Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

ஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: க.பாலமுருகன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

ஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: க.பாலமுருகன்

Published:Updated:
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

மலாபுரத்திலிருந்து ஹம்பியை நோக்கிச் செல்லும் வழியில் இருப்பது பாதாளச் சிவலிங்கக் கோவில். அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் பிரசன்ன விருபாக்சரர். நாம் இதுவரை பார்த்துவந்த கோவில்களெல்லாம் தரை மட்டத்திலிருந்து மேடையிட்டு  எழுப்பிக்  கட்டப்பட்டவை. ஆனால், பாதாளக் கோவிலின் சிறப்பு என்னவென்றால், அது முழுக்க முழுக்க நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளமைதான்.

அதாவது தரைமட்டத்துக்குக் கீழே அந்தக் கோவில் உள்ளது. அந்தக் கோவிலையும்கூட அண்மையில்தான் கண்டு பிடித்தார்கள். அது ஒரு சிலிர்ப்பூட்டும் கதை.

விஜய நகர இடிபாடுகளைச் சுத்தம்செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. தரையின் மேல் மண்ணைக் கொஞ்சம் சுரண்டினாற்போல் எடுத்துத் தூய்மைப்படுத்தும் வேலை நடைபெற்றது. அப்படி மேல் மண்ணைச் சுரண்டியபோது கீழே படிக்கட்டுக் கல் ஒன்று தட்டுப்பட்டது. அதை அகற்றுவதா அல்லது அப்படியே தரையில்வைத்துச் சுத்தம் செய்வதா என்பது கேள்வி. கீழ்ப்புறத்தில் ஏதேனும் கல்லெழுத்து செதுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதியவாறு அந்தப் படிக்கட்டுக் கல்லை எடுத்தார்கள்.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

அந்தக் கல்லின் கீழேயே இன்னொரு படிக்கட்டுக் கல் இருந்திருக்கிறது. முதலில் எடுத்தது மேற்படிக்கல்; அதன்கீழே கண்டுபிடிக்கப்பட்டது கீழ்ப்படிக்கல் என்பது வெளிச்சமானது. உடனே அகழ்வாராய்ச்சியாளர்களின் துணையோடு மிகவும் கவனமாக அகழ்ந்துகொண்டே சென்றபோது, தரைமட்டத்துக்குக் கீழே மிகப்பெரிய கோவில் ஒன்று அமைந்திருந்தது. அந்தக் கோவிலைக் கண்டதும் ஆய்வாளர்கள் வியப்பின் கொடுமுடிக்கே சென்றார்கள். விஜய நகரத்தின் பெருங்கோவில் ஒன்று நிலத்தில் பன்னூறாண்டுகளாய்ப் புதைந்திருக்கிறது. 

மண்ணுக்குக் கீழே இவ்வளவு பெரிய கோவில் எப்படி மறைந்து போயிற்று என்பதைக் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அப்பகுதியின் நிலப்பரப்பு வண்டல் மண் செறிந்தது. அதனால் காலப்போக்கில் மண்ணில் அமிழ்ந்து மறைந்தது என்று கருதலாம். பிற கோவில்களும் கோட்டைக் கட்டடங்களும் சேதாரமின்றி இருக்கையில் இவ்வொரு கோவில் மட்டும் எப்படி அமிழ்ந்திருக்க முடியும்?

சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆளரவமின்றிக் கிடந்தமையால் மழை வெள்ளம் இறங்கித் தேங்கி மண்ணால் மூடப்பட்டிருக்கலாம். அல்லது விஜய நகரம் அழிக்கப்பட்டபோது இக்கோவிலை மண்ணிட்டு மூடியிருக்கலாம். அந்தக் கோவில் பேரளவில் சிதிலங்கள் ஏதுமின்றியே காணப்படுகிறது. மண் மூடியதில் தூண்கள் சரிந்தமையால் கூரைக்கற்கள் சில விழுந்துள்ளனவே தவிர, மற்றபடி கோவிலின் வரலாற்றழகை அப்படியே உணர முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

கோவிலின் நடுவில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்துக்கு எந்நேரமும் தண்ணீரால் முழுக்காட்டு நடைபெற வேண்டும் என்பதற்காகவே பாதாளக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இன்றைக்கும் சிவலிங்கத்தைச் சுற்றி முழங்கால் மட்டத்துக்குத் தண்ணீர் இருப்பு உள்ளது. அந்தக்கோவிலுக்கு நிலத்தடி மறைகுழாய் அமைப்பும் இருக்க வேண்டும். அல்லது அந்நிலம் எந்நேரமும் நீர் உரம்பு ஊறக்கூடியதாய் இருக்கலாம். இரண்டுக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் எந்நேரமும் வாய்க்காலளவுத் தண்ணீர் தொடர்ந்து ஊறிக்கொண்டே இருக்கிறது.

பாதாளத்தில் அமைந்த சிவன் கோவிலுக்கும் நாக வழிபாட்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்க வேண்டும். அக்கோவிலைச் சுற்றிலும் ஏராளமான நாகர் சிலைகள் உடைந்து கிடக்கின்றன. பிரசன்ன விருபாக்சரர் கோவிலின் தண்ணீர்க் குளுமை இனியதுதான். அதன் குருவிச் சத்தம்கூடக் கேளாத பேரமைதியோ திகிலூட்டும்படி இருக்கிறது. இந்தக் கோவிலை நன்கு சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்று தண்ணீர் தேங்கிய பகுதிக்குள்ளேயே நடந்து திரியக் கூடாது. உள்ளே எட்டிப் பார்த்து நீர்க்குளிர்ப்பில் குளிர்ந்திருக்கும் சிவலிங்கத்தைப் பார்த்துவிட்டு நல்ல பிள்ளையாய்த் திரும்பிவிட வேண்டும்.

அங்கிருந்து மேலும் சென்றால் இரண்டு பாறையடுக்குத் தொடர்களே அரணாகத் தென்படும். தற்போது கோட்டைக்குச் செல்லும் வழியெங்கும் கரும்பு வயல்களாக இருக்கின்றன. கோவில்கள், நன்செய் வயல்கள், கால்வாய்கள், அரண்மனைகள், வற்றா நதி புகுந்து பாயும் சிறுகுன்றுகள் என்பதுதான் விஜய நகரத்தின் வாய்பாடு. இவை அனைத்தும் ஓரிடத்தில் வரிசை வரிசையாய் அமைந்திருக்கின்றன. அந்தப் பாறையடுக்குத் தொடரே மதில் போல் வாய்த்துவிட்டது.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

அவ்விடத்தில் ஒரு குறுகலான வளை திருப்பம் உண்டு. அத்திருப்பத்தில் இரண்டு கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உத்தண்ண விருபாக்சரர் ஆலயம். கன்னட மாநிலத்தின் தேசிய இனம் என்று லிங்காயத்துகளே அறியப்படுகிறார்கள். லிங்காயத்துச் சமூகத்தினரின் வழிபாடு உத்தண்ண விருபாக்சரர் ஆலயத்தில் இன்றும் நடைபெற்று வருகிறது. அக்கோவிலையொட்டிய பகுதியில் சதி மேடைகள் இருக்கின்றன. உடன்கட்டை ஏறிய மாதரசியருக்கு அங்கே நினைவுச் சிலைகளை எழுப்பியிருக்கிறார்கள். ஹம்பியின் தொன்மைக்கும் லிங்காயத்துகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சிவ வழிபாட்டினர் வேறெந்தக் கடவுளரையும் அவர்கள் ஏற்பதில்லை. வீர சைவர்கள் எனப்படும் அவர்கள் வைதீக மதத்தோடு தொடர்பில்லாதவர்கள்.

அதே சாலையில் மேலும் சென்றால் முதன்மைக் கோட்டை வாயிலை அடையலாம். அக்கோட்டை வாயிலுக்கு முன்பு விஜய நகரத்தின் பெருமை என்று போற்றத்தக்க நரசிம்மர் சிலையைக் காணலாம். பிரம்ம சிற்பி என்ற பட்டம் பெற்ற அரசாங்கத்தின் தலைமைச் சிற்பியால் அச்சிற்பம் கி.பி.1525ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இருபத்திரண்டு அடிகள் உயரமுள்ள அந்த நரசிம்மர், மரங்கள் அண்டிய சோலைக்கு நடுவே வீற்றிருக்கிறார். அப்பெருஞ்சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் இருக்கும் நரசிம்மரின் கால்களுக்குத் திருக்கட்டு போடப்பட்டிருக்கிறது. சிலையின் கைகள் பிற்காலத்தில் உடைக்கப்பட்டிருக்கின்றன. சிதிலங்களோடு இருப்பினும் அச்சிற்பத்தின் பெருந்தோற்றத்திலும் கம்பீரத்திலும் சற்றும் குறை காண முடியாது. சிற்பத்தைச் செதுக்குவதற்கான முழுச் செலவையும் கிருஷ்ண தேவராயரே ஏற்றார். 

நரசிம்மர் சிலையை ஒட்டிய பகுதியில், பன்னூறு லிங்கங்களால் ஆன மற்றொரு நீர்முழுக்காட்டுக் கோவில் இருக்கிறது. அவ்விடத் திலிருந்து நாம் முதலில் சொன்ன பாதாளக் கோவிலுக்கு நிலத்தடி மறைகுழாய் அமைக்கப்பட்டிருக்கலாம். அவ்விடத்துக்கு துங்கபத்திரை அணையிலிருந்து வாய்க்கால் தண்ணீர் வருகிறது. எந்நேரமும் தண்ணீர்ப் பாய்வோடும் தனித்துயர்ந்த சிலையழகோடும் காணப்படும் அவ்விடம் அணிநிழற்காடுபோல் மனத்தை மயக்குகிறது.

- தரிசிப்போம்...

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 8

அருள் பெற்ற மூதாட்டி!

ராமாயணத்தில் மட்டுமல்ல கிருஷ்ண அவதாரக் கதையிலும் கூனி ஒருத்தி உண்டு.

திருவத்திரை என்ற பெயர் கொண்ட இந்த மூதாட்டி மிகவும் நல்லவள்; கிருஷ்ணரின் மீது தீராத அன்பு கொண்டவள். கிருஷ்ணரும் பலராமரும் கம்சனைச் சந்திக்க மதுராவுக்கு வந்தபோது, அவர்களை வரவேற்று அன்பாக உபசரித்தவள் இவள்.

இவளின் வாஞ்சையான உபசரிப்பால் நெகிழ்ந்துபோன ஸ்ரீகிருஷ்ணர், இவளது கூன் முதுகைச் சரியாக்கி அழகிய பெண்ணாக மாற்றினார்.

வஞ்சனையான குணத்துக்கு ராமாயணக் கூனி என்றால், வாஞ்சையான அன்புக்கு கிருஷ்ணாவதாரக் கூனி என்றே சொல்லலாம்.

- மு.ஹரிகாமராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism