Published:Updated:

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

பிரபுநந்த கிரிதர் - ஓவியங்கள்: ஜெ.பி, பாரதிராஜா

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

பிரபுநந்த கிரிதர் - ஓவியங்கள்: ஜெ.பி, பாரதிராஜா

Published:Updated:
குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

திருவொற்றியூர் சந்நிதித் தெருவில் தோபா சுவாமிகள் என்று ஒரு நிர்வாணத் துறவி இருந்தார். ஒரு திண்ணையில் உட்கார்ந்தபடி, தெருவில் போகிறவர்களை எல்லாம் நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, தேள் போகிறது என்று சொல்வது அவரது தினசரி வழக்கம்.

கண்ணில்படுகிற யாரும் அவருக்கு மனித உருவங்களாகத் தெரியவில்லை. உள்ளத்தால் அவர்களது குணம் என்ன என்பதைப் பார்க்கும் போதே தெரிந்துகொள்ளும்  ஞானம் அவருக்கு இருந்தது.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

ஒருநாள் ராமலிங்கம், அந்தத் தெருவழியாகப் போனார். தோபா சுவாமிகள் அவரைப் பார்த்ததும், ‘இதோ ஓர் உத்தமர் போகிறார்’ என்று உற்சாகமாகக் கூவியபடி, கைகளால் தன் உடம்பைப் பொத்திக் கொண்டு கூனிக்குறுகி நின்றார். நிர்வாணம் அப்போதுதான் அவருக்கு உறுத்தியிருக்கிறது. ராமலிங்கம் அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவரது தரிசனத்துக்காகவே காத்திருந்த மாதிரி அந்த நிர்வாணத் துறவி அன்று இரவே அங்கிருந்து மாயமானார்.

ஒருநாள், கோயில் மண்டபத்தில் பசியோடு படுத்திருந்தார் ராமலிங்கம். அவருக்கு ஏனோ அன்று வீட்டுக்குப் போகத் தோன்றவில்லை. அந்தச் சமயம் கோயில் அர்ச்சகர் ஒருவர் வந்து ராமலிங்கத்தை எழுப்பி, பிரசாத அன்னத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

உண்மையில், அந்த அர்ச்சகர் அன்று முழுவதும் ஊரிலேயே இல்லை. எங்கோ வெளியூர் போயிருந்தார். ஆக, இறைவனே அர்ச்சகர் உருவத்தில் வந்து ராமலிங்கத்துக்கு அமுது ஊட்டினார் என்பது பின்னர் புரிந்தது.

இதுபோலவே, பிறிதொரு நாளில் கோயிலிலிருந்து அர்த்த சாமத்தில் வீடு திரும்பிய பிள்ளைப் பெருமான், அந்த நேரத்தில் அண்ணியை எழுப்பி அன்னம் கேட்க மனமின்றி, களைப்போடும் பசியோடும் திண்ணையில் படுத்துக்கொண்டார்.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...தூக்கம் லேசாக ஆட்கொள்ளும்போது,  யாரோ  எழுப்பினார்கள். எழுந்து பார்த்தபோது தட்டில் சாதத்தோடு  அண்ணியார் இருந்தார். வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக் கொண்டு தூங்கிவிட்டார் பிள்ளைப் பெருமான்.

சற்று நேரத்தில் மீண்டும் யாரோ எழுப்பினார்கள். எழுந்து பார்த்தால் இம்முறையும் அண்ணியார். ‘‘உள்ளே வந்து சாப்பிட்டு விட்டுப் படு!’’ என்று உரிமையோடு கூப்பிட்டார்.  ராமலிங்கத்துக்கு ஆச்சர்யம். ‘இப்போதுதானே தட்டில் சாப்பாடு எடுத்துவந்து தந்தீர்கள்?’ என்று வியப்போடு கேட்டார். அண்ணியார் மறுத்தார். கனவோ என்று பிள்ளைப் பெருமானுக்குக் குழப்பம். ஆனால், சற்றுமுன் கை கழுவிய ஈரமும் சிதறிய சோற்றுப் பருக்கைகளும் அவர் சாப்பிட்டு விட்டதற்குச் சாட்சியம் சொல்லின. உண்மை என்னவென்று புரியாமல் இரண்டு பேரும் திகைத்தனர்.

அவர்களின் குழப்பத்தை நீக்க, வடிவுடை அம்மனே அண்ணியார் வடிவில் தன் திருக்கரத்தில் தட்டுடன் காட்சியளித்தார். ராமலிங்கம் நெகிழ்ந்து போனார்.

