Published:Updated:

`கரணம் தப்பினால் மரணம்' - எத்தியோப்பியாவின் நிஜ `விளிம்புநிலை' தேவாலயம்!

`கரணம் தப்பினால் மரணம்' - எத்தியோப்பியாவின் நிஜ `விளிம்புநிலை' தேவாலயம்!
`கரணம் தப்பினால் மரணம்' - எத்தியோப்பியாவின் நிஜ `விளிம்புநிலை' தேவாலயம்!

நம்பிக்கை என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிய வேண்டுமென்றால் ஒருமுறை எத்தியோப்பியாவுக்கு நாம் விசிட் அடித்து வரலாம். `வானத்திலிருக்கும் தேவாலயம்' என ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் இந்தக் கிறிஸ்தவ மக்களின் தேவாலயம் அந்நாட்டின் வடபகுதியில் இருக்கும் `டிக்ரே' மலை உச்சியில் இருக்கிறது.

``ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” - சங்கீதம் 50:15

பைபிளின் இந்த வாசகங்களை சொல்லியபடி மலையேறிச் சென்று இறைவனை தரிசிக்கிறார்கள் எத்தியோப்பியா மக்கள். 2500 அடி உயரம், கால் வைத்து நடக்க மட்டுமான குறுகலான பாதை. நிஜ விளிம்புநிலைப் பயணம் என்றால் இதுதான். எத்தியோப்பியாவின் குறுகலான அபுனா யமடா மலையுச்சி தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்துவிட்டு வந்தமக்களின் வீடியோவைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது. நம்பிக்கை என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிய வேண்டுமென்றால் ஒருமுறை எத்தியோப்பியாவுக்கு நாம் விசிட் அடித்து வரலாம்.

அந்த அளவுக்கு எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் கால் பாதங்களை வைக்க மட்டுமே இடமிருக்கும் அளவுக்கு ஊசி போன்ற மலையின் பக்கவாட்டில் பாதை செதுக்கப்பட்டிருக்கிறது. புயல், மழை, வெயில் என இயற்கைப் பேரிடர்களைத் தாங்கியும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் கம்பீரமாக நிற்கிறது அந்த மலை தேவாலயம். `வானத்திலிருக்கும் தேவாலயம்' என ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயம் இப்போது டூரிஸ்ட் டெஸ்டினேஷனாக மாறி வருகிறது. உலகின் தலை சிறந்த புகைப்பட நிபுணர்களும், சாகசப் பிரியர்களும் அங்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி... எத்தியோப்பியா எங்கிருக்கிறது?

ஆப்பிரிக்க கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் கொம்பு போன்ற வடிவத்திலிருப்பதால் `ஆப்பிரிக்காவின் கொம்பு' என அழைக்கப்படுகிறது. நான்கு பக்கமும் நிலங்கள் சூழ்ந்த அந்நாட்டில் கிறிஸ்தவ மதம்தான் பிரதான மதம். இங்கிருக்கும் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து கறுப்பினத்தவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதால் ஆப்பிரிக்க கண்டத்தினருக்கு இந்த மலை தேவாலயம் பிரபலமாகிவிட்டது. இது மட்டுமல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இன்னும் 8 குட்டி குட்டி மலை தேவாலயங்கள் எத்தியோப்பியாவில் இருக்கின்றன. ஆனால், அபுனா யமடா என்ற தேவாலயம் ரொம்பவே பயமுறுத்தும் உயரத்தில் இருக்கிறது.

அந்நாட்டின் வடபகுதியில் இருக்கும் `டிக்ரே' மலையின் உச்சியில் தான் இந்த தேவாலயம் செதுக்கப்பட்டுள்ளது. 19 அடி உயரத்துக்கு வெறும் கயிறு கட்டி தொங்கி ஏறித்தான் மலைப்பாதையின் தொடக்கத்தையே அடைய முடியும். வெறும் காலோடு முதுகு ஜிலீரிட அங்கிருந்து மேலே செல்ல வேண்டும். இன்ச் பை இன்ச்சாக ஆரம்பிக்கும் இந்த மலைப்பாதைப் பயணம் கிடுகிடு பள்ளத்தாக்கைப் பக்கவாட்டில் கொண்டிருப்பதாலும் கைக்குப் பிடிமானமே இல்லாமல் வெறும் பாறையில் செயற்கையாக இடப்பட்ட துவாரங்களைப் பிடித்துக்கொண்டும்தான் நடக்க வேண்டும். சில இடங்களில், பக்கவாட்டில் முதுகினைத் தேய்த்தபடி நடக்க வேண்டும். கண் முன்னே பள்ளத்தாக்கிலிருந்து மேலெழுந்து வரும் 'உய்ய்ய்ய்' என்ற பேரிரைச்சல் ஆளையே உலுக்கிவிடும். ஆனால், மக்கள் மனம் நிறைய நம்பிக்கையோடு, வேண்டுதலோடும் அந்தப் பாதையில் செல்வதால் மெதுவாக மேலே சென்றுவிடுகிறார்கள்.

5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தேவாலயத்தை எகிப்து நாட்டைச் சேர்ந்த மதபோதகர் யமடா என்பவர் கட்டினார். அவர் பெயராலேயே இன்று டூரிஸ்ட்களால் இந்த தேவாலயம் அழைக்கப்படுவது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டுவிடும் தூரத்தில் வைத்துக்கொண்டு பயணம் செய்யும் இந்த மலைப்பாதையையும், மலையயைக் குடைந்து அந்த தேவாலயத்தையும் அவரும் அவர் சகாக்களும் கட்டியதைக் கண்டு ஆப்பிரிக்க கண்டமே வியக்கிறது. இவ்வளவு உயரத்துக்குப் போய் ஒரு தேவாலயத்தை வடிவமைக்க என்ன காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது. மேகங்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டு இறைவனை தரிசிப்பதன் மூலம் அவரின் அருளைப் பெறலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள். அதற்காகத்தான் யமடா துறவி இவ்வளவு உயரத்தைத்  தேர்ந்தெடுத்ததாக நூல்கள் சொல்கின்றன.   

Photos Courtesy: new-faces-new-places.com

தற்போது அந்த தேவாலயத்தில் ஒரு வயதான பாதிரியார் மட்டும் இருக்கிறார். அவரும் மலையடிவாரத்தில் வசிப்பவர்தான்.  காலை வேலைகளை முடித்ததும், சாப்பிட்டுவிட்டு மேலே ஏற ஆரம்பித்தால் மதியத்துக்கு மேலேதான் அங்கு செல்ல முடியுமாம். ஆராதனைகளை நிறைவேற்றிவிட்டு இருட்டுவதற்குள் இறங்கிவிடுவாராம். தினமும் அவருக்கு முன்பே நிறைய பேர் நேர்த்திக்கடனுக்காக மேலே சென்று அந்தக் குட்டி தேவாலயத்தில் காத்திருப்பார்களாம். அங்கிருக்கும் பழைமையான ஓவியங்களையும், அந்த மலைப்பிரதேசத்து அழகையும் தரிசித்துவிட்டு காத்திருப்பார்களாம். வந்திருக்கும் அனைவருக்கும் வித்தியாசமான சிற்றுண்டியைத் தந்து குளிர்விப்பாராம் பாதிரியார்! அவர் இறங்க ஆரம்பிக்கும்போது அவருடனே இறங்கிவிடுவார்களாம். கர்ப்பிணி பெண்கள்கூட வேண்டுதலுக்காக மலையேறியதுண்டு. அதேபோல கைக்குழந்தைகளையும், ஞானஸ்நானத்துக்காக மேலே தூக்கிச் செல்வதுண்டு. ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட யாரும் தவறி விழுந்து பலியானது இல்லையாம்.

இந்தக் கட்டுரையின் முதல் வரியைப் படித்துப் பார்த்தால் விளங்கிவிடுகிறது... நம்பிக்கைதானே எல்லாம்! 

அடுத்த கட்டுரைக்கு