Published:Updated:

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

து சிற்றூர். ஆண்கள் வேலைக்குப் போயிருக்கும் பகல்பொழுதில் அக்கம் பக்கத்துப் பெண்களுடன் வாய்ப் பேச்சே அவர்களுக்குப் பொழுதுபோக்கு. ஒருநாள் பொன்னிறத்தாளின் தோழிகள் வந்து ``பொன்னிறம்... நாங்கள் சுனைக்கு நீராடச் செல்கிறோம்... வருகிறாயா?’’ என்று கேட்டார்கள்.

அந்த வெயிலில் சுனையில் சுதந்திரமாக நீராடுவதை நினைத்தாலே பொன்னிறத் தாளுக்கு இனித்தது.

``நீங்கள் முன்னே செல்லுங்கள். அம்மா, கழனிக்குப் போயிருக்கிறார்கள். வந்ததும் சொல்லிவிட்டு வருகிறேன்’’ என்றாள் பொன்னிறத்தாள். தோழிகள் கிளம்பிப் போனார்கள்.

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

தாய் திரும்பி வந்தபோது, சுனையாடத் தயாராகத் துணி மூட்டையுடன் நின்றிருந்தாள் பொன்னிறத்தாள். நிறைமாத கர்ப்பிணி. வெளியே சுட்டெரிக்கும் வெயில். அம்மாவுக்கு பொன்னிறத்தாளைச் சுனைக்கு அனுப்பவே மனம் இல்லை. ``இன்னொரு நாள் போகலாமே...’’ என்று எடுத்துச் சொன்னாள்.

``நான் தனியாகப் போகவில்லை அம்மா. தோழிகள் இப்போதுதான் சென்றிருக்கிறார்கள். சீக்கிரம் நீராடிவிட்டு வந்துவிடுகிறேன்’’ - கெஞ்சும் குரலில் மகள் கேட்க, தாயால் மறுக்க முடியவில்லை. பொன்னிறத்தாள் வேக வேகமாக எட்டுவைத்து சுனைக்குப் போனாள். தோழிகள் அவளைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பினார்கள். ஆடைகளைக் களைந்து விட்டு, குளிப்பதற் காக ஒற்றை ஆடை ஒன்றை அணிந்துகொண்டு சுனையில் இறங்கினாள்.  கண்ணாடி போன்ற தெளிந்த நீர். உடலில்பட்டதுமே குறுகுறுத்தது. சொல்லவொண்ணா ஓர் இன்பம் ஊடுருவியது. வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுடன் மானசீகமாகப் பேசியபடி குளித்தாள் பொன்னிறத்தாள். தோழிகளுடன் சிரித்துப் பேசியபடி குளித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஒருத்தி எச்சரிக்கை மணி ஒலிப்பதுபோல் சொன்னாள்... ``அங்கே பாருங்களடி... காற்று பலமாக வீசுகிறது. தூரத்தில் இருந்து ஈரமண் வாசனை அடிக்கிறது. புயலும் மழையும் சேர்ந்து கொள்ளப் போகிறது. சீக்கிரம் கிளம்புவோம்.’’

இன்னொருத்தி சொன்னாள்... ``நம் வீடு வரை இந்த மழையில் தாக்குப்பிடிக்க முடியாது. வாகைநல்லூர் அம்பலத்துக்குப் போய்விடலாம்.’’ எல்லோரும் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர்.

வேக வேகமாக நடந்தார்கள்.  பொன்னிறத் தாளால் அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வயிற்றுப் பாரம் அவள் நடையைத் தாமதப்படுத்தியது. மெள்ள நடந்தாள். அவளுக்கு வாகைநல்லூர் அம்பலம் தெரியும்தான். ஆனால், அன்றைக்குச் சுழன்றடித்த காற்றில் வழி தெரியவில்லை. வழியைத் தவறவிட்டாள். அது கடுமையான புயல். மழையோ அடைமழை. உடுத்தியிருந்த ஆடைகள் தொப்பலாக நனைந்து போக, மெள்ள நடந்தவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. `தோழிகள் எங்கே... நான் எங்கே இருக்கிறேன்... வீடு போய்ச் சேர்ந்துவிடுவேனா... அப்பா, அம்மாவோ அல்லது அண்ணன்களோ என்னைத் தேடி வருவார்களா?’ மழை ஈரத்தில் நடுங்கும் உடம்புடன், ஒரு கோழிக்குஞ்சைப் போல பொன்னிறத்தாள் ஒரு புளியமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

