Published:Updated:

'மாரா’ - அற்புத நாடகம்!

எஸ்.கதிரேசன், படங்கள்: தே.அசோக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

சென்னை மியூசிக் அகாடமி கடந்த ஆகஸ்ட் 12- ம் தேதி மாலை 4 மணிக்கெல்லாம் பரபரப்பாகிவிட்டது.  `மாரா’ என்ற ஆஞ்சநேயர்  பற்றிய புராண நவீன நாடகத்தைக் காணத்தான் அத்தனைக் கூட்டம். சரியாக 5 மணிக்கெல்லாம் அந்த அற்புத நாடகம் தொடங்கியது.

‘Theatre காரன்’ என்று பெயரையே வித்தியாசமாக வைத்திருந்த  நாடகக் குழுவினர்தான் அந்த நாடகத்தை அரங்கேற்றினர். குழுவின் அமைப்பாளராக இருந்து கண்ணன் வழிநடத்த  இயக்குநர் ஸ்ரீராம் நாடகத்தை பிரமாதமாக இயக்கி இருந்தார்.

அனுமனாக ராகவும், சீதாவாக சந்தியா கோபலனும், ராவணனாக சபரிவாசுவும், மண்டோதரியாக மாளவிகா சுந்தரும்...கீரிடங்கள், மிகையான அலங்காரங்கள்-ஒப்பனைகள் எதுவுமின்றி புராணகால கதா பாத்திரங்களாகவே மாறி, நமக்கு வித்தியாசமான ஒரு நாடக அனுபவத்தைத் தந்தனர். கூடவே ராம ராவண யுத்தத்தை வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

'மாரா’ - அற்புத நாடகம்!

அதிலும் ராமனின் அவதாரம் நிறைவுக்கு வரும் அந்தக் காட்சி உள்ளத்தை உருக்கியது. அனுமன் அருகிலிருக்க காலனால் ராமனது உயிரைப் பறிக்க முடியவில்லை. ஆகவே, ராமர் அனுமனுக்கு போக்குக்காட்டும் விதமாக பள்ளதாக்கில், தான் தூக்கியெறிந்த தனது கணையாழியை எடுத்து வர பணிக்கிறார். அதன் பொருட்டு அனுமன் அங்கிருந்து நகர, அந்த நேரத்தைப் பயன்படுத்தி, காலன் ராமனை அழைத்துச் செல்கிறான். ராமனது பிரிவால் கண்ணீர் விட்டு துடிக்கும் அனுமனாக ராகவ் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.   

இதில் நடித்த சபரிவாசு, ராகவ், ஸ்ரீராம் ஜீவன் ஆகியோர் ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரமில் ஒன்றாகப் படித்தவர்கள். மற்ற நாடகக் குழுக்களில் இருந்து வித்தியாசமான முறையிலும் ஒழுங்குடனும் தங்களது நாடகக் குழுவை அமைக்க வேண்டுமென்ற ஆர்வத்துடன், இந்த நாடகத்தை அரங்கேற்றி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இயக்குநர் ஸ்ரீராம் ஜீவனிடம் பேசினோம்.

``அதென்ன ‘மாரா’ எனும் தலைப்பு...’’ என்று நாம் கேள்வியை முடிப்பதற்குள், ‘‘மாரா... மாரா... என்று தொடர்ந்து சொல்லிப் பாருங்கள் தலைப்பின் அர்த்தம் புரியும்’’ என்று கூறி புன்னகைத்தவர், தொடர்ந்து பேசினார்.

‘‘எங்கள் பள்ளியில் படிப்புடன் நாடகக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஒரு கலைக்குழுவை அமைத்து ஸ்கிரிப்ட் ரைட்டிங், டயலாக் மாடுலேஷன் இதிலெல்லாம் நல்ல பயிற்சி அளித்தார்கள். அப்போதே ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலிருந்து சில காட்சிகளை நாடகமாக்கி நடிப்போம். அப்போதிருந்தே எங்களுக்குள் ஒரு நட்பும் கலையார்வமும் வளரத் தொடங்கியது.

'மாரா’ - அற்புத நாடகம்!

ஏற்கெனவே மறவ நாடு, ஹே ராம் ஆகிய இரண்டு நாடகங்களை சில தனியார் நிறுவனங்களுக்காக நட்பு அடிப்படையில் நடத்தியிருக்கிறோம். இவை தவிர சில வீதி நாடகங்களையும் பெசன்ட்நகர், அண்ணாநகர் பகுதிகளில் நடத்தியிருக்கிறோம். இப்போது ‘மாரா’ நாடகத்தை வித்தியாசமான முறையில் அரங்கேற்றி இருக்கிறோம்.  என்றவர் தொடர்ந்தார்.

‘‘சார் எங்கள் மூவருக்குமே கூத்துப்பட்டறை ஜெயக்குமார் தான் குருநாதர். அவர் எப்போதுமே வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி இவற்றுக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். அதை அப்படியே இந்த நாடகத்தில் இறக்கி வைத்திருக்கிறோம். எங்களின் இந்த நாடகத்தில் 8 வயது முதல் 65 வயது வரை உள்ள நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

பொதுவாக சரித்திர நாடகங்களில் அளவு கடந்த ஒப்பனைகள், காஸ்ட்யூம்கள், நகைகள், கிரீடங்கள் என இருக்கும். ஆனால், இந்த நாடகத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் குரல் உச்சரிப்பு மற்றும் உடல் மொழியிலேயே அந்தந்த கதாபாத்திரங்களை நாங்கள் பார்ப்பவர்களின் கண் முன் நிறுத்தியுள்ளோம். இது கொஞ்சம் கடினமான வேலைதான் என்றாலும் அதை நல்ல முறையில் செய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம்’’ என்றார்.

அவரது நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். இடைவேளை கூட இல்லாமல், ஒண்ணே முக்கால் மணிநேரம் நம்மை அப்படியே ராமாயண காலத்துக்கே கொண்டு போனதிலேயே இவர்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு