Published:Updated:

கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

? வருடம்தோறும் நானும் என் சகோதரியும் சேர்ந்து வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கிறோம். ஆனால், `திருமணம் ஆகிவிட்டதால் தனித்தனியே அவரவர் வீட்டில் வைத்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்’ என்கிறார்கள் சிலர். இதுகுறித்து தங்களது வழிகாட்டல் தேவை.

- நித்யா நாராயணன், மதுரை-1

சதுர்த்தி, ரிஷிபஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, ச்ரவண விரதம் போன்ற விரதங்கள், தனி மனிதனை வைத்தே அறிமுகமானவை.  இவற்றை, விளக்குபூஜை போல சேர்ந்து செய்யும் சடங்காகச் சித்திரிக்கவில்லை, தர்ம சாஸ்திரம்.

‘என்னுடைய தவறுகள் மறைந்து,  நற்குணங்கள் பெருக வேண்டும்’ எனும் கருத்தில்தான் பூஜைக்குப் பயன்படும் செய்யுள் இருக்கும்; பன்மையில் இருக்காது. கோயில் உற்ஸவம், நதி நீராடல் ஆகியவற்றைக் கூட்டாகச் சேர்ந்து செய்யலாம். கூட்டுக்குடும்பம் எனில், அனை வரும் ஒன்றாகச் சேர்ந்து வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாம். தனிக்குடித்தனமாக வாழ்கிறபோது, விரதத்துக்கு மட்டும் ஒன்று சேருவதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை.

அறம் வளர, ஒவ்வொரு பெண்ணும் தனித் தனியே விரதம் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், முழுமையான பலனும் கிடைக்கும். பக்தியோடும் சிரத்தையோடும் செயல்பட தனியாகச் செயல்படுவது பொருந்தும். ‘நான் விரதம் இருக்கிறேன்’ என மனதுள் சங்கல்பம் செய்கிறோம்தானே?! எனவே, பூஜையைத் தனித்தனியே செயல் படுத்துவதே சிறப்பு.

? ‘புத்திரன் இல்லாதவருக்கு நற்கதி கிடைப்பதரிது’ என்று கருட புராணம் சொல்வதாகச் சொல்கிறார்களே... உண்மையா?

கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


- வே.சரவணகுமார், காஞ்சிபுரம்


‘புத்’ எனும் துயரில் இருந்து கரையேற்றுபவன் புத்திரன் என்றே கருட புராணம் விளக்கம் தருகிறது. ஆனால், ‘புத்திரர் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்று தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் போலும். இது தவறு. புத்திரன் இல்லை என்றால் மோட்சமும் இல்லை என்று தர்ம சாஸ்திரம் சொல்லாது. மோட்சத்துக்கும், புத்திரனுக்கும் சம்பந்தம் இல்லை. இறந்தவரின் அறம் அவரைக் கரையேற்றி விடும். ஆனாலும், அவரிடமிருந்து வந்த நாம், அவருக்குச் செய்யும் கடமைகளில் இருந்து நழுவக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

அவரின் ஜீவ அணுக்களால் நம் உடல் தோன்றியது. ஆக... அவரின் ஜீவ அணுக்களில் ஒரு பகுதி நம்மிலும் உண்டு. இந்தத் தொடர்பை அறிந்து, இறப்புத் தீட்டைக் கடைப்பிடிக்கிறோம். மரணம் தவிர்க்கமுடியாதது. துயரம் ஒருபுறம் இருந்தாலும் அதிலேயே ஆழ்ந்துவிடாமல், ஈமச் சடங்குகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். ‘அவர் கரையேறி விட்டார்’ என்ற எண்ணம் நம் மனதில் பதியும்போது, நமது செயல்பாடுகள் சிறப்பு பெறும்.

‘காசியில் உயிர் துறந்தால் மோட்சம்’ என்கிறது புராணம். நம் முன்னோர்கள் இதற்காகவே காசிக்குச் செல்வர். அவர்களில், புத்திர பாக்கியம் வாய்த்தவர்களும் உண்டு; வாய்க்காதவர்களும் உண்டு. புராண விளக்கங்களைத் தெரிந்து கொள்ள குறிப்பிட்ட அணுகுமுறை தேவை. குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதற்கு முன்னும் பின்னும் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

வம்ச விருத்திக்குப் புத்திரன் வேண்டும். புத்திரனைப் பெற்றுக் கொள்வது சிறப்பு என்பதை அறிவுறுத்துவதே சாஸ்திரத்தின் நோக்கம். புத்திரர் இல்லாதவர்களுக்கு, மகள் வயிற்றுப் பேரன் மூலம் ஈமச் சடங்கை நிகழ்த்தச் சொல்லும். பேரனும் இல்லையெனில், மகள் ஈமச் சடங்கைச் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். இப்படி புத்திரரில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக ஒவ்வொருவராகக் குறிப்பிடும் சாஸ்திரம்... உறவுகள் எவரும் இல்லையெனில், தொடர்பு இல்லாத ஒருவனும் ஈமச் சடங்கு செய்யலாம் என்றும் ஒரு வாய்ப்பு தருகிறது.

இந்த மண்ணில் தோன்றியவன் ஈமச் சடங்கை இழக்கக் கூடாது என்பதே சாஸ்திரத்தின் நோக்கம். அநாதைகளுக்கும் ஈமச் சடங்கை நிறைவேற்ற வற்புறுத்துகிறது அது. ஆகையால், மனக் குழப்பம் தேவையில்லை.

கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

? எங்கள் வீட்டுத் தோட்டத்தில் வில்வக்கன்று வளர்ந்து நிற்கிறது. வீட்டில் வில்வமரம் வளர்வதால் லட்சுமிகடாட்சம் ஏற்படும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, வில்வம் சிவனுக்கு உகந்தது சிவாலயங்களில் இருக்க வேண்டிய விருட்சத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது என்கிறார்கள். என்ன செய்வது?

- வி.ரமேஷ், தூத்துக்குடி

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானுக்கு உகந்த விஷயங்களில் வித்தியாசமே இல்லை. சில காரணங்களுக் காகச் சில இடங்களில் சில விஷயங்களுக்கு விசேஷம் ஏறும். துளசி, விஷ்ணுவுக்குப் ப்ரீதி. ஏனென்றால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. இப்படிக் கதைகளை வைத்துக்கொண்டு இன்னாருக்கு இன்னது உகந்தது என்பது பிற்பாடு வழக்கத்துக்கு வந்தது. வில்வத்தில் மூணு கண்போல் தெரிவதால் அது சிவனுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். உத்தான ஏகாதசி முடிந்து கொஞ்ச நாள் பகவான் துளசி இலை மேலேயே உட்கார்ந்திருக் கிறார். பிருந்தாவன துவாதசி என்று சொல்லி துளசி பூஜை செய்வார்கள். எனவே, இந்தப் பொருள்கள் தவிர மற்றவை எல்லாம் விசேஷமில்லை என்பது சரியல்ல.

ஒருவன் புலிக்குப் பயந்து வில்வமரத்தின் மீது ஏறிவிட்டான். புலி போகவில்லை. தூங்காமல் இருப்பதற்காக ஒரு கொம்பைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அதிலிருந்து ஒரு வில்வ இலை தவறிக் கீழே இருந்த லிங்கத்தின்மேல் விழுந்தது. அவனுக்கு மோட்சம் கிடைத்தது. வில்வத்தின் பெருமைக்கு இந்தக் கதை ஓர் உதாரணம். லட்சுமி இல்லாத இடமே கிடையாது. சுறுசுறுப்பே ஒரு லட்சுமிதான். எங்கே களை இருக்கிறதோ, அங்கே லட்சுமி இருக்கிறாள். எனவே, உங்கள் வீட்டில் வில்வத்தைத் தாராளமாக வளர்க்கலாம்.

? எண்ணெய்க் குளியல் செய்யும் நாளில் அகத்திக்கீரை சேர்க்கக் கூடாது என்கிறார்களே... அப்படியா?


-கே.கோகுல லட்சுமி, வந்தவாசி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். இந்த நாள்களில் உடல் உறுப்புகள் சற்று அசதியைச் சந்திக்கும். அப்போது, அகத்திக்கீரை முதலானவை உடல் நலனுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே, இதுபோன்ற நாள்களில் அகத்திக்கீரையைத் தவிர்க்கச் சொல் கிறது ஆயுர்வேதம். தவிர... கிழமைகள், கிரகங்களின் பெயரில் அமைந்திருக் கின்றன. அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிரகங்களின் தன்மை புலப்படும். ஆராயாமல் எதிர்ப்பது செவ்வாயின் இயல்பு; உறங்கிக்கிடக்கும் ஆசையைத் தூண்டுவது வெள்ளியின் இயல்பு; சுணக்கமுறு வது சனியின் தன்மை. உணவுகளின் மூலம் இவற்றின் தன்மைகள் மேலும் தூண்டப் படலாம். இதைத் தவிர்க்க குறிப்பிட்ட நாள்களில் கீரையைத் தவிர்க்கலாம். இது ஜோதிடத்தின் அறிவுரை.

? திருக்கோயில்களில் வேண்டுதலின் நிமித்தம் அளிக்கப்படும் துணி தானங்களை ஏற்கலாமா?

- சி.சரவணன், திருக்கோவிலூர்


கோயிலில் அன்னதானம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றையும் விநியோகிப்பர். இவற்றை, இறை பிரசாதமாக ஏற்று மகிழ்வோம். ஆலயத்தில் ஆண்டவனை வழிபட்டு, அவனை மகிழ்விக்க கொடை வழங்கு வது சிறப்பு. அதைப் பெற்றுக்கொள்வதும் சிறப்பு.

தானத்தின் வாயிலாக அறம் செயல்படும்போது, ஆண்டவன் மகிழ்கிறான். எனவே, ஒருவர் தானம் அளிக்கும்போது அதைப் பெற்றுக்கொண்டு, அறம் செயல்பட நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

தற்காலத்தில், வீட்டுக்கு வரவழைத்துக் கொடை வழங்குவது சாத்தியம் அல்ல. கோயிலில் இறை திருவுருவங்களின் பார்வையால் பரிசுத்தமாகும் பொருள்கள், கொடையாக மாறுகின்றன. அவற்றை ஏற்பவனும் இறை தரிசனத்தால் - வழிபாட்டால், பரிசுத்தமாகத் தென்படுகிறான். எனவே, அங்கு வழங்கப்படும் கொடை - தானம் சிறப்பு பெறும். பாத்திரம் அறிந்து செயல்பட வேண்டும் என்பர். கொடை, அதை அளிப்பவன், பெறுபவன்... அத்தனையும் ஆலய வளாகத்தில் இறை சந்நிதியில் பரிசுத்தமாக்கப்படுவதால் உயர்ந்த கொடையாக மாறிவிடுகிறது.

- பதில்கள் தொடரும்...