அதேநேரத்தில், காட்டில் உள்ள வட்டப்பாறை ஒன்றில் திருடர்கள் கூடியிருந்தனர். 61 பேர். அவர்கள் அங்கே கூடியிருந்தது, காட்டாளம்மன் கோயில் கருவூலத்தைச் சூறையாடத்தான். இங்கே வருவதற்கு முன்பாகவே ஒரு மந்திரவாதியிடம் குறி கேட்டிருந்தார்கள். `அந்தக் கருவூலத்துக்கு இசக்கி காவலாக இருக்கிறாள். கருவூலத்தை எடுக்க பாலாடு, சூலாடு, கரும்பூனை, சேவல் பலி கொடுக்க வேண்டும். அதோடு, சூல்கொண்ட (கருவுற்ற) ஒரு பெண்ணையும் பலி கொடுக்க வேண்டும். அப்போதுதான் கருவூலத்தில் சூறையாட முடியும்’ என்று குறி சொல்லியிருந்தான் அந்த மந்திரவாதி.

திருடர்கள் காட்டுக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். மந்திரவாதி சொல்லியிருந்த பாலாடு, சூலாடு, கரும்பூனை, சேவல் எல்லாம் தயாராக அவர்களிடம் இருந்தன. நரபலி... அதுமட்டும்தான் அவர்களிடம் அப்போதைக்கு இல்லை. யோசனையோடு காத்திருந்தார்கள் திருடர்கள். நடு ஜாம பூஜை செய்வதற்காக பூசகன் வந்துகொண்டிருந்தான். திருடர்கள் அவனை வளைத்துப் பிடித்தார்கள். மொத்தமாக அத்தனைத் திருடர்களையும் பார்த்ததும் அரண்டுபோனான் பூசகன்.

``ஐயா... நான் ஒரு பாவமும் அறியாதவன். என்னை விட்டுவிடுங்கள்!’’ கெஞ்சினான் பூசகன்.

``விட்டுவிடுவதா..? இன்றைக்கு இசக்கி தெய்வத்துக்குப் பலி கொடுத்தே ஆக வேண்டும். எல்லா பலிகளும் தயார்... நரபலி ஒன்றைத் தவிர. சூல்கொண்ட பெண்ணை பலி கொடுத்தால் நல்லது. ஆனால், இந்த நேரத்தில் கர்ப்பவதிக்கு நாங்கள் எங்கே போவது... நீயாவது கிடைத்தாயே... உன்னை விட்டுவிட முடியுமா?’’ ஒரு திருடன் குரூரச் சிரிப்புடன் சொன்னான்.

``ஐயா... உங்களுக்குக் கர்ப்பவதிதானே வேண்டும். இப்போதுதான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். வாருங்கள் நான் அவளைக்  காட்டிக் கொடுக்கிறேன். என்னை மட்டும் விட்டுவிடுங்கள்.’’

``ஏய்... நீ உண்மைதான் சொல்கிறாயா... பொய் சொன்னால் என்னவாகும் தெரியும் இல்லையா?’’

``உயிர்போக இருக்கும் நேரத்தில் யாராவது பொய் சொல்வார்களா... என்னுடன் வாருங்கள். நான் அவளைக் காட்டுகிறேன்.’’

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

பொன்னிறத்தாள் இன்னமும் அந்தப் புளிய மரத்தின் கீழ்தான் நின்றுகொண்டிருந்தாள். தூறல் மழைதான். கொஞ்சம் மெனக்கெட்டால் வீடு போய்விடலாம். வழி தெரியாததால் அங்கேயே நின்றிருந்தாள். ஆனால், கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அண்ணன்மார் எப்படியும் தன்னைக் காணவில்லை எனத் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அந்த நேரத்தில் அவளைத் தேடி வந்ததோ திருடர்கள். 

பொன்னிறத்தாள் கதறினாள். கெஞ்சினாள். அழுதாள். `என் அண்ணன்களுக்குத் தெரிந்தால், உங்களை என்ன செய்வார்கள் என்று தெரியுமா?’ என்று பயமுறுத்திப் பார்த்தாள். திருடர்கள் எதற்கும் மசியவில்லை. அவளைத் தரதரவென இழுத்துப் போனார்கள். அந்த அகால இரவில் பொன்னிறத்தாளுக்கு உதவ யாருமே வரவில்லை.

இரவு, பொன்னிறத்தாளுக்கு நிகழப்போகும் கொடுமையை எண்ணி அழுவதுபோல மழையை மீண்டும் அனுப்பியது. மழை ஓய்ந்ததும், பூஜை ஆரம்பமானது. கோயிலின் முன்னே ஒரு பரணைக் கட்டி பாலாடு, சூலாடு, கரும்பூனை, சேவல் என ஒவ்வொன்றாக பலி கொடுத்தார்கள்.

பிறகு இரண்டு திருடர்கள் பொன்னிறத்தாளை அப்படியே தூக்கிப்போய் பரணில் மல்லாக்கக் கிடத்தி, அவளின் கையையும் காலையும் கட்டிப் போட்டார்கள். எந்த நிறைமாத கர்ப்பிணிக்கும் நடக்கக்கூடாத அந்தக் காட்சியை, தன் கண்களை மூட முடியாமல், இரவும் வானமும் பார்த்துக் கொண்டிருந்தன. மிகக் கொடூரமாக நடந்தேறியது பலியிடல்.

 திருடர்கள் தாங்கள் கொடுத்த பலியைச் சுற்றி வந்தார்கள். உரத்த குரலில் குரவையிட்டார்கள். பலி என்கிற நம்பிக்கை இருக்கட்டும். அது ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதி அல்லவா? வயிற்றில் குழந்தையோடு அகாலத்தில், கொட்டும் மழையில் மாட்டிக்கொண்டது ஓர் அபலைப் பெண் அல்லவா? அவள் அலறல் இறையின் செவியை அடையாமல் இருக்குமா?

காட்டாளம்மன் கோபம் கொண்டாள். கண்ணில் உக்கிரம் கொப்பளிக்க காட்டுப் புலிகளையும் கரடிகளையும் திருடர்கள் மேல் ஏவினாள்.  நாலாபுறம் இருந்து கூட்டம் கூட்டமாக வந்த விலங்குகள், திருடர்களின் மேல் பாய்ந்தன. கடித்துக் குதறின. திருடர்கள் அத்தனை பேரும் இறந்துபோனார்கள்.

பொன்னிறத்தாளின் உடல் வானத்தைப் பார்த்தபடி பரணில் கிடந்தது. அவளைத் தேடி வந்த கணவன், ஏழு சகோதரர்கள், தாய் தந்தை அனைவருக்கும் காணக் கிடைத்த காட்சி அது ஒன்றுதான்.  ஒற்றைக்கொரு பெண். செல்ல மகள். தீராத செல்வம்... இந்தப்  பெண்ணுக்கா இந்தக் கொடூரம் நிகழ வேண்டும்? நீதி எங்கே... தெய்வம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன... இனி வாழ்ந்து என்ன பயன் என அத்தனை பேரும்  முடிவெடுத்து, அந்த காட்டாளம்மன் கோயிலிலேயே தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.

பொன்னிறத்தாள் தன் நற்பயனால், இறை நம்பிக்கையால் கயிலைக்குச் சென்றாள். வாவறை, சிறுமாங்குளி, மூன்றரைக் கூடம் போன்ற இடங்களில் காவல்தெய்வமாகத் திகழ, ஈசனிடம் வரம் பெற்றாள்.
பொன்னிறத்தாள், அம்மனாக உருவெடுத்தாள்.  தன்னைக் கொன்ற திருடர்களின் உறவினர்களைப் பழி வாங்கினாள். தன்னைக் காட்டிக்கொடுத்த பூசகனை குலத்தோடு அழித்தாள். 

பொன்னிறத்தம்மனுக்கு தென் மாவட்டங் களில் குறைவான இடங்களிலேயே வழிபாடு உள்ளது. அவற்றில், கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் கிராமத்தில் உள்ள கோயில் முக்கியமானது. மேலும், பூச்சிவிளாகம், குளச்சல் களிமார் போன்ற இடங்களிலும் வழிபாடு உண்டு.

இந்தக் கோயில்களில் செவ்வாய் இரவு மட்டுமே பூஜை நடக்கும். வைகாசி மாதம் (மே - ஜூன்) திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் விழா நடக்கும். விழாவில் பொன்னிறத்தாளம்மனின் மூல ஏட்டுப் பாடல்களை மாற்றமின்றிப் பாடுகிறார்கள்.

பிற கோயில்களைப் போலவே பொன்னிறத்தாளுக்கும் விழா நடக்கிறது. என்றாலும், அம்மனுக்குப் போடும் படையலில் நெல்லிக்காய், மாங்காய், புளியங்காய் போன்றவற்றை வைக்கிறார்கள். பூஜை முடிந்ததும் இவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

தம்மத்துக்கோணம் கோயிலில் பொன்னிறத்தாளம்மனின் கற்சிற்பம் இருக்கிறது. அமர்ந்த கோலத்தில் உள்ள சிற்பம். கையில் மலர். இந்த உருவம் சாந்தமாகப் படைக்கப்பட்டிருந் தாலும், இது சக்தி வாய்ந்தது, உக்கிரமானது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அம்மனை வழிபடும்போது தீயசக்திகள் அணுகாது; வெப்பு நோயிலிருந்து இவள் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு உள்ளது.

தொகுப்பு: பாலு சத்யா