தன்னிடம் அடைக்கலம் புகுந்த அடியார்களின் பசி பொறுக்காது ஆண்டவனுக்கு. ஞானசம்பந்தர் பசியால் அழுதபோது அம்பாள் ஞானப்பால் ஊட்டினாள். அப்பர் பசிக் களைப்பில் இருந்தபோது இறைவன் தண்ணீர்ப் பந்தல் வைத்துக் கட்டுச்சோறு கொடுத்தான். சுந்தரரின் பசியைப் போக்க இறைவன் பிச்சையேற்று வந்து ஊட்டினான். பிள்ளைப் பெருமானின் பசியைப் போக்க இறைவன்,  இறைவி இருவருமே வந்து உணவு ஊட்டிவிட்டனர்.

ராமலிங்கத்துக்கு இல்லற வாழ்வில் விருப்பம் இல்லை. ஆனாலும், அவர் வாயிலிருந்து கடுஞ்சொற்கள் வராது. மற்றவர் மனம் நோகும்படி எதையும் தட்டிக்கழித்துப் பேச மாட்டார். அவரது இந்தக் குணமறிந்து பலரும் அவரைத் திருமணத்துக்கு வற்புறுத்த, தனது இருபத்தேழாம் வயதில் ராமலிங்கம் அவரது அக்கா உண்ணாமுலை  அம்மாளின் மகள் தனம்மாளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.  

திருமணம் நடந்ததே தவிர, இல்லற வாழ்க்கையை ராமலிங்கத்தால் நடந்த முடிய வில்லை. துறவு எண்ணம்கொண்ட அவரை, இறைவன் அருட்கவிஞராக  மாற்றினான்.   பலர் அவரிடம்  சீடர்களாக   வந்து  சேர்ந்தனர்.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

ஆரவாரம் நிறைந்த பட்டணத்து வாழ்க்கையி லிருந்து ஒதுங்கி, நிம்மதியாக அமர்ந்து ஞானத் தேடலில் ஈடுபட அமைதியான ஓர் இடம் அவருக்குத் தேவைப்பட்டது. தனது 35-ம் வயதில் சென்னையில் இருந்து தீர்த்த யாத்திரையாகக் கிளம்பி, சிதம்பரம் வந்தார் ராமலிங்கம்.

தில்லையில் வேங்கடரெட்டியார் என்பவர் ராமலிங்கத்தைத் தனது ஊருக்கு அழைத்தார். கருங்குழி என்ற கிராமத்தின் மணியக்காரர் அவர். அவரது வீட்டிலேயே ஒரு தனி அறையில் ராமலிங்கம் தங்கிக்கொண்டு, தினமும் சிதம்பரம் சென்று தில்லையம்பல ஆண்டவனை வழிபடுவதை வழக்கமாக்கிக்கொண்டார். மற்ற நேரங்களில் தியானம் செய்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.

வெள்ளை ஆடை உடுத்தி, சாந்த சொரூபியான முகத்தோடும், மெல்லிய மீசையோடும் இளம் வயதினராகக் காணப்பட்ட ராமலிங்கத்தை அங்கே `மாப்பிள்ளை சாமி’ என்று அழைத்தனர்.

இரவில் விளக்கில்லாத இடத்தில் ராமலிங்கம்  இருக்கமாட்டார். அதனால், பெரிய அகல் விளக்கு ஒன்று எந்நேரமும் அவர் அறையில் எரிந்துகொண்டு இருக்கும். அந்த விளக்கில் எண்ணெய் ஊற்ற ஒரு சொம்பு எண்ணெயை விளக்கருகிலேயே வைத்துவிடுவார் வேங்கட ரெட்டியாரின்  மனைவி முத்தியாலம்மாள்.

ஒருநாள், ஞாபக மறதியாகத் தண்ணீர்ச் சொம்பு ஒன்றையும் எண்ணெய் அருகில் வைத்துவிட்டுப் போய்விட்டார் அந்த அம்மாள். ராமலிங்கம் தண்ணீரை எண்ணெய் என நினைத்து ஊற்ற, இரவு முழுக்க தீபமும் எரிந்தது. மறுநாள் வந்து பார்த்த அந்த அம்மாள் அதிசயித்து நின்றார்.
இங்கிருக்கும்போதுதான் ராமலிங்கத்திடம் நிறைய சீடர்கள் வந்து சேர்ந்தனர். தன் ஆன்மிகத் தேடலின் உயர்வை அவர் இங்குதான் எய்தினார். அருட்பெருஞ்சோதி, ஆண்டவர் ராமலிங்கத்தின் அகக் கதவைத் திறந்து அருள் ஒளியால் அவரை ஆட்கொண்டது இங்குதான்.

‘கடவுள் ஒருவரே! அவரை சோதி வடிவில், உண்மை அன்பால் வழிபட வேண்டும்.  சிறுதெய்வ வழிபாடு கூடாது. தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது. சாதி, சமய வேறுபாடு பார்க்கக் கூடாது. புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மைகளைத் தெரிவிக்க மாட்டா. மூடப்பழக்க வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்’ என்ற உண்மைகளைத் தெரிவிக்கும் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வள்ளலாராகிய ராமலிங்கம் கண்டது இங்குதான்.

வள்ளல் பெருமானுக்கு முன்பு தமிழகத்தில் அவதரித்த ஞானிகள் பலர் மடங்களை அமைத்துத் தொண்டு செய்தனர். ஆனால், வள்ளலார் துறவற ஞானி. சங்கத்தில் வெறும் துறவிகளை மட்டுமே சேர்த்துக்கொண்டு, சன்மார்க்க நெறியைப் பரப்புவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. துறவியாக இருந்தபோதும், தன் அணுக்கத் தொண்டர்களுக்கு ‘இல்லற வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?’ என அறிவுரை சொன்னவர் அவர். ஆண்கள், பெண்கள் எனக் குடும்பம் குடும்பமாக இணைந்து, சன்மார்க்க நெறியைப் பரப்ப வேண்டும் என்பதே அவர் விருப்பம்.

கருங்குழி இல்லத்தில் இருந்தபோது, 1865-ம் ஆண்டு வள்ளலார் இந்தச் சங்கத்தை நிறுவினார். ஞானபண்டிதர்கள், படிக்காதவர்கள், பக்தர்கள், அதிகாரிகள், வியாபாரிகள் என்று பலரும் சாதி, மத, சமய வேறுபாடுகளின்றி சங்கத்தில் இணைந்தார்கள். ஒருவகையில், அவர் ‘சங்கத்தின் நெறிகள்’ என்று சொன்னவற்றில் பல விஷயங்கள் இல்லற ஒழுக்கங்கள்தான். ‘தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது’ என்று முதன்முதலில் சொன்னவர் அவர்தான்.

வள்ளலார் உயிர்க் கொலையை மூன்று வகை களாகப் பிரிக்கிறார். கோபத்தால் செய்யப்படும் கொலை, உணவுக்காகச் செய்யப்படும் கொலை, மூடபக்தியால்  செய்யப்படும் கொலை.

கோபத்தால் செய்யப்படும் கொலைக்குத் தண்டனை தரச் சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கின்றன. மூடபக்தியாலும் உணவுக்காகவும் வாயில்லாத அப்பாவிப் பிராணிகளைக் கொல்வ தில் இருந்து மனிதனை யார் தடுப்பது? இதற்கு என்ன தண்டனை? ‘சன்மார்க்க நெறிதான் மக்களை நல்வழிப்படுத்தி, இந்த மோசமான பழக்கங்களிலிருந்து அவர்களை மீட்கும்’ என்று நம்பினார் வள்ளலார்.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

புலால் உண்பதைக் கண்டித்த அளவுக்கு வள்ளலார் வேறு எதையும் கண்டித்ததில்லை. மீன் பிடிக்கும் வலை, தூண்டில் போன்றவற்றைக்கூட ‘கொலைக் கருவிகள்’ என வர்ணித்தார் அவர். உயிர்ப்பலி செய்யப்படும் கோயில்களின் வாசலைக்கூட அவர் மிதித்ததில்லை.

சாதி, மத வேறுபாடின்றி எல்லோரையும் சத்திய ஞானசபைக்குள் அனுமதித்த அவர், ‘புலால் உண்பவர்கள் உள்ளே வரக் கூடாது’ என்று கட்டளை போட்டார்.

இன்னமும் வள்ளலார் தெய்வ நிலையங்களில் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘சைவ உணவு மட்டும்தான் நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றுக்கும் உபத்திரவம் தராமல், நல்ல நிலையில் வைத்திருக்கும்’ என்றார் அவர்.

‘கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை அழிக்க வேண்டும்’ என்பதும் அவரது சன்மார்க்க நெறி. ‘மனைவி இறந்தால், கணவன் மறுமணம் செய்யக் கூடாது. கணவன் இறந்தால், மனைவி கைம்மை கோலம் பூணத் தேவையில்லை’ என்றார் அவர். எல்லாவற்றையும்விட அவர் பெரிதும் வலியுறுத்தியது ஜீவ காருண்யம். ‘ஏழைகளின் பசியைத் தீர்ப்பதுதான் இறைவனை அடைவதற்கான வழி’ என்றார் அவர்.

இதை வெறுமனே அவர் சொல்வ தோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் காட்டினார். இதற்காக அவர் சத்திய தருமசாலையைத் தொடங்கினார். வடலூர் நகரத்தோடு வள்ளலாருக்கு உறவு ஏற்பட்டது அப்போதுதான். வடலூரின் ஒரு பகுதியாக இருந்த பார்வதிபுரத்து மக்கள், வள்ளலாருக்கு 80 காணி நிலத்தைத் தானமாக எழுதிக்கொடுத்தனர்.

இந்த இடத்தில் 23.5.1867-ல் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை’ என்ற பெயரில் அன்னதானத்தைத் தொடங்கினார் வள்ளலார். முதலில் ஒரு மண் கட்டடத்தைக் கட்டி, அதில் அன்னதானத்தைத் தொடங்கிவிட்டு, பக்கத்திலேயே பெரிய கல் கட்டடத்தைக் கட்ட, அதே நாளில் அடிக்கல் நாட்டினார். முதல் மூன்று நாள்களில் பத்தாயிரம் பேர் வந்து சாப்பிட்டார்கள். இந்த தருமசாலையை நிர்வகிக்கும் பொருட்டு, வள்ளலார் இங்கேயே கிட்டத்தட்ட நான்காண்டுகள் தங்கி இருந்தார்.

பசி என்ற வேதனை உணர்வை ரொம்பவே உணர்ச்சிமயமாகச் சொல்கிறார் அவர். ‘நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை என்கிற மூன்று வேதனைகளும்கூடி முடிந்த வேதனையே பசி வேதனை’ என்கிறார் அவர்.

தருமசாலையில் தினமும் மூன்று வேளைகள் அன்னதானம் செய்யப்பட்டது. இதில் எந்தவிதத் தடங்கலும் நேர்ந்துவிடக் கூடாது என வள்ளலார் தீர்மானமாக இருந்தார். ஒருநாள் இரவு தருமசாலையில் உணவு கொஞ்சமாக இருந்தது. ஆனால், அன்று சாப்பிட நிறைய பேர் வந்துவிட்டனர். சமையலைப் பார்த்துக்கொண்டிருந்த சண்முகம் பிள்ளைக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

வள்ளலாரிடம் தயங்கித் தயங்கி வந்து விஷயத்தைச் சொன்னார். பெருமானார் உடனே எழுந்து வந்து, ‘‘எல்லோருக்கும் இலை போடும்!’’ என்று உத்தரவிட்டு, தம் திருக்கரத்தால் உணவு பரிமாறினார். அன்னப் பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வந்து கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்ட பிறகுகூட உணவு எஞ்சியிருந்தது.

இன்னொரு நாள் இரவு அன்னதானம் முடிந்த பிறகு, தரும சாலையில் இருந்த அன்பர்கள், வள்ளலாரிடம் வந்தனர். மறுநாள் சமைப்பதற்குக் கைப்பிடி அரிசிகூட இல்லை. பெருமானார் சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து தியானம் செய்தார். ‘‘வேண்டிய அரிசியும் மற்றவையும் நாளைக்கு வரும். போய் நிம்மதியாகத் தூங்குங்கள்...’’ என்று அவர்களை அனுப்பினார். மறுநாள் காலையில் மூன்று வண்டிகளில் அரிசி, பருப்பு எல்லாம் வந்து சேர்ந்தது. எடுத்து வந்தவர், திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓர் அன்பர்.

‘‘நேற்றிரவு கனவில் வந்து வள்ளலார் உத்தரவு போட்டார். அப்போதே மூட்டை கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டேன்...’’ என்றார் அவர். அவருக்கு உத்தரவான நேரம்... வள்ளலார் தியானத்தில் ஆழ்ந்த அதே நேரம்!

தருமசாலையில் வள்ளலார் இருந்தபோது, இன்னோர் அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டினார்.

(28.3.2004 ஆனந்த விகடன் இதழில் இருந்து...)

- தரிசிப்போம்...

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

கிருஷ்ண தாண்டவம்!

கிருஷ்ணர் ஆடிய கூத்துகள் அற்புதமானவை. மதம்பிடித்த யானையை அடக்கி ஆடியது அல்லியக்கூத்து. அரக்கனால் சிறைப்பட்ட தன் பேரன் அநிருத்தனை மீட்க, கிருஷ்ணர் பஞ்சலோகத்தால் செய்த குடத்தைத் தலையில் வைத்துச் சுழன்று ஆடியது குடக்கூத்து. வாணன் என்ற அரக்கனை வதைத்தபின் ஆடியது மல்லாடல் கூத்து!

-மு.ஹரிகாமராஜ்