மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா?

நாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா?

நாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா?

நீண்ட நாள்களாகத் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்த  நாரதரின் செல்ஃபோனுக்கு ஒருவழியாகத் தொடர்பு கிடைத்தபோது, ‘அம்பிகையே ஈஸ்வரியே...’ என்ற அம்மன் பாட்டு அமர்க்களமாகக் கேட்டது காலர் டியூனாக!

ஆனாலும், அவர் போனை எடுத்தபாடில்லை. அதனால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக நாம் `உச்’ கொட்டுவதற்குள், கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்தார் நாரதர்.

‘‘நேரிலேயே வந்துவிட்டதால்தான் போனை எடுக்கவில்லை’’ என்று நம்மைச் சமாதானப் படுத்தியவரிடம், ‘‘அம்மன் பாட்டு அமர்க்களமாக இருக்கிறதே...’’ என்று நாம் கேட்க, அதற்குப் பதில் சொல்லாமல், ‘‘இந்த இதழுக்கான தகவலும் அம்மன் கோயில் பற்றியதுதான்’’ என்றவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

‘‘சென்னை கீழ்பாக்கம் ஏரியாவில் உள்ள பாதாளப் பொன்னியம்மன் கோயில் பிரசித்திப் பெற்றது. கடந்த ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் நான் போயிருந்தபோது, நேரில் கண்ட கூத்துகளைச் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்.

நாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா?

‘‘சொல்லும். தவறுகள் எதுவும் உம் கண்ணில் இருந்து தப்ப முடியாதே...’’

‘‘அம்மன் தரிசனத்துக்காக இந்தக் கோயிலுக்கு பெண் பக்தர்கள் பெருந்திரளாக வருவார்கள். அன்றைக்கும் ஏகக் கூட்டம். கயிறுகளைக் கட்டித் தடுப்புகளை ஏற்படுத்தி, பெண்கள் கூட்டத்தை நெடுநேரம் நிறுத்திவைத்திருந்தார்கள். அதுமட்டுமா? கோயிலுக்குச் சேவை செய்கிறோம் என்கிற பேனரில் ஏரியாக்காரர்கள் மூன்று பேர் கோயிலில் செய்த நாட்டாமையைக் கண்கூடாக நேரில் பார்த்தேன்.

சாமியைத் தரிசித்துவிட்டு வெளியேறும் வழியில் நின்றிருந்த பிரமுகர் ஒருவர், அந்த வழியாக வி.ஐ.பி-க்களை டைரக்ட் தரிசனத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்படி உள்ளே போனவர்கள் சாவகாசமாக தரிசனம் முடித்துவிட்டு வெளியேவரும் வரையிலும், சாதாரண பக்தர்கள் கயிறுக்குப் பின்னால் கும்பலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர்.

இரண்டாவது பிரமுகரோ, கயிற்றுத் தடுப்புக்குப் பின்னால் பொறுமையிழந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்த பக்தர்களை அடக்கிக் கொண்டிருக்க...  மூன்றாவது நபரோ, கோயில் வளாகத்தில் தர்பார் நடத்திக்கொண்டிருந்தார்’’ என்ற நாரதரிடம், ‘‘அது அறநிலையத்துறை கோயிலாச்சே? அங்கே எப்படி தனி நபர்களின் நாட்டாண்மை செல்லுபடியாகிறது’’ எனக் கேட்டோம்.

நாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா?

நமது கேள்விக்கு விரிவாக விளக்கம் தந்தார் நாரதர்.

‘‘அரசியல் வி.ஐ.பி-க்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு  வரும்  சிலர்,  கர்ப்பக்கிரகத்துக்கு  மிக அருகில் சென்று தரிசிக்கிறார்கள். செல்வாக்கு மிகுந்த அவர்களுக்கு, பொது ஜனத்தோடு நிற்க அந்தஸ்து இடம்கொடுக்காதாம். இப்படி திடீர் திடீரென தங்களின் செல்வாக்கைக் காட்டிக் கொண்டு கருவறைக்கு மிக அருகில் வந்து நிற்பவர்களை, கோயில் பணியாளர்கள் யாராவது தட்டிக்கேட்டால் அவ்வளவுதான். செல்வாக்கு ஆசாமிகளுக்கு வேண்டப்பட்ட வி.ஐ.பி-க்கள் பணியாளர்களைக் கடுமையாகக் கடிந்து கொள்வார்களாம்.’’

‘‘இதற்குத் தீர்வுதான் என்ன?’’

‘‘வி.ஐ.பி-க்கள் வந்தால், நேராக நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்குப் போய் சிறப்பு தரிசன ரசீது வாங்கி வரலாம். அப்போது, நிச்சயமாக அவர்களுக்கு தரிசனத்துக்கு முன்னுரிமை தரலாம். ஐந்து வரிசை என்ற அளவில் பொது ஜனங்கள் தரிசனம் முடிந்ததும், ஒரு வரிசையில் வி.ஐ.பி-க்களை அனுமதிக்கலாம். இப்படித்தான் பல கோயில்களில் நடக்கிறது.  இந்த நடைமுறையை ஏன் இந்தக் கோயிலில் அமல்படுத்தக்கூடாது என்று நம்மிடம் கேட்கிறார் கோயிலுக்குத் தொடர்புள்ள பிரமுகர் ஒருவர்.’’

‘‘நல்ல ஐடியாவாக இருக்கிறதே?’’ 

‘‘நல்ல ஐடியாதான்... ஆனால், பின்பற்ற வேண்டுமே’’ என்றவர், அடுத்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘கோயில் வளாகத்தில் பணியாளர்கள் சிலர் வைத்திருந்த செல்போன், பணமெல்லாம் களவு போயிருக்கிறதாம். யார் எடுத்தார்கள் என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார்களாம். ஆனாலும் இதுபற்றி வெளியே சொல்லவே பயப்படுகிறார்கள் பணியாளர்கள்.’’

‘‘அடப் பாவமே!’’ என்று நாம் நொந்துகொள்ள, நாரதர் தொடர்ந்தார்.

‘‘நான் நேரில் பார்த்த காட்சிகளை ஸ்பாட்டில் இருந்தபடியே, கோயில் நிர்வாக அதிகாரியிடம் சொல்வதற்காக, அவருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவேயில்லை. உடனே, அறநிலையத் துறை  கமிஷனர் வீரசண்முகமணியின் எண்ணுக்கு போன் செய்தேன். உடனே எடுத்துப் பேசினார். அவரிடம் நாட்டாண்மை செய்த மூன்று பேர் பற்றி சொன்னேன்.  ‘அப்படியா? உடனே நடவடிக்கை எடுக்கிறேன். இணை கமிஷனர் லட்சுமணனைப் பேசச் சொல்கிறேன்’ என்றார். அதன்படி, லட்சுமணன் என்னுடன் பேசினார். அவரிடமும் விவரங்களைச் சொன்னேன். கேட்டுக்கொண்டார்.''

‘‘ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா, பாலோ-அப் ஏதாவது உண்டா?’’

‘‘என்னத்தைச் சொல்ல... அதன்பிறகு, நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டதா என்று தெரிந்துகொள்ள பலமுறை லட்சுமணனை போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அவர் போனை எடுக்கவே இல்லை; நமது எண்ணைப் பார்த்ததும் தவிர்ப்பதாகவே பட்டது நமக்கு. கோயிலில் விசாரித்தேன்.

பிஸியான வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் விசிட் செய்யும்படி கோயில் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கிறார்களாம். அவரும் வந்து போகிறாராம். ஒருவழியாக நிர்வாக அதிகாரியை போனில் பிடித்துப் பேசினேன். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னார்’’ என்றவர், சற்று நிதானித்துவிட்டு பிறகு பேசினார்...

‘‘அறநிலையத்துறை கமிஷனர் கோயிலுக்குச் சர்ப்ரைஸ் விசிட் செய்தால்தான் இதுக்குத் தீர்வாகும். அவர் வருவாரா என்று பார்ப்போம்’’ என்று கூறி விட்டு, எழுந்து புறப்பட ஆயத்தமான வரிடம் கேட்டோம்...

‘‘திருநள்ளாறுக்குப் பயணப்பட்டீரே... அதுபற்றி எதுவும் கூறவில்லையே?’’

‘‘ஆமாம்... அங்கே நான் விசாரித்ததுபோக மேற்கொண்டு விசாரிக்க இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் முழுமையாக அறிந்துகொண்டு அடுத்தமுறை வரும்போது விலாவாரியாகச் சொல்கிறேன்’’ என்றவர், அவசரமாக போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தபடி புறப்பட்டே விட்டார்.

படம்: ப.சரவணகுமார்