Published:Updated:

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

பிரபுநந்த கிரிதர்

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

பிரபுநந்த கிரிதர்

Published:Updated:
குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

வ்வோர் ஆண்டும் ஆனித் திருமஞ்சனத்துக்கும் திருவாதிரை திருவிழாவுக்கும் வெளியூர் அன்பர்கள் பலர் வடலூருக்கு வந்து வள்ளலாரோடு சேர்ந்து சிதம்பரம் சென்று, நடராஜப் பெருமானைத் தரிசிப்பது வழக்கம்.
ஒரு சமயம் அவ்வாறே பலர் வந்து, சிதம்பரம் செல்லக் காத்திருந்தனர். விழா நாள் நெருங்கியும் வள்ளலார் புறப்படுவதாகத் தெரியவில்லை. பலர் காத்திருந்து பார்த்து விட்டு, வள்ளலாருக்குத் தெரியாமல் சத்தமின்றிக் கிளம்பி விட்டனர். சிலர் மட்டும் காத்திருந்தனர். விழா நாளும் வந்தது. அன்றும் பெருமானார் வடலூரை விட்டுக் கிளம்புவதற்கான அறிகுறியே இல்லை! ‘சிதம்பர தரிசனம் தவறியதே’ என்று அந்தச் சிலரும் மனதுக்குள் வருந்தினர்.

அவர்களது வருத்தத்தைக் குறிப்பால் உணர்ந்த  வள்ளலார், தருமசாலையின் ஒருபக்கத்தில் வெண் திரையிடச் சொன்னார். எல்லோரையும் அந்தத் திரைக்கு முன்னே வரச்சொன்ன அவர், ‘‘சிதம்பர தரிசனம் இதோ பாருங்கள்!’’ என்றார். என்ன ஆச்சர்யம்! வள்ளலார் கையை அசைத்ததும் அந்தத் திரையில் சிதம்பர தரிசனம் காட்சி தந்தது. தில்லையம்பலத்தில் நிற்பதுபோலவே உணர்ந்து களித்தனர் அவர்கள்.

வள்ளல் பெருமானார் தனிமையைப் பெரிதும் விரும்பினார். தியானமும் இறைவனை நோக்கிய மன ஒருமைப்பாடும் தனிமையிலேயே சாத்தியம் என நினைத்தார். ஆனால், தருமசாலையில் எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

ஒரு நாள் மாலையில் பெருமானார் உலாவப் புறப்பட் டார். உடன் பலரும் கிளம்ப... தனியே நடை போடக் கருதிய வள்ளலார், உடன் வருபவர்களை நோக்கி, ‘‘இங்கேயே இருங்கள்!’’ என்று கூறி நடந்தார். ஆனால், அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்தனர். ஆனால், திடீரென ஓர் அதிசயம் நடந்தது. இந்தப் பரிவாரங்கள் கூடவே நடந்த வள்ளலார்,  திடீரென மறைந்து தொலைவில் காணப்பட்டார். மற்றவர்கள் மூச்சுவாங்க ஓடி அவரை நெருங்க, திரும்பவும் அவர் தூரத்தில் தோன்றினார். இந்தக் கண்ணாமூச்சி இருட்டும்வரை தொடர, அவர்கள் அயர்ந்து நின்றனர். 

இப்படி, அற்புதங்கள் தொடர்ந்தன. இந்தச் சூழலில்தான் வள்ளலாரின் திருவருட்பா தொகுப்பு வெளிவர, அவரது சீடர்கள் பெரும் போராட்டமே நடத்தினர். வள்ளலார் அருளிய பாடல்களில் பெரும்பாலானவை ‘திருவருட்பா’ என்ற பெயரில் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. முதல் நான்கு திருமுறைகள் 1867-ம் ஆண்டு தொகுக்கப் பட்டு வெளிவந்தன. தொகுத்தவர்கள் வள்ளலாரின் சென்னை நண்பர்களான இறுக்கம் ரத்தின முதலியார், செல்வராயபுரம் சிவானந்த முதலியார், புதுவை வேலு முதலியார் ஆகியோர்.

இந்த மூவரில், இறுக்கம் ரத்தின முதலியார்தான் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்து வெளியிட விரும்பி, தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வள்ளலாருக்குக் கடிதம் மேல் கடிதம் எழுதி அனுமதி கேட்டு வந்தார். வள்ளலாருக்குத் தமது பாடல்கள் அச்சாவதில் ஆர்வமே இல்லை. அதனால், இதை கவனத்தில் கொள்ளாமலே இருந்தார். இறுதியாக ரத்தின முதலியார் வள்ளலாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ``உங்கள் பாடல்களைத் தொகுப்பாக வெளியிட அனுமதிக்க வேண்டும். அதுவரை  நான் தினமும் ஒருவேளை உணவு மட்டுமே உண்பேன்’' என்று எழுதினார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், தன் சீடர் மேற்கொண்ட விரதத்தைக் கேட்டதும் பதறிப்போனார். உடனே பதில் எழுதினார்.

‘`இன்னும் இரண்டே மாதங்களில் என் எல்லாப் பாடல்களையும் தேடி எடுத்து அனுப்பி வைக்கிறேன். இது நிச்சயம். `ஒருவேளை போஜனம்தான் செய்வேன்’ என்று நீ எழுதியதைப் பார்த்த பின்பு, நான் சாப்பிடுகிற உணவு என் உடம்பில் பொருந்தவில்லை. நீ அந்த நிபந்தனையை நீக்கி, உடனே தபாலில் எனக்குத் தெரிவிக்கும்வரை நானும் ஒருவேளை போஜனம் உண்பவனாக இருப்பேன்'’ என்று எழுதினார் வள்ளலார். அப்படியே, ரத்தின முதலியாரிடமிருந்து தன் விரதத்தைக் கைவிட்டதாகப் பதில் கடிதம் கிடைக்கும்வரை தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உண்டார் வள்ளலார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

வள்ளலார் அப்போதெல்லாம் சிதம்பரம் ராமலிங்கம் என்றே அறியப்பட்டு வந்தார். அவர் கையெழுத்து போடுவதும் அப்படித்தான். திருவருட்பா நூலில் ஆசிரியர் பெயரை `ராமலிங்க சுவாமிகள்’ என்று குறிப்பிட ரத்தின முதலியாரும், வள்ளலாரின் பிரதான சீடரான தொழுவூர் வேலாயுத முதலியாரும் விரும்பினர்.

ஆனால், வள்ளலார் அதற்கு மறுத்துவிட்டார். ‘ராமலிங்க சுவாமியென்று வழங்குவிப்பது எனக்குச் சம்மதமன்று. ஆரவாரத்துக்கு அடுத்த பெயராகத் தோன்றுவதால் அப்படி வழங்காமை வேண்டும்’ என்று பதில் எழுதிவிட்டார். இதனால் திகைத்துப்போன அவர்கள், முடிவாக திருவருட்பா முகப்பில், ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என அச்சிட்டனர். அதுமுதல் அந்தச் சிறப்புப் பெயர் ராமலிங்க அடிகளாருக்கு நிலைத்துவிட்டது.

சத்திய தருமசாலையில் நாளடைவில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருக ஆரம்பித்தது. வள்ளலார் அமைதியை நாடினார். வடலூருக்கு மேற்கே மேட்டுக்குப்பத்தில் அவர் விரும்பிய வண்ணம் அமைதியானதோர் இடம் இருந்தது. பெரும்பாலும் வைணவர்கள் வாழும் ஊர் அது. இப்படி வைணவக் குடிகள் வாழும் ஊர்களுக்கு ஆண்டுதோறுமோ அல்லது அவ்வப்போதோ வைணவ ஆச்சாரியர்கள் எழுந்தருளி, அவர்கள் தங்குவதற்கு என்றே அமைக்கப்பெற்ற திருமாளிகை யில் தங்கி, குடிமக்களுக்கு உபதேசமும் சம்பிரதாய தீட்சையும் செய்வதுண்டு. அப்படியொரு திருமாளிகை மேட்டுக்குப்பத்தில் பயனின்றிக் கிடந்தது. வள்ளலார் தனிமையான இடம் தேடுவதைக் கண்ட மேட்டுக்குப்பம் மணியக்காரர், பெருமானாரை அந்தத் திருமாளிகையில் உறைய வேண்டினார்.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

1870-ம் ஆண்டு வைகாசி மாதம், வள்ளல் பெருமான் அந்தத் திருமாளிகைக்குச் சென்று `சித்தி வளாகம்’ என்று பெயரிட்டு, அங்கே உறையத் தொடங்கினார். சித்தியடையும்வரை நான்காண்டு காலம் அங்கேதான் வள்ளலார் இருந்தார்.

தமக்கு இரண்டு பக்கமும் இரண்டு இரும்பு அக்னிச் சட்டிகளை வைத்துக்கொண்டு, அவற்றின் இடையே அமர்ந்து வள்ளல் பெருமான் யோக சாதனைகளைச் செய்வார். ஒருசமயம், வடலூரிலிருந்து அவரைத் தேடிவந்த சிவாச்சாரியார் ஒருவர், கவனக்குறைவாகத் தீச்சட்டியை இடறிவிட்டார். சிதறிய நெருப்புத் துண்டுகள் சிவாச்சாரியாரின்  காலைப் புண்ணாக்கிவிட்டன. பெருமானாருக்கு என்ன நேர்ந்ததோ என்று பதறிப்போனார் அவர். ஆனால், வள்ளலார்மீது நெருப்புத் துண்டுகள் சிதறி விழுந்தும், அவருக்கு ஒன்றும் நேரவில்லை. அவரது திருமேனியே நெருப்பு போன்றதாயிற்றே! நெருப்பை நெருப்பு என்ன செய்துவிட முடியும்?

சித்தி வளாகத் திருமாளிகைக்குச் சிறிது தூரத்தில் செடிகளும், கொடிகளும், மரங்களும் சூழ, அவற்றுக்கு நடுவே நீரோடை ஒன்று இருக்கிறது. வள்ளலாரைப் பார்க்க வரும் அன்பர்கள் பக்தியோடு அதில் நீராடுவார்கள்.

ஒருசமயம், கோடையில் இந்த நீரோடை வற்றிவிட்டது. தவித்துப்போன அன்பர்கள், வள்ளலாரிடம் வந்து முறையிட, பெருமானார் அங்கே சென்றார். தமது அருட்கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கியெழுந்து நீரோடை நிறைந்தது. அன்று முதல் இதில் தண்ணீர் வற்றியதே இல்லையாம்.

மேட்டுக்குப்பத்தை உறைவிடமாகக் கொண்ட பிறகு, வள்ளலார் சில நேரங்களில் தன் உடலைப் பிறருக்குத் தெரியாதபடி மாயமாக்கி அருவ நிலையில் இருப்பதுண்டு. சொல்லப்போனால், இத்தகைய சாதனைகளைத் தனிமையில் இருந்து மேற்கொள்வதற்காகவே வள்ளலார் வடலூரை விட்டு மேட்டுக்குப்பம் வந்தார்.

வடலூர் தருமசாலையில் இருப்பவர்கள் நிர்வாக விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை கேட்பதற்காக அடிக்கடி அவரிடம் வருவார்கள். அப்படி வருபவர்கள், அவரைக் காணாமல் குழம்பிவிட்டால் என்ன செய்வது?

இதற்காக ‘தருமசாலை கட்டளை’ என்று ஓர் அறிவிப்பே வெளியிட்டார் அவர். ‘என்னாலும் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் பலத்தால் வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். பொறுத்திருங்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். யோக நிலையை அடைந்த வள்ளலார், அந்த அனுபவத்தைப் பெற அடிக்கடி இப்படி ஆகிவிடுவார்.

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

வள்ளல் பெருமான் தோற்றப் பொலிவு மிக்கவர்.  மெலிந்த உடல், மாநிறம், நடுத்தர உயரம், நிமிர்ந்த தோற்றம், அழகிய திருமுகம், ஒளிவீசும் பரந்த கண்கள், கருணை ததும்பும் பார்வை.துறவு நிலையில் இருந்தாலும் காவி உடுத்தியதில்லை. எப்போதும் வெள்ளாடைதான். தலையைச் சுற்றி முக்காடு அணிந்து, அதை முழங்கால் வரை உடுத்துவார். எப்போதும் கைகளைக் கட்டிய வண்ணம்தான் இருப்பார்.
நடக்கும்போது அவரது பாதங்கள் நிலத்தில் தோய்வது இல்லை. அவரது நிழல் பூமியில் படுவது இல்லை. அவரது உடம்பு மழையில் நனையாது. வெயிலால் வாடாது.

அவரை எப்போதும் பார்த்தபடி இருக்க வேண்டும் என விரும்பிய அன்பர்கள் பலர், அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றனர். சென்னையில் புகழ்பெற்ற போட்டோகிராபரான மாசிலாமணி முதலியார் என்பவரை வடலூருக்கு வரவழைத்து, வள்ளலாரைப் படம் பிடித்தனர். ஆனால், படத்தில் அவரது உருவம் பதியவில்லை. ஆடைகள் மட்டுமே மங்கலாகத் தெரிந்தன. முகம், கை கால் முதலியன படத்தில் பதிவாகவில்லை.

இப்படி எட்டு முறை படம் எடுத்தார்கள். வள்ளலாருக்குத் தெரிந்தும் எடுத்தனர். தெரியா மலும் எடுத்தனர். ஒருமுறைகூட பெருமானின் ஒளித் திருமேனி அதில் பதியவில்லை. அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது... ஒளியுடலுக்கு நிழல் ஏது? நிழல் விழுந்தால் அல்லவா அது படத்தில் பதியும்! வள்ளலாரின் உடல் கண்ணாடி போன்றது.

இந்த முயற்சி தோற்றதில் வருந்திய அன்பர்கள், பெருமானாரைப் போன்று ஒரு மண் சிலையாவது செய்து வைத்துக்கொள்ள விரும்பினர். பண்ருட்டியிலிருந்து வந்த ஒருவர், பெருமானின் திருமேனியை மண்ணால் செய்து வெண்சுதை, வண்ணம் சேர்த்து அழகான சிலையாக்கி, அதை வள்ளலாரிடமே கொண்டுவந்து காட்டினார். அதைப் பார்த்து அவர், ‘பொன்னான மேனி மண்ணாயிற்றே’ என்று சொன்னபடி தட்டிவிட, பொம்மை உடைந்தது.

‘‘இந்த வீண் முயற்சிகளைக் கைவிடுங்கள். தேக சித்தி பெறும் வழிகளைத் தேடுங்கள்’’ என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னார் வள்ளலார்.

உணவு, உறக்கம் இரண்டிலும் வள்ளலார் அக்கறை காட்டியதில்லை. ஆரம்பத்தில் மதியம் ஒருவேளையும், முன்னிரவில் ஒருவேளையும் சாப்பிட்ட அவர், பிற்காலத்தில் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார். இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சில கவளம் சாதமே உண்பார். சமயங்களில் வெந்நீரில் சர்க்கரை கலந்து அதை மட்டுமே அருந்துவார்.

‘தூக்கத்தைக் குறைத்தால் ஆயுள் நீடிக்கும்’ என்பது அவரது உபதேசங்களில் ஒன்று. அவர் இளமையில் நான்கு மணி நேரமும், பிறகு இரண்டு மணி நேரமும், சித்தி வளாகத்தில் உறையத் தொடங்கிய பிறகு ஒரு மணி நேரம் மட்டும் உறங்கினார். பிற்காலத்தில் அறவே தூங்காமல் இருந்தார். கர்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி என மூன்று சித்திகளையும் இறைவன் வள்ளலாருக்கு அருளினான். இதனால் அவரது தேகம் முதலில் சுத்த தேகமாக, பிறகு பிரணவ தேகமாக மாறி இறுதியில் ஞான தேகமானது.

‘அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் மூத்த மகனான நான் மரணமில்லா பெருவாழ்வு அடைந்துவிட்டேன்’ என அறிவித்தார் அவர். 1873-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ம் தேதி, சித்தி வளாகத்தில் தான் உருவாக்கிய மஞ்சளும் வெள்ளையும் கலந்த சன்மார்க்கக் கொடியை ஏற்றி, தமது பேருபதேசத்தை சீடர்களுக்கு அருளினார் வள்ளலார்.

‘இந்தப் பிரபஞ்சத்திலேயே புனிதமான இடம் சித்தி வளாகம்தான். பெற்றோர்,  உடன்பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள் யாரும் தர இயலாத நன்மைகளைச் சித்தி வளாகம் தரும். கடவுளின் பூரண அருள் இங்கே நிலைத்திருக்கிறது. இங்கே வந்து அதைப் பெற்றுச் செல்லுங்கள்’ என்று அறிவித்தார் அவர்.

அடுத்த மாதம் கார்த்திகை தீபத் திருநாள். தம் அறையில் வைத்திருந்த விளக்கை எடுத்து திருமாளிகைப்புறத்தில் வைத்து, ‘இதை இடை விடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்தி விடப் போகிறேன். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லோரது உடம்பு களிலும் புகுந்துகொள்வேன்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

1874, ஜனவரி 30 வெள்ளிக்கிழமை, தைப்பூச தினத்தன்று, சன்மார்க்க சங்கத்தாருக்கு வள்ளலார் இறுதிக் கட்டளை இட்டார். ‘நான் உள்ளே பத்துப் பதினைந்து நாள்கள் இருக்கப் போகிறேன். யாரும் உள்ளே பார்த்து என்னைக் காணாமல் அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தாலும் யாருக்கும் தோன்றாத வண்ணம் வெற்று வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்துவிடுவார். என்னைக் காட்டிக் கொடார்’ என்று சொல்லிவிட்டு, அறைக்குள் புகுந்து  திருக்காப்பிட்டுக் கொண்டார்.

அதன்பிறகு அவர் அந்த அறையில் காணப்பட வில்லை. அருட்பெருஞ்சோதி, மயமான இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் இந்தப் பிரபஞ்சமெங்கும் வியாபித்து இருக்கிறார். நம் எல்லோரது உடம்பிலும் சோதி வடிவில் அவர் புகுந்து இருக்கிறார். கருணை உள்ளத்தையும் உயிர்களை நேசிக்கும் பண்பையும் அவர்தான் நமக்குத் தருகிறார். வாருங்கள்,.. வடலூரில் சத்திய ஞானசபையில் சோதி வடிவிலான இறைவனைத் தரிசிப்போம்.

(4.4.2004 மற்றும் 11.4.2004 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...)

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

இலைகளும் வரங்களும்!

எளிதினும் எளிதான வழிபாடுகளை ஏற்று, பெரிதினும் பெரிதான வரங்களை வாரி வழங்குபவர் பிள்ளையார். மலர்கள் மட்டுமின்றி இலைகளாலும் அவரை அர்ச்சித்து வழிபட்டு அருள் பெறலாம்.

வில்வம் - இதன் இலைகளால் விநாயகரை அர்ச்சிக்க வெற்றிகளும் விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.

அகத்தி - கடன் தொல்லை நீங்கும்.
அரளி - முயற்சிகள் வெற்றி பெறும்.
நாயுருவி - பொலிவு கூடும்.
தாழம் இலை - செல்வம் செழிக்கும்.
வன்னி - சுகவாழ்வு கிடைக்கும்.
கரிசலாங்கண்ணி - வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.
மாதுளை இலை - புகழ் உண்டாகும்.
தேவதாரு இலை - எதையும் தாங்கும் மன’ தைரியம் உண்டாகும்.
மருக்கொழுந்து - இல்லறம் நல்லறமாக விளங்கும்.
சாதிமல்லி இலை - சொந்த வீடு-மனை பாக்கியம் உண்டாகும்.
அருகு - சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

- சந்தியா கார்த்திகேயன், சென்னை-94 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism