய்வது போல், சத்தமிட்டுக் கொண்டே வந்து சேரும் (rattle - snake) ஒருவகைப் பாம்புபோல் ‘கணகண, சலசல, கரகர’ என்று வளைகள் ஒலிக்க வந்து தோன்றுகிறானாம்.

போர் தெரியாது!

இவன் பளிச்சென்று சீதையை ஒரு கையால் தூக்கிக்கொண்டு ஆகாச மார்க்கமாய்ப் புறப்பட்டதும், `‘அடா! வஞ்சனையாக எங்கே நழுவிவிடப் பார்க்கிறாய், திரும்பி வா'’ என்று ராம லட்சுமணர்கள் அதட்டுகிறார்கள்.

இவனும், ‘அடா!’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லத் தொடங்கி, `‘உயிர்ப் பிச்சை தந்தேன்; போய் விடுங்கள்’' என்று எச்சரிக்கிறான்.

ராமனோ புன்னகை பூத்த வதனத்துடன், ‘போர் தெரியாது இவனுக்கு!’ என்று, தன் கோதண்ட வில்லை நாணேற்றி டங்காரம் செய்தான். அப்போது விராதன் சீதையைக் கீழே விட்டு விட்டு, ராமன் எதிரே வந்து நின்று தன் கொடிய சூலாயுதத் தைச் சுழற்றி வீசினான். அதை உடனே ராம பாணம் இரண்டு துண்டாக்கி விட்டது. இச்சண்டை சிறிது நேரம் நடைபெற்றது.

சோகத்தின் வேகம்!

ராம லட்சுமணர் ‘இவன் கையை வெட்டித்தள்ள வேண்டும். இல்லாவிட்டால் போர் செய்து கொண்டேயிருப்பான்’ என்று இவன் தோளில் ஏற, இவனும் அவர்களைத் தூக்கிக்கொண்டு வேகமாய்ச் சென்றான்; சுமந்தபடியே சுற்றித் திரிந்தான். அப்போது சீதை அடைந்த சோகத்தை என்னென்பது?
முதன் முதல் துவண்டு விழும் பூங்கொம்பு போலப் புழுதியில் விழுந்தாள். ஆனால் அப்படி விழுந்தவள் - என்ன அதிசயம்! - மறு கணமே எழுந்திருந்து விராதனைப் பின்தொடர்ந்து ஓடினாளாம். நடுங்கிக் கதறிக்கொண்டிருந்த சீதைக்குத்தான் இப்போது எவ்வளவு தைரியம்!

அவள் இவனை நோக்கி ‘அவர்களை விட்டு என்னையே உணவாகக் கொள்வாய்!’ என்று அழுது வாய்குழறி வேண்டிக் கொள்கிறாள். காதலனுக்காகவும், அவன் தம்பிக்காகவும் தன்னையே பலிகொடுக்கத் துணிந்த காதலியின் சோகம் எவ்வளவு அதிசய ஆற்றல் வாய்ந்தது.

கோமாளிச் சட்டைதான்!

``அண்ணா! தேவி இவ்வளவு துயரம் அடையும்படி நீ விளையாடுவது சரியோ? இவனை விரைவில் கொல்ல வேண்டும்’' என்று லட்சுமணன் சொல்ல, ராமன் புன்சிரிப்புடன் ஹாஸ்யமாக, `‘இவன் மேல் ஏறிச் சவாரி செய்துகொண்டு விரைவில் நாம் போகவேண்டிய வழியின் எல்லையைத் தாண்டுவது நலம் என்று நினைத்தேன். இப்போது இவன் சாவதா ஒரு பெரிய காரியம்?” என்று பதில் சொல்லுகிறான்.

ராமன் இந்த ராட்சஸனை ஒரு கோமாளி அல்லது பூச்சாண்டியாகவே மதித்துவிடுகிறான் என்பது குறிப்பு.

ராமன் ராட்சஸக் கோமாளியைக் காலால் உதித்து வீழ்த்தியதும், இவன் சாபத்தால் தான் பெற்றிருந்த ராட்சஸ உடலை விட்டுப் பழைய திவ்ய ரூபத்தை அடைகிறான்.   முட்டைக்குள்ளிருந்து பறவை வெளிப்படுவது போல் ராட்சஸ உடம்பிலிருந்து ஒளிமயமான தேகியாய் வெளிப்பட்டதும், முன்னைப் பிறவியின் நினைவு முற்றும் வந்துவிடுகிறது.

ஒளி மேனியும் ஞான ஒளியும்!


புதிய விராதன் - பழைய யட்சன் - ராமனைத் தோத்திரம் செய்யத் தொடங்குகிறான்:

வேதங்கள் அறைகின்ற
   உலகெங்கும் விரிந்தனநின்
பாதங்கள் இவை என்னின்,
   படிவங்கள் எப்படியோ?
ஓதம்கொள் கடல் அன்றி
   ஒன்றினோ(டு) ஒன்(று) ஒவ்வாப்
பூதங்கள் தொறும்உறைந்தால்,
   அவைஉன்னைப் பொறுக்குமோ?


தன் மேல் ஏறியும் உதைத்தும் கொல்வது போலத் தீண்டிக் கடைத்தேறச் செய்த திருவடிகளைத் தோத்திரம் செய்கிறான் விராதன். வேதங்களெல்லாம் தோத்திரம் செய்யும் திருவடிகள், இப்போது சிறியனவாய்த் தோன்றியபோதிலும். திருவருளின் அறிகுறியாகி, உலகங்களெல்லாம் விரிந்திருக்கிறனவாம்.

பாதங்களே இப்படிப் பாவியிருந்தால், மற்ற அவயவங்கள் எப்படியோ? - என்று அதிசயிக்கிறான். இப்பாதங்களை அவயவமாகவுடைய முழுத் திருமேனியும் எப்படியிருக்குமோ? - என்று பிரமிக்கிறான்.

பௌராணிகர், கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் பெருமாள் என்கிறார்களே; கடல் பஞ்சபூதங்களில் ஒன்றாகிய நீரின் அம்சம்தானே! மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களிலும் மறைந்து உறைகின்றான் என்பர் ஞானிகள்; அதுதான் எப்படிப் பொருத்தமாகும்? அப்படித் தங்கினால், அந்தப் பூதங்களால் பொறுக்கமுடியுமா பரம்பொருளை? பொம்மைகளா கோபுரம் தாங்குகின்றன? கோபுரம் அல்லவா பொம்மைகளைத் தாங்குகிறது?

எனினும் கோபுரத்தைத் தாம் தாங்குவனபோல் தோன்றும்படியாக அழகிய பொம்மைகள் அமைக்கப் படவில்லையா? இப்படித்தான் சிருஷ்டிப் பெருஞ்சிற்பத்தில் கடவுள் தங்குவதும், இதைத் தாங்குவதும்!

ராமன் கால்பட்டதும் விராத மூளையில் பிறந்த தத்துவ ஞானம் இது. ராட்சஸப் பூச்சாண்டி, சாபத்துக்கு முன்னுள்ள திவ்ய தேகத்துடன் திவ்ய ஞானத்தையும் பெற்றுவிட்டான்.

- 18.1.1948 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

சித்திர ராமாயணம்

கிருஷ்ண தரிசனம்!

கண்ணன் மூன்று வயது வரை கோகுலத்திலும், மூன்றிலிருந்து ஏழு வயது வரை பிருந்தாவனத்திலும், எட்டு முதல் பத்து வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

மதுராவில் அருளும் கிருஷ்ணரை வழிபட்டால் எல்லா துன்பங்களும் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. மதுராவில் வசுதேவர் - தேவகிக்கு எட்டாவது மகனாகச் சிறையில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அந்தச் சிறை இப்போது ‘கத்ர கேஷப்தேவ்’ என்ற பெயரில் கோயிலாக எழுந்துள்ளது.

துவாரகையில் குடிகொண்டிருக்கும் கிருஷ்ணருக்குத் துவாரகீசன் என்று பெயர். இங்கு இவர் பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். `ஜகத் மந்திர்' என்று சொல்லப்படும் துவாரகை ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் `சொர்க்க துவாரம்'. இது எப்போதும் திறந்தேதான் இருக்கும். இதைத் தாண்டிச் சென்றால்தான் `மோட்ச துவாரம்' காட்சி தரும். அதை யும் தாண்டிச் சென்றால்தான் கிருஷ்ணனைத் தரிசிக்கலாம்.

- மு.ஹரிகாமராஜ்