மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

டாக்டர் ஜெயம் கண்ணன்

ன்னர் ஒருவர் தான் இழந்த நாடு, ஆட்சி, செல்வம், புகழ், மனை, மக்கள் அனைத்தையும், ஒரு திருத்தலம் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்த திருத்தலம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

பட்டுக்குப் பெயர் பெற்ற இத்தலம், பக்திக்கும் பெயர்பெற்றதாக விளங்குகிறது. இத்தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயிலாகும். இக்கோயில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், ஜெயம் கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பை அப்படியே கொண்டிருக்கிறது.

வடநாட்டில் தான்பெற்ற வெற்றியின் மூலம் கொண்டு வந்த பொன், மணி போன்ற செல்வங்களை வைத்து, குலோத்துங்க சோழனால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பெற்று, அதன் பிறகு வந்த மன்னர்களால் கட்டி முடிக்கப் பட்டது. சோழர்களால் கட்டப்பட்ட கடைசி கோயில் இதுவாக இருக்குமென வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

திருபுவனம் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேசுவரர் மற்றும் ஸ்ரீசரபேஸ்வரர் ஆகிய இரு தெய்வங்களுக்கும் வெவ்வேறு புராணங்கள் இருக்கின்றன.

‘கம்பகரேசுவரர்’ என்றால் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்று பொருள். இந்தப் பெருமானுக்கு இப்பெயர் வந்ததன் பின்னணியில் ஒரு பழங்கால நிகழ்வு உள்ளது. அதை நம்மிடம் விவரித்தார், கோயிலின் அலுவலர் ஒருவர்.

‘‘மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன் என்ற மன்னர், தான் மேற்கொண்ட ஒரு போரில் எதிரிகளை வதம் செய்து குதிரையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த போது, தவிர்க்கமுடியாமல் ஓர் அந்தணர் மேல் குதிரையை ஏற்றிக் கொன்றுவிட்டார். அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட்டது.

அந்த தோஷத்தினால், நிலை தடுமாறி, புத்தி கலங்கி ஓடித் திரிந்தார். அப்போது திருவிடைமருதூர் கோயிலுக்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்ததுமே அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி விலகி நின்றது. அது விலகியதுமே வரகுண பாண்டியனுக்குச் சுய நினைவு வந்தது. ஆனாலும், உடலின் நடுக்கம் நிற்கவில்லை. மீண்டும் வந்தவழியே திரும்பிவந்தால் மீண்டும் அந்த பிரம்மஹத்தி பிடித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் அவர் உடல் ஆடி நடுங்கியது.

அதிலிருந்து தப்பிக்க, கோயிலின் பின்வாசல் வழியே ஓடினார். திருவிடை மருதூர் கோயிலின் பின்வாசலும் திருபுவனம் கோயிலின் முன்வாசலும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கின்றன. எனவே, அதே நேர்கோட்டில் ஓடிவந்த பாண்டிய மன்னர், நேரே திருபுவனம் கோயிலுக்குள் நுழைந்தார். மூலவரின் சந்நிதிக்குள் நுழைந்த மன்னருக்கு, அங்கிருந்த கம்பகரேசுவரை வணங்கியதும் நடுக்கம் நின்றது. உடலில் பழைய தெம்பும் வலுவும் மீண்டும் வந்தன.

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

சிவனை வணங்கிவிட்டு, அம்பாள் ஸ்ரீதர்மஷம்வர்த்தினி சந்நிதிக்கு வந்து வணங்கினார். தான் ஒரு மன்னர் என்பதையே மறந்து நிலைகுலைந்திருந்த மன்னருக்கு, அவர் ஓர் அரசன் என்பதை நினைவுபடுத்தி, ஆட்சியை வாங்கிக் கொடுத்தது இந்த அம்பிகைதான். அதனால்தான் அவளை ‘அறம் வளர்த்த நாயகி’ என்று அழைக்கிறோம்.

‘கம்பகம்’ என்றால் நடுக்கம். அதைப் போக்கி அருளியதால் இங்குள்ள இறைவன் கம்பகரேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து உள்ளன்போடு வணங்குபவர் களுக்கு உடல் நடுக்கம், மன பயம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் யாவும் குணமாகின்றன என்பது ஆதிகாலம் தொட்டு ஐதீகம். மேலும், மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் என்று கேட்டதைக் கொடுக்கும் வரப்பிரசாதியாகவும் திகழ்கிறார் இந்த இறைவன். மன்னருக்குரிய அனைத்து மங்கலங்களையும் வழங்கிய கோயில் என்பதால், இங்கே வந்து வணங்கிச் செல்பவர் களுக்கு அனைத்துச் செல்வங் களும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை!’’ என்று விரிவாக விளக்கினார் அந்த அலுவலர்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

நமசிவாய மந்திரத்துடன் ஆலயத்தின் முகப்பு நம்மை வரவேற்கிறது. எழிலான ஏழு நிலை ராஜ கோபுரத்தைத் தாண்டிச்சென்றால், கொடி மரத்தையும் கொடிமரத்து விநாயகரையும் தரிசிக்க முடிகிறது. ராஜகோபுரத்திலிருந்து முன் மண்டபத்துக்குப் போகும் வழியில் புதிதாக நீண்ட மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதைக் கடந்து சென்றால், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற அழகிய விமான அமைப்புக் கண்களைக் கவர்கிறது

அதைக் கடந்து உள்ளே சென்றால், மூலவர் உள்ள கருவறைக்குச் செல்லும் வழி நீண்டு செல்கிறது. அவ்வழியில் உள்ள தூண்களில் உள்ள வேலைப்பாடுகளைக் கண்டுகளிப்பதற்கே அரை நாள் வேண்டும். ஒவ்வொரு தூணிலும் அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகள். சுவாமி சந்நிதி, யானை இழுத்து வருவது போன்ற ரத அமைப்புடன் கூடிய கோயிலுக்குள் அமைந்திருக்கிறது. சுயம்புவானவர் மூலவர். அவரை வணங்கி வந்தால், கருவறையின் முன்புறமும் கலையெழில் கொஞ்சும் அழகான வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் காணப் படுகின்றன. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் தூண் களிலிருந்து சற்றே மாறுபட்ட வடிவில் இவை உள்ளன.  திருக்களிற்றுப் படியில் இறங்கி மண்டபத்தைச் சுற்றி வரும்போது மிக நுணுக்கமான சிற்பங்களைக் காணமுடிந்தது. அடித்தள வரிசையில் ராமாயணச் சிற்பங் களும் காணப்படுவது மிகச் சிறப்பு. ஆலயத்தின் அழகை ரசித்தபடியே சுற்றிவருகையில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோரைப் பார்த்தபடியே வந்தால், அம்மன் சந்நிதி தெரிகிறது. அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் அம்மனின் சந்நிதியில் வணங்கிச் சென்றால், அடுத்து ஸ்ரீசரபேஸ்வரர் சந்நிதி தென்படுகிறது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

இங்கே கம்பகரேசுவரருக்கு இணையாகப் புகழும் சக்தியும் படைத்த மற்றொரு தெய்வம் சரபேஸ்வரர். அவரை வணங்கினால் பில்லி, சூனியம் போன்ற பிரச்னைகள், எதிரி பயம், நீதிமன்றப் பிரச்னைகள், வழக்கு, வாது போன்ற எல்லாம் விலகி, எப்போதும் வெற்றியே கிட்டும். இந்தக் கோயிலில் மிகவும் பிரபலமானது சரபேஸ்வரருக்கு 11 வாரம், 11 தீபம், 11 வலம். இவரை வணங்குவோரின் தலைவிதியையே மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரர், பக்தர்களின் மன வியாதிகள் மற்றும் தீராத துன்பங்கள், கொடிய தரித்திரங்களையும் போக்கிடுவார் என்ற நம்பிக்கையால் எங்கெங்கிருந்தோ பக்தர்கள் வருகிறார்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் 13 தளங்கள் கொண்ட  அரியவகை வில்வம்.  ஸ்வாமிக்குச் சமர்ப்பிக்கப்படும் இந்த வில்வதளங்களை, `நடுக்கம், நரம்புத் தளர்ச்சி பாதிப்புகள் நீங்கவேண்டும்' எனும் பிரார்த் தனையோடு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். திருபுவனம் செல்லும் அன்பர்களுக்கு ஆலயத்தின் அழகால் கண்களுக்கும் விருந்து; எம்பெருமானின் அருளால் மனதுக்கும் மருந்து. ஒருமுறை சென்று தரிசிப்போம்; உயிர் உருகும் அற்புத அனுபவம் பெற்று உய்வோம்!

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: ராபர்ட்

சத்ரு பயம் நீங்கும்...  வழக்குகள் வெற்றி பெறும்!

நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனை வதம் செய்து அவனுடைய குருதியைக் குடித்த பெருமாள், அதனால் ஆக்ரோஷத்தின் உச்சியில் இருந்தார். அவருடைய கோபாவேசத்தைத் தணிக்க வேண்டி, லட்சுமி உள்பட தேவர்கள் எல்லாரும் ஈசனின் திருவடியைச் சரணடைந்தனர். உக்கிரம்கொண்ட ஈசன், எட்டு கால்களும், நான்கு கைகளும், இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்களைக் கொண்ட யாளி முகமும், மனித உடலும், கீழே சிங்கத்தின் உடலுமாக சரப பட்சி உருவம் எடுத்து, நரசிம்மத்தின் கோபம் தணித்து, தேவர்களின் நடுக்கத்தைப் போக்கினார்.

சிவன், விஷ்ணு, பிரத்யங்கிரா தேவி, சூலினி துர்க்கை ஆகிய நான்கு பேரும் சேர்ந்த அம்சமாக சரபேஸ்வரர் வணங்கப்படுகிறார். சத்ரு சம்ஹார மூர்த்தியாகக் காட்சி தர வேண்டுமென தேவர்கள் இறைஞ்சியதால் அவர் இத்திருக்கோலத்தில், திரிபுவன வீரச்சோழபுரத்தில் எழுந்தருளினார். அதுவே பிற்காலத்தில் மருவி ‘திருபுவனம்’ ஆகிவிட்டது.

வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வணங்கினால் வியாபாரம், வழக்கு, குடும்பம் போன்ற எல்லாவற்றிலும் எதிரிகளை அழித்து, எவ்விதத் தடைகள் இருந்தாலும் நீக்கவல்ல சந்நிதி, இந்த சரபேஸ்வரர் சந்நிதி. ஏழரை அடி உயரத்தில் கன கம்பீரமாகக் காட்சி தரும் சரபேஸ்வரரைக் காணும்போதே கைகள் தானாகக் கூப்புகின்றன. நெஞ்சம் பணிந்து, கரைந்து வணங்குகிறது.

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது திருபுவனம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை