Published:Updated:

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

து ஒரு பின்மாலைப்பொழுது. ஒளியை வாரிச் சுருட்டிக்கொண்டு, சூரியன் மலை முகட்டில் மறைய தலைதெறிக்க ஓடிக் கொண் டிருந்த நேரம். நகரில் இருந்த அந்த வீதியில் சில இளம் பெண்கள் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒருத்தியின் கையில் இருந்து பந்து பறக்க... அதை இன்னொருத்தித் தாவிப் பிடிக்க... மற்றொருத்தி அதைப் பிடிக்கப்போக... கையில் வைத்திருந்தவள் தூக்கி எறிய... கூச்சலும் சத்தமுமாக அவர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென குதிரைக் குளம்புகளின் ஓசை. தெருவில் இருந்தவர்கள் அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால், குதிரைகளின் அரவம் அந்த இளம் பெண்களைக் கொஞ்சம் கூடப் பாதிக்கவில்லை.

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

குதிரையில் வந்தவன், இளைஞன். கட்டுமஸ்தான, இரும்பு போன்ற தேகம். பார்ப்பவர்களை எரிப்பது போல் சுடர்விடும் கண்கள். அவன், மதுரை மன்னன் திருமலை நாயக்கரின் படைத்தலைவர்களில் ஒருவனின் மகன்... பெயர் இணைசூரப் பெருமாள். அவன் கரங்கள் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தன. உடன் வந்த நண்பர்கள், இணைசூரப் பெருமாளின் குதிரை தேங்கி நிற்பதைக் கண்டார்கள்; அவனுடைய விழிகள் நிலைகுத்தி நின்ற திசையையும் பார்த்தார்கள்.

சுற்றிலும் என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள், யார் தன்னைப் பார்க்கிறார்கள் என்கிற எந்த அக்கறையும் இன்றி, ஓர் இளம் பெண் பூப்பந்து விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். பார்ப்பவரைப் பற்றியிழுக்கும் பேரழகு. ஓடும்போதும், குதிக்கும்போதும் அவள் கால்களில் அணிந்திருந்த சிலம்பு மெலிதாக முழங்கியது. காற்றுக்கு அவள் கூந்தல் அங்கும் இங்கும் அசைந்து அலைபாய்வதேகூட வசீகரமாக இருந்தது. இணைசூரப்பெருமாள் அவள் அழகில் சொக்கிப் போய்விட்டான் என்பதை அவன் நண்பர்கள் உணர்ந்தார்கள்.

இணைசூரப்பெருமாள் சூழலை மறந்தான். அந்த உலகில் அவனும் அந்தப் பெண்ணும் மட்டுமே இருப்பது போன்ற ஓர் உணர்வு. அவள் தன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டாளா என அவன் மனம்கிடந்து தவித்தது. தான் இருக்கும் பக்கம் அவள் விழிகள் திரும்பும்போதெல்லாம், ஒருமுறை அவள் கண்கள் தன் கண்களை நேருக்கு நேர் பார்க்காதா என ஏங்கினான்.

அவள், விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். மாலை இளம் வெயிலில் அவள் உடல் மினுங்கிக்கொண்டிருந்தது. நண்பர்கள் அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் இணைசூரப்பெருமாள், அவனாகவே வரட்டும் என ஓரமாகக் குதிரைகளில் காத்துக் கொண்டிருந்தார்கள். அவன், அந்த இளம் பெண்களில் ஒருத்தியை கை ஜாடை காட்டி அழைத்தான். அவள் ஓடி வந்தாள். மரியாதை யுடன் கைகளைக் கட்டிக்கொண்டு பணிந்து, வணங்குவதுபோல் நின்றாள். அவளுக்கு அவன் யார் என்பது தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

``பெண்ணே... அதோ அங்கே பூப்பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறாளே... அவள் யார் என்று சொல்ல முடியுமா?’’

