Published:Updated:

மதுரை ஆதீனத்தில் மீண்டும் வைஷ்ணவி!

மதுரை ஆதீனத்தில் மீண்டும் வைஷ்ணவி!
மதுரை ஆதீனத்தில் மீண்டும் வைஷ்ணவி!
மதுரை ஆதீனத்தில் மீண்டும் வைஷ்ணவி!

மதுரை: நித்தியானந்தா நீக்கப்பட்டதையடுத்து மதுரை ஆதீனத்தில் தற்போது வைஷ்ணவி தன் கணவருடன் குடியேறிவிட்டார்.

நித்தியானந்தா நியமனம், நித்திய பேட்டிகள், நிற்காத போராட்டங்கள் என்று செம பிஸியாக இருந்த மதுரை ஆதீன மடம், நித்தி நீக்கத்திற்குப் பிறகு வெறிச்சோடிப் போய்விட்டது. அவரது அந்தரங்க காரியதரசியும், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான வைஷ்ணவிக்குத் திருமணம் முடிந்ததும், அருணகிரிநாதரே கொஞ்சம் தளர்ந்துதான் போய்விட்டார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி திடீரென தனக்குப் பணிவிடைகள் செய்வதற்காக திருவாடுதுறை ஆதீனத்தில், தம்பிரான் சுவாமிகளாக இருந்த திருச்சிற்றம்பல தம்பிரானை தன்னுடைய சீடராக நியமித்தார் அருணகிரிநாதர். இதன்பிறகு, வைஷ்ணவியின் தங்கை கஸ்தூரியும் ஆதீனத்திற்கு வருவதைக் குறைத்துக் கொண்டார்.

வைஷ்ணவி மட்டும் எப்போதாவது தன் கணவர் வேதமூர்த்தியுடன் வந்து, அருணகிரிநாதரைப் பார்த்துவிட்டுச் செல்வார். திடீரென என்ன நினைத்தாரோ, வைஷ்ணவி தன் கணவருடன் மதுரை ஆதீனத்திலேயே தங்கிவிட்டார். அவர்களுக்காக ஆதீனத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

##~~##
கடந்த 2 வாரங்களாக ஆதீனத்திலேயே தங்கி, கடை வாடகை வசூல் உள்ளிட்ட நிர்வாகப்பணியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துள்ளார் வைஷ்ணவி. அவரது கணவர் வேதமூர்த்தியும் மேலாளர் போல செயல்படுவதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து ஆதீன வட்டாரத்தில் விசாரித்தபோது, "வைஷ்ணவி விரும்பினால், அவரது கணவரின் சம்மதத்தோடு தொடர்ந்து இங்கே பணிபுரியலாம் என்பதை நிச்சயதார்த்தத்தின் போதே ஆதீனம் சொல்லியிருந்தார். அதை இப்போது அவரது கணவரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். வெளிநாட்டு வேலையை விட்டு வந்துவிட்டதால், இனிமேல் தாங்கள் மதுரை ஆதீனத்திலேயே இருந்துவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்" என்கிறார்கள்.
அப்பாடா... நீண்ட நாள் கழித்து களைக்கட்டுகிறது மதுரை ஆதினம் மடம்!
கே.கே.மகேஷ்