Published:Updated:

கிருஷ்ண பட்சணம்!

கிருஷ்ண பட்சணம்!
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண பட்சணம்!

லட்சுமி ஸ்ரீநிவாசன்

கிருஷ்ண பட்சணம்!

லட்சுமி ஸ்ரீநிவாசன்

Published:Updated:
கிருஷ்ண பட்சணம்!
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண பட்சணம்!
கிருஷ்ண பட்சணம்!

வெண்ணெய்ப் பிரியனான கண்ணனுக்கு, முறுக்கும் சீடையும்கூட ரொம்பப் பிடிக்குமாம். இதற்கான சுவாரஸ்ய காரணங்களாக சில செவிவழித் தகவல்களைச் சொல்வார்கள்.

கிருஷ்ண பட்சணம்!


கண்ணனும் அவன் தோழர்களும் மட்பாண்டங்களை வைத்து விளையாடும்போது, பெரும்பாலும் அந்தப் பானைகள் உடைந்து போக, உடையாமல் திகழும் அவற்றின் வாய்ப்பகுதியை கைகளிலும் தோள்களிலும் வளையல்களாகவும் வீரக் கழல்களாகவும் அணிந்துகொண்டு விளையாடு வார்களாம். இதன் நினைவாகவே  ஜன்மாஷ்டமி தினத்தில் கண்ணனுக்கு முறுக்கு படைக்கப்படுகிறதாம். அதேபோல், சகோதரி தேவகி எட்டாவதாகக் கருவுற்று இருக்கிறாள் என்பதை அறிந்ததும், கம்சன் தன் பற்களை நறநறவென கடித்து கோபாவேசப்பட்டானாம். இதன் ஞாபகமாக சீடை செய்யப்படுகிறது என்பது ஒரு தகவல்.

எட்டாவது குழந்தையாவது தங்கியதே என்ற களிப்பில், கம்சனின் தங்கை பலகாரம் செய்து கொண்டாடியதாகவும், அதையொட்டியே கோகுலாஷ்டமி தினத்தில் நாமும் பட்சணங்கள் படைத்து, கண்ணனை வழிபடுகிறோம் என்பார்கள் பெரியோர்கள்.

சரி... வெண்ணெய், முறுக்கு, சீடை ஆகிய பட்சணங்கள் மட்டும்தான் கண்ணனுக்குப் பிடித்தமானவையா... இல்லை! பக்தர்கள் அன்போடு அளிக்கும் எதையும் மிகப் பிரியத்துடன் ஏற்றுக்கொள்வான் கண்ணன்.  நாமும், கோகுலாஷ்டமியில் நம் வீடு தேடி வரும் கண்ணனுக்கு அன்போடு சில பட்சணங்களைச் செய்து கொடுப்போமா?

கிருஷ்ண பட்சணம்!

ஓமம் - உப்பு சீடை

பச்சரிசி 300 கிராம், பொட்டுக்கடலை மாவு 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 2 டீஸ்பூன், ஓமம் அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் சிறு துண்டு, வறுத்த வெள்ளை எள் ஒரு டீஸ்பூன்... அதேபோன்று, அரைத்த சிவப்பு மிளகாய் விழுது அல்லது பொடித்த மிளகு ஒரு டீஸ்பூன் அளவு தேவைப்படும். மேலும், தேங்காய்த் துருவல் சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பச்சரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, நிழலில் காய விடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், பெருங்காயத்தைப் பொடித்து 50 மில்லி நீர்விட்டுக் கரைத்துவைத்துக் கொள்ளுங்கள்.

இனி, பச்சரிசி மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிளகுத்தூள் (அ) மிளகாய் விழுது, உப்பு, ஓமம், எள், வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும், பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிறகு, அந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் ஓமம் - உப்பு சீடை தயார்.

கிருஷ்ண பட்சணம்!

திரட்டுப் பால்

கிருஷ்ண ஜயந்தியன்று ஒரு சாரார் இதை தவறாது செய்து, மோகனகிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

அடி கனமான வாணலியில், இரண்டு லிட்டர் பசும்பாலை இட்டு நன்கு பொங்கப் பொங்க காய்ச்சவும். பால் நன்கு குறுகி வருகையில் கால் கிலோ பொடித்த வெல்லம் சேர்க்கவும். பின்னர் தீயின் அளவைக் குறைத்து, கைபடாமல், அடிபிடிக்காத வண்ணம் கிளறிக்கொண்டே இருக்கவும். சற்றே அல்வா பதம் வரும்போது, இரண்டு டீஸ்பூன் நெய் மற்றும் ஏலக்காய்த் தூள் சிறிதளவு சேர்த்து, வெள்ளிக் கிண்ணத்துக்கு மாற்றி, துளி நெய் சேர்த்துக் கண்ணனுக்குச் சமர்ப்பிக்கவும்.

கிருஷ்ண பட்சணம்!

அவல் - பருப்பு - பேரீச்சம்பழ உருண்டை

200 கிராம் அவலை 2 டீஸ்பூன் நெய் விட்டு, தீய்ந்து போகாமல் சிவக்க வறுத்து ஆறவிடுங்கள். பிறகு அதை மிக்ஸியில் இட்டு பொடிக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் பாதாம் பருப்பு (மூன்றும் சேர்த்து 50 கிராம்) மற்றும் 25 கிராம் உலர்திராட்சையைச் சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல், பொடிப்பொடியாக நறுக்கிய 5 பேரீச்சம்பழங்களை வெறும் வாணலியில் ஒட்டாதவாறு வறுத்து எடுக்கவும். அடுத்து, 200 கிராம் நெய்யைச் சூடாக்கி எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.

பொடித்த அவல், 150 கிராம் சர்க்கரை, கால் கப் பால் பவுடர், வறுத்த பருப்பு வகைகள், பேரீச்சம், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, 10 லவங்கம்...  இவற்றை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலந்து, சூடான நெய்யைச் சேர்த்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து, துளசியுடன் நைவேத்தியம் செய்யவும்.

கிருஷ்ண பட்சணம்!

வெண்ணெய் விரல் முறுக்கு

கிருஷ்ண பட்சணம்!


100 கிராம் அரிசி மாவை வெறும் வாணலியில் சற்றே சிவக்க வறுக்கவும். அதனுடன் 2 டீஸ்பூன் உளுத்தம் மாவு (வறுத்து அரைத்தது), அரை டீஸ்பூன் வறுத்த எள், சிறிதளவு பெருங்காயத்தூள்,  சிறிதளவு உப்பு, 2 டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். பிறகு பிசிறி, சிறிதளவு நீர் சேர்த்து நன்கு பிசையவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து விரல் பருமன் நீளமாக உருட்டி இரு முனைகளையும் இணைக்கவும் (மோதிர அளவில்). எல்லா மாவையும் இதேபோல் செய்து கொள்ளவும். இதுதான் விரல் முறுக்கு. சூடான எண்ணெயில் விரல் முறுக்குகளைப்போட்டு  மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும். இதை துளசியுடன் நைவேத்தியம் செய்ய... திரௌபதியின் மானம்காத்த முகுந்தன் நமக்கு அருள்புரிவான்.

கிருஷ்ண பட்சணம்!

பொட்டுக்கடலை ரிப்பன் பக்கோடா

இதைச் செய்வதற்கு பச்சரிசி மாவு 3 கப், பொட்டுக்கடலை மாவு அரை கப், கடலை மாவு அரை கப், பெருங்காயத்தூள்,  உப்பு சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது ஒரு டீஸ்பூன், வெண்ணெய் 3 டீஸ்பூன் ஆகியவை தேவை.

மாவு உட்பட அனைத்தையும் கலந்து நீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். ரிப்பன் பக்கோடா பிழியும் அச்சில் எண்ணெய் தடவி, மாவை முக்கால் பாகம் நிரப்பி, சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பிழிந்து, பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி, படங்கள்: தி.குமரகுருபரன்