Published:Updated:

திருப்பதியில் கோலாகலம்...16 -ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணப் பெருவிழா- பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

திருப்பதியில் கோலாகலம்... 16 - ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணப் பெருவிழா - பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

திருப்பதியில் கோலாகலம்...16 -ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணப் பெருவிழா- பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!
திருப்பதியில் கோலாகலம்...16 -ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணப் பெருவிழா- பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

திருப்பதி திருமலையில் அருளும் வேங்கடேச பெருமாள் கோயில், ஆழ்வார்களால் பலவாறாகப் போற்றி மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்கு உரியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வழிபடும் வேங்கடவனை மங்களாசாசனம் செய்த குலசேகர ஆழ்வார், வேங்கடவன் கருவறையின் படியாகவேனும் இருக்க அருள்புரியும்படி வேண்டிக் கொண்டார்.  இன்றைக்கும் வேங்கடவன் கருவறை வாயிலில், 'குலசேகரன் படி' என்றே ஒரு படி போற்றப்படுகிறது. 

மற்ற திவ்விய தேசங்களைக் காட்டிலும் திருமலைக்கு ஒரு மகத்துவம் இருக்கவே செய்கிறது. 'கொடுத்த வாக்கை மாற்றவும் கூடாது; மறக்கவும் கூடாது' என்ற வாக்கியத்தை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் வேங்கடவன்.

துவாபரயுகத்தில் அவர்  ஶ்ரீகிருஷ்ணராக அவதரித்தபோது, யசோதையின் மைந்தனாக வளர்ந்தாலும்கூட, ஒரு கட்டத்துக்குப் பிறகு தம்முடைய கடமைகளை நிறைவேற்றுவதற்காக கோகுலத்திலிருந்து பிரிந்துசெல்லவேண்டி வந்தது. அதன் பிறகு அவர் கோகுலத்துக்குத் திரும்பவில்லை. எனவே, கிருஷ்ணரின் திருமண வைபவத்தை யசோதையால் கண்டு மகிழ முடியவில்லை. அவள் தன்னுடைய ஏக்கத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தாள்.

அப்போது கிருஷ்ணர், தாம் கலியுகத்தில் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படியே திருமலைப் பகுதியில் யசோதை வகுளாதேவியாகத் தோன்றினாள். அவளுக்கு வளர்ப்பு மகனாகி, அவளுடைய முன்னிலையில் பத்மாவதித் தாயாரை மணம் புரிந்துகொண்டார். இந்த வகையில் துவாபரயுகத்தில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதும்கூட திருமலையின் சிறப்புக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. 

(Photo courtesy - Tirumala Tirupati Devasthanams)

எத்தனையோ பெருமைகளுக்கு உரியதும் நாளும் திருவிழாதான் என்று சொல்லும்படி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருமலையில் சாஸ்திரப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவது மரபு. அதன்படி இந்த ஆண்டும் வரும் 16-ஆம் தேதி திருமலையில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவிருக்கிறது.

திருப்பதி கோயிலில் மூலவர் குடியிருக்கும் ஆனந்த நிலையம், கருடாழ்வார் சந்நிதி, வரதராஜர் சந்நிதி, யோக நரசிம்மர், ஆஞ்சநேயர் சந்நிதிகளிலும் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.  யாகசாலை பூஜையின்போது, பெருமாளின் கருவறையில் இருக்கும் உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு எழுந்தருளுவர். 

கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, ஆகஸ்ட் மாதம் 11 - ம் தேதி  (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கோயில்  வளாகத்தில் பலவிதமான யாக பூஜைகள்  தொடங்கின. முன்னதாக, வேங்கடேச பெருமாளின் தளகர்த்தாவான விஸ்வக்சேனரின் அலங்கார ஊர்வலம் நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வைகாநஸ ஆகம விதிப்படி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவது எப்படி என்பது பற்றி 'ஆகம நூல்' ஒன்றும் வெளியிடப்பட்டது.

28 யாக குண்டங்களில் வைகாநஸ ஆகம முறைப்படி அங்குரார்ப்பணம், வைதீக சடங்குகள், சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 

(Photo courtesy - Tirumala Tirupati Devasthanams)

12 - ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை, கும்பாபிஷேகத்துக்கு உரிய தங்கக் கலசத்தில் புனித நீர் சேகரிக்கப்பட்ட 'புனித நீர்க்கலசம்' பூஜையில் வைக்கப்பட்டது. இதற்கு வேத விற்பன்னர்கள் புனித மந்திரங்களால் பூஜை, அர்ச்சனைகள் செய்து, அந்தக் கலசத்தில் தெய்வீக சக்தியை ஆவாஹனம் செய்தனர். 

ஶ்ரீபோக சீனிவாச மூர்த்தி, ஶ்ரீ மலையப்பசாமி, ஶ்ரீதேவி பூதேவி, ஶ்ரீ உக்ர சீனிவாசமூர்த்தி, ஶ்ரீராமர், சீதா, லட்சுமணர், ஶ்ரீகிருஷ்ணர், ருக்மிணி, சக்கரத்தழ்வார் , ஜயவிஜயர், துவஜஸ்தம்பம், ஶ்ரீ யோக நரசிம்மமூர்த்தி, பாஷ்யகாரர், ஶ்ரீவிஸ்வக்சேனர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் அப்போது  பூஜை செய்யப்படுகின்றது.

மூன்று நாள்கள் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் இந்தப் புனித நீரால், ஆகஸ்ட் 16 -ம் தேதி வியாழக்கிழமை காலையில்  மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

(Photo courtesy - Tirumala Tirupati Devasthanams)

சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 16 -ம் தேதி முடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் ஏராளமான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவந்த நிலையில், 35 ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருமலைக்கு மிக மிகக் குறைவான அளவில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் உண்டியல் வசூல் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமானால் தள்ளுமுள்ளு சம்பவங்கள் ஏற்பட்டு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.