Published:Updated:

‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’
பிரீமியம் ஸ்டோரி
‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

பிரேமா நாராயணன்

‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

பிரேமா நாராயணன்

Published:Updated:
 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’
பிரீமியம் ஸ்டோரி
‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

றைவன் குடிகொண்டிருக்கும் கோயில்களில் தொண்டு செய்ய வாய்ப்பும் நேரமும் கிடைப்பதே பெரும் பாக்கியம். அதிலும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோயில்களைச் சுத்தப்படுத்தி, பூஜைகள் செய்து தொழுவது, ஏழேழு பிறவிகளுக்கும் பெரும் புண்ணியம் பெற்றுத்தரும் தொண்டல்லவா? அப்படியான பெரும் பேற்றினை தனக்கு மட்டுமல்லாமல், தான் உருவாக்கியுள்ள குழுவினருக்கும் தேடித் தந்துகொண்டிருப்பவர் சென்னை, கீதா ராஜகோபால்.

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

ஏழு வருடங்களுக்கு முன்பு, தன் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ‘திருக்கோயில் வழிபாட்டுக் குழு’ என்று ஓர் குழுவை உருவாக்கி, அதன்மூலம் இந்த அரும்பணியைச் செய்து வருகிறார் கீதா.

‘‘எல்லாம் அவன் செயல். இத்தனை கோடி ஜனங்களில் இந்தப் பணிக்கு என்னை, அவன் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இயல்பிலேயே சுவாமி பக்தி உள்ளவள் நான். என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்த குடும்பமும் ரொம்ப ஆன்மிக நாட்டம் கொண்ட குடும்பம்.

என் கணவர் ராஜகோபாலும் அவர் சகோதரரும் வீட்டிலேயே, 30, 40 குழந்தைகளுக்கு இலவச டியூஷன் சொல்லிக் கொடுத்திட்டிருந் தாங்க. அந்தக் குழந்தை களுக்கு விஷ்ணு சகஸ்ரநாமமும் சொல்லிக் கொடுப்பார். அதோடு கிருத்திகை பஜனையும் வீட்டில் விமர்சையாக நடக்கும். கல்யாணமாகி வந்த புதுசில் இதையெல்லாம் ரொம்ப ஆச்சர்யமாகப் பார்த்தேன். ஆனா, போகப்போக எனக்கும் அதில் ஈடுபாடு வந்தது. 

சங்கர மடத்தின்மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் எங்களுக்கு உண்டு. அடிக்கடி போய்ட்டு வருவோம். அங்கேதான் இந்த திருக் கோயில் வழிபாட்டுக் குழு உருவானது. மொத்தம் நான்கு குழுக் களை உருவாக்கி, ஒரு குழுவுக்கு என் கணவரைத் தலைவராக நியமிச்சாங்க. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, நாங்களும் எங்கக் குழுவினரும் இந்தத் திருப்பணியைச் செய்றோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி, உத்திரமேரூர், செங்கல்பட்டு, வாலாஜான்னு ஒவ்வொரு பகுதியில் இருக்கும் கவனிப்பாரில்லாத கோயில்களில், வழிபாடுகள் செய்து வர்றோம். கடந்த மே மாதத்துடன் 75 கோயில்களை நிறைவு செய்துட்டோம்’’ என்று உற்சாகம் ததும்பக் கூறுகிறார் கீதா.

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

ஒவ்வொரு மாதமும் எந்தக் கோயிலில் திருப்பணி செய்ய வேண்டும் என்ற பட்டியல் சங்கர மடத்திலிருந்து தரப்படுகிறது. புறநகர் பகுதிகளிலும், உள்ளடங்கிய கிராமப்புறங்களிலும் பூஜைக்கு வழியின்றி பராமரிப்பு இல்லாமல் கிடக்கும்  கோயில்கள் தான் இக்குழுவின் இலக்கு. காலையில் புறப்பட்டுச் சென்று, கோயிலைச் சுத்தம் செய்து தீபம் ஏற்றி, அபிஷேகம், ஆராதனை, விளக்கு பூஜை நடத்தி, பிரசாதம் நிவேதனம் செய்து விநியோகிக் கின்றனர். இவர்களின் பணியில் உள்ளூர் மக்களையும் இணைத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து அங்கே பூஜைகள் நடக்கும் அளவுக்கு மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துகின்றனர்.

‘‘கோயில் இருக்கும் நிலைமைக்கு ஏத்த மாதிரி எங்க பணிகள் கொஞ்சம் வித்தியாசப்படும். நிறைய செடி கொடிகள் மண்டிப் போய் கிடக்கும் கோயில்களில், அதையெல்லாம் வெட்டி, சுத்தப் படுத்தி, பூஜைகள் செய்வோம். அர்ச்சகர் இருந்தால் அவரை பூஜைகள் செய்யச் சொல்வோம்.  இல்லாத பட்சத்தில், நாங்களே பூஜைகள் செய்துடுவோம்.

சிவன் கோயில் என்றால் ஸ்ரீருத்ரம், பெருமாள் கோயில் என்றால் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வோம். போகும்போதே பூஜைக்கான பொருள்கள், அபிஷேக சாமான்கள், பிரசாதத்துக்கு கேசரி, பாயசம்னு எல்லாம் தயாராகக் கொண்டுபோயிடுவோம். எல்லா கோயில்களிலும் கண்டிப்பாக சுவாமிக்கு அபிஷேகம், நைவேத்தியம் உண்டு. குழந்தைங்க நிறைய இருந்தாங்கன்னா, அவங்களுக்கு விநாடி - வினா மாதிரி நடத்தி, சின்னச்சின்னப் பரிசுகள் கொடுப்போம்.

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

சில கோயில்களில் தம்பதி பூஜை நடத்தியிருக்கோம். பெண்கள் நிறைய இருக்கும் இடங்களில் கோலப்போட்டிகூட நடத்தினோம். ‘இன்னும் வசதி இருந்தா, சிறப்பாகப் பண்ணலாமே’ன்னு கொஞ்சம் மனவருத்தத்தோடு பெரியவாளைப் பிரார்த்தனை செய்திட்டிருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னால, திடீர்னு ஒரு ஸ்பான்ஸர் கிடைச்சார். அதிலிருந்து எங்க கோயில் திருப்பணி, ஜாம்ஜாம்னு போய்கிட்டிருக்கு!’’ என்கிறார் கீதா.

இவர்களுடைய கோயில் திருப்பணியில், பக்தியும் ஆர்வமும்கொண்ட யார் வேண்டுமானா லும் இணைந்துகொள்ளலாம். காஞ்சி மடத்திலிருந்து வேன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. 25 நபர்கள் வரை மட்டுமே வேனில் செல்ல முடியும் என்பதால், முதலில் சொல்லிப் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அழைத்துச் செல்கிறார்கள். புதர் மண்டிப்போய் கிடக்கும் கோயில் களில்,  சிலிர்ப்பான அனுபவங்களையும் சந்தித்திருக்கிறது இக்குழு.

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

‘‘உத்திரமேரூர் பக்கம்  ஒன்பது வருடங்களாகப் பூட்டிக்கிடந்த ஓர் கிராமத்துச் சிவன் கோயிலில் உழவாரப் பணி செய்திட்டிருந்தோம். உள்ளே பாம்பு இருக்குன்னு, அந்தப் பூசாரி பயந்து கோயிலைத் திறக்கவே இல்லை. நாங்க தைரியமாகக் கோயிலைத் திறந்து, விளக்கைக் கையில் பிடிச்சபடி உள்ளே போனோம்.

கர்ப்பகிரஹத்தில், சிவலிங்கத்தின் பின்னால் பெரிய பாம்பு. எல்லோருக்கும் நடுங்கிடுச்சு. ஆனாலும் பகவானைப் பிரார்த்திச்சபடி காத்திருந்தோம். சில நிமிஷங்களில், அந்தப் பாம்பு தானாக ஊர்ந்து போயிடுச்சு... அதுக்கப்புறம் கிராம மக்கள் உதவியோடு சுத்தம் செய்து, அபிஷேக ஆராதனை எல்லாம் செய்தோம். இப்போ அந்தக் கோயில் ஜம்முன்னு இருக்கு. மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு நடக்குதுன்னா பார்த்துக்கங்க...’’  சந்தோஷமாகச் சொன்னவர், தொடர்ந்தார்...

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

‘‘இப்போ நாங்க போனது , காஞ்சிபுரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேல்ஒட்டிவாக்கம். அங்கே இருக்கிற ஸ்ரீதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீஜம்புநாதேஸ்வரர் கோயில், 500 வருஷங்கள் பழைமையானது. அர்ச்சகர் இல்லை என்பதால் தர்மகர்த்தா தலைமையில் ஊர்க்காரங்களே சேர்ந்து விளக்கேத்தி பூஜை செய்தார்கள். நாங்க அபிஷேக சாமான்கள், வஸ்திரம், கேசரி, பாயசம் எல்லாம் எடுத்துட்டுப் போனோம். 

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்ததுடன், ஸ்ரீருத்ரம் பாராயணம் பண்ணினோம். கிராமத்துப் பெரியவர்கள், 60 வயசு தாண்டியவர்களில் ஐந்து தம்பதிகளை வரவழைச்சு, அவங்க மகன், மகள், பேரன், பேத்தி புடைசூழ தம்பதி பூஜை நடத் தினோம். சங்கரமடத்திலிருந்து  வந்த புதுப் புடவை, வேஷ்டியையும் அவர்களுக்கு வழங்கினோம். கிராமத்துப் பெண்கள் 32 பேர் கலந்துகொள்ள விளக்கு பூஜையும் நடந்தது.

எல்லா கோயிலுக்குமே நான் வீட்டிலிருந்து கேசரி பண்ணி எடுத்துட்டுப் போயிடுவேன். நண்பர்கள் ஒவ்வொருவரும் நைவேத்தியம் கொண்டு வருவாங்க. அது தவிர, நாங்க போகும் ஒவ்வொரு கோயிலிலும், பம்மல் சங்கரா கண் மருத்துவமனையிலிருந்து பெரிய பாத்திரத்தில் பிரசாதம் கொண்டுவந்து ஊர் மக்களுக்கு விநியோகம் பண்ணுவாங்க.

இந்த முறை, சர்க்கரை பொங்கல், புளியஞ்சாதம், தயிர்சாதம் எல்லாம் அனுப்பியிருந்தாங்க. ஆக, ஊர்கூடி தேர் இழுப்பதுபோல, எங்க குழுவினர் கூடி இந்த தெய்வ காரியத்தைச் சிரத்தையோட செய்துட்டிருக்கோம்.

நாங்க போன இடங்களில், பல கோயில்களில் இப்போ அர்ச்சகர் நியமிக்கப்பட்டு பூஜை, புனஸ்காரங்கள் நடக்குது. கிராம மக்களுக்கே விழிப்பு உணர்வு வந்து, பூஜைகளில் கலந்துக்கிறாங்க. அதையெல்லாம் விட ரொம்ப நிறைவான விஷயம், இதுவரை நாங்க போனதில் 25 கோயில் களில் திருப்பணி நடந்து, கும்பாபிஷேகம் நடந்திருக்கு!’’ என்றபோது, ஆனந்தமும் ஆத்மார்த்த திருப்தியும் பொங்குகிறது கீதாவின் குரலில்.

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

இவர்களின் குழு மாதம்தோறும் கோயில் பணிக்குப் போகும்போது, அதிகப்படியாகவே பூ, பழங்கள், அபிஷேக சாமான்கள் கொண்டு செல்கிறார்கள். கிராமப்புறங்களில் நிச்சயமாக எல்லைத் தெய்வக் கோயில்கள் இருக்கும் என்பதால், அந்தக் கோயிலுக்கும் போய் அபிஷேக-ஆராதனை செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பராமரிப்பு இல்லாத கோயில் களைச் சுத்தப்படுத்தியதும், அந்தக் கோயில் அர்ச்சகர் அல்லது ஊர் முக்கியஸ் தரிடம், சுமார் ஐந்து லிட்டர் எண்ணெய், திரி, கற்பூரம் போன்ற பூஜைப் பொருள்களை வழங்கு கின்றனர்.

‘‘தினமும் ரெண்டுவேளை விளக்கு ஏற்றி, கொஞ்சம் கல்கண்டாவது நைவேத்தியம் பண்ணி, பூஜை செய்யுங்கன்னு சொல்லிட்டு வர்றோம். இப்ப பல கோயில்களில் தினசரி பூஜைகள் நடக்குறதே, எங்களுக்கு மிகப் பெரிய திருப்தி!’’ உணர்ச்சிப் பெருக்கோடு சொல்கிறார் கீதா.

இறைத்தொண்டு இனிதே தொடரட்டும். இந்தப் பிறப்பும் வாழ்வும் அவன் கொடுத்தது, அவனுக்குத் திருப்பி நாம் என்ன கொடுக்க முடியும்... இதுபோன்ற அன்பும் ஆழ்ந்த பக்தியும் கலந்த சேவையைத் தவிர!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 ‘முதல் ஞாயிறு... இறைவனுக்காக!’

கிருஷ்ண தரிசனம்!

ராஜஸ்தான் மாநில நாத்வாரா என்ற கோயிலில் உறையும் ஸ்ரீகிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீ பகவானுக்கு என்னென்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்று ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துள்ளனர்.

அதில் வெண்ணெய், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவையெல்லாம் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குழந்தை கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்ததால், அதன் பெருமையைக் கூறவே அவர் பிறந்த கிருஷ்ண ஜயந்தி திருநாளை கோகுலாஷ்டமி என்றும் அழைக்கிறோம்.

கேரள மாநிலத்தில் `அஷ்டமி ரோகிணி' என்ற பெயரில் இந்த விழா நடைபெறுகிறது.

வட மாநிலங்களில் சில இடங்களில், கிருஷ்ண ஜயந்தி வழிபாடுகளை நள்ளிரவில் கொண்டாடு கிறார்கள். அவர் பிறந்தது நள்ளிரவில் என்பதால் இப்படியொரு நடைமுறையாம்!

- மு.ஹரிகாமராஜ்