Published:Updated:

புதிய புராணம்!

புதிய புராணம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்!

ஷங்கர்பாபு

புதிய புராணம்!

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்!

உயிர்களின் இன்பம், கடவுளின் இன்பம்!

நமது முயற்சிகள், செயல்கள் எல்லாம் எதை அடிப்படையாகக் கொண்டவை என்பதை யோசித்திருக்கிறீர்களா?

யோசிக்கவே வேண்டாம்... இன்பத்தைத் துய்ப்பதையே நோக்கமாகக் கொண்டவை.
 
உண்பதாகட்டும், உறங்குவதாகட்டும், பொருள் தேடுவதாகட்டும், சக மனிதரிடம் தொடர்பில் இருப்பதாகட்டும், ஞானம் தேடுவதாகட்டும்... நாம் செய்யும் சிறு செயல்களின் பின்பும்கூட இன்பம் தேடும் இயல்பு ஒளிந்திருக்கிறது.

அப்படியானால், இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? குறைந்தபட்சம் நமக்குத் துன்பம் நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

புதிய புராணம்!

இதற்கு ஒரு கதையைப் பின்னோக்கிப் பார்க்கலாம்...

ஒருவர் காயமுடன் மருத்துவமனையில் நுழைகிறார். அவரது காயத்துக்குக் காரணம், அவர் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கார் அவர்மீது மோதிவிட்டதாம். அந்த கார் அவர்மீது மோதியதற்குக் காரணம்,  அதன் ஓட்டுநர் சாலையின் குறுக்கே திடுமென ஆட்டுக்குட்டி ஒன்று புகுந்துவிட்டதைக் கவனிக்கத் தவறியதாம். ஆட்டுக்குட்டி அவ்வாறு ஓடியதற்குக் காரணம், அது செடியைக் கடிக்கச் சென்றபோது, அருகிலிருந்த தேனி அதைக் கொட்டி விட்டதாம். தேனி அங்குவந்த காரணம்...

இந்தக் கதையை இன்னும் நீட்டிக் கொண்டே போகலாம். இந்த இடத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்... ஒரு தேனி, ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறது.

இத்தனைக்கும் தேனி நேரடியாக இந்தச் செயலைச் செய்யவில்லை. இதில் ஒளிந்திருக் கும் இன்னொரு செய்தி, தேனிக்கு கொட்ட வேண்டிய சூழல் ஏற்படாமல் இருந்திருந்தால், ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்க மாட்டார்.

எங்கோ ஒரு தேனிக்கு பிரச்னை ஏற்படுகிறது. அது, எங்கோ இருக்கும் ஒரு மனிதரைத் துன்பப்படுத்துகிறது.

இந்தச் சித்தாந்தத்துக்கு இன்றைய விஞ்ஞானம் `வண்ணாத்திப் பூச்சி விளைவு' என்று பெயர் சூட்டி இருக்கிறது. இதன் சுருக்கமான விளக்கம்... இயற்கையில் எங்கோ நடக்கும் ஒரு சிறு நிகழ்வு, வேறு இடத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இதை வலியுறுத்துகிற ஒரு கதை நமது புராணத்தில் வருகிறது.

`பிட்டுக்கு மண் சுமந்த'  திருவிளையாடலில் பாண்டிய நாட்டில் வந்தி என்னும் முதியவளிடம் கூலியாகப் பிட்டினைப் பெற்றுக்கொண்டு சாமானியன் ஒருவனின் வடிவில் மண் சுமக்கிறார் ஈசன்.

அந்த `சாமானியன்' கண் அசந்துவிட, மன்னன் கோபம்கொண்டு அவரை பிரம்பால் அடித்தான். ஈசன் மேல் விழுந்த அடியின் வலியை பாண்டிய மன்னனும் உணர்கிறான்; அங்கிருந்த அனைவரும் உணர்கிறார்கள்;  உலக உயிர்கள் அனைத்தும் உணர்கின்றன. உலக உயிர்கள் அனைத்தும் இறைவனிடம் அடக்கம் என்ற நேரடியான பொருளைத் தாண்டி, இந்தத் திருவிளையாடல் உணர்த்தும் பாடங்களில் ஒன்று, `வண்ணத்துப் பூச்சி விளைவு' அன்றி வேறென்ன?

இறைவனை இயற்கை என்பதும் நமது மரபு. அப்படியானால், இயற்கைக்கு நாம் கேடு செய்தால் அந்தப் பாதிப்பை அனுபவிக்கப் போவதும் நாமே. அந்தப் பாதிப்பு சங்கிலித் தொடர்போல பின்னிப்பிணைந்து அதன் விளைவை நமக்குத் தருகிறது. அன்றாடம் செய்தித்தாளைப் பார்க்கையில் எங்கோ நடக்கும் இதுபோன்ற பல செய்திகளைப் பார்க்கிறோம்.

வடஇந்தியாவில் கோதுமை விளைச்சல் பாதிப்பு, சீனாவில் வெள்ளம்… இதுபோன்ற செய்திகளை மேம்போக்காகக் கடந்துவிடுகிறோம். ஆனால், எங்கோ நடக்கும் இவை எங்கோ இருக்கும் நம்மையும் பாதிக்கும் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?

அண்டார்டிகாவில் பனிப்பொழிவு அதிகமானால் ஏதோ ஓர் விதத்தில் நம்மைப் பாதித்தே தீரும். அதேபோல் நாம் செய்யும் செயல்களும் தொடர்பே இல்லாமல் யாரோ ஒருவரைப் பாதிக்கும். அந்த அளவு இந்த உலகில் சூட்சும வலைகள் மூலம் உயிரற்ற பொருள், உயிருள்ள பொருள் என எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அதேபோல் ஓர் உலகை இன்னோர் உலகு சார்ந்திருக்கிறது; ஒரு பிரபஞ்சத்தை இன்னொரு பிரபஞ்சம் சார்ந்திருக்கிறது.

இந்த விதத்தில் இந்தக் கதை தரும் பாடம்... `எங்கோ இயற்கைக்கு எதிராக ஒன்று நிகழ்ந்தால், அது இங்கு இருக்கிற என்னை என்ன செய்துவிடும்' என்ற சமாதானம், முட்டாள் தனமானது என்பதே.
இந்தக் கதையின் மேலும் இரு அர்த்தங்களைப் பார்க்கலாம்.அனைத்து உயிர்களும் துன்பத்தை உணரக் கூடாது என்றால் ஈசனுக்கும் துன்பம் நேரக் கூடாது. பிற உயிர்களுக்கு நேரும் துன்பம், கடவுளுக்கு நாம் செய்யும் துன்பமே.

கடவுளுக்குத் துன்பம் நேர்கிற ஒன்றை நாம் செய்துவிட்டு அவரருளை எப்படிப் பெற முடியும்? கடவுளின் படைப்புகளில் ஒன்றை காயப்படுத்திவிட்டு அவரது கருணையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஓர் எறும்பைத் துன்பப்படுத்திவிட்டு நீங்கள் ஈசனை சந்தோஷப்படுத்தி விட முடியாது. ஈசனுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், பிற உயிர்கள் இன்பமாக இருக்க வேண்டும். சக உயிர்களின் துன்பம், கடவுளின் துன்பம்; எல்லா உயிர்களின் இன்பம், கடவுளின் இன்பம்.

இரண்டாவதாக, ஒரு சாமானியனுக்குத் துன்பம் நேர்கிறது.அந்தத் துன்பத்தின் பாதிப்பை உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பட்சபாதமின்றி உணர்கின்றன. ஆக, ஓர் உயிருக்குக் கிடைக்கும் உணர்வுகள் அனைத்து உயிர்களுக்கும் கடத்தப்படுகிறது. அப்படியானால், ஓர் உயிர் உணரும் இன்ப அனுபவத்தையும் அனைத்து உயிர்களும் உணர்ந்துதான் தீர வேண்டும்.

எங்கோ இருக்கும் ஓர் உயிரின் மகிழ்ச்சி சங்கிலித் தொடராய் பரவி எங்கோ இருக்கும் என்னையும் வந்தடையும்.எனில், அனைத்து உயிர்களையும் சந்தோஷமாக உணர வைக்க, நான் என் அருகிலுள்ள மனிதர்களையும் பிற உயிர்களையும் முடிந்தவரை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அவற்றின் சந்தோஷம் என்னையும் ஏதாவது ஒரு விதத்தில் வந்தடையும். 

நாம் இன்பமாக இருப்பதற்கான சூத்திரமும் இதுவே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism