Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9

ஹம்பிமகுடேசுவரன், படங்கள்: க.பாலமுருகன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9

ஹம்பிமகுடேசுவரன், படங்கள்: க.பாலமுருகன்

Published:Updated:
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9

ம்பியிலுள்ள எல்லாக் கோவில்களைவிடவும் சற்றே பெரியது என்று கிருஷ்ணர் கோவிலைச் சொல்லலாம். அளவிற்பெரியது என்று பார்த்தால் எல்லாக் கோவில்களும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ஆனால், உள்கட்டுமான அமைப்பைக்கொண்டு கிருஷ்ணர் கோவிலைச் சிறப்பாய் மதிப்பிடலாம். ஹம்பியை நோக்கிச் செல்லும் முதன்மைச் சாலையில் ஹேமகூட மலைகளின் அடிவாரம் என்று கூறத்தக்க பகுதியில் அக்கோவில் அமைந்திருக்கிறது. அழிப்பின்போது அக்கோவிலின் கோபுரம்தான் பேரளவு சிதிலமடைந்தது. உள்ளிருந்த மண்டபத் தூண் சிற்பங்களும் மூளியாகின. போனது போக மிஞ்சிய நிலையிலும் கிருஷ்ணர் கோவிலின் பேரழகு வியப்பூட்டுகிறது. கிருஷ்ணர் கோவிலை ஹேமகூட மலைகளின் மீதிருந்து காணும்போதுதான் அதன் பெரும் பரப்பு விளங்கும். அக்கோவிலின் வலப்புறம் அடர்ந்த வாழைத் தோப்புகள், இடப்புறம் ஹேமகூட மலைகளின் பெரும்பாறைகள். இரண்டுக்கும் நடுவில் கற்களின் கலைக்கூடம் போல் அமைந்திருக்கிறது.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்கு வந்தவுடன் நெல்லூர் மாவட்டத்தின் உதயகிரிக் கோட்டையின்மீதும் உத்கலம் எனப்படும் வடகிழக்குப் பகுதியின்மீதும் படையெடுத்தார். அப்படையெடுப்பு ஒடியா வரையிலும் வெற்றிகரமாய் முடிந்தது. அவ்வெற்றிகளின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம்தான் கிருஷ்ணர் கோவில். கி.பி 1513-ல் இக்கோவில் கட்டப்பட்டது. ஹம்பியிலுள்ள பிற கோவில்களை அங்கே ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசரும் மேம்படுத்திக் கட்டித் தந்தார்கள். ஆனால், கிருஷ்ணர் கோவில்தான் கிருஷ்ண தேவராயரின் விஷ்ணு பக்தி விளைவால் எழுப்பப்பட்ட பெருங்கோவில். ஆட்சிக் காலத்தின் பேரரசன் எடுப்பித்த முதற்கோவில் என்றால் அதன் அருஞ்சிறப்பை எண்ணிப் பாருங்கள்.

கோவில் கருவறையில் இருந்தது பாலகிருஷ்ணனின் உருவச்சிலை. கோவில் சிதைவின்பின் அவ்வுருவச் சிலைக்கும் ஊறு நேர்ந்தது. கிருஷ்ணர் கோவிலின் கருவறையில் இருந்த பாலகிருஷ்ணன் சிலை தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இன்று ஹம்பியிலுள்ள கிருஷ்ணர் கோவிலில் கட்டுமான எச்சங்களைத்தான் காண முடியும்.

கிருஷ்ணர் கோவிலில் தென்கிழக்கு மூலையிலுள்ள சமையற்கூடம் மிகப் பெரிது. வழிபாடுகள் தொடர்ந்த விஜயநகர அரசாட்சியில் அந்தக் கூடத்தில்தான் மலையளவு அன்னம் பொங்கிற்று. கோவிலின் முகப்பிலேயே ஒரு தானியக் கல்தொட்டி இருக்கிறது. அதில் பக்தர்கள் கோவிலுக்குக் கொடையாய் வழங்கும்  தானியங்களை இட்டு நிரப்பினர். அவை அன்னக்கூடத்தில் அறுசுவை உணவாக்கப்பட்டு வருவோர் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

 கோவில் வளாகத்தில் பலப்பல மண்டபங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சிற்பத்தூண்கள் தாங்கி நிற்கும் பெருமண்டபம். கிருஷ்ண தேவராயரின் உத்கல வெற்றியை விவரிக்கும் அரிய கல்வெட்டு இக்கோவிலில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கல்வெட்டில் அவர் அக்கோவிலுக்குச் செய்த அறங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. தூண்களில் மகாவிஷ்ணுவின் அவதாரச் சிற்பங்கள் அனைத்தும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கல்கி அவதாரச் சிற்பம் குறிப்பிடத்தக்கது. குதிரையின்மீது காற்றாய்ப் பறந்து வருவதுபோன்ற உருவம் அது.

 கிருஷ்ணர் கோவிலின் கோபுரச் சிதிலத்தைத் தொல்லியல் துறையினரால் மீண்டும் எடுப்பித்துக் கட்ட முடியவில்லை. அதனால் அடிப்பகுதி மட்டும் திடமாக நிற்கிறது. மேற்கோபுரத்தின் சுதைகள் நன்கு சிதைந்துவிட்டன.

கிருஷ்ணர் கோவிலுக்கு எதிரில் உள்ள பெருவீதிதான் அக்காலத்து ஹம்பியின் தங்க நகைச்சாலை என்கின்றனர். பிற வீதிகளைப்போல் இவ்வீதியில் ஓரிடத்தில் தொடங்கி அது முடியுமிடத்தில் வெளியேற முடியாது. சுற்றிலும் மலையரண்கள் உள்ளமையால் நுழைந்த வழியாகவே வெளியேறும்படி இருக்கும். அந்த அரணமைப்புத்தான் அங்கே வைரங்களும் முத்துகளும் மாணிக்கமும் மரகதமும் பவழமும் தங்கமும் வெள்ளியும் குவித்து விற்கப்பட்டதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 9

கோவிலைவிடவும் தாழ்வான நிலத்தில் நகை வீதி இருப்பதனால் பெரும்படிக்கட்டுகள் வழியாகத்தான் வீதிக்குள் இறங்க முடியும். அவ்வீதியின் நடுப்பகுதியில் மிகப்பெரிய குளம் இருக்கிறது. பிற கோவில்களின் குளங்கள் வற்றிக்கிடப்பதைப் பார்க்கலாம். ஆனால், நகை வீதியின் குளம் வற்றா நீர்வளத்தோடு இருக்கிறது. இப்பகுதியின் நன்செய்க்கு அக்குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது வயல்களாக இருக்கும் பகுதியில் கிருஷ்ணர் கோவிலுக்கான தேரோட்டம் நிகழ்ந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

கிருஷ்ணர் கோவிலுக்குப் பின்னர் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளிகொண்டிருக்கும் விஷ்ணுவின் சிலையைக்கொண்ட சிறிய கோவில் இருக்கிறது. பாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியின் மிகப்பெரிய கோவில். பாற்கடல் நாயகனுக்கு அவ்விடத்தில் மிகச்சிறிய கோவில். எடுப்பிப்பாரைப் பொறுத்தே எவருக்கும் பெருமை என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

 அதற்கடுத்து வருவது சசிவிகல்லு கணேசர் மண்டபம். நரசிம்மருக்கு எப்படி ஒரே கல்லில் பெரிய சிலை நிறுவப்பட்டதோ அதேபோல் விநாயகருக்கு அவ்விடத்தில் பெரிய சிலை நிறுவப் பட்டிருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அச்சிலையின் அருகே சிறுகல்லில் செதுக்கப்பட்ட சுண்டெலியும் உண்டு. அடுத்துள்ளதும் ஒரு கணேசரின் சிலைதான். கடலைக்கல்லு கணேசர் என்பது அதன் பெயர். ஆனால், அங்குள்ள மண்டபம் ஹம்பியின் மிகச்சிறந்த மண்டபங்களுள் ஒன்று. அம்மண்டபம் ஹேமகூட மலையின் உச்சியில் இருப்பதால் குன்றத்தின் இருமருங்கிலும் உள்ள பள்ளத்தாக்குகளைக் காணலாம். ஐரோப்பிய விதானங்களை நிகர்த்த அம்மண்டபத் தில் நிற்கையில் நம்மை ஓர் அரசனாகவே உணர முடியும். என்னுடைய மிகச்சிறந்த படமாக நான் கருதுவது அம்மண்டபத்தில் நின்றவாறு எடுத்த ஒன்றைத்தான். நம்மெதிரே மாதங்க மலை ஒரு தனிக்குன்றாக நிற்கும். நமக்கு இடப்புறப் பள்ளத்தாக்கில் துங்கபத்திரையில் பசுந்தண்ணீர் தெளிந்து ஓடிக்கொண்டிருக்கும். நதியில் மேற்புறத்தில் நூறு நூறு பறவைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து திரியும். வலப்புறத்தில் வாழையும் தென்னையும் வளர்ந்து செழித்த நன்செய்யைப் பார்க்கலாம்.

எண்ணற்ற இடங்களைச் சொன்னாலும் ஹேமகூட மலைதான் ஹம்பியின் அருள்விளங்கும் மலை எனலாம். இன்றைக்கும் அங்குள்ள சமணக் கோவில்கள் விஜயநகர அரசர்களின் சமயப் பொறைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஹம்பியின் கோவில்கள் பல விஜயநகர அரசர்களின் வருகைக்கு முன்பு சமணக் கோவில்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் மறுக்கவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு நடுவிலும் ஹேமகூட மலையில் சமணக் கோவில்கள் இரண்டு எத்தகைய சிதிலத்தையும் அடையாமல் செம்மாந்து நிற்பது, விஜயநகர அரசர்கள் எம்மதத்துக்கும் செந்தண்மை பூண்டொழுகியமையே காட்டுகிறது.

- தரிசிப்போம்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism