Published:Updated:

புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

சங்கர்பாபு

புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

சங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

நீங்கள் காரிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிக்கும்போது, கடந்துபோகும் சில கிராமங்களில் மரத்தடியில் சிலர் எவ்விதக் கவலையுமின்றி படுத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். மரத்தடியில் மட்டுமின்றி, சிமென்ட் பெஞ்சுகள், மூடப்பட்டுக் கிடக்கும் கட்டட வாசல்கள், கடை வாசல்கள் ஆகிய இடங்களிலும் அமர்ந்து பேசியபடியோ அல்லது தொடர்ந்த பேச்சினால் ஏற்பட்ட களைப்பினால் தூங்கிக்கொண்டோ இருப்பதைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

இவர்களின் இந்தச் சோம்பல் நிலை கண்டு உங்களுக்குக் கோபம்கூட வந்திருக்கும். தயைக்கூர்ந்து அப்படியொரு  கோபம் உங்களுக்கு எழ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! `பாவம்... செய்வதற்கு ஏதேனும் வேலை இருந்திருந்தால் அவர்கள் ஏன் இப்படி இருக்கப் போகிறார்கள்?’ என்ற கோணத்தில் அவர்களை அணுகும்படி உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் இப்படி வேண்டிக் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. ஒருகாலத் தில் நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தேன் என்பதை வெட்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

கல்லூரி படிப்பு முடித்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்ச நாள்கள் சும்மா இருந்தேன். காலை டிபன் முடித்த பிறகு, நீண்டுகிடக்கும் பகலை எதிர்கொள்ள வழியின்றி நண்பனின் கடையில் படுத்துக் கிடத்தல், மரத்தடிகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தல், அங்கே வெயில் வந்தால் நகர்ந்து சென்று கோயில் திண்ணைகளில் படுத்தல்… இந்தக் கடமைகளையே சில வருடங்கள் செய்து வந்தேன்.

இப்படியான ஈடு இணையற்ற சாதனை களைச் செய்த களைப்பிலும் பசியிலும் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக வீடடைந்தால் அம்மா கேட்பார்.

‘‘என்னடா, வேலைக்கு ஏதாவது ஆர்டர் வந்துச்சா?’’

யோசித்துப் பாருங்கள்...

வேலைக்குப் போவது குறித்து எவ்வித முயற்சியோ, நினைப்போ இல்லாத இருக்கும் ஒருவன் இந்தக் கேள்வியை எப்படி எதிர் கொள்வான்?

இப்படியான கேள்வி, வேலைக்குச் செல்லும் மற்றவர்களையும் அதைப் பெறும்பொருட்டு உழைத்துக்கொண்டிருப்பவர்களையும் அவமானப்படுத்துவதாகும் என்கிற நினைப்பு எதுவுமின்றி,  இதே கேள்வியை  ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா. எனக்கு எங்கிருந்து ஆர்டர் வரும்? சக சோம்பேறிகளிடம் இருந்து `இந்த ஊரில் தூங்கி மகிழ அருமையான சோம்பேறிக்கூடம் உள்ளது’ எனும்படியான தகவல் வரலாமே ஒழிய, வேறு எதுவும் வர வாய்ப்பே இல்லை. இதையும் அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

அப்போதும் அம்மா உறுதியுடன் சொன்ன விஷயம் இன்னமும் நினைவிருக்கிறது.

“வரும், கண்டிப்பா உனக்கு ஆர்டர் வரும் பாரேன்... நம்ம வீட்டு வாசலுக்கு வந்து போஸ்ட்மேன் கொடுக்கத்தான் போறாரு.பார்த்துக்கிட்டே இரு...”

சொற்கள்... இதயத்தின் ஆழத்திலிருந்து அதீத நம்பிக்கையுடன் வெளிப்படும் சொற் கள்... தனது விருப்பப்படி எதிர்கால சம்பவங் களை நினைத்து அப்படி நடந்தே தீர வேண்டும் எனும் ஆழமான நம்பிக்கையுடன் உதிர்க்கப்படும் சொற்கள்... வலிமையானவை.

நமது புராணங்கள் வார்த்தைகளின் சக்தியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆழ்ந்த மன ஒருமையுடன் உச்சரிக்கப்படும் சொற்கள் அணுகுண்டு களின் ஆற்றலைப் பெற்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

யோகி பரமஹம்ஸ யோகானந்தர் வார்த்தைகளின் வலிமை பற்றிக் கூறுகையில், “எதையும் உற்பத்தி செய்யக்கூடிய ‘ஓம்’ என்ற சொல்லிலிருந்து ஒலியின் அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது. அண்டகோசத்தின் அலைகளாகத் திரியும் இச்சக்திதான் எல்லா அணுக்களின் சக்தியாகவும் பரிணமிக்கிறது. எவ்வித வாக்கும் நன்கு அறிந்து ஆழ்ந்த உணர்வுடன் கூறப்படின் நடைமுறையில் பலிக்கத்தக்கதாகிறது’’ என்கிறார்.

நீங்கள் நடைமுறை வாழ்க்கையிலேயே பார்க்கலாம். கடுமையான நோயுடன் வரும் நோயாளியிடம் ‘‘உங்களுக்கு ஒன்றுமில்லை. சீக்கிரம் குணமடைவீர்கள்’’ என்று மருத்துவர்கள் கூறுவதைப் பார்க்கிறோம். இப்படியான வார்த்தைகளே அந்த நோயாளியைப் பாதி குணப்படுத்திவிடும். அதேநேரம் வெறும் ஜலதோஷம் பிடித்திருக்கும் ஒருவரிடம் ‘அவ்ளோதான்... எல்லாம் போச்சு’ என்ற ரீதியில் பேசினால், மனதளவில் சோர்வடையும் அவன், உடலளவிலும் வீழ்ச்சியைச் சந்திப்பான்.

தேர்வு எழுதச் செல்பவரிடம், ‘கவனம்! தேர்வு கடினமாக இருந்துவிடப் போகிறது... நீங்கள் படித்ததெல்லாம் மறந்துவிடப் போகிறது...’ என்ற ரீதியில் சொல்லியனுப்பினால், அவர் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே கடினமாகிவிடும்.

நமது இதிகாச - புராணங்களில் வரும் முனிவர்கள், ரிஷிகள் தருகிற சாபங்களும் இந்த அடிப்படையில் ஆனவைதான்.

துர்வாசரின் கோபமும் சாபமும் பெயர்பெற்றவை. அவ்வளவு ஏன் பிருகு முனிவர் பகவான் விஷ்ணுவையே சபித்ததாகக் கதை உண்டு. காந்தாரி கிருஷ்ணரைச் சபித்தாள், கிருஷ்ணர் அஸ்வத் தாமாவை சபித்தார், பரீட்சித்து மகாராஜா சாபம் பெற்றார், தசரதனும் கர்ணனும்கூட சபிக்கப்பட்டார்கள். இப்படியான சாபங்களையெல்லாம்... பாதிப்பினால் நொந்து போன உள்ளங்கள் செய்வதறியாது திகைத்திருக்கும் அந்தக் கணத்தில், தங்களின் அடிமனதிலிருந்து ஆழ்ந்த உணர்ச்சியோடு வெளிப்படுத்திய வார்த்தைகள் என்றே கருத வேண்டும். தோட்டாக்களைப் போன்று வெடித்துக் கிளம்பும் இந்த வார்த்தைகள் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்ததாயிருக்கும். அவை பலித்தே தீரும்.

அப்படியானால், தெய்வங்கள் தரும் வரங்கள்?

அவையும் வார்த்தைகளின் பலத்தை வெளிப்படுத்து பவையே. அவை, வார்த்தைகளின் நேர்மறை அணுகுமுறையைச் சொல்கின்றன. என் அம்மா சொன்ன வார்த்தைகளும் அப்படிப்பட்டவை என்பதை என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன். இல்லையென்றால், மந்தகதியில் சென்று கொண்டிருந்த நான், திடீர் உத்வேகம் பெற்று வேலைக்குத் தேவையான அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொண்டு முயற்சி செய்ய... நிஜமாகவே ஒரு நாள் அம்மா எதிர்பார்த்தபடி என் வேலைக்கான ஆர்டர் வந்தது.

இதனால்தான் மகாகவி பாரதியும், ‘உங்களிடம் வழங்க எதுவும் இல்லையென்றாலும், காரியம் வெற்றி பெறுவதற்கு வாய்ச் சொல்லாவது அருள்வீர்' என்கிறார். வார்த்தைகளின் அற்புதங்களை உணர்ந்த ஓர் இதயத்தால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.

நீங்களும் வாய்ச்சொல் அருள்வீர்களாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

தேவி தரிசனம்!

ஆடியில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம்!

புதிய புராணம்! - வாய்ச்சொல் அருள்வீர்!

பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மனுக்கு நடைபெற்ற ஆடிமாதச் சிறப்பு அபிஷேக ஆராதனையை, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து தரிசியுங்கள்; அம்மன் அருள் பெறுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism