Published:Updated:

ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளப் பெருமாள் தேசாந்திரம் சென்ற கதை!

ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளப் பெருமாள் தேசாந்திரம் சென்ற கதை!
ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளப் பெருமாள் தேசாந்திரம் சென்ற கதை!

1323-ல் ஸ்ரீரங்கத்தை விட்டுப் புறப்பட்ட, உற்சவ மூர்த்தி 1371 வரை எங்கெங்கெல்லாம் பயணித்தார் தெரியுமா? - சுவாரஸ்ய வரலாறு...

ன்று நாம் கோயில்களுக்குச் செல்லும்போது, `நாம் வழிபடும் தெய்வ மூர்த்தங்கள் ஆண்டாண்டு காலமாக பக்தர்களால் வழிபடப்பெற்று, தெய்வ சாந்நித்யம் பூரணமாகப் பொலிந்திருக்கும் உண்மையான தெய்வ மூர்த்தம்தானா?' என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. அந்த அளவுக்குக் கோயில்களில் தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்படுவதும் மாயமாகிவிடுவதும் வாடிக்கையாகி விட்டது. அந்நியர்களின் படையெடுப்பின்போது பல கோயில்கள் சிதைக்கப்பட்டதும், தெய்வ மூர்த்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும், அரிய கலைப் பொக்கிஷங்கள் களவாடப்பட்டதும் வரலாறு. அதே தருணத்தில் அந்நியர்களிடமிருந்து தெய்வ மூர்த்தங்களைக் காப்பாற்றுவதற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகச் செயல்களும்கூட கோயில் கல்வெட்டுகளிலும், வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாள் பற்றிய வரலாறும் ஒன்று.

அந்த வரலாறு...

தில்லியிலிருந்து உலூக்கான் என்பவன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான். உலூக்கானின் படைகள் ஶ்ரீரங்கத்தை நெருங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டார் பிள்ளைலோகாசார்யர் என்பவர். இவர் காஞ்சி வரதரின் அம்சமாக அவதரித்தவர். நம்பிள்ளையின் சீடராக இருந்தவர். உலூக்கானின் தாக்குதலிலிருந்து அரங்கனைக் காப்பாற்றவேண்டும் என்று நினைத்தவர், உடனே செயலில் இறங்கினார். மூலவர் சந்நிதியை மறைக்கும்படியாக ஒரு கல்சுவரை எழுப்பினார். அதன் முன்பாக மண்ணினாலான பெருமானின் சயனக் கோலத்தை வைத்துவிட்டார். இப்படி மூலவருக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டாலும், உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாளைப் பாதுகாக்கவேண்டுமே... ஓர் அர்ச்சகர், இரண்டு பரிசாரகர்கள், மற்றும் எண்ணற்ற சீடர்களுடன் அழகிய மணவாளப் பெருமாளின் விக்கிரகத்தையும், உபயநாச்சிமார்களின் விக்கிரகங்களையும் எடுத்துக்கொண்டு, தென் திசை நோக்கிப் புறப்பட்டனர். பாண்டியநாடு, திருமோகூர் மற்றும் கேரளம், கர்நாடகம் ஆகிய வெளி மாநிலங்களுக்குப் பெருமாளின் திருவுலா நடைபெற்றது. 48 ஆண்டுகளுக்குப் பிறகு திருவரங்கத்தில் அமைதி திரும்பிய பிறகு, அழகிய மணவாளப் பெருமாள் தம்முடைய யதாஸ்தானத்துக்குத் திரும்பினார்.

இதற்கிடையில் பல வருடங்கள் ஆகியும் உற்சவ மூர்த்தியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்தபடியால், ஸ்ரீரங்கத்தில் வேறு உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்துவிட்டனர். உலூக்கானின் படையெடுப்பு நிகழ்ந்த காலத்தில் பலரும் கொல்லப்பட்டுவிட்டதாலும், மற்றவர்களும் முதுமையின் காரணமாக பரமபதம் அடைந்துவிட்ட நிலையில், அழகிய மணவாளன் திரும்பவும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளியபோது அங்கிருந்தவர்கள் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். அப்போது அங்கிருந்த 93 வயதான சலவைத் தொழிலாளி ஒருவர், இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தைத் தனக்குத் தருமாறு கூறினார். அர்ச்சகர்களும் கோயிலிலிருந்த உற்சவ மூர்த்திக்கும், அழகிய மணவாளப் பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தைக் கொடுத்தனர். இரண்டாவதாகக் கொடுத்த தீர்த்தத்தைப் பருகியவர், இரண்டவதாக திருமஞ்சனம் செய்த பெருமாளைக் காட்டி, `இவரே நம் பெருமாள்' என்று பரவசத்துடன் கூறினார். அன்று முதல் திருவரங்கம் கோயிலின் உற்சவரான அழகிய மணவாளப் பெருமாள், `நம்பெருமாள்' என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

இனி அழகிய மணவாளப் பெருமாளின் தேசாந்திர விவரங்களைப் பார்ப்போம். 

பொ.ஆ. 1323 மார்ச் மாதம் அழகிய மணவாளப் பெருமாள் திருவரங்கத்தை விட்டுப் புறப்படுதல்.

1323 ஏப்ரல் முதல் ஜூலை வரை மதுரை யானைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி

1323 முதல் 1325 வரை திருமாலிருஞ்சோலை 

1326 முதல் 1327 வரை திருக்கணாம்பி

1327 முதல் 1328 வரை புங்கனூர் வழியாக மேல்கோட்டைக்கு எழுந்தருளல்

1328 முதல் 1343 வரை மேல்கோட்டையில் பூஜிக்கப்படுதல் (15 வருடங்கள்)

1344 முதல் 1370 வரை திருமலை (28 வருடங்கள்) 

1371 செஞ்சி அழகிய மணவாள கிராமம். அங்கு சில மாதங்கள் எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள், பின்னர் திருவரங்கத்துக்கு எழுந்தருளினார்.

தேசாந்திரியாக எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள் மறுபடியும் தம்முடைய யதாஸ்தானமாகிய திருவரங்கத்துக்கு எழுந்தருளிய விவரம் பற்றி, கோயில் ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வெட்டுச் செய்தி (கல்வெட்டு எண்: 286)பின்வருமாறு தெரிவிக்கிறது.

`முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக பிள்ளைலோகாசார்யரால் தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்து கொண்டு செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாளின் அர்ச்சா திருமேனி, விஜயநகர மன்னரான வீரகம்பண்ணன் காலத்தில் செஞ்சியை ஆண்டு வந்த மன்னனான கோபணார்யன் என்பவரால், திருமலையிலிருந்து செஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17-ம் நாள் (பொ.ஆ.1371) திருவரங்கத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்து திருவாராதனங்களும் நடைபெறச் செய்தார்"..!

தகவல் உதவி... ஆர்.சேஷராஜன்.

அடுத்த கட்டுரைக்கு