``ஐயனே... அந்தப் பச்சை நிறப் பாவாடை அணிந்திருப்பவள் தானே... அவள் பெயர் பொன்னிறத்தாள். கடையம் ஊரைச் சேர்ந்த அணஞ்சபெருமாள் - பொன்மாரி தம்பதியின் மகள். இவளுக்கு ஏழு சகோதரர்களும் உண்டு.’’

இணைசூரன் குதிரையில் அமர்ந்தபடி மீண்டும் ஒருமுறை திரும்பி, அவளைப் பார்த்தான். அவன் குதிரை மெள்ள நகர்ந்ததும், நண்பர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள். இணைசூரன் தன் மாளிகைக்குள் நுழைந்தான். முன் முற்றத்தில், வழக்கமாக அவன் அமரும் ஆசனத்தில் அமர்ந்தான். ஒரு பணிப்பெண் ஓடிப்போய் அவன் அம்மாவிடம் இணைசூரன் வந்துவிட்டதைத் தெரிவித்தாள்.  

அவன் எப்போதும் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும், அன்னையைத் தேடுவான். அவள் கொண்டுவந்து கொடுக்கும் பலகாரங்களை ருசி பார்ப்பான். பழரசமோ, பாலோ அருந்துவான். இணைசூரனின் தாய், ஒரு பெரிய தட்டோடு அவன் அருகே வந்தாள். மந்தார இலையில் தேன்குழலும், தேங்காய்க் கொழுக்கட்டைகளும் அவன் அருந்துவதற்கு மாம்பழச் சாறும் கொண்டுவந்திருந்தாள். தட்டை அவன் முன்னே வைத்தாள். இணைசூரனோ தன் தாயையோ, அவள் கொண்டுவந்த பலகாரங்களையோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவன் பார்வை வீதியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

தன் புதல்வனின் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை அந்தத் தாய் உணர்ந்துகொண்டாள்.

``சூரா! என்ன ஆயிற்று உனக்கு?’’ என்று வினவினாள்.

``ஒன்றும் இல்லையம்மா.’’

``உன் நண்பர்கள் யாருடனாவது சண்டை, சச்சரவா?’’

``இல்லை தாயே.’’

``வழியில் உன் தந்தை உன்னைப் பார்த்து ஏதாவது கடிந்து கொண்டாரா?’’

``இல்லையம்மா. நான் அவரைப் பார்க்கவே இல்லை.’’

``பிறகு ஏன் வாட்டத்துடன் இருக்கிறாய்? இந்தா... இந்தப் பழச்சாற்றையாவது அருந்து.’’

தாய் நீட்டிய மாம்பழச் சாற்றின் நறுமணம், `வா... என்னை ருசி பார்’ என்பதுபோல அறை முழுக்க வீசியதை அப்போதுதான் இணைசூரன் உணர்ந்தான். இருந்தாலும், அவன் மனம் அதில் லயிக்கவில்லை. தாயிடம் இருந்து குவளையை வாங்கி, தட்டின் மீதே திரும்ப வைத்தான்.

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

தாய் யோசித்தாள். அவனோ இளைஞன். திருமண வயது நெருங்கிவிட்டது. பெண் யாரையாவது பார்த்து, மனதைப் பறி கொடுத் திருப்பானோ..? சூரனின் தாய், அவன் அருகே அமர்ந்தாள். எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தவனின் தோளைத் தொட்டாள்.

``மகனே... என்னதான் நடந்தது? என்னிடம்கூட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன உனக்குப் பிரச்னை?’’

இணைசூரன் தன் தாயின் கண்களைப் பார்த்தான். பிறகு தலையைக் குனிந்துகொண்டு, ``அம்மா... நான் வரும் வழியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் பெயர் பொன்னிறத்தாளாம். தளவாய் நாயக்கரின் மகளாம். அவளிடம் என்னைப் பறிகொடுத்து விட்டேனம்மா...’’ என ஆரம்பித்து, எல்லாவற்றையும் சொன்னான்.

மகன் சொன்ன விவரங்களை அமைதியாகக் கேட்டாள் தாய். ``மகனே கவலைப்படாதே. அவள் ஒருவகையின் உனக்கு முறைப் பெண்தான்.  அவளை உனக்கே பேசி, திருமணம் செய்துவைக்கி றேன். இந்தப் பலகாரங்களைச் சாப்பிடு’’ என்றாள்.

சூரன், தாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு முகம் மலர்ந்தான். எளிதாக அந்தப் பெண் தனக்குக் கிடைத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை பிறந்தது. தாயின் கரங்களைப் பற்றிக்கொண்டான். அவன் கரம் அன்னையின் கரத்தைப் பிடித்து அழுத்திய ஓர் அழுத்தலில் நன்றியும் நம்பிக்கையும் ஒருசேரத் தெரிந்தன.

ஒரு நல்ல நாளில்  பொன்னிறத்தாளைத் தங்கள் மகனுக்குப் பெண் கேட்கச் சென்றார்கள் இணைசூரனின் பெற்றோர்.  நல்லவன், வல்லவன், நாடறிந்த படைத்தலைவரின் மைந்தன் இணைசூரன்... பிறகென்ன? உடனே சம்மதம் சொன்னார்கள் பொன்னிறத்தாளின் பெற்றோர். இருவருக்கும் திருமணம் நடந்தது.

இணைசூரனும் பொன்னிறத்தாளும் மதுரையில் ஒரு பெரிய மாளிகையில் குடியேறினார் கள். மகிழ்ச்சியான, நிறைவான, காதல் கசிந்துருகிய வாழ்க்கை. சூரனும் பொன்னிறத்தாளும் அந்த வாழ்க்கையில் திளைத்துக்கிடந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பொன்னிறத் தாள் கருவுற்றிருந்தாள். குலவழக்கப்படி கருவுற்ற ஏழாம் மாதத்தில் தாய் வீட்டுக்கு வந்தாள். `குலம் தழைக்கக் குழந்தை பிறக்கப்போகிறது’ என்கிற கனவு அவளை ஆட்கொண்டிருந்தது.

அம்மாவின் அரவணைப்பில், சகோதரர்கள் எழுவரும் பார்த்துப்பார்த்துச் செய்த உபசரிப்பில் ஆழ்ந்துபோனாள். ஒன்பதாம் மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி வைத்தாள். 

விதி... அதற்கு நல்லவர், கெட்டவர் என்கிற பேதம் இல்லை. இவர் அப்பாவி, இவன் மோசக்காரன் என்கிற வித்தியாசம் அதற்குத் தெரிவதில்லை. அபலையான பொன்னிறத் தாளைக் கொத்திப்போக அது காத்துக்  கொண்டிருந்தது.

தொகுப்பு: பாலுசத்யா

- கதை நகரும்...

சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை!

கிருஷ்ண குறிப்புகள்!

கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மையானது. சாந்தோக்ய உபநிஷத்தில் கண்ணன், தேவகியின் மகன் என்று குறிப்பு உள்ளது.

கங்கை, யமுனை ஆற்றங்கரைகளில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தனிஸ் எழுதியுள்ளார்.

அலெக்சாண்டருடன் போரிட்டு வெற்றிபெற்ற புருஷோத்தமர் தனது வெற்றிக்குக் காரணம் கிருஷ்ணரே என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவத் தொழிலைச் செய்பவர்கள், கிருஷ்ணரை வணங்கியே தொடங்க வேண்டும் எனச் சாணக்கியர் கூறியுள்ளார்.

தமிழின் தொன்மையான இலக்கியங்களும்கூட கிருஷ்ணர் புகழைப் பாடியுள்ளன. சூரியனை  வரவழைத்ததாகக் கிருஷ்ணர் குறித்து புறநானூறு குறிப்பிடுகிறது. கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் என்ற குறிப்பும், நப்பின்னை பற்றிய செய்திகளும் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது.

- மு.ஹரிகாமராஜ்