Published:Updated:

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

கே.குமார சிவாச்சாரியார், படங்கள்: மீ.நிவேதன்

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

கே.குமார சிவாச்சாரியார், படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

ல்லறம் எனும் நல்லறத்தைத் தரும் கல்யாணப் பேறு, ஆண் பெண் இருபாலருக்கும் உரிய வயதில் கிடைக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கைக் கசக்கும்.

இப்படியொரு நிலை ஏற்பட்டுவிடாமல், பெண்ணோ ஆணோ வாழ்க்கை முறையாலும் ஜாதக ரீதியாலும் அவர்களுக்குத் திருமணத் தடை இருந்தால் அதை அகற்றி, மனதுக்கினிய வாழ்க்கை அமையவும் கல்யாணப் பேறு வாய்க்கவும் அருளும் பல திருத்தலங்கள் குறித்து  பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் குன்றத்தூர் - கல்யாண வரம் தரும் காத்யாயினி அம்மன் திருக்கோயில்.

`காத்யாயினி’ என்ற பதத்துக்கு, தன்னை நாடி வந்து வணங்கும் அன்பர்களின் கல்யாண வேண்டுதலை, ஓர் அயன காலத்துக்குள்  நிறைவேற்றி அருள்பவள் என்றே பொருள் கொள்ளலாம். அதாவது காத்யாயினி தேவியை வழிபட்டால் ஆறு மாத  (ஓர் அயனம்) காலத்துக்குள் திருமண பாக்கியம் கிடைக்குமாம்.

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

ஸ்ரீகிருஷ்ணரை அடைவதற்கான தடைகள் நீங்க வேண்டும் என விரும்பிய கோபியர், ஒருநாள் கானகத்தின் வழியில் காத்யாயன மகரிஷியைச் சந்தித்தனர். அவரை வணங்கி, தங்களது பிரச்னைக் குத் தீர்வுவேண்டினர். உடனே அவர் தன் வாக்கிருந்து வந்த பீஜ மந்திரங்களைக் கொண்டு காத்யாயினி தேவியை உருவாக்கித் தந்து, ‘இந்த தேவியை வழிபட்டால், விரைவில் தடைகள் நீங்கும்’ என்று உபதேசித்ததாக புராணத் தகவல் உண்டு. லலிதா சகஸ்ரநாமத்திலும், லலிதா திரிசதியிலும் இந்தத் தேவியின் மகிமை கூறப் பட்டுள்ளது.

இங்ஙனம், ஞானநூல்கள் பலவும் விவரிப்பது போல் கல்யாண வரம் தரும் நாயகியாய், தேவிஸ்ரீ காத்யாயினி அம்மன் கோயில்கொண்டிருக்கும் தலம்தான் குன்றத்தூர். பெண்களின் தெய்வமாய் அவர்களது பிரச்னைகளை நீக்கியும், கல்யாண வரம் தந்தும் தேவிஸ்ரீ காத்யாயினி அம்மன் அருள்பாலிப்பதால், இந்தத் தலத்தை சக்தி கோயில் என்றே அழைக்கிறார்கள்.

சந்திரகாந்தக் கல்லாலான அம்பிகையின் திருமேனியில் இருந்து பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிகளவில் மின்காந்த சக்தி வெளிப்படும் எனும் நம்பிக்கை உண்டு என்பதால், குறிப்பிட்ட தினங்களில், அன்னையைத் தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 4-ம் நாள் புனருத்தாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் கண்டு, புதுப்பொலிவுடன் திகழும் இந்த ஆலயத்தின் கருவறையில் நிதிகளின் தலைவனாகிய குபேரனின் சிலைகள் இரண்டு பீடத்தைத் தாங்கி நிற்க, நாகாபரணம் பூண்டவளாய் கிழக்கு நோக்கி அருட்கோலம் காட்டுகிறாள் தேவிஸ்ரீ காத்யாயினி அம்மன். தேவியின் பாதத்தில், ஆதிசங்கரர் மேருமலையில் ஸ்தாபித்தது போன்ற சக்தியின் வடிவமான ஸ்ரீசக்ர மகாமேரு அருள் வடிவைத் தரிசிக்கலாம். எதிரில் கடன் தீர அருள்புரியும் தோரண கணபதி சந்நிதி கொண்டிருக்கிறார். அதேபோல், மகா மண்டபத்தில் சூலசக்திக்கு எதிரில் மங்கலமாரி தேவியும், கிருஷ்ணமாரி தேவியும் காட்சி தருகிறார்கள். துவார சக்திகளாக கங்கையும் யமுனையும் அருள்பாலிக்கிறார்கள்.

திருச்சுற்றில் தனலட்சுமி, ஆதிலட்சுமி  முதலாக அஷ்டலட்சுமியரையும் தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் இந்த லட்சுமி தேவியர் தாங்கியருளும் லட்சுமி கோபுரம் சாந்நித்தியம் மிகுந்த ஆன்மிகச் சின்னமாகத் திகழ்கிறது.

திருவேற்காடு கருமாரி, மாங்காடு காமாட்சி, குன்றத்தூர் காத்யாயினி ஆகிய தேவியரை ஒரேநாளில் தரிசிக் கும் `திரிசக்ர தரிசனம்’ பக்தர்களிடையே பிரசித்தம். இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் திருவேற்காடு, மாங்காடு தரிசனத்தை  முடித்துக்கொண்டு இங்கு வந்து அன்னை காத்யாயினியை வழிபடுவ துடன், இந்த லட்சுமி கோபுரத்தைத் தரிசித்து திரிசக்ர தரிசனத்தை நிறைவு செய்வது வழக்கம்.

தொடர்ந்து திருச்சுற்றை வலம் வரும்போது மூன்று கிளை வேம்பின் கீழ் குடும்பத்துடன் அருளும் நாகராஜரைத் தரிசிக்கலாம். இவரை, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தீபமிட்டு வழிபட்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.  அடுத்து நாம் தரிசிப்பது, பாலதுர்கை. இந்த தேவியும் வரப்பிரசாதியானவள்.

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

திருமணப்பேறுக்கான பிரார்த்தனை முறை...

கன்னிப் பெண்களும், ஆண்களும் காத்யாயினி அம்மனின் சந்நிதிக்கு மூன்று வாரங்கள் வந்து வழிபட வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து மூன்று வாரங்கள் வந்து வழிபடலாம்.

முதல்முறை செய்யும் தரிசனத்துக்கு ‘காத்யாயினி தேவி திருமண பூஜை’ என்று பெயர். இரண்டு தேங்காய்களை வைத்து கிரக தோஷங்கள் நீங்கிட பிரார்த்தனை செய்து, காத்யாயினி அம்மனை வேண்டிக்கொள்ளும் கல்யாண ஸ்துதியான ‘ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காத்யாயினி மஹாமாயே மஹாயோகினியதீஸ்வரி நந்தகோப சுதம்தேவம் அதிசீக்ரம் பதிம்மே குருதே நம:’ என்ற மூல மந்திர வரிகளை 16 முறை சொல்ல வேண்டும். (அர்ச்சனை முடிந்ததும் சந்நிதியில் மஞ்சள் குங்கும பிரசாதம் எடுத்துக்கொண்ட பிறகு இந்த மந்திரத்தைக் கூறுவது விதி).

இரண்டாவது வாரத்தில், ஆலயத்தில் விருட்ச பூஜை செய்து, பெண்ணின் வலக்கையில் மஞ்சள் காப்பு அணிந்து கொண்டு பிரார்த்தனை செய்து, மேலே சொன்ன மூலமந்திரத்தை 16 முறை ஜபிக்க வேண்டும்.

மூன்றாவது வாரம் தரிசிக்கும்போது பெண் (ஆண்களுக்கும்) ஜனன ஜாதகத்தை அம்மன் பாதத்தில் வைத்து, ‘ஜன்ம பத்திகா பூஜை’ என்ற விசேஷ பூஜையை செய்து அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இப்போதும் ஆலயத்தை மும்முறை வலம்வந்து 16 முறை கல்யாண மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஜாதகத்தில் நாகதோஷம், களத்திர தோஷம், தாரதோஷம் இருந்தால் அவை அகன்று, விரைவில்  திருமணப்பேறு கிடைக்க இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

நவகிரக நாயகியான தேவிஸ்ரீ காத்யாயினி, கிரக மூர்த்திகளை நல்லனவற்றை அருளும்படிச் செய்து சுபமங்கல வாழ்க்கையை அளிக்கும்படி பெண்கள் வேண்டுவதே இந்த பிரார்த்தனையின் உட்பொருள். இந்த மூன்று தரிசனங்களை விதியோடு செய்யும் பெண்களுக்கு, மூன்று பட்சங்களுக்குள் கல்யாணம் உறுதி ஆகிவிடுவதாக நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

விருட்ச வழிபாடு!

சக்திவாய்ந்த வழிபாடு இந்தக் கல்யாண விருட்ச பூஜை. இந்த ஆலயத்தின் பிருந்தாவனத்தில் ஈசான்ய மூலையில் வளரும் மரத்திலிருந்து இலைகளை எடுத்து வந்து, அதில் மஞ்சள் பிள்ளையார் போன்று அம்பிகையை ஆவாஹனம் செய்து கொள்வார்கள். பின்னர்,  காத்யாயினியின் மங்கல அஷ்டகத்தை மும்முறை படித்து, மூன்று தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். குரு பலம் கைகூடி வராத கன்னிப்பெண்கள், இந்த அபூர்வ விருட்சத்துக்குக் கன்னி நூலால் காப்பிட்டு வழிபட்டால், விரைவில் திருமண யோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய காரகனான சனி பகவானின் ஆசியைப் பெறும் பொருட்டு, ஆலய பிருந்தாவனத்தில் சனிக்கிழமை அன்று மட்டும் விருட்ச இலை வழங்கப்படுகிறது. அதேபோல், திருமண வரம் பெறும்பொருட்டு யக்ஞ வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் வருடாந்திர உற்சவங்களாக... ஆடிமாதம் 4-வது வாரம் கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா - தீ மிதித்தல், கார்த்திகை மாத வளர்பிறையில் ரம்பா திருதியை சுவர்ண அலங்காரத் திருக்காட்சி, சித்திரையில் வசந்த நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன. குன்றத்தூர் முருகனைத் தரிசிக்கச்செல்லும் அன்பர்கள், இந்த அம்பிகையையும் தரிசித்து வழிபட்டு, குடும்பம் செழிக்க வரம்பெற்று வரலாம்.

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

எப்படிச் செல்வது?

செ
ன்னை - குன்றத்தூர், முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில், ஸ்ரீஊரகப்பெருமாள் ஆலயச் சுவரை ஒட்டியவாறு, சுமார் 100 மீட்டர் தூரம் சென்றால் காத்யாயினி ஆலயத்தை அடையலாம். சென்னை தாம்பரத்தில் இருந்து குன்றத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு. குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகள் உண்டு.