Published:Updated:

மணிவண்ணா... மலையப்பா!

க. புவனேஸ்வரி, ஓவியம்: வெங்கடேஷ்

பிரீமியம் ஸ்டோரி

‘விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா அடியேனிடரைக் களையாயே’ என்று திருமங்கையாழ்வாராலும், ‘இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்’ எனத் திருவரங்கத்தமுதனாராலும், ‘வேங்கடவெற்பன விளங்கும் வேத வெற்பே’ என்று ஸ்வாமி தேசிகனாலும் மற்றமுள்ள ஆசார்யர்களாலும் போற்றித் துதிக்கப்பட்ட திருவேங்கடத்தின் அற்புதங்கள் அளவில்லாதவை.

நினைக்க நினைக்க, சொல்லச் சொல்ல வற்றாத அருள் ஊற்றென நம் சிந்தையை மகிழ்விக்கும் திருமலை திருப்பதி குறித்த அபூர்வ தகவல்கள் இங்கே உங்களுக்காக!

மணிவண்ணா... மலையப்பா!

பொன் மலர்கள் மண் மலர்களான அற்புதம்!

மலைப்பாதையில் நாம் சந்திக்கும் ஒரு மண்டபம் குருவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த மண்டபம் குருவ நம்பி என்ற ஓர் ஏழைக் குயவனின் காரணமாக ஏற்பட்டதாகும். குருவ நம்பி, பெருமாளின் தீவிரமான பக்தன். ஆனால், கோயிலுக்குள் சென்று பெருமாளை வழிபட முடியாத காரணத்தால், வீட்டிலேயே பெருமாளின் மரச் சிற்பத்தைப் பூஜித்து வந்தான். அந்தப் பகுதியை ஆட்சிசெய்து வந்த மன்னர் தொண்டைமான் தினமும் பெருமாளுக்குத் தங்க மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்.

அதேபோல் தானும் மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பிய குருவ நம்பி, மண்ணால் ஆன மலர்களைக்கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனை செய்தான். குருவ நம்பியின் பக்தியின் பெருமையை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், ஒருநாள் தனக்கு மன்னன் தொண்டைமான் அர்ச்சித்த தங்க மலர்களை மண்ணால் ஆன மலர்களாக மாற்றினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘குருவ நம்பியின் பக்தியை உலகத்தவருக்கு உணர்த்தவே நாம் அப்படி தங்க மலர்களை மண்ணால் ஆன மலர்களாக மாற்றினோம்’ என்று கூறினார். குருவ நம்பி பெருமாளை வழிபட்ட இடம்தான் குருவ மண்டபம்.

திருப்பதி தரிசனம்!

திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசிக்க சில நியதிகள் இருக்கின்றன.

திருப்பதிக்குச் செல்பவர்கள் கீழ்த் திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜ பெருமாளை சேவிக்க வேண்டும். அக்காலத்தில் திருமலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளைக் கொண்டு வந்து கோவிந்தராஜ பெருமாளிடம் கணக்குக் காட்டுவது வழக்கமாக இருந்ததாகச் சொல்லப் படுகிறது. பெருமாளுக்கும் முன்பே இவர் இங்கே கோயில்கொண்டதால், இவர் பெருமாளுக்கு அண்ணன் என்றும் சொல்லப் படுகிறார். எனவே, இவரைத்தான் முதலில் வழிபட வேண்டும்.

மணிவண்ணா... மலையப்பா!

அடுத்ததாக அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை சேவித்து, அவருடைய அருளைப் பெற்றுக்கொண்ட பிறகே திருமலைக்குச் செல்ல வேண்டும்.

திருமலையை அடைந்ததும் அங்கிருக்கும் புஷ்கரிணியில் நம்மைத் தூய்மை செய்து கொண்டு, அந்த இடத்தில் கோயில் கொண்டிருக்கும் வராக மூர்த்தியைத் தரிசித்து வழிபட வேண்டும். இவர்தான் பெருமாளுக்குத் திருமலையில் இடம்கொடுத்ததாக வரலாறு. எனவே, பெருமாளை வழிபடுவதற்கு முன்பாக இவரையும் அவசியம் வழிபட வேண்டும். அதன்பிறகே பெருமாளைத் தரிசிக்க வேண்டும். பெருமாளைத் தரிசிக்கும்போது முதலில் திருவடிகளையே தரிசிக்க வேண்டும்.

இந்த முறைப்படி திருவேங்கடவனை பாதாதிகேசமாக தரிசித்து அவரது பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்று மகிழ்வோம்.

த்ருவ மூர்த்தி

திருமலையில் சுமார் எட்டு அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார், திருவேங்கடமுடையான் மூலவர். அவருடைய திருமார்பில் பெரிய பிராட்டியாரும் பத்மாவதியும் வீற்றிருக்கின்றனர். மூலவர் ஸாளக்ராம சிலை; சிற்பி செதுக்கிய சிலை அல்ல. ஸ்வயம் வ்யக்தமாய் (தானாகவே தோன்றியவராய்) ஆவிர்பவித்தவர்.

இவர், த்ருவபேரம் என்றும், த்ருவ மூர்த்தி என்றும், ஸ்தானக மூர்த்தி என்றும் அழைக்கப் படுகிறார். நாகாபரணம், பச்சை கற்பூரம், கஸ்தூரி திலகம், கிரீடம், கட்கம் (கத்தி ஆகாசராஜன் சமர்ப்பித்தது), சங்கு சக்கரம், அஷ்டோத்தர ஸதமாலை, மைசூர் மஹாராஜா சமர்ப்பித்த சதுர்புஜ லக்ஷ்மி ஹாரம், துளஸி பத்ர ஹாரம், ஸஹஸ்ரநாம ஹாரம், ஸாளக்ராம ஹாரம், ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம் ஆகிய திருவாபரணங்களுடன் சேவை தருகிறார் திருவேங்கடவன்.

சுவாமிக்கு அணிவிக்கப்படும் ‘கத்வால் ஈரவாட’ (வெள்ளைத் துணி) 15 முழம் நீள அளவிலானது. உள் சாத்து வஸ்திரம்  (பட்டு பீதாம்பரம்) 24 முழம் நீளமும், 12 முழம் அகலமும் கொண்டது. தினந்தோறும் தோமால சேவை இருமுறையும், அர்ச்சனை மூன்று முறையும், நைவேத்தியம் மூன்று முறையும் நடைபெறும்.

உடல்வலி போக்கும் ஆஞ்சநேயர்

மலைப்பாதையில் தலையேறுகுண்டு பாறை என்று ஓர் இடம் இருக்கிறது. இந்தப் பாறையில் ஆஞ்சநேயர் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கிறது. பொதுவாக மலையேறும்போது நமக்கு ஏற்படக்கூடிய தலைவலி, கைகால்வலி, உடல்வலி போன்றவை ஏற்படாமல் இருக்க இந்தப் பாறையில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

பெருமாளின் தாடையில் பச்சைக்கற்பூரம்...

அனந்தாழ்வார், பெருமாளின் புஷ்ப கைங்கர்யத்துக்காக அமைத்த நந்தவனத்தை தானும் தன் மனைவியும் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

ஒருமுறை உடம்புக்கு முடியாமல் இருந்த அனந்தாழ்வாரின் மனைவிக்கு உதவி செய்யத் திருவுள்ளம்கொண்ட பெருமாள் ஒரு சிறுவனாக வந்து உதவி செய்தார். இதைப் பொறுக்காத அனந்தாழ்வார், அந்தச் சிறுவனைத் துரத்திச் சென்று தன் கையில் இருந்த கடப்பாரையால் அடித்துவிட்டார். மேலும், அவர் அந்தச் சிறுவனைத் துரத்திக் கொண்டு சென்றபோது, அந்தச் சிறுவன் கோயிலுக்குள் சென்று மாயமாய் மறைந்து விட்டான்.

அதேநேரம், கோயிலில் இருந்த அர்ச்சகர்கள் மூலவரின் தாடைப் பகுதியில் ரத்தம் பெருகுவதைக் கண்டு அனந்தாழ்வாரிடம் தகவல் தெரிவித்தனர். அப்போதுதான் சிறுவனாக வந்து தன் மனைவிக்கு உதவி செய்தது பெருமாள்தான் என்ற உண்மை அவருக்குத் தெரிந்தது. ரத்தம் வழியும் பெருமாளின் தாடையில் பச்சைக்கற்பூரம் வைத்து, தன்னை மன்னித்து அருள்புரியுமாறு மனமுருக வேண்டிக்கொண்டார். ரத்தம் வருவதும் நின்றது. இன்றைக்கும் கோபுர வாசலில் வட திசைச் சுவரின் மேற்புறம் அந்தக் கடப்பாரையைக் காணலாம்.

பக்தருக்காகப் பாதம் பதித்த வேங்கடவன்

திருமலைக்கு நடைப்பயணமாகச் செல்லும் போது மலையடிவாரத்தில் நாம் ஒரு மண்டபத்தைத் தரிசிக்கலாம். அந்த மண்டபம் பாதமண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் உருவான வரலாறு பக்திபூர்வமான வரலாறு.

திருமலையில் பெருமாளுக்கான பூஜா முறைகளை வகுத்துக்கொடுத்த பகவத் ராமாநுஜர், மலையடிவாரத்தில் அமர்ந்து ராமாயணச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். திருமலை நம்பியும் அவருடைய சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். திருமலை நம்பி தினசரி மலையடிவாரத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்று பெருமாளுக்குப் பூஜை செய்வது வழக்கம். ராமாநுஜரின் சொற்பொழிவில் தம்மை மறந்துவிட்ட திருமலை நம்பி, அன்றைக்கு தீர்த்தம் எடுத்துக்கொண்டு செல்லவில்லை. சொற்பொழிவு முடிந்து சுயநினைவுக்கு வந்த பிறகுதான், உச்சிக்காலம் கடந்துவிட்டதை உணர்ந்தார்.

தன்னால் பெருமாளின் உச்சிக்கால பூஜை தடைப்பட்டதே என்று வருந்தினார். திருமலை நம்பியின் வருத்தத்தைப் போக்க எண்ணிய பெருமாள், அவருக்கு அந்த இடத்திலேயே தரிசனம் கொடுத்து, திருமலை நம்பியின் வருத்தத் தைப் போக்கினார். பெருமாள் தம் பக்தருக்காகப் பாதம் பதித்த இடம்தான் பாத மண்டபம் என்று நாம் வழிபடுகிறோம்.

பூக்கிணற்றில் புஷ்பங்கள்...

திருமலையில் வேங்கடாசலபதி மட்டுமே குடிகொண்டுள்ளார். மற்றைய கடவுளருக்கு எனச் சிற்பமோ, சித்திரமோகூடக் கிடையாது. எனவே, மற்ற தெய்வங்களுக்கு உரித்தான புஷ்பங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சாத்தப்படும் பாவனையுடன் வேங்கடாசலபதியின் பாத கமலங்களிலேயே சமர்ப்பிக்கப்படுகின்றன.

மற்ற தெய்வங்களுக்கும் சேர்த்துச் சமர்ப்பிக்கப் பட்ட புஷ்பங்களைத் தனது பிரசாதமாக வேங்கடாசலபதி வழங்குவது முறையல்ல என்பதால், அவர் சந்நிதியில் இருக்கும் புஷ்பங்களைப் பக்தர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, அவையனைத்தும் கோயிலை ஒட்டியிருக்கும் பூக்கிணற்றில் சேர்க்கப்படுகின்றன. இந்த நியதியை ஏற்படுத்தியவர் ராமாநுஜர்.

மணிவண்ணா... மலையப்பா!

வேங்கடவனுக்கு மாமனார்!

பகவத் ராமாநுஜரின் உத்தரவின்படி திருமலையில் தங்கிப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அனந்தாழ்வார். ஒரு நந்தவனம் ஏற்படுத்தி, அன்றலர்ந்த மலர்களைப் பறித்துத் தொடுத்து பெருமாளுக்கு அணிவிப்பது வழக்கம்.

ஒருநாள் இரவு அனந்தாழ்வார் நந்தவனத்துக்குச் சென்றபோது, நந்தவனத்தில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இருப்பதைக் கண்டார். அவர்களைப் பிடிப்பதற்காக அனந்தாழ்வார் வேகமாகச் சென்றபோது, அந்த ஆண் தப்பி ஓடிவிட்டான். பெண் மட்டும் அகப்பட்டுக் கொண்டாள். தப்பி ஓடிய ஆண் மகன் வரும்வரை அந்தப் பெண்ணை நந்தவனத்திலேயே பிணையாகப் பிடித்து வைத்திருந்தார் அனந்தாழ்வார்.

பொழுதும் விடிந்தது. வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாகத் தொடுத்து எடுத்துக்கொண்டு வேங்கடவனின் சந்நிதியை அடைந்தார். சந்நிதியில் பெருமாளின் திருமார்பில் அலர்மேல்மங்கை நாச்சியார் இல்லாதிருப்பது கண்டு கலங்கிக் கதறித் துடித்தார். அவருடைய கவலையைப்போக்கும் வகையில், ‘நேற்று இரவு நாமே பிராட்டியுடன் உன் நந்தவனத்துக்கு வந்தோம். நீ பிணையாகப் பிடித்து வைத்திருக்கும் பெண் வேறு யாருமில்லை. அனைத்துலக உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியார்தான்’ என்று தெரிவித்தார்.

அதைக் கேட்ட அனந்தாழ்வார், ஒரு விநாடிகூட ஐயனைப் பிரியாத அன்னை, தன் செயலின் விளைவாக ஓர் இரவு முழுவதும் பிரிய நேரிட்டதை எண்ணி மிகவும் வருத்தம்கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் விதமாக அவரே நாச்சியாரின் தந்தையாக இருந்து மறுபடியும் நாச்சியாரைப் பெருமாளுக்குத் திருமணம் செய்து வைத்தார். அதன் காரணமாக அனந்தாழ்வார் பெருமாளுக்கு மாமனார